ஜான்சிக்கு அந்த வீட்டை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.
சர்ச் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கரும்புச் சாறு விற்கிறவர்தான் போன தடவை அடையாளம் சொன்னார்.
அவர் போட்டு இருந்த வெள்ளை பனியனில் அச்சடிக்கப்பட்டு இருந்த தேயிலை விளம்பரத்தின் சிவப்பு எழுத்துக்களை ஞாபகம் இருக்கிறது. நசுங்கின கரும்பைத் தட்டையாக உருவி, மறுபடியும் பிழிவதற்காக மடக்கி உள்ளே கொடுத்தபடி, 'இப்படியே நேரா அங்க இங்க திரும்பாமப் போய்க்கிட்டே இருந்தா, குறுக்கே தென்வடலா ஒரு தெருவு வரும். அதை விட்டிரணும். விட்டுட்டு அப்படியே இன்னும் கொஞ்சம் மேற்கே போனீங்கன்னா, ஒரு பெரிய வேப்ப மரம் வரும்...’ என்று துல்லியமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்.
கரும்புப் பால் இனிப்பாக வாசம் அடித்தது. அவருடைய வலது கை காற்றிலேயே ஒரு வரைபடம் வரைந்து, அந்த வேப்ப மரத்தடியில் அவளைக் கொண்டுபோய் நிறுத்தி இருந்தது.
ஜான்சி எதிர்ப் பக்கம் போகும் வரை அவர் காத்திருந்தார். மிஷினின் சக்கரத்தைச் சுற்றுவதை நிறுத்தி இருந்தார். 'பார்த்துப் போ தாயி. நாய் கீய் கிடக்கப்போவுது...’ சக்கரத்தோடு அவர் சொல்வதும் சேர்ந்து மறுபடி சுற்ற ஆரம்பித்தது.
இந்தப் பத்து இருபது வருடங்களுக்குப் பிறகும் அவர் அப்படியேவா அங்கே இருப்பார்?
ஆட்டோக்காரரிடம் வலது பக்கம் திரும்பச் சொல்லிக்கொண்டே ஜான்சி, இல்லாத அவரை அந்த இடத்தில் நிறுத்திப் பார்த்தாள். சட்டென்று அவர் குரலைக்கூட அவளால் கேட்க முடிந்தது. குரல் எல்லாம் ஞாபகத்தில் இருக்குமா என்ன? குரல் என்ன, ஜான்சிக்கு ஒரு குறிப்பிட்ட வீட்டைத் தாண்டும்போது அடித்த மருதாணிப் பூ வாசத்தைக்கூட ஞாபகம்வைத்துக்கொள்ள முடியும்.
ஜான்சி கண்ணை மூடிக்கொண்டாள். மருதாணி வாசனை வர ஆரம்பித்து இருந்தது.
ஆட்டோவை நிற்கும்படி சொன்னாள். அவள் சொன்ன தெரு இன்னும் வரவில்லை. கொஞ்ச தூரம் போக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுகிறவர் சொன்னபோதும் இறங்கினாள். அவளுக்குச் சற்று நடக்க வேண்டும்போல இருந்தது. நடந்து நடந்து ஒரே ஒரு நாளின் ஒரே ஒரு தருணத்துக்குப் போய்விட வேண்டும்.
திரும்பிப் போவதும் அல்லது திரும்பி வருவதும் அப்படி ஒன்றும் சுலபமில்லை. ஆனால், எத்தனை முறை இப்படித் திரும்பிப் போயாயிற்று. திரும்பி வந்து ஆயிற்று, கடைசி வரை போகாவிட்டாலும் பாதி தூரம் வரையாவது போய்க்கொண்டே இருக்கத்தான் தோன்றுகிறது. வாசலில் போட்டு இருக்கிற கோலம், உதிர்ந்திருக்கிற போகன்வில்லாப் பூக்கள் வரை போய்விட்டுக்கூட, படியேறி வீட்டுக்குள் போகாமல் திரும்பிவிடுவது இல்லையா என்ன? பஸ் ஜன்னல் வழியாகப் பார்க்கிற தற்செயலான தண்டவாளங்களில் இருந்து, எப்போதோ போன ரயில்களின் பெட்டிகள் நம்முடன் நகரத் துவங்குவது உண்டுதானே.
''வெயிலில் கிடக்கிற தண்டவாளங்களை, ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊர்த் திருவிழாவுக்கு ராத்திரி இருட்டில் நடந்து போகிற பொட்டல்புதூர் யானையை எல்லாம் மறுபடி ஒரு தடவை ஏறிட்டுப் பார்க்காமல் யாராவது தாண்டிப் போக முடியுமா ஜான்சி?'' என்று சோமு கேட்டு இருக்கிறார்.
சோமுவுக்கு எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் இருந்தது. எஸ்.ஜான்சி சிரோன்மணியை அலுவலகத்தில் எஸ்.ஜே.எஸ். என்றுதான் பொதுவாகக் கூப்பிடுகிறார்கள். சோமு என்கிற சோமசுந்தரத்துக்கு அவள் எஸ்.ஜே.எஸ். இல்லை. ஜான்சி.
எல்லோருக்கும் அழைக்கப்படுவதில் ஒரு விருப்பம் இருக்கிறது. பெயரைச் சொல்லி சிலர் அழைக்கும்போது, மீண்டும் அந்த அழைக்கும் குரலைக் காற்றில் தேடத் துவங்குவது அதனால்தான். 'ஜான்சி’ என்கிற சோமுவின் குரலை எப்போதும் அவளால் கேட்க முடிந்து இருக்கிறது.
அவளுக்கும் செல்வராஜுக்கும் கல்யாணம் ஆகி ஜெயராணி பிறந்த பின்பும் கூட.
சமையல் அறை ஸ்டவ்வின் நீல வட்ட ஜுவாலையில், தூக்கத்தில் எழுந்து ஜன்னல் கதவுப் பக்கம் நிற்கையில், தனியாக அலுவலக லிஃப்ட்டில் ஐந்தாம் தளப் பொத்தானை அழுத்துகையில், பாப்கார்னின் சூடான வாசனை பெருகிய ஒரு தியேட்டர் இடைவேளையில் எல்லாம் அவள் அந்தக் குரலைக் கேட்டு இருக்கிறாள். நகம் வெட்டிக்கொண்டு இருக்கையில் சதை கொஞ்சம் பிய்ந்து கசிந்த ரத்தத்தில் அந்தக் குரல் பிசுபிசுத்து உலர்ந்தது உண்டு. ஒரு தடவை வாசல்படிப் பக்கம் சுவரில் மோதிச் சுருண்டுகிடந்த வெளவாலைக் கையில் எடுத்து, அதன் சின்னஞ்சிறு காதுகள் விடைத்த தலையைத் தொடுகையில், அதன் ஜவ்வுச் சிறகுகளில் இருந்து ஜான்சி என்ற சோமுவின் குரல், அவள் உள்ளங்கையில் வழிந்து இருக்கிறது.
நடந்துகொண்டே 'சோமு’ என்று ஒருமுறையும், 'சோம சுந்தரம்’ என்று இன்னொரு முறையும் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். தோளில் தொங்கிக்கொண்டு இருந்த பையின் வெளிப்பக்கத்தில்தான் அந்த தினசரிப் பேப்பரைச் செருகி இருந்தாள். மூன்றாம் பக்கத்தின் வலது கீழ் மூலையில்தான் சோமுவின் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
தோற்றம்-மறைவு என்று தேதிகள் இடப்பட்டு இருந்தன. எந்த மயானத்தில் எந்த உத்தேசமான நேரத்தில் என்ற அறிவிப்பு இருந்தது. மகன், மகள், மருமகள், மருமகன் பெயர்கள் எல்லாம் இருந்தன. சோமுவின் மனைவி பெயர் ஞாபகம் வந்தது. சாந்தகுமாரி, சோமு தன் மனைவியைக் குறிப்பிடுகிறபோது எல்லாம் 'சாந்தி’ என்று ஒருமுறைகூடச் சொன்னது இல்லை.
'கிருஷ்ணாம்மா’ என்றுதான் சொல்வான். 'ஏன் சாந்தினு சொல்ல மாட்டேங்கிறீங்க சோமு சார். அது நல்லாத்தானே இருக்கு?’ என்று கேட்க வேண்டும்போல இருக்கும். ஆனால், ஜான்சி ஒருபோதும் கேட்டது இல்லை. எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட வேண்டும் என்று அவசியமா என்ன?
அந்த தினசரிப் பேப்பரைக்கூட அவள் வாங்கவில்லை. எதிர் வரிசையில் உட்கார்ந்து இருந்தவர் வாங்கி இருக்க வேண்டும். அவர்தான் ஏறி உட்கார்ந்ததில் இருந்து இறங்கிப் போகும் வரை ஏதாவது ஒரு பேப்பரை வாசித்துக்கொண்டே இருந்தார். கோவில்பட்டியில் வாங்கி இருப்பாரோ என்னவோ. மணியாச்சிக்குப் பிறகு ஆளையே காணோம். பேப்பர் மட்டும் கிடந்தது.
ஒரு காலி இருக்கையில், அந்த செய்தித்தாள் அப்படி ரயிலின் அசைவுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து பெயர்ந்து, தவித்து அசைவது ஏதோ ஒரு வகையில் ஜான்சியைத் தொந்தரவு செய்தது. ஜான்சி அந்த அசைவை நிறுத்த விரும்பினாள். பேப்பரைக் கையில் எடுத்துப் பிரித்தாள். என்னதான் உலகத்தில் இல்லாத நியூஸ் அப்படி அதில் இருக்கிறது என்று வேடிக்கை பார்ப்பதுபோலத் திருப்பினாள். அவளுடைய பார்வை, படம் பார்த்துக் கதை சொல்லப்போவதாக ஒவ்வொரு படமாக ஏறி இறங்கிக்கொண்டு பக்கம் திருப்பியது. மூன்றாம் பக்கம் கீழே சோமுவின் படம்.
'யேசப்பா’ ஜான்சி உரக்கவே பதறினாள். இவள் பிரிக்கிறவாக்கில் பேப்பரை வாசிக்கத் துவங்கி இருந்த பக்கத்து சீட் பெரியவர், 'தெரிஞ்சவங்களா?’ என்றார். ஜான்சி தலையை அசைத்தாள். 'அதையும் விடக்கூட’ என்றா சொல்ல முடியும்?
சோமுவுக்கு வயதாகி இருந்தது. நரைத்து இருந்தது. யாருக்குத்தான் வயது ஆகவில்லை. நரைக்கவில்லை. ஆனால், சில முகங்களை நரைக்கு அப்பால்வைத்து, மீசை முடியும் கறுப்பு மாறாமல் பார்த்துக்கொள்ளவே மனம் யத்தனிக்கிறது. யத்தனம் பிரயத்தனம் எல்லாம் கிடையாது. அப்படியே தான் இருக்கிறது அது.
சோமு முகம் அப்படியே இருந்தது.
வேலையாக மேஜையில் தீவிரமாகக் குனிந்து இருக்கும்போதும் சரி, ஒரு பிரிவு உபசார விருந்தில் யாருடைய தோளைத் தொட்டுக்கொண்டோ பேசும்போதும் சரி, நெற்றியின் புருவச் சுழிப்பில் அந்தப் பள்ளம் விழுந்துகொண்டே இருக்கும். சோமு அகலம் அகலமாக அணிந்து இருக்கும் மூக்குக் கண்ணாடிகளை ஜான்சிக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'இந்த பாக்யராஜ் கண்ணாடியை விடவே மாட்டீங்களா, சோமு?’ என்று கேட்க நினைத்து இருக்கிறாள். கேட்டது இல்லை. சமீபத்தில் மாற்றி இருப்பார்போல. இந்தக் கண்ணாடி ஃப்ரேம் நன்றாக இருந்தது சோமுவுக்கு.
ஜான்சிக்கு அழுகை வந்துவிட்டது.
நடந்துகொண்டு இருக்கும்போது இப்படித் தோளில் பையைப் போட்டுக்கொண்டு, கையில் ஒரு தினசரிப் பேப்பரைச் சரசரவென்று படபடக்கவிட்டபடி அழ அவளுக்குப் பிடித்து இருந்தது. இந்தக் கசங்கின சேலையுடன், கழுவாத முகத்தோடு, பயண அலுப்போடு இப்படி இந்தத் தெருவில் நடப்பதுதான் சரி என்று தோன்றிற்று.
ஜானகிராமில் இவளுக்கு அறை ஒதுக்கி இருப்பார்கள். இவளுக்கும் அமலத்துக்கும் ஒரே அறை என்று ஏற்பாடு. வடக்கன்குளத்தில் கல்லூரி வகுப்பை முடித்துவிட்டு மாலை வந்து அமலம் காத்துக்கொண்டு இருப்பாள். இருவரும் போக வேண்டிய கல்யாணம் நாளைக்குத்தான். போகாவிட்டால்கூட ஒன்றும் இல்லை. சோமுவின் புகைப்படம் வந்து இருக்கிற இந்த தினசரியைப் பார்த்த பின் எதுவும் ஒன்றும் இல்லை.
சோமுவை அமலத்துக்குத் தெரியும். அமலம் சோமுவைப் பார்த்தது எல்லாம் கிடையாது. ஆனால், ஜான்சி சொல்லிச் சொல்லி ஒரு சோமுவை அவள் தெரிந்து இருக்கிறாள். தெரிந்து இருப்பது, பார்த்து இருப்பதைவிடக் கூடுதல். சோமு ஜான்சிக்கு எந்த அளவுக்குக் கூடுதல் என்பதை அமலம் அறிந்தே இருந்தாள்.
ஜான்சியிடம் அமலம் எத்தனையோ தடவை சொல்லி இருக்கிறாள்.
''இது எல்லாம் கடைசி வரைக்கும் சரியா வராதுப்பா. அசோகனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிக் குடும்பம், குழந்தை, குட்டி எல்லாம் இருக்கு. அந்த ஆளை வெட்டியா நினைச்சுக்கிட்டு, நீ கல்யாணம் வேண்டாம்... வேண்டாம்னு சொல்றது எல்லாம் எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை ஜானி'' என்று நிறைய தடவைகள் பேசி இருக்கிறாள். ஜான்சி சிரிப்பாள். ஒரு சில சமயங்களில், ''உனக்குப் புரியாது அமலி'' என்பாள். அமலத்தையும் பக்கத்தில்வைத்துக்கொண்டு, ஜான்சியின் அம்மா அழுது வருத்தப்பட்ட சமயம்கூட, ஜான்சி கல்லைப்போல இருந்தாளே தவிர, 'சரி, கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்’ என்று வாயைத்திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
சோமு வந்த பிறகு அந்த மாயம் நடந்தது.
எல்லாவற்றையும் இங்கே இருந்து அங்கே யாரோ இடம் மாற்றிவைத்ததுபோல இருந்தது. வலது ஓரத்தில் இருக்கிற பூந்தொட்டி இடது ஓரம் போயிற்று. வெயில் விழாத இடத்தில் வெயில் விழுந்தது. சில ஜன்னல் மூடி, வேறு சில ஜன்னல்கள் திறந்தன. இப்படிச் சின்னச் சின்னதாக ஜான்சி மனதில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்க வேண்டும். அவள் அதற்குப் பிறகு அநேகமாக அசோகனைப்பற்றி அதிகம் பேசுவது இல்லை. சோமுவின் கையெழுத்தைப்பற்றி, அவர் அலுவலக மேஜையின் இழுப்பறைகளை அவ்வளவு நேர்த்தியாகவைத்து இருப்பது பற்றி, அவருக்குத் தெரியாமல் அவருக்கு வந்து இருந்த ஒரு வாழ்த்து அட்டையைத் திருட்டுத்தனமாக வாசித்ததும், கிட்டத்தட்ட ஒரு காதல் கவிதை போன்று அதன் அச்சு வரிகள் இருந்ததும் பற்றி எல்லாம் பேசினாள்.
ஒரு திங்கள் கிழமை காலை ஜான்சி, '' 'கல்யாணத்துக்குச் சரி’னு அப்பாகிட்ட சொல்லிட்டேன் அமலி'' என்றாள். அமலம், ''நான் சோமுவைப் பார்க்கணுமே'' என்று சொன்னதுக்கு, ''நீ ஒண்ணும் அவரைப் பார்க்க வேண்டாம்'' என முதலில் சொல்லி விட்டு, ''இல்லை... இல்லை. நீ பார்க்கணும். கண்டிப்பாப் பார்க்கணும்'' என்றாள். சோமுவை அமலம் பார்த்தது, கல்யாண வரவேற்பில் சோமுவை செல்வராஜ் பார்த்தது, மாலையும் கழுத்துமாக ஜான்சியும் செல்வராஜும் இருக்க, சோமுவுடன் படம் எடுத்ததெல்லாம் போய், இதோ இப்படி அவரைக் கடைசியாகப் பார்க்க அவருடைய வீட்டுக்கு.
மின்சார டிரான்ஸ்ஃபார்மரைப் பார்க்கும் போது எல்லாம் ஜான்சிக்கு என்னவோபோல இருக்கும். இன்றும் இருந்தது. வலது புறம் திரும்பும்போது தேக்கு இலைச் சருகுகளாகத் தெருவில்கிடந்தன. அவ்வளவு அகல இலைகள் ஏன் இப்படி விநோதமாகச் சுருங்கியும் சுருண்டும் ஓர் அநாதரவுடன் காற்றில் புரள்கின்றன என்று ஜான்சிக்குத் தோன்றியது. இவ்வளவு புடைத்த நரம்புகளுக்குப் பின்னும் இந்த இலைகள்இத்தனை சருகாகிவிட முடியுமா?
அவை காற்றில் அவளுக்கு முன்னால் நகர்ந்து நகர்ந்து சோமுவின் வீட்டை அடையாளம் காட்ட, ஒரே காம்பவுண்டுச் சுவரில் இரண்டு பூனைகள் படுத்துக்கொண்டு, இவளையே பார்த்துக் கண்கள் சுருக்கின. அடர்ந்த ஊதா, சிவப்பு, மஞ்சள் பட்டைகளுடன் அலையும் ஷாமியானாவைப் பார்த்தவுடன் ஜான்சி அடுத்த அடியைவைக்க முடியாதவளாக நின்றாள்.
நிறைய கார்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள், நிறைய ஆட்கள்.
துக்க வீட்டுக்குள் 'யார் நீ?’ என்று ஜான்சியை யாரும் கேட்கப்போவது இல்லை. அடையாளம் சொல்ல வேண்டியது இல்லை. துக்கம்தான் அடையாளம். ஜான்சி தோள் பையைக் கழற்றி ஓர் ஓரமாகக் கிடந்த நாற்காலியில் வைத்தாள். வேறு ஒன்றும் செய்யவில்லை. இதுவரை காலியாகக் கிடந்த நாற்காலியில் அந்தக் கறுப்புப் பையை வைத்ததும் மொத்த இடமும் துக்கத்தின் பாரத்துடன் கனத்துவிட்டது.
யாரோ உள்ளே போகும்படி கை காட்டினார்கள். செருப்பைக் கழற்றினாள். சாதாரண நேரங்களைவிட இது போன்றவற்றில், செருப்பை உதறும்படி ஆவது ஏன் என்று தெரியவில்லை. உதறலில் ஒரு செருப்பு சற்றுத் தள்ளி விழுந்தது. ஜான்சி ஓர் ஆதரவுக்குப் பக்கத்தில் இருந்த செடியில் லேசாகக் கையைவைத்தாள். கை பாரத்தில் அது தணிந்து, சிவப்பு இட்லிப் பூக்கொத்துக்களுடன் கிட்டத்தட்ட ஜான்சியின் முகம் வரை அசைந்துவிட்டுப் போனது.
வாசலின் இந்தப் புறமும் அந்தப் புறமும் நின்ற இருவரும் கும்பிட்டார்கள். ஜான்சி குனிந்துகொண்டு படி ஏறினாள். குவிந்துகிடந்த அரக்குச் சிவப்பு ரோஜா மாலைகள் ஓர் அருவருப்பான பயத்தை உண்டாக்கியது. துக்கம் பூக்களைக்கூட வேறு நிறம்கொள்ளவைத்துவிடும்போல.
ஃப்ரீஸர் பெட்டியின் அலுமினிய விளிம்பும் துடைக்கப்பட்ட கண்ணாடியும் அதற்குள் நீண்டு இருக்கும் கால்களும் தெரியும்போதே, ஜான்சி கும்பிட ஆரம்பித்தாள். இவளுக்கு முன்பு நின்ற ஒருவர் மாலையை வைத்துவிட்டு மௌனமாக இருந்தார். அந்தச் சிறிது நேர மௌனத்தையே ஜான்சியால் தாங்க முடியவில்லை. தனக்கும் அந்தக் கண்ணாடிப் பெட்டிக்கும் உள்ள தூரம், இதுவரை தன் வாழ்வில் கடக்க இருப்பதிலேயே கடினமானது என்று ஜான்சிக்குத் தோன்றிற்று.
சோமுவின் மனைவி சாந்தி, சோமு சொல்வதைப்போலச் சொன்னால் 'கிருஷ்ணாம்மா’ யார் எனத் தெரியவில்லை. ஒலி அற்ற சலனப் படத்தைத் தொகுக்க வந்து இருப்பதுபோல ஒருத்தருக்குள் ஒருத்தரைச் செருகிவைத்ததுபோலத் தரையில் இருக்கிற எல்லோரையும் பார்த்தாள். நாலைந்து பத்திகளில் ஒரே சமயத்தில் எரிந்து நீளமாகத் தொங்கிக்கொண்டு இருந்த சாம்பல் கம்பிகள், அடுத்தடுத்து அறுந்து விழும் நேரம் தாங்க முடியாததாக இருக்கும் என்று ஜான்சி வேறு திசையில் பார்த்தாள். மொத்தத்துக்கத்தின் கரும் போர்வையில் இருந்து ஒரே ஒரு இழையை உருவி எடுத்தது போல ஒரு பெண் அந்தக் கூட்டத்தில் இருந்து செல்போனைக் காதோடு பொத்திக்கொண்டு எழுந்துபோயிற்று.
சோமுவின் எண்ணை இங்கு இருக்கிற எத்தனை பேர் தன்னுடைய செல்போன்களில் பதிந்துவைத்து இருப்பார்கள் என்றும், அதை எப்படி நாளையோ, வரும் நாட்கள் ஒன்றிலோ அவர்கள் அகற்றுவார்கள் என்றும் ஜான்சி யோசித்தாள். இப்படி இறந்துபோனவர்களின் எண்ணை அகற்றுவதுபோன்ற வதை வேறு ஒன்றும் இருக்காது. ஜான்சிக்கு எப்போதும் அது பதற்றமானது தான். அவள் டாக்டர். மாணிக்கவாசகத்தின் எண்ணை அப்படியேதான் விட்டு வைத்து இருக்கிறாள். அவர்கூட சோமுவின் உறவினர்தான் என்று ஞாபகம். சோமுவின் எண் தன்னிடம் இதுவரை இல்லாதது நல்லது என்று தோன்றியது. சில உரையாடல்களுக்கு எண்கள் எல்லாம் தேவையே இல்லை.
ஜான்சி கண்ணாடிப் பெட்டியை நெருங்கினாள்.
இதற்கு முன்பு வந்து போனவர் வைத்த மாலை, முகத்தை மறைத்தது. கண்ணாடிக்கு மேல் அதை நகர்த்தினாள். வளையல் அப்படி ஒரு லேசான சத்தத்தைக்கூட உண்டாக்கி இருக்கக் கூடாது என வருந்தியபடி தலையில் இருந்து கால் வரை சோமுவை ஜான்சி பார்த்தாள். குளிர்பதனத்தில் முகம் லேசாகக் கனத்து இருந்தது. நரைத்துவிட்டது என்பதால் மீசையை ஒட்ட நறுக்கவில்லை. பழைய அடர்த்தியுடனேயே ஓர் அமைதியான புள்ளியில் தளர்ந்து இருந்தது. சோமுவுக்கு அதுதான் பழக்கம். முழுக்கைச் சட்டையை முக்கால் கையாக மடக்கிவிட்டு இருப்பார். அப்படியே இருந்தது. கடிகாரத்தைத் தவறுதலாக இடது கையில் அணிவித்து இருந்தார்கள். அவர் வலது கைக்கடிகாரக்காரர். ஜான்சிக்கு தானே இடது கையில் இருந்து கழற்றி வலது கையில் மாட்டிவிட வேண்டும் என்று தோன்றிற்று.
சோமு 'ஜான்சி’ என்றுகூட இப்போது கூப்பிடலாம். நன்றாக இருக்கும். கூப்பிட முடியாது என்று தெரிந்தும் கூப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே அவஸ்தை. கண்ணாடியைக் கழற்றவில்லை. அதே அலுவலகக்களை. நெற்றி சிறிது சுழிப்பதுபோல இருந்தது. கண்ணாடியைக் கழற்றிக்கொண்டே, 'சொல்லுங்க ஜான்சி’ என இவளை ஏறிட்டுப் பார்ப்பதுபோல இருந்தது. ஜான்சிக்கு கண்ணாடியைக் கழற்றின சோமுவின் முகம் ரொம்பப் பிடிக்கும்.
அது அந்த ஒரே ஒரு நாளினுடையது.
ஜான்சி தன் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க சோமு வீட்டுக்குப் போகும்போது, அவள் மட்டுமே தனியாகத்தான் போனாள். 'சார்’ என்று கூப்பிடவில்லை. 'கிருஷ்ணாம்மா’ என்று கூப்பிட்டாள். ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள். கிருஷ்ணாம்மா இல்லைபோல.
''வெளியே போயிருக்காங்க'' என்று முதலில் சோமுவின் குரல் வந்தது. அப்புறம் சோமு வந்தார்.
ஊஞ்சல் சத்தம் மாதிரி இப்போது கூடுதலாக ஏதாவது ஒரு சத்தம், சோமு அப்படி வரும்போது கேட்டால் நன்றாக இருக்கும் என ஜான்சி நினைத்தாள். ஊஞ்சல் சங்கிலிச் சத்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு டம்ளர் கீழே விழுந்து சுழன்று அடங்குகிற சத்தமாவது வேண்டும்.
சோமு வந்த உடனேயே ஜான்சி கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்தாள்.
'குட்’ என்று சொல்லிக்கொண்டே சோபாவில் உட்கார்ந்தார். ஒரு கை பத்திரிகையைப் பிரித்தது. இன்னொரு கை ஜான்சியை உட்காரச் சொல்லி எதிர் இருக்கையைக் காட்டியது.
ஜான்சி, சோமுவையே பார்த்தாள். இந்த ஆள் தனக்கு என்ன செய்தார் என்று அவளால் சொல்ல முடியவில்லை. தெரியக்கூட இல்லை. ஆனால், எல்லாம் செய்துவிட்டதுபோல இருந்தது.
இதோ... இந்த கல்யாணப் பத்திரிகை வரை அவர் செய்ததுதான். ஜான்சி எழுந்திருக்கும்போது சோமு கண்ணாடியைக் கழற்றிவிட்டு, பத்திரிகையை வாசிக்கத் துவங்கி இருந்தார்.
ஜான்சிக்குப் பிடித்த கண்ணாடியற்ற சோமுவின் முகம். அந்த முழு அறையையும் சோமுவின் முகம் நிரப்பிவிட்டது போல இருந்தது. அல்லது அந்த முகத்தில் முழு அறையும் நிரம்பி இருந்தது. அறையில் ஜான்சியும் சேர்த்திதானே. தான் அப்படி நிரம்பிவருவது அவளுக்குத் தெரிந்தது.
சோமுவின் கண்களில் முத்தமிடுவதாக அப்படி எந்த முன் தீர்மானமும் ஜான்சிக்கு இல்லை.
'சோமு சார்’ என்று சொல்லி அவள் குனிந்ததற்கும் நிமிர்ந்ததற்கும் இடையில் ஜான்சியின் முத்தம் அமர்ந்தது.
ஜான்சி கண்ணாடிப் பெட்டியையே பார்த்தாள். கண்ணாடியைக் கழற்றிவிட்டு இப்போதுகூட ஒன்று அந்த முகத்துக்குத் தரலாம்.
இப்படி ஜான்சிக்குத் தோன்றிய போதே ''சோமு சார்'' என்று ஒரு கதறல் அவளிடம் இருந்து வந்தது. ஒரு செம்மண் தொட்டிபோல உடைந்து கிடக்கிற அவள் கைக்குள் இருந்த செல்போன் சற்றுத் துள்ளிப் போய் விழுந்தது.
அந்த நொடிக்குக் காத்து இருந்ததுபோல, அழைப்பு ஒலித்து மினுங்கத் துவங்கியது. அமலமாக இருக்கலாம். ஜான்சி பேசவில்லை.
சோமுவின் எண்ணை இப்போது அதில் பதிந்துகொள்ள வேண்டும் என்று மட்டும் உடனடியாக அவளுக்குத் தோன்றிற்று!
நன்றி - விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக