04/01/2012

மண்ணாங்கட்டித் தாத்தா - பாவண்ணன்

தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட அசையவில்லை. ஒரே புழுக்கம். மரத்தடியில் போட்டிருந்த கட்டிலில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி மண்ணாங்கட்டித் தாத்தா படுத்திருந்தார். தூக்குவாளியைக் கீழே வைத்துவிட்டு, 'தாத்தா சாப்பாடு எடுத்தாந்து இருக்கேன். ஆயா குடுத்துட்டு வரச் சொல்லிச்சி...' என்றேன்.

பார்வையை என் பக்கம் திருப்பிய தாத்தா, மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தபடி, 'தாத்தாவுக்குப் பசிக்கலை ராஜா, எனக்கு வேணாம்ப்பா...' என்றார். என்ன செய்வது என்று தெரியாமல், நான் அவரையே பார்த்தபடி நின்றிருந்தேன். அவர் என் தோளைப்பற்றி அழுத்தி வீட்டுக்குப் போகுமாறு சைகை செய்தார். தாத்தாவின் முகத்தைப் பார்த்தபோது பாவமாக இருந்தது. உறைந்து இறுகிய முகம். கண்கள் பளபளத்தன. அவர் மனம் மாறி வாளியை வாங்கிக்கொள்ளக் கூடும் என்று மேலும் சில கணங்கள் காத்திருந்தேன். 'நேரமாவுதில்ல, போ... போய்ப்படு... போ...' என்று  தாத்தா அனுப்பிவைத்தார்.

திரும்பி வந்து ஆயாவிடம் நடந்ததைச் சொன்னேன். ஆயாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. தூணில் சாய்ந்தபடி சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டார். 'நாம அழுதா மட்டும் அவர் மனசு மாறிடுமாம்மா? அவரு புடிவாதம்தான் ஊரு ஒலகத்துக்கே தெரிஞ்சதாச்சே...' என்றார் அப்பா.

மண்ணாங்கட்டித் தாத்தாவுக்கு யாரும் இல்லை. கல்யாணமான புதுசிலேயே அவர் மனைவி, துரோபதை அம்மன் கோயில் திருவிழாவில் கூத்தாட வந்திருந்த அர்ஜுனன் வேஷக்காரனோடு சென்றுவிட்டார். பங்காளிகளும் அவரை ஏமாற்றினார்கள். அவர் பங்குக்குக் கிடைத்த கொஞ்ச நிலங்களையும் ஒரு வீட்டையும் ஏற்றுக்கொண்டு வெளியேறிவிட்டார். எல்லோராலும் கைவிடப்பட்டவரை ஆயா மட்டும்தான் அண்ணன் என்று வாய் நிறைய அழைக்கும். அவரைப்பற்றிய தகவல்களை எல்லாம் கதை கதையாகக் கேட்டுக் கேட்டு, மனதில் பதிந்துபோனதற்குக்கூட ஒருவகையில் ஆயாதான் காரணம்.

மண்ணாங்கட்டித் தாத்தாவோடு நெருக்கமாகப் பழகி உணர்ந்தது தேவகி அக்கா திருமணத்தின்போதுதான். பந்தல் போடுவதில் தொடங்கி, பந்தி பார்ப்பது வரைக்கும் எல்லா வேலைகளையும் அவர் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். வந்திருந்த விருந்தாளிகளுக்கு ஆறேழு போர்வைகள் திடீரெனத் தேவைப்பட்டன. செய்தி தெரிந்ததும் சைக்கிளில் சென்று கடைக்காரரை வீட்டில் எழுப்பி, அந்த அகால நேரத்தில் கடையைத் திறக்கவைத்து, வாடகைக்கு எடுத்து வந்து போட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார் தாத்தா. இரவு முழுக்க விழித்திருந்து தாம்பூலப் பைகள் போட்டார். பைக்குள் போடுவதற்கு வசதியாக, பிரித்துவைத்த வெற்றிலைகளின் மீது பாக்குப் பொட்டலங்களை வைப்பதுதான் என் வேலை. ஆயா அவரைப் பார்த்து 'இதயெல்லாம் இங்க இருக்கறவங்க பாத்துக்க மாட்டாங்களா? நீங்க போய்ப் படுத்துட்டு, விடிஞ்சதும் வாங்கண்ணே....' என்றபோதும் அவர் கேட்கவில்லை. 'அட நீ ஒண்ணு, உள்ள போம்மா, நம்ம பேத்தி கல்யாணத்துக்கு நான் செய்யாம, வேற யாரு செய்வாங்க?' என்று சிரித்துக்கொண்டே தேங்காயைப் பைக்குள் வைத்தார்.

காலை நான்கு மணிக்கு சங்கு ஊதும் நேரத்தில் சமையல்காரர் வந்து, 'பத்து கட்டு எலைக்குப் பதிலா எட்டு கட்டுதான் இருக்குது. இன்னும் ரெண்டு கட்டு இருந்தாத்தான் பந்திக்குச் சரியா இருக்கும்' என்று சொல்லிவிட்டுப் போனார். அப்பா பதற்றத்திலும் குழப்பத்திலும் உறைந்துபோய் உட்கார்ந்தபோது, 'இது என்னடா பெரிய விஷயம், நீ போடா, நான் பாத்துக்கறேன்' என்று வேகமாக வெளியே கிளம்பிய தாத்தாவோடு நானும் ஒட்டிக்கொண்டேன். என்னை கேரியரில் உட்காரவைத்து சைக்கிளை மிதித்தார் தாத்தா.

அதிகாலைக் கருக்கலில் காற்று முகத்திலும் மார்பிலும் மோதுவது சுகமாக இருந்தது. இருபுறங்களிலும் தென்னைகள் ஓங்கி வளர்ந்திருந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றார் தாத்தா. குளத்தைத் தாண்டி, குடிசைப் பகுதிகளைத் தாண்டி, வள்ளலார் மண்டபத்தையும் தாண்டிச் சென்று, ஓடு போட்ட ஒரு பெரிய வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினார். அந்த வீட்டு வாசலில் பால் கறந்துகொண்டு இருந்தார் ஒருவர். அருகில் கன்றுக்குட்டியின் கழுத்தில் தடவிக்கொடுத்தபடி உட்கார்ந்திருந்தார் இன்னொருவர். அவரைப் பார்த்து, 'வணக்கம் மொதலியாரே...' என்று சிரித்தார் தாத்தா. சுருக்கமாக வந்த வேலையைச் சொன்னார். முதலியார் 'ஒங்களுக்கு இல்லாத எலையா? இப்பவே ஏற்பாடு செய்றேன்' என்றபடி, மாட்டுத் தொழுவத்தின் பக்கம் வேலையில் இருந்த இருவரைப் பெயர் சொல்லி அழைத்தார். 'வாழத் தோப்புக்குப் போயி, ஐயா கேக்கற மாதிரி ரெண்டு கட்டு எல அறுத்துக் குடுத்துட்டு வாங்கடா' என்று அனுப்பிவைத்தார். அன்று மண்டபத்துக்கு, ஒரு பெரிய சாதனையாளனைப்போலத் திரும்பியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

நாங்களாவது ஏதோ சுற்றி வளைத்து தாத்தாவுக்குச் சொந்தம். சொந்தமே இல்லாதவர்கள் வீட்டுத் திருமணங்களில்கூட எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு உதவி செய்வார் தாத்தா. கிருஷ்ணவேணி அக்கா கல்யாணம், செல்வராஜி மாமா கல்யாணம், கமர்கட் கடை ராஜவல்லி அத்தை கல்யாணம், சின்னத் தம்பி சித்தப்பா கல்யாணம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஞாபகத்தில் ஒரு பட்டியலே உண்டு. காய்கறிச் சந்தையிலும் மளிகைக் கடைகளிலும் நயமான சரக்குகள் எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்பது அவருக்கு மனப்பாடம். வேண்டப்பட்ட ஆளுக்கு செலவைக் குறைப்பது என்பதுதான் அவர் லட்சியம்.

குணத்தில் தங்கம் போன்றவர் தாத்தா. குடிப்பழக்கத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்வதில் ஆயாவுக்கு ஆழ்ந்த வருத்தம் இருந்தது. ''வெளக்கேத்த வந்தவளே வெளக்க அவிச்சிட்டுப் போயிட்டா. இருக்கற சொத்தஎல்லாம் வித்து வித்து இன்னும் எவ்வளவு காலத்துக்குக் குடிப்பாரோ?'' என்று பெருமூச்சுவிட்டார். புங்க மரத்தின் பக்கம் இருந்த அரைக்காணி புஞ்சைக் காட்டை அடுத்து, மதகுப் பக்கமாக நெல்லும் கரும்பும் விளையக்கூடிய கால் காணி நிலத்தையும் விற்ற சமயத்தில் நடந்த உரையாடல் அது. போக்கியத்துக்குப் பயிர் பார்த்துக்கொண்டு இருந்த பெருமாள் கவுண்டர்தான் அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகக் கிரயமாக்கிக்கொண்டார்.

குடியை நிறுத்தச் சொல்லி ஆயா கேட்டுக்கொண்ட வார்த்தைகள் எதுவும், தாத்தாவின் காதில் உறைத்ததே இல்லை. ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை துரோபதை அம்மன் கோயில் திருவிழா சமயத்தில், கொடி கட்டி, கொடி அவிழ்க்கிற வரை ஆறு நாட்களிலும் அதைத் தொட மாட்டார். ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவரைப்போல கோயிலே கதியென்று கிடப்பார்.

ஒருமுறை தோரணத்துக்காக மாவிலை பறிக்க தாத்தாவோடு நானும் சென்றிருந்தேன். எக்காரணத்தை முன்னிட்டும் கிளைகளை ஒடிக்கக் கூடாது என்றும் கொத்துகளை மட்டும்தான் தனியே கிள்ளியெடுக்க வேண்டும் என்றும் அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. ஏரிக்கரை ஓரமாக இரண்டு பேரும் மாவிலைக் கட்டுகளோடு சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தோம். ஏரியில் கரைப் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கிக்கிடந்தது. ஒரு திருப்பத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு தாத்தா மேற்குத் திசையைக் காட்டி, ''அங்க பாருடா...'' என்றார். கை நழுவிவிழுந்த தங்கத் தட்டுபோல சூரியன் தகதகவெனக் கண்ணைப் பறித்தது. அந்த அழகில் மயங்கி நின்றேன். ''ஆட்ட கழுத்த அறுத்ததும், பீச்சி அடிச்ச ரத்தம் குட்டயாத் தேங்கினது மாதிரி இருக்குது பாரு...'' என்று அவராகவே அப்புறம் சொன்னார். அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன். ஒரு கணம் தயங்கி அந்த சூரிய வட்டத்தைப் பார்த்தபோது ரத்தக் குளம் போலவே தெரிந்தது.

தீ மிதி சமயத்தில் மேளம் உச்சத்தில் ஒலித்தபடி இருக்க, இடுப்பிலும் கழுத்திலும் வேப்பிலை மாலைகள் தொங்கத் தொங்க, நெருப்பில் முதலில் இறங்கி நடக்கும் தாத்தாவை ஒருபக்கம் அச்சத்தோடும் மறுபக்கம் ஆர்வத்தோடும் பார்ப்பேன். தாத்தாவைத் தொடர்ந்து விரதம் இருந்த அனைவரும் இறங்கி நடப்பார்கள். தண்ணீர்க் குளத்தில் கால் நனைத்து கரையேறி அம்மன் முன் கற்பூரம் ஏற்றி, 'காலா காலத்துல மழயக் குடுத்து பயிர் பச்சயயும் மாடு கன்னுங்களயும் காப்பாத்துடி அம்மா. ஒன் புள்ளைங்கள கைவிடாதடி தாயே' என்று மனமுருக வேண்டிக்கொள்வார்.

கோயிலையட்டிய பூந்தோட்டத்தில் ஏராளமாக செம்பருத்திச் செடிகளும் நந்தியா வட்டைகளும் வளர்ந்து வந்தன. ஒவ்வொரு செடியையும் குழந்தையைப்போல பார்த்துக்கொண்டார் தாத்தா. ஒரு இலை வாடினால்கூட, மனம் தாங்காது அவருக்கு. அதிகாலையில் ஒருமுறை, சாயங்காலமாக ஒருமுறை அவற்றுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்.

ஆடித் திருவிழாவுக்குப் பிறகு, ஒருநாள் வீட்டுத் திண்ணையில் புளி ஆய்ந்துகொண்டு இருந்தபோது தாத்தாவும் இருந்தார். புளி மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு சின்ன பாபு சமுத்திரம் சந்தைக்குச் சென்று விற்றுவிட்டு வந்த கதையை அப்போது சொன்னார் தாத்தா. வேடிக்கைக் கதைகளின் தொடர்ச்சி கொடுத்த துணிச்சலில், 'ஒங்களுக்கு ஏன் தாத்தா மண்ணாங்கட்டின்னு பேரு வெச்சாங்க?' என்று சட்டென்று கேட்டுவிட்டேன். துடுக்குத்தனமான என் கேள்வியைக் கேட்டு எல்லோரும் உறைந்துபோனார்கள். ஆனால், தாத்தா அதைத் தவறாகவே எடுத்துக்கொள்ளவில்லை. புன்சிரிப்போடு அமைதியாகவே இருந்தார். ஆனால், எதிர்பார்க்காமல் புரைக்கேறிவிட்டதால், இடைவிடாமல் இருமத் தொடங்கினார். கண்களில் நீர் கோத்துத் தளும்பியது. என் கேள்வியை நினைத்து ஆயா மிகவும் மனச் சங்கடத்துக்கு ஆளானார்.

'அவரு பேரு மணவாளன்டா. சின்னப் புள்ளயில எல்லாரும் அப்படித்தான் கூப்புடுவாங்க. ஒரு சமயம் கடுமையான காய்ச்சல். கண்ணக்கூடத் தொறக்க முடியாம படுத்துக்கெடந்தாரு. நாடி புடிச்சிப் பாத்த வைத்தியரு, 'களிமண்ணக் கொழச்சி ஒடம்பு பூரா பூசி உடுங்க. காயக் காயக் கழுவிட்டு, மறுபடியும் மறுபடியும் பூசிக்கினே இருக்கணும். ஒரு பத்து நாளு உடாம செய்யணும்’னு சொன்னாரு. வெறும் கோவணத்தோட பத்து நாளு இதே கோலம். காய்ச்சல் தானா வடிஞ்சிட்டுது. அந்தச் சமயத்துல யாரோ அப்படி பட்டப் பேரு வெச்சிக் கூப்புட, அப்பறமா அதுவே பேரா நின்னுடுச்சி...'

அப்போது பெருமாள் கவுண்டர் ஐந்தாறு உறவினர்களோடு வீட்டு வாசலுக்கு வந்து நின்றார். அப்பாவும் ஆயாவும் அவரை வரவேற்று உட்காரவைத்துப் பேசினார்கள். தட்டில் தாம்பூலம்வைத்து 'வர்ற பதினேழு தேதியில பொண்ணுக்கு முகூர்த்தம் வெச்சிருக்கோம். அவசியம் குடும்பத்தோடு வந்துரணும்...' என்று பத்திரிகை கொடுத்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரேவதி அத்தை, தேவகி பெரியம்மா என எல்லோருடனும் பேசிய பெருமாள் கவுண்டர், பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த தாத்தாவைச் சிறிதுகூடப் பொருட்படுத்தவில்லை என்பதை நான் கவனித்தேன். அப்பாவும் அதை உணர்ந்து குழம்பியவரைப்போல, 'என்ன பெருமாளு, தாத்தாவுக்குப் பத்திரிகை குடுக்க மறந்துட்டியா? அவரு இல்லாம இந்த ஊருல எந்தக் கல்யாணம்தான் நடந்தது?' என்று இயல்பாகக் கேட்டார். சந்தர்ப்பம் புரியாமல் ரேவதி அத்தை, 'நீ அழைச்சாலும் சரி, அழைக்காட்டாலும் சரி, தாத்தாதான் மின்னால இருந்து பம்பரமாச் சுத்திச் சுத்தி வேலையப் பாக்கப் போறாரு...' என்று சொன்னபடி ஆய்ந்த புளியை அம்பாரத்தில் சேர்த்துவிட்டு, கொட்டைப் புளியை எடுத்தது.

பெருமாள் கவுண்டர் சட்டென்று குரலை உயர்த்தி, 'அழைக்காத வூட்டுக்கு நொழயற விருந்தாளியாட்டமா, யாரும் மண்டபத்துல வந்து நிக்க வேணாம். அப்பறம் மானம் மரியாதை போயிடும்...' என்று சூடாகச் சொன்னார். கையில் வைத்திருந்த புளியைக் கீழே வைத்துவிட்டு, எல்லோரும் ஒரு கணம் கவுண்டரையே பார்த்தார்கள். அடிபட்டதுபோல மனம் குலைந்து காணப்பட்டார் தாத்தா.

'என்ன பெருமாளு, தாத்தா வயசு என்ன? ஒன் வயசு என்ன? அவரப் போயி இப்படிச் சொல்லலாமா? இன்னிக்கு நீ வெச்சிக்கற வீடு, நெலம், தோப்பு எல்லாமே அவருகிட்டேருந்து வாங்கனதுதான? அவருக்கு ஒரு பத்திரிக குடுத்தாக் கொறஞ்சா போயிடுவ?' - அப்பா ஆதங்கத்தோடு பெருமாள் கவுண்டரிடம் கேட்டார்.

'கண்ணுல படறவங்களுக்கெல்லாம் குடுக்கறதுக்கு நான் என்ன கோயில் சுண்டலா குடுக்கறன்?' என்று வெடித்தார் பெருமாள் கவுண்டர். அப்பா உட்பட யாரும் அப்படிப்பட்ட ஒரு பதிலை எதிர்பார்த்திராததால் உறைந்துபோனார்கள். அந்த அமைதியையே ஒரு தூண்டுகோலாகக்கொண்டு மறுபடியும் பேசத் தொடங்கினார் கவுண்டர். 'வூட்ட கெரயத்துக்குக் குடுத்து மாசம் ஆறாவுது பரமசிவம். மூணு மாசத்துல காலி பண்ணிடுவேன்னு சொல்லித்தான் முழுசாப் பணத்த வாங்கினாரு. கேக்கறபோதுலாம் இதோ இதோன்னு இழுத்தடிக்கறாரு. என் பொண்ணுக்குச் சீதனமாக் குடுக்கணும்னுதான் பணத்த அன்னிக்கு அள்ளிக் குடுத்தன். இப்படிக் கடசியில கெழவரு கழுத்தறுப்பாருன்னு தெரியாமப்போய்ட்டுது. இப்படிப்பட்டவர நான் ஏன் ஒரு மனுசனா மதிக்கணும், சொல்லுங்க?''

படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு, பெருமாள் கவுண்டர் கிளம்பிச் சென்றதும், அந்த இடத்தில் நிலவிய அமைதி சகிக்க முடியாததாக இருந்தது. தாத்தா தன் வீட்டை விற்ற விஷயமே அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது. அதிர்ச்சியில் எல்லோரும் சிலைபோல அமர்ந்திருந்தோம்.

சில கணங்களுக்குப் பிறகு, 'இருக்கற எடத்தயும் வித்துக் குடிக்கற அளவுக்கு அதுல என்னண்ணே இருக்குது? கருமாந்திரம் புடிச்ச பழக்கத்த வுட்டுத் தொலைக்கக் கூடாதா?' என்று கண் கலங்கக் கேட்டார் ஆயா. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தாத்தா, திண்ணையில் இருந்து இறங்கி மெதுவாக வெளியேறினார்.

அன்று மாலை நண்பர்களோடு பம்பரம் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தாத்தா தன் வீட்டுக்குள் இருந்து ஒரு கட்டிலையும் போர்வையையும் வெளியே எடுத்து வந்து வேப்ப மரத்தடியில் போடுவதைப் பார்த்தேன். பிறகு வீட்டைப் பூட்டினார். என்னை அழைத்து சாவியைக் கொடுத்தார். 'இதக் கொண்டுபோய் அந்த பெருமாள் கவுண்டரு வூட்டுல குடுத்துட்டு வரியா?'' என்று கேட்டார். ஓட்டமாக ஓடி அடுத்த தெருவில் இருந்த அவருடைய வீட்டில் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். அந்த வீட்டில் யார் யார் இருந்தார்கள், சாவியை யார் வங்கினார்கள், ஏதாவது சொன்னார்களா என்றெல்லாம் கேட்டார் தாத்தா. நானும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.

பேச்சு வேகத்தில் எங்கள் வீட்டுக்கு வந்ததே தெரியவில்லை. வாசலில் நின்றபடி ஆயாவை அழைத்தார். ஆயா வந்ததும் வேட்டியில் முடிந்து வைத்திருந்த ரூபாய்த் தாள்களை எல்லாம் எடுத்துக் கொடுத்தார். ''இந்தா வச்சிக்க, நா செத்தா எடுத்துப் போட ஆவற செலவ இதிலேருந்துதான் செய்யணும்'' என்று சொன்னார். அதிர்ச்சியில் ஆயா கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவே இல்லை. அமைதியாக திரும்பிச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டார்.

சாயங்காலம் கழனியில் இருந்து அப்பாவும் அம்மாவும் திரும்பியதும் விஷயத்தைச் சொல்லி அழுதார் ஆயா. அப்பா மரத்தடிக்குச் சென்று, ''நாங்கள்லாம் இருக்கும்போது, நீ இப்பிடிச் செய்யலாமா? நம்ம வூட்டுல வந்து இரு வா'' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லி அழைத்தார். புன்னகையோடு தாத்தா எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு வேப்ப மரத்தடியில் உட்கார்ந்துவிட்டார்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டு இருந்த என்னைத் தாத்தா அழைத்தார். மரத்தோடு சாய்த்துவைக்கப்பட்டு இருந்த சைக்கிளைக் காட்டி எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். ஒரு கணம் எதுவும் புரியாமல் தயக்கம் காட்டினேன். ''இனிமே ஒனக்குத்தான்டா, தாத்தா ஞாபகமா வெச்சிக்க. இதத் தவிர வேற ஒண்ணுமில்ல குடுக்க...' என்று நெருங்கி வந்து தலையைத் தொட்டு வருடிக்கொடுத்தார்.

கலகலப்பாக நடமாடிக்கொண்டு இருந்த தாத்தா, ஒரே நாளில் மாறிப்போனது துயரமாக இருந்தது. அம்மன் கோயில் தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் வேலையை மட்டும் தவறாமல் செய்துவந்தார். மற்றபடி மண்டபம், சத்திரம், கடைத்தெரு, தோப்பு என எங்கும் அவர் முகம் தென்படவில்லை. ஏரிக்கரையை மட்டும் சுற்றிச் சுற்றி வந்தார். நாலு நாட்களுக்குப் பின் அதையும் நிறுத்திவிட்டு கட்டிலோடு முடங்கிவிட்டார். உணவு என எதையும் அவர் தொட்டதை யாரும் பார்க்கவே இல்லை.

மரணத்தை எதிர்கொள்ள தாத்தா எடுத்த முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை. பெருமாள் கவுண்டரின் சொற்கள்தான் அவரை அப்படி முடக்கிவிட்டன என்று நினைத்துப் பலரும் அவரைச் சந்தித்து புத்திமதி சொன்னார்கள். கோபமும் வெறுப்பும் உச்சிக்கு ஏறிப்போன பெருமாள் கவுண்டர், ஒருநாள் காலையில் டி.வி.எஸ்ஸில் வந்து இறங்கி, கட்டிலில் உட்கார்ந்து இருந்தவரைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டுப் போனார். தாத்தா ஒரு வார்த்தைகூடப் பதில் சொல்லாமல் அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி இருந்தார்.

அடுத்த நாள் இரவும் சாப்பாட்டுத் தூக்குவாளியைக் கொடுத்து அனுப்பினார் ஆயா. நான் வெளியே வந்து செருப்பு போடும் நேரத்தில், 'இருடா இரு... நானும் வர்றேன்...' என்று அப்பாவும் வந்தார். எங்களைத் தொடர்ந்து மெதுவாக ஆயாவும் வந்தார்.

கட்டிலுக்கு அருகே சென்று 'தாத்தா... தாத்தா' என்று நாலைந்து முறை அழைத்த பிறகுதான் தாத்தா கண் விழித்தார். சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தார். உடல் முழுதும் தளர்ச்சி தெரிந்தது.

எல்லோரும் மாறி மாறி ஏதேதோ சொன்னார்கள். தாத்தா எதற்கும் பதில் சொல்லவில்லை. ஒரு புன்னகை. ஒரு தலையசைப்பு. அவ்வளவுதான்.

மனம் நடுங்கியது. அவர் அருகே சென்று தோளில் கைவைத்து அசைத்தேன். எப்படியாவது அவரை உயிருடன் மீட்டுவிட வேண்டும் என்று தோன்றியது.

புறப்படும்போது ஆயாவைப் பார்த்து தாத்தா இரண்டு விரல்களைக் காட்டினார். 'வழியெல்லாம் எதுக்குடா அப்படிச் செஞ்சாரு?' என்று கேட்டபடி வந்தார் அப்பா. இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று எதை எதையோ நினைத்து மனத்தில் பட்டதையெல்லாம் சொன்னார். இறுதியாக, 'இன்னும் ரெண்டு நாள்தான் உசிரோட இருப்பேன்னு சொல்லியிருப்பாரோ?' என்று யோசித்துச் சொன்னபோது, அவராலேயே அந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. அதைக் கேட்டு ஆயா விம்மினார்.

மறுநாள் இரவிலும் அதற்கு அடுத்த நாள் இரவிலும் தாத்தாவுக்கு நான் சாப்பாடு எடுத்துச் சென்றேன். அன்றும் அவர் வாங்கிக்கொள்ளவில்லை. அமைதியாகச் சிரித்தார். நரைத்த முடி. குழி விழுந்த கண்கள். எலும்பு தெரியும் கன்னங்கள். பார்க்கப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எண்ணெய் வற்றிய திரிபோல அவர் கண்களில் மங்கலான ஒளிமட்டும் படர்ந்து இருந்தது. உதடுகள் வெடித்திருந்தன.

அடுத்த நாள் காலையில் யாருமே சொல்லாமல் நான் தாத்தாவைப் பார்க்கச் சென்றேன். போர்த்தியிருந்த போர்வை மீது வேப்பம் பூக்கள் சிதறியிருந்தன. காதோரத்தில் இருந்து பழுப்பு நிற எறும்புக் கூட்டம் தாத்தாவின் நெற்றியில் ஊர்ந்து வந்தன. என் இதயம் வேகமாகத் துடித்தது. நடுக்கத்தோடு தாத்தாவைத் தொட்டு அசைத்தேன். அவர் உடலில் எந்த அசைவும் இல்லை.

ஓட்டமாக ஓடி வந்து வீட்டில் நுழைந்தேன். அப்பாவைப் பார்த்ததும் அழுகை பொங்கியது. 'தாத்தா... தாத்தா...' என்று குழறினேன். வாய் தடதடத்தது. கண்ணீர் பொங்கியது. அப்பா என்னை இடுப்போடு அணைத்துக்கொண்டு தூணைப் பற்றி நின்றார். 'பாவி மவராசன் சொன்னபடியே போயிட்டாரே...' என்று குரலெழுப்பி அழுதபடி ஆயா தெருவில் இறங்கி வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தார்!

நன்றி - விகடன்

1 கருத்து: