லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசுகிறார்கள்!
இவர்களுமா இப்படி?
யாரவர்கள்? எப்படி நடந்து கொண்டார்கள்? அப்படியென்ன தவறு செய்தார்கள்? என்று ஆராய வேண்டாம். நன்கு கற்ற புலமை மிக்குடையவர்களும் உச்சரிப்பில் தவறும்போது நம் மனம் வாடுகிறது; வருந்துகிறது. நூல் (புத்தகம்) என்பதை ஒரு சிறந்த பேச்சாளர் பலவிடங்களில் நூள், நூள் என்றே உச்சரித்தார். "அவன் ஏன் தோல்வியைத் தளுவினான் தெரியுமா?' என்று அவர் வினா விடுத்த போது, நாம் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். "அவன் ஏன் தோல்வியைத் தழுவினான்?' என்பதுதான் அவரின் வினா.
சென்னையில் மிகப் பெரிய அரங்கம். கற்றுத் தேர்ந்த அவையினர். பேச்சாளரோ நுண்மாண் நுழைபுலம் மிக்கவர், நாவன்மையும், சிந்தனைத் திறமும் படைத்த பேரறிஞர். ஆயினும் அவர்தம் உரையில், "உணர்வு சார்ந்து நாம் பேசினாள் (ல்) ', "இன்னும் சொல்லப் போனாள் (ல்)', "அவர் ஏன் பாடவில்லை என்று கேட்டாள் (ல்)',
"இந்தப் பஞ்ச பூதக் களப்பு (கலப்பு)'. இப்படியே லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசும்போது நாம் மனம் வெறுத்தே போனோம். எழுந்து கத்துவது நாகரிகமல்லவே! ஆதலின் வாளாவிருந்தோம்! தம் பேச்சைத் தாமே ஒலிநாடாவில் - குறுவட்டில் பதிவு செய்து கேட்டுப் பார்த்தால், தவறு புரியாமல் போகாது. சற்றே முயன்றால் சரியாக உச்சரித்துப் பேசக் கூடுமே.
வாட்டமில்லா வண்டமிழ் என்றும் ஈரத் தமிழ் என்றும் போற்றப்படும் நந்தமிழ் இப்படிச் சிதைக்கப்படலாகுமோ? இயல்பாக எளிமையாக வர வேண்டிய ஒலிப்பு - உச்சரிப்பு, அறிஞர் சிலரிடையே ஏன் இப்படி இடர்ப்படுகிறதோ?
""தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தவை. தமிழிலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநெறியையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை; உருவாக்கப்பட்டவை'' என்று போற்றியுள்ளார் மேலை நாட்டுத் தமிழறிஞர் ஜி.யு.போப். தமிழர்கள் இந்த வரிகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
திரைகடலா? திரைக்கடலா?
இந்த ஐயத்தை நம்மிடம் எழுப்பியவர் நண்பரும் கவிஞரும் ஆகிய ஒரு புள்ளி. நாம் சொன்னோம்,
"திரைகடலோடியும் திரவியம் தேடு'' என்று ஒüவையார் பாடியுள்ளார்.
"நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை' என்று பாரதியார் பாடியுள்ளார். எது சரி? இரண்டும் சரியானவைதாம். எப்படி? சற்றே இலக்கணக் கடலுள் புகுந்து முத்தெடுத்தல் முயற்சியில் ஈடுபடுவோமா?
கடலின் அலையைத் திரை என்போம். (திரை - திரைச்சீலை, தோலில் தோன்றும் சுருக்கம் என்றும் பொருள் தரும்)
கடலின் அலை என்றாவது ஓய்ந்ததுண்டா? "அலைகள் ஓய்வதில்லை' என்று நாமறிவோம். "அலை' என்பதைப் பெயராக்காமல், அலை என வினையாக்கிப் பார்த்தால், அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல் எனப் பொருள் தரும் வகையில் அலைகடல் என்போம். இவ்வாறே அலைக்குப் பதில் திரை எனும் சொல்லைப் போட்டால் திரை கடல் என்றுதானே ஆகும்?
ஆதலின் "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்னும் ஒüவை வாக்கின் அருமையை உணர முடிகிறது. அடுத்தது, திரை வேறு, கடல் வேறா? இரண்டும் ஒன்றே; வட்டக் கல் என்பதுபோல. ஆதலின் திரைக்கடல் எனின் இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். அன்றியும் திரையை உடைய கடல் என்று விரித்தால் இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (உடைய) உடன் தொக்க தொகையாகவும் கொள்ளலாம். ஈண்டும் ஒற்றுமிகும்.
நீலத்திரைக் கடல் என்று மகாகவி பாடியதும், "திரை கடல் ஓடி' என்று தமிழ்ப் பாட்டி பாடியதும் இலக்கணத்தோடு இயைந்து இனிமை பயக்கின்றன.
ஆகவே இரண்டும் சரியே. இந்த விளக்கம் போதுமா? இன்னும் வேறு வேண்டுமா?
முயல்வுகள் என்பது சரியா?
முனைவர் பட்டம் பெற்ற ஒருவரின் நல்ல நூலில் இந்தச் சொல் காணப்படுகிறது. பார்த்த - படித்தவுடனே நம் மனத்தில் இது பிழை என்ற எண்ணம் உண்டாதல் இயற்கை. முயற்சிகள் என்றுதான் நாம் எழுதி வருகிறோம். இது புதிதாக இருக்கிறதே!
முயற்சி ஒரு தொழில் பெயர். பயிற்சி, தளர்ச்சி, வளர்ச்சி என்பன காண்க. மகிழ்ச்சி என்பதும் இதுபோன்ற ஒரு சொல்லே. இதன் பொருள் என்ன? மகிழ்வடைதல் என்பதுதானே? மகிழ்வடைதலில் உள்ள முதற்சொல் மகிழ்வு. அடைதல் வந்து சேர்ந்து மகிழ்வடைதல் என்றாகிறது. மகிழ்ச்சியடைதல் என்பதும், மகிழ்வடைதல் என்பதும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக