முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!
அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்துற்றது. வசந்தம் என்பது இளவேனிற் பருவத்துக்கு (காலத்துக்கு) உரிய பெயர். வசந்த காலத்தில் புதிய தளிர்கள், மலர்கள் செழித்து வளரும், தென்றல் காற்று வீசும், இனிமை மிகும். "அவர்கள் வாழ்க்கையில் செழிப்பும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்தன' என்று சொல்லாமல் வசந்தம் வந்தது என்று சொன்னதால் - வசந்தம் எனும் காலத்தில் விளையும் வளத்துக்கு ஆகி வந்தது. இது காலவாகு பெயர்.
"மூவரும் தலா (தலைக்கு) ஐந்நூறு பரிசு பெற்றனர்' தலைக்கு மட்டும் பரிசு தர இயலுமா? தலை என்பது மனிதனின் (எவ்வுயிர்க்கும்) ஓருறுப்பு. இந்த உறுப்பின் (சினையின்) பெயர். இவ்வுறுப்பை உடைய முழுமனிதனுக்கும் (பொருளுக்கும்) ஆகி வந்ததால் இது சினையாகு பெயர்.
"மனத்தினில் கறுப்பு வைத்து' - சூரிய நிறத்தை உள்ளத்திலே வைத்துக் கொண்டு, இங்கே கறுப்பு எனும் பண்புப் பெயர் வஞ்சக நினைவுக்குப் பெயராகி வந்தது. இது குணவாகு பெயர்.
"எல்லாரும் பொங்கல் உண்டனர்' - பொங்கல் எனில் பொங்குதல். உலை பொங்கிற்றா? என வினவுவோம். பால் பொங்கியதா? என்போம். பொங்கல் - பொங்குதல் - இது ஒரு தொழில் (வேலை) பொங்குதலாகிய தொழில் ஆகிய உணவைப் பொங்கல் என்பது தொழிலாகு பெயர்.
பள்ளிப் பிள்ளைகளுக்காக மட்டும் இலக்கணம் எழுதப்படவில்லை. தமிழ் பேசுபவர், எழுதுபவர் எல்லாரும் அறிந்திருத்தல் நல்லது. இதனை ஓரளவு விளங்கிக் கொண்டாலும் அதனால் பயனுண்டு. தமிழின் அழகை, நுட்பத்தை உணர்ந்து மகிழ்க.
குணில் தெரியுமா?
அணில் தெரியும்; குணிலா என்ன அது?
"உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தது போல்' என்பது சிலப்பதிகாரத் தொடர். உருள்கின்ற சக்கரத்தை ஒரு குச்சி கொண்டு சுற்றினால் மேலும் விரைந்து உருளும் அல்லவா? அதுதான் இது.
கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வர வேண்டும் என்று நினைத்திருந்த சேரன் செங்குட்டுவனின் எண்ணத்தை உருள்கின்ற சக்கரம் என உருவகப்படுத்தியுள்ளார். வடபுல மன்னர் கனக விசயர் தமிழரசரின் வீரத்தை இகழ்ந்து பேசினர் என்னும் செய்தியைக் கேட்டது, உருள்கின்ற சக்கரத்தை ஒரு கோல் (குச்சி) கொண்டு சுழற்றியது போல் அவனது நினைவை இன்னும் வேகப்படுத்தியது. எதற்கு இந்தக் கதை?
குச்சி, கம்பு எனும் சொற்கள் நாமறிந்தவை. குணில் பழந்தமிழ்ச் சொல். சென்னையிலே கம்பு என்பதைக் கொம்பு என்று சொல்கிறார்கள். மரத்திலே கிளை, கொம்பு என்பவை உண்டு. மரக்கொம்பை உடைத்துத்தான் குச்சியாகப் பயன்படுத்துகிறோம். ஒட்டடைக் குச்சி; குச்சி பெரிதாக இருப்பின் கம்பு, ஒட்டடைக் கம்பு எனும் சொல்லும் உண்டு. கம்பு சுழற்றுதல் - சிலம்ப விளையாட்டு எனப்பட்டது. மரத்திலுள்ள கொம்பு வளைந்தும் நெளிந்தும் இருக்கலாம். ஆனால் கம்பு நேராக - ஒரே அளவினதாக இருத்தல் வேண்டும்.
பல் விளக்கும் குச்சி - வேப்பங்குச்சி இப்போது பார்க்க முடியாததாகிவிட்டது. தடித்துக் கனமாக நேராக இருப்பது கம்பு. (கம்பு என ஒரு தானியம் உண்டு; இது வேறு) சிறிதும், பெரிதுமாக வளைந்தும் நெளிந்தும் இருப்பது கொம்பு என்று கொள்ளுவோமா? கொடி படரக் கொழு கொம்பு வேண்டும் என்று படிக்கிறோம். அவன் என்ன பெரிய கொம்பனா? என்பதும் அவனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று கேட்பதும் மாட்டிற்குரிய கொம்பைக் குறித்து வந்தவையாகும். அவன் பெரிய முரடனா? எனும் பொருளில் வந்த சொல் வழக்கு அவை.
முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!
"முருங்கா' எனும் சிங்களச் சொல்லிலிருந்து "முருங்கைக்காய்' வந்ததாக ஆய்வறிஞர் வேலுப்பிள்ளையவர்கள், தமிழ் வரலாற்றிலக்கணம் எனும் நூலில் குறிப்பிட்ட செய்தி பற்றி எழுதியிருந்தோம். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் முருங்கைக்காய் தமிழிலிருந்து சிங்களம் போயிருக்கலாம்; அது தமிழ்ச் சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியச் சான்றுகள் பலகாட்டித் தெளிவுற எழுதியிருந்தார்கள். உரமும், ஊட்டமும் தரும் முருங்கை நம்மதே என்பதில் மிக்க மகிழ்ச்சி.
இரண்டு பேருந்துகள் இணைத்து இயக்குவதை, இணைப்புப் பேருந்து எனலாம் என்ற அன்பர் கருத்து ஏற்புடையதே. மேலொன்று, கீழொன்று என இரண்டடுக்குப் பேருந்தும் ஓடுகிறதன்றோ? அதற்கு இரட்டைப் பேருந்து என்று சொல்லலாம். ஆதலின் இருப்புப் பாதையில் ஓடும், தொடர்ந்து பல பெட்டிகள் கொண்ட வண்டியைத் தொடர் வண்டி என்றே சொல்லிடுவோம். ஆய்வும் அதன் விளைவான தெளிவும் அனைவர்க்கும் கிட்டியமை நன்று.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக