வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை – யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு – ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் கணுக்காலளவில் நின்று இரண்டு கைகளையும் சேர்த்து, நீரை அள்ளி அர்க்கியமாக விழவிடுகிறேன். ஐயோ! ஐயோ! என்ன சாந்தி! என்ன சாந்தி என்னுள்ளே நிரம்பி வழிகிறது! பெரிய இன்பம் வேண்டும் என்று ஆசைப்படும் போதெல்லாம இந்தக் காட்சி தான் என்முன் நிற்கிற வழக்கம். ஆனந்தத்தின் எல்லையாக இது என் உள்ளே பொருள் கொண்டு நிற்கும். என்றோ ஒரு நாள் நான் இப்படி நிற்கப்போகிறேன். சாசுவதமாக நிற்கப் போகிறேன் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. பள்ளிக்கூடம் இராது, வீடு இராது, வேலை இராது, அப்போது.
இப்போது அந்த ஆனந்தமே கைக்கு எட்டிவிட்டாற்போல் இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நிலைத்துவிட்ட கனவுதான் நனவாகிவிட்டதா? அதே காட்சியின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன். காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றின் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும் அக்கரையிலும் வாழைத் தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில். இக்கரையில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மௌனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலிகூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கி விடுகிறது.
நான் தன்னந் தனியாக நிற்கிறேன். குளிக்கக்கூட மனம் இல்லை. சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்து மணல்மீது உட்கார்ந்தேன். இரண்டு மூன்று நாளாகவே மழை பெய்து காற்று குளிர்ந்து விட்டிருந்தது. இன்று இரவுகூடப் பெய்யப் போகிறோம் என்று சொல்வதுபோல் வான் நீலத்தில் பொதி பொதியாக அங்கும் இங்கும் திரண்டு நின்ற மேகங்களுக்குள் சூரியன் மறைந்தான். வெயில் மேலே பட்டதும் படாததுமாக விழுகிறது. சூடு இல்லாத வெயில். காலேஜிலிருந்து வெளியே வந்தபிறகு இப்படி உட்காரும் அநுபவமே அற்றுப்போய்விட்டது. அதனால்தான் குளிக்ககூட மனம் இல்லாமல் ஓடும் நீரில் ஆவியைக் கொடுத்து உட்கார்ந்து கிடக்கிறேன். ஒரு நிறைந்த சூனியம். நடு நடுவே தனிமையின் நினைவும் வருகிறது.
மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ஊர்க்காரர்கள் விடிய விடிய வந்து குளித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியா நிர்ஜனமாக இருக்கும்? பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது. இருபது வருஷம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? என் நண்பனை இந்த மோனக் கடவுள்தான் தூண்டியிருக்க வேண்டும்.
ஏதோ முனகல். யாரோ பேசுகிறார்கள். இல்லை, பாடுகிறார்கள். ‘தன்மாதச்வா அஜாயந்த, ஏகேசோபயாதத;’ திரும்பிப் பார்த்தேன் இவர்தாம் முனகிக்கொண்டு வருகிறார். கிழவர்-கையில் ஒரு குடம், ஒரு செம்பு, கழுத்தில் சின்ன ருத்திராட்ச மாலை. இடையில் தூக்கிச் சொருகிய பஞ்ச கச்சம். என்னைப் பார்க்கிறாரா? இல்லை. பார்வை சுமார் போலிருக்கிறது. கிட்ட வந்த பிறகுதான் என்னைப் பார்க்க முயலுகிறார். கண்ணை இடுக்கிக் கொண்டு. ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. வாய்சொல்லும் ஸூக்தம் முடியவில்லை. ‘தேவா யத் யஜ்ஞம் தந்வாநா;, அபத்நந் புருஷம் பசும்…’ புருவத்தைச் சுளித்து என்னைப் பார்த்துக் கொண்டே வாய் முணுமுணுக்கிறது. செம்பைக் கீழே வைக்கிறார். குடத்தை வைக்கிறார். ரசவாதம் போலச் செம்பின்மீது தங்கமெருகு ஏறுகிறது. ‘ஸ்ர்வம் ம நிஷாண.’
“யாரு? வாசுவா?” என்று கண்ணை இடுக்கிக் கொண்டே கேட்டார் அவர். ‘ஸூக்தம்’ முடிந்ததும்.
“இல்லை.”
“பின்னே யாரு?”
“அசலூர்.”
“அசலூரா? எந்த ஊரு?”
“பட்ணம்.”
“இங்கே யாரையாவது பார்க்க வந்துதாக்கும்?”
“ஆமாம், ரத்னாசலத்தைப் பார்க்க வந்திருக்கேன்.”
“ரத்னாசலத்தையா? அவருக்குப் பந்துவோ??”
“இல்லை.”
“சிநேகமோ?”
“இன்னிக்குத்தான் சினேகமானார். என் சிகேகிதர் ஒருத்தர் கல்கத்தாவிலிருந்து எழுதியிருந்தார். ரத்னாசலத்தின் பிள்ளை ஜாதகத்தை வாங்கியனுப்புன்னு. அதுக்குத்தான் வந்தேன். ஊர் அழகைப் பார்க்கப் பார்க்கத் தாங்கவில்லை. அவரும் குளிச்சுச் சாப்பிட்டுவிட்டு ஜாதகத்தை வாங்கிண்டு போகலாமேன்னார், தங்கிவிட்டேன்.”
“நீங்க சொல்லணுமா? இதோ நான் இருக்கேனே, நான் இந்த ஊரே இல்லை. இந்த ஜில்லாவே இல்லை. தென்னார்காடு ஜில்லா. முப்பது வருஷத்துக்கு முன்னாலே ஒரு நாள் இங்கே உத்யோக காரியமாப் ’காம்ப்’ போட்டேன். வந்து காலடி வச்ச க்ஷணமே தீர்மானம் பண்ணினேன். ரிடையரானப்புறம் இங்கேதான் நிரந்தரமாத் தங்கறதுன்னு. அதுக்கப்றம் அஞ்சு வருஷம் உத்யோகம் பார்த்துட்டு ரிடையரனேன். மறுமாசமே இங்கு வந்து பத்துக் காணி நிலத்தை வாங்கினேன். ஒரு வீட்டையும் வாங்கினேன். செட்டில் பண்ணிப்பட்டேன். இருபத்தஞ்சு வருஷம் ஆயாச்சு, இது ஊரா? கிராமமா? த்போவனம் இல்லையோ!” என்று பரவசமாகப் பேசிக்க்கொண்டிருந்த கிழவர், குடத்தை மணல் போட்டுத் தேய்க்கத் தொடங்கினார். “ஸ்நானத்தைப் பண்ணிட்டு இங்கே இப்படியே மணலில் கால் மணி உட்காருங்களேன். பிரம்ம சாட்சாத்காரம் வறதா இல்லையா, பாருங்கள். மோனநிலை, சமாதி எல்லாம் உட்கார்ந்து கண்ணை மூடின மாத்திரத்திலே லபித்து விடும். அப்பேர்ப்பட்ட இடம்” என்று குடத்தை அழுத்தித் தேய்த்தார்.
அவர் மிகைப்படுத்தவில்லை. குளித்துவிட்டு உடனே உட்கார்ந்து கண்ணைமூடி அந்த மோனத்தை எட்ட வேண்டும் போல் இருந்தது. அப்படி உட்காரக்கூட அவசியம் இல்லை. கண்ணைத் திறந்த நிலையிலேயே பேசும் போதே அப்படித்தான் இருந்தது. ஆற்று வெளியில் அகண்ட மோனத்தில் எங்கள் பேச்சு, பெரு வெள்ளத்தில் பிடிமணலைத் தூவியது போல் அமுங்கிக் கிடந்தது.
“ஜாதகம் வாங்கியாச்சோ?” என்று கேட்டார் கிழவர்.
“இனிமேல்தான்.”
“பையன் நல்ல பையன். டாட்டா நகர். ஆயிரத்துக்கும் மேலே சம்பாதிக்கிறான். கண்ணுக்கும் நன்னா இருப்பன். பையன் நல்ல பையந்தான்” என்று அடுத்த கேள்வியைக் கேளேன் என்கிறாற்போல் சொன்னார். நான் எப்படிச் சும்மா இருப்பது? “பையன் நல்ல பையன் தான்னா?” என்று கேட்டு விட்டேன்.
“நமக்குப் பையன்தானே ஸ்வாமி முக்கியம்? அதுக்காகச் சொன்னேன். தறைமுறை தலைமுறையா விசாரிச்சுண்டு போனா, சாத்தியப்படுமோ?” என்றார் அவர்.
“விசாரிக்கத்தானே வேணும்? ஏன், ரத்னாசலத்தின் குடும்பம் குலம் கோத்ரம் நல்லதுதானே?”
“ஏ ஒன் குடும்பம், சந்தேகமே வேண்டாம். ரத்னாசலந்தான் சரியா இல்லை. நல்லவர்தான். ஆனா சகவாசம் பொல்லாதோல்லியோ? முப்பது வயசிலே யாரோ அவரை ரேஸு, ரங்காட்டம்னு ஆசை காட்டி இழுத்து விட்டுட்டான். வேலையில் சூரன். அதனாலெதான் பல சீனியரை எல்லாம் பார்க்காம, சின்ன வயசாயிருந்தாலும் பாதகமில்லேன்னு டிப்டி கலெக்டராப் போட்டா அவரை. நன்னந்தான் நிர்வாகம் பண்ணினார். முக்காங்குடிப் பண்ணையோட ரொம்ப சிநேகமாயிருக்க ஆரம்பித்தார். அவனுக்கும் சின்ன வயது. பரம்பரைச் சொத்து. ஆத்திலே தண்ணி அமோகமாகப் போறது. காரியஸ்தன், ஆட்கள் எல்லாம் வெள்ளாமையைப் பண்ணி நெல்லும் பணமுமாகக் கொண்டு குடுத்துடறான். இந்தப் பிரபுகளுக்கு வேலை ஏது? வர்ற பணத்தை, பாங்கிலே போட வேண்டியது, சாப்பிட வேண்டியது, செலவழிக்க வேண்டியது. படிப்பு இருந்தா ஒரு பிஸ்னஸ் பண்ணுவோம், தொழில் பண்ணுவோம், பெருக்குவோம்னு மனசு பாயும். முக்காங்குடிப் பையனுக்கு மெட்ரிகுலேஷனே தேறலே. குதிரைப் பந்தயத்துக்குப் போவன். ஜமாவா ஹோட்டலுக்குப் போவான். அவனோட போய் டிப்டி கலெக்டர் சேரலாமோ? சேர்ந்தாலும் அவன் பழக்கத்தையெல்லாம் கத்துக்கலாமோ? என்னமோ கஷ்டக்காலம்! கத்துனூட்டார். கெட்டதுதானே சீக்கிரமாக் கத்துக்க முடிறது? ரத்னாசலத்துக்கு ஆயிரம் ஆயிரமாக் குதிரைப் பந்தயத்திலே போக ஆரம்பிச்சுட்டுது. சொத்தை அடகு வச்சு ஆடினார். ஆபீஸார்ஸ் கிளப்பிலே வேற ரங்காட்டம். கடனுக்குப் பூர்வீகம் எல்லாம் போச்சு. மாமனார் வந்தார். நாலுநாள் உட்கார்ந்து மிஞ்சியிருக்கிற நாலு காணியைப் பொண்ணு பேருக்கு எழுதி வைக்கச் சொல்லிட்டுப் போனார். அதை எடுக்க முடியலியா? வெளியிலே கடன் வாங்கினார் ரத்னாசலம். கடன்காரர்கள் சர்க்காருக்கு எழுதிப்டான்கள். சம்பளத்தை ஈடுகட்டிப்ட்டான் சர்க்காரிலே. கடைசியிலே இந்தச் சள்ளை தாங்காம, கட்டாயமா ரிடயர் பண்ணிவிட்டான். நாப்பத்தஞ்சு வயசிலே ரிடயராகிப் பத்து வருஷமா ஊரோட உட்கார்ந்திருக்கார். அவரோட தாத்தா நாள்ள நாப்பது காணி சொத்தாம். எப்படி இருந்தது குடும்பம். எப்படியாயிடுத்து! நினைச்சா வருத்தமாத்தானே இருக்கு? சொல்லிப்டேன். ஆனா வீணாச் சொல்லப்படாது, பையன்கள் தங்கமும் வெள்ளியுமாத்தான் பொறந்திருக்கு. இப்ப மூத்த பையனுக்குத்தானே ஜாதகம் வாங்க வந்திருக்கேள்?”
“ஆமாம்.”
“தங்கமான பையன். ரெண்டாவது பையன் அதுக்கு மேலே. அவன் கணக்குப் படிச்சுட்டுப் பாரிஸுக்கு மேல் படிப்புக்கு போயிருக்கான். மூணாவது பையன் காலேஜிலே படிக்கிறான். வீணாச் சொல்லப்படாது, தங்கமான பையன்கள். அவருக்கு என்னமோ கஷ்டகாலம், புத்தி இப்படிப் போச்சு; தலையைக் குனிஞ்சுக்கும்படியா ஆயிடுத்து.”
“வேறே ஒண்ணும் பழுது இல்லையே?”
“பழுதே கிடையாது ஸ்வாமி. இந்த இடம் கிடைச்சுதுன்னா அதிஷ்டம். உங்க சிநேகிதர் என்ன பண்ணிண்டிருக்கார்?”
“அவரும் பெரிய உத்தியோகந்தான். ஒரு பெரிய கம்பெனியிலே விற்பனைப் பிரிவுக்குத் தலைவரா இருக்கார்.”
“பிசினெஸ் நெளு தெரிஞ்சவர். லோகம் தெரிஞ்சவர். இல்லாட்டா ஜாதகம் வாங்கறதுக்கே நேரே உங்களை வரச் சொல்லி எழுதுவாரா? முடிச்சு விடுங்கோ” என்றார்; “அது சரி நீங்க என்ன பண்றேள் பட்டணத்துலே?”
வேலையைச் சொன்னேன்.
“சொந்த ஊர்?”
அதையும் சொன்னேன்.
“அதுவும் செழிப்பான ஜில்லா தான். ஆனா அதுக்கும் இதுக்கும் ஒறை போடக் காணாது. உங்க ஊர்லெ நூறு ஏக்கரும் சரி; இந்த ஊர்லே பத்து ஏக்கரும் சரி. வருஷம் முழுக்க ஆத்திலே பிரவாகம் போயிண்டே இருக்கும். கழனியும் காடும் விளைஞ்சிண்டே இருக்கும். இல்லாட்டா எங்கேயோ திருக்கோவிலூர் கிட்டப் பிறந்துவிட்டு இங்கே வந்து பணத்தைக் கொட்டி வாங்குவேனா? பத்துக்காணிதான், உங்க ஊர்லெ ஒண்ணரை வேலின்னு சொல்லுவா. ஆனா இந்தப் பத்துக் காணியும் உங்க ஊர்லெ ஏழெட்டு வேலி வாங்கறத்துக்கு சமம்னேன். என்னமோ பகவான் மனசிலே பூந்து வாங்குன்னு நல்ல புத்தியைக் கொடுத்தார். வாங்கினேன். சௌக்யமா இருக்கேன். சௌக்கியமா சாப்பிடறது இருக்கட்டும்; இந்த எடத்தைச் சொல்லுங்கோ, ஒரு நாளைக்கு இப்படிக் குளிக்கக் கெடைக்குமா உங்க ஊர்லியும் எங்க ஊர்லியும்? பாருங்கோ, அகண்ட சச்சிதானந்தமே முன்னாலெ நிக்கறாப்பலவே இருக்கா இல்லையா? இருபத்தஞ்சு வருஷமா ஒரு நாள் பெசகலெ. இங்கே வந்து குளிக்கிறேன். கோயில் திண்ணையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கிறேன். கால தேசம் எல்லாம் அழிஞ்சு போறது. எத்தனை நேரம் உட்கார்ந்திருக்கேன்னு எனக்கே தெரியலை. ஒரு மணியோ, ரெண்டு மணியோ, இப்ப வயசு எண்பது முடிஞ்சு போயிடுத்து. தள்ளலை. இல்லாட்டா இப்படியா ஒன்பது மணிக்கு வருவேன் ஸ்நானத்துக்கு? பாஷண்டன் மாதிரி? நான் வந்து குளிச்சு, ஜபத்தை முடிச்சிண்டு எழுந்துக்கறபோதுதான் சூரியோதயம் ஆகும். ரெண்டு வருஷம் ஆச்சு. முடியலை.”
கிழவர் ஒல்லி அல்ல; நடுத்தரப் பருமன். நல்ல சதைப்பற்று. ஆனால் எண்பது வயசு என்று சொல்லமுடியவில்லை.
குளிக்கத் தொடங்கினார் அவர். நானும் குளிக்கத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் அவர் ஊரின் வளத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். என் ஜில்லா டெல்டாவானாலும் இந்த ஊருக்குக் கால்தூசு பெறாது என்று என் மண்டையில் ஏற்றிக் கொண்டேயிருந்தார்.
“ஒங்க ஊர்லே ஒரு ஏக்கர் என்ன விலையாறது இப்ப?”
“சுமாரா இருந்தா மூவாயிரம் ஆகும். நல்லதாயிருந்துதுன்னா ஐயாயிரம்.”
“ரொம்ப நல்லதாயிருந்தா?”
“ஏழாயிரம் ஆகலாம்.”
“இந்த ஊர்லெ படுமோசமான பூமியாயிருந்தா ஏக்கர் பன்னண்டாயிரம், ஒண்ணா நம்பர் நிலமாயிருந்தா இருபதாயிரம் முப்பதாயிரம் ஆகும். இருந்தாலும் குடுக்க மாட்டான். லட்ச ரூபா குடுத்தாலும் கெடைக்காதுன்னேன். நானே அந்தக் காலத்திலே, நெல்லு கலம் ஒண்ணே கால் ரூபா வித்த காலத்திலே, காணிக்கு எட்டாயிரம் குடுத்து வாங்கினேன்னா, இப்ப கேப்பானேன்? இப்ப ரூபா மதிப்புத்தான் ஆறிலே ஒண்ணுகூட இல்லையே. அப்ப படி மூணு அணா அரிசி. இப்ப ஒண்ணரை ரூபாய்க்குக் கெடைக்கலே. பாத்துக்குங்கோ!”
“நீங்க ரொம்ப தீர்க்க தரிசனத்தோடதான் வாங்கியிருக்கேள்.”
“தீர்க்கமாவது தரிசனமாவது! ஏதோ வாச்சுது. எங்க தகப்பனார் இருந்து, அவருக்கும் நிலபுலன்னு இருந்தா இப்படி வாங்க விட்டிருப்பாரா? அவரும் இல்லை. ஒரு குழி நிலமும் அவருக்கு இல்லை. ஊரிலே அவருக்கு நிலம் இருந்திருந்தா, மேலே வாங்கிறதை அங்கன்னா வாங்கச் சொல்லியிருப்பார்? எனக்கும் சுயார்ஜிதம், நானாக் கஷ்டப்பட்டேன்? சம்பாதிச்சேன். அஞ்சு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினேன். மிச்சம் இருக்கிறதை, பகவானேன்னு இங்கே கொண்டு போட்டேன். போட்டேனோ பிழைச்சேனோ! ஒண்ணும் குறைச்சல் இல்லாம ஏதோ நடந்துண்டு வரது! காவேரி ஸ்நானம்.”
“நிஷ்டை!”
“நிஷ்டை, சமாதி, அகண்ட சச்சிதானந்தத்தை இந்த இடத்திலேன்னா பார்க்கணும்? வானாகி, வெளியாகி, எங்கும் பிரகாசமாகி, நின்ற பரிபூரண நந்த பரமே என்பாளே, அதை இங்கேன்னா பார்க்கணும்! இந்த ஊர்லே இருக்கிறவாளுக்கு அது தெரியலே. நிலம்புலம், சாகுபடி, மாடுகன்னுன்னு காசே தியானமா, பரம வ்ராத்யன்கனா இருக்கான்கள். போகட்டும் போகட்டும். ‘அத்வைதம் கோடிஜன்மஸு’ ங்கறாப்பல கோடி ஜன்மம் எடுத்தால்தானே அத்வைத ஆசை வரும்?”
இருபத்தைந்து வருஷமா ஒரு நாள்கூட விடாமல் இங்கே குளித்து, தினமும் அகண்ட மோன வெளியில் ஆழ்ந்துவிடும் கிழவரைக் கண்டு அசூசையாகத்தான் இருந்தது. அவர் மணலையடைந்து தலையைத் துவட்டிக் கொண்டார்.
“சர்க்கார் உத்யோகத்திலேருந்துதான் ரிடையரானாப்பலையாக்கும்?” என்று கேட்டேன்.
“ஆமாம் ஸ்வாமி, தாசில்தாரா இருந்தேன். கௌரமா இருந்தேன். நல்ல வேளையா அப்பவே ரிடயராயிட்டேன். இப்பத்தான் ஜாதி வாண்டாம், மதம் வாண்டாம், எல்லோரும் ஒண்ணாயிடுங்கோங்கறாளே. இதுக்கெல்லாம் முன்னாலேயே நான் ஒதுங்கிட்டேன்.”
என்னுடைய மோனங்கூடச் சற்றுக் கலைந்தது. தாசில்தாருக்கு அந்தக் காலத்தில் இருநூறு ரூபாய்தான் சம்பளம். அந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு ஐந்து பெண்களுக்குச் கல்யாணம் செய்து, எண்பதாயிரம் ரூபாய்க்குப் பத்துக்காணி நிலம் வாங்கி, ஒரு வீடும் வாங்கி… முப்பது வருஷம் இரு நூறு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதச் செலவழிக்ககாமல் சாப்பிடாமல் இருந்தால்தானே எண்பதாயிரம் சேர்த்திருக்க முடியும்?
சிறிது நேரம் இந்தப் பிரமாண்ட சாதனையை நினைத்து மலைத்துப்போய் நின்றவன், “எப்படி இவ்வளவு வாங்க முடிஞ்சுது?” என்று என்னை அறியாமல் கேட்டுவிட்டேன்.
“முடியும். அது இந்தக் காலம் இல்லை. தாசில்தார்னா கலெக்டர், கவர்னருக்கு இருக்கிற மரியாதை இருந்தது அப்பல்லாம். ’காம்ப்’புன்னு போனா, ஒரு ஒரு இடத்திலேயும் உள்ளங்கையிலே வச்சுன்னா ரச்சிப்பா. என்ன மரியாதை! என்ன உபசாரம்! அந்த பயம் பக்தி எல்லாமே போயிடுத்தே இப்ப. இருந்த இடம் தெரியலையே!”
கிழவரை இதே காவேரியில் தலையைப் பிடித்து நீரில் அமுக்கி, ஐந்து நிமிஷம் அப்படியே வைத்திருந்தால்…?
சீ! என்ன பாபசிந்தை!
ஒரு நாள் நிஷ்டையில் எல்லாப் பாவங்களும் சாம்பலாகி விடும். இருபத்தைந்து வருஷம் தினந்தோறும் காலதேசம் அறியாத நிஷ்டை என்றால் அவருக்கு முன்னும் பின்னுமான பத்துத் தலைமுறைகளின் பாவம் எரிந்து சாம்பலாகியிருக்கும்!
என்ன பாபசிந்தை!
கிழவர் பளபளவென்று தங்கமாகத் தேய்த்த குடத்திலும் செம்பிலும் காவிரி நீரை மொண்டு கையில் எடுத்துக் கொண்டே, “நீங்க வரதுக்கு நாழியாகும் போலிருக்கே?” என்று விடை பெறுகிற மாதிரி கேட்டார்.
“நீங்க போங்கோ, நான் வரதுக்கு இன்னும் ரொம்ப காலமாகும்” என்றேன்.
நேரம் என்று சொல்ல நினைத்துக் காலம் என்று வாய் தவறி வந்து விட்டது.
***
நன்றி: ஐந்திணைப் பதிப்பகம் / ‘அமரர்’ தி.ஜானகிராமனின் ‘மனிதாபிமானம்’-தொகுப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக