ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது.
அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும்.
எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.
மனிதக் குரல் கேட்டு மிரண்டு ஓடி தெரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் ஓலமிடும். அல்லது தங்களது தீராச் சண்டையை ஆரம்பிக்கும். அந்தச் சண்டையில் அடுத்த தெரு நாய்களும் கலந்து கொள்ளும். உச்ச ஸ்தாயியில் பல விதமாய்க் குரைத்து மூர்க்கமாகச் சண்டையிடும். நீண்ட நேரம் நீடிக்கும் அச் சண்டை எந்த இலக்கும் இல்லாமல் தானாகவே ஓய்ந்து போகும்.
காலையில் எழுந்து ” இரவெல்லாம் தூக்கமில்லை. கண் எரிகிறது ” என்பாள் அவந்திகா.
பகலில் பரம சாதுவாக எல்லாம் குப்பைத் தொட்டியில் இரை தேடி கொண்டிருக்கும். அப்போது அதுகளைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.
எங்கள் தெரு குப்பைத் தொட்டி கொஞ்சம் விசேஷமானது. முனிசிபாலிடியில் குப்பைத் தொட்டி என்று நான்கு உயரமான சுவர்களும் , கதவு அளவுக்கு ஒரு திறப்பும் கொண்ட ஒரு ஸ்ட்ரக்சரைக் கட்டிக் கொடுத்துக் ” குப்பைகளைத் தயவு செய்து குப்பைத் தொட்டியில் போடவும். உங்கள் சுற்றுப்புறம் அழகாக இருக்க உதவுங்கள் ” என்று எழுதியும் கொடுத்திருந்தார்கள்.
ஆனாலும் , எங்கள் தெரு ஜனங்கள் அந்தச் சுவர்களுக்கு உள்ளே போடாமல் (மிகச் சரியாக) வெளியில்தான் குப்பையைப் போடுவார்கள். சுவரைச் சுற்றிலும் குப்பை மலையாய்ச் சேர்ந்த பிறகு , குப்பையை உள்ளே போட நினைக்கும் சிலர் கூட சுவரை நெருங்க முடியாமல் வெளியிலேயே போட்டு விட வேண்டியிருக்கும்.
” சிவிக் சென்ஸே இல்லாத ஜனங்கள். இவ்வளவு பெரிய குப்பைத் தொட்டியைக் கட்டிக் கொடுத்தும் எங்கே போடுகிறார்கள் பாருங்கள் ” என்பாள் அவந்திகா.
உண்மை தான். அளவில் பெரியது தான். எப்போதாவது வெளியூர் போகும் போது , ஊருக்கு வெளியே இந்த மாதிரி ஸ்ட்ரக்சர்களைப் பார்த்திருக்கிறேன். மேலே கூரை ஒன்று இருக்கும். அது தான் வித்தியாசம். அந்த ஸ்ட்ரக்சர்களுக்கு வெளியே நரிக்குறவர் குடியிருப்பு , அம்பேத்கர் குடியிருப்பு என்று ஏதாவது எழுதியிருக்கும்.
இந்தக் குப்பைத் தொட்டியைப் பார்க்க எனக்கு வினோதமாக இருக்கும். அதில் என்னென்னவெல்லாம் கிடக்கும் என்று பார்க்க உள்ளுக்குள் ஒரு ஆசை கிளம்பும். இரை தேடும் நாய்களை விரட்டி விட்டு ப்ளாஸ்டிக் டப்பாக்களையும் , பாலிதீன் கவர்களையும் சேகரித்துக் கொண்டிருப்பார்கள் சில பேர்.
ஆனால் எங்கள் தெருவை அடுத்த பாரதியார் தெரு ஜனங்கள் பரவாயில்லை. அங்கே குப்பைத் தொட்டியும் இல்லை. குப்பையும் இல்லை. சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராகி மையம் அனுப்பி வைக்கும் வண்டிகளில் தங்கள் குப்பைகளைச் சேர்த்து விடுகிறார்கள்.
அவந்திகாவுக்கும் அதில் சேர்வதில் தான் விருப்பம். ஆனால் அதற்கு அவள் வேலைக்கு முழுக்குப் போட வேண்டியிருக்கும். ஏனென்றால் மையத்தின் பையன் காலை பதினோரு மணிக்குத் தான் இந்தப் பக்கம் வருவான்.
பாரதியார் தெரு மக்கள் , சுற்றுப்புறச் சூழல் மீது கொண்ட ஆர்வத்தால் அந்தத் தெரு நாய்களின் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. அன்றைக்குப் பாருங்கள். நான் ஆபிஸ் முடிந்து வந்து கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. எலும்பும் தோலுமாய் நறுங்கிப் போயிருந்த நாய் ஒன்று காய்ந்த மனிதப் பீயைத் தின்று கொண்டிருந்தது. எனக்கு ஒரு மாதிரி மனசே சரியில்லாமல் போய்விட்டது.
அவந்திகா ஆபீசிலிருந்து வந்ததும் அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு இதைச் சொன்னேன்.
” பாரேன். முறுக்கு சாப்பிடுவதைப் போல் அந்தப் பீஸை ‘ நறுக் முறுக் ‘ குனு சாப்பிடுது. பாவமா இருந்திச்சும்மா ” அவ்வளவுதான். குடித்துக் கொண்டிருந்த டீயோடு வாந்தியெடுத்து விட்டாள்.
” சரியான முட்டாள்ப்பா நீ. இப்படியா டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது இதைச் சொல்றது ?”
அன்று இரவு அவள் சாப்பிடவில்லை. தொடர்ந்து ஓக்களித்துக் கொண்டே இருந்தாள்.
” குடலே வந்திடும் போலருக்கே. இந்த வாந்தியை நிறுத்த ஏதாவது செய்யேன். ”
காய்ந்த உப்பு நாரத்தங்காயைப் பிய்த்துக் கொடுத்துத் தூங்கச் செய்தேன்.
அவளைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் ஆச்சரியமாகவும் இருந்தது. பீ என்று சொன்னால் வாந்தி வந்து விடுமா ? உங்களுக்கு வருகிறதா ?
எனக்கு சான்ஸே இல்லை. எங்கள் ஜாதியே பீயெடுக்கும் ஜாதிதான். நான் தான் கொஞ்சம் படித்து கிடித்து வேறு வேலைக்கு வந்து விட்டேன்.
என் தம்பி இன்னமும் பீ தான் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னைப் போல் படிப்பு வரவில்லை. ஆனால் தைரியசாலி , பட்லர் இங்கிலீஷ் பேசுவான். அதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக வரும். ஒழுங்காகத் தெரிந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால் பேசக் கூடாது. ஒழுங்காகத் தெரிந்த எனக்கே இங்கிலீஷ் பேச வராதது இன்னமும் ஒரு குறையாகத்தான் இருக்கிறது. ஆனால் , என் தம்பி அந்த பட்லர் இங்கிலீஷை வைத்தே பெரிய ஆளாகிவிட்டான். ஜெர்மன் எம்பஸியில் வேலை. இங்கிலீஷையே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டும் அந்த நாய் இப்போது ஜெர்மனில் பிளந்து கட்டுகிறது. இப்போது ஜெர்மனியில் இருக்கிறான். டாய்லெட் க்ளீனர் வேலையில் இருந்தாலும் வீடு , கார் எல்லாம் வைத்திருக்கிறான்.
” ஏண்டா இப்படி ஜெர்மனிக்குப் போயும் நம்மோட குலத் தொழிலைத்தான் செய்யணுமாடா ?” என்பேன்.
” அடப் போண்ணே நீ வேற…. அந்த ஊரு டாய்லெட்டெல்லாம் நம்ம சினிமா ஸ்டாருங்க கன்னம் மாதிரி இருக்கும். இன்னோரு விஷயம். அந்த வெள்ளக்காரப் பயலுவளோட பீ கூட நாற மாட்டேங்குது ”.
” அப்படியா ? அப்ப அதையே தின்னுக்கிட்டு அங்கயே இரு ”
” சாப்பிட்டாலும் தப்பில்லே. நம்ம அவ்வா குடுத்த சாப்பாட்டை விட நல்லாத்தான் இருக்கும் ” ( தம்பி சொன்னதைப் பற்றி விளக்க வேண்டுமானால் ஒரு ஆயிரம் பக்கங்களாவது எழுத வேண்டும். ஆனால் இந்தக் கதையோ நாய்களைப் பற்றியது. கதையின் இடையே புகுந்ததும் அல்லாமல் ஒரு முக்கியப் பிரச்சினையை வேறு கிளப்பி விட்டு விட்டான். அதைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டுக் கதையைத் தொடருவோம்)
அவ்வாவுக்கு சித்தூர்தான் சொந்த ஊர். அங்கே பிழைக்க வழியில்லாமல் தஞ்சாவூர் ஜில்லா வந்து எப்படியோ நாகூரில் செட்டிலாகி விட்டது. பணக்கார வீடுகளின் எடுப்புக் கக்கூசில் பீ அள்ளுவது தான் வேலை. அப்பா சின்ன வயதிலேயே செத்துவிட்டார். கக்கூஸ் எடுக்கும் வீடுகளில் அரிசியும் , மிஞ்சிய சோறும் கொடுப்பார்கள். அரிசியை அப்படியே பத்திரப்படுத்திவிட்டு சோற்றை உபயோகித்துக் கொள்ளும். அந்தச் சோற்றை காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வெந்நீர் விட்டுக் கலக்கிக் கொடுக்கும் அவ்வா. அந்தச் சோறு காயும் போது ஒரு நாற்றம் நாறும் பாருங்கள். பீ நாற்றமெல்லாம் பிச்சையெடுக்க வேண்டும். அரிசி இருந்தால் புயல் மழைக் காலங்களில் பட்டினி கிடக்காமல் வயிறு நிரம்பும். வெட்டாற்று வெள்ளம் ஊருக்குள் பாயும்போது அதன் தலைவாசலில் இருப்பது எங்கள் தொம்பங்குடிசை தான்.
சில வருடங்களுக்கு முன் நாகூர் போயிருந்த போது அந்தப் பெயரை ‘ தொல்காப்பியர் சதுக்கம் ‘ என்று மாற்றியிருந்ததைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தொல்காப்பியருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? அவரும் அவ்வாவைப் போல் பீ அள்ளியிருக்கிறாரா ? அவர் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா ? ஆனால் பெயர் தான் மாறியிருந்ததே ஒழிய மற்றதெல்லாம் அப்படியே தான் இருந்தது. ஊரில் எடுப்புக் கக்கூசுகள் மறைந்து ஃப்ளஷ் அவுட் டாய்லெட் வந்திருந்தது. எங்கள் ஜனமும் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாக மாறியிருந்தார்கள். ஊரைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலை.
அவ்வா என் தங்கையோடு அவள் வீட்டுக்குப் போய் விட்டது. தங்கை கணவரும் என்னைப் போல் படித்தவர். போலீஸ் இன்ஸ்பெக்டர்.
அவ்வாவுக்கு என் மீது கோபம். நம் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் அய்யர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று. அய்யர் இல்லை அய்யங்கார் என்று சொன்னால் அதற்குப் புரியாது.
வாந்தியெடுத்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவந்திகாவிடம் இதையெல்லாம் சொல்ல நினைத்தேன். ‘ நீ எங்கள் அவ்வா மாதிரி பீ அள்ளியிருந்தால் என்ன ஆகியிருப்பாய் அவந்திகா ?’ அவந்திகா எனக்காக பெங்களூர் போர்க் சமைத்துத் தருகிறாள். மிக ருசியாக , ஐந்து நட்சத்திர ஓட்டலின் செஃப் போல. நன்றி. ஆனால் , நான் இருபது வயது வரை மனிதப்பீயை மட்டுமே உணவாகக் கொண்ட கருப்புப் பன்றிகளையே சாப்பிட்டு வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியுமா ? அதையெல்லாம் பேச ஆரம்பித்தாலே ‘ வேண்டாம் , பழசை விடு ‘ என்பாள்.
தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.
எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.
காட்டூர் கந்தன் இப்படித்தான் கத்தினான். அவ்வா அவன் முகத்தில் வெந்நீரை ஊற்றியபோது.
அவ்வா நிறைய பன்றிகள் வைத்திருந்தது. ஆனால் , அதற்கு உடம்பு முடியாமல் போனபோது பன்றிகள் ஒவ்வொன்றாய்க் குறைய ஆரம்பித்தன. அதை விற்று வருகிற பணத்தில்தான் என் படிப்பும் , என் தங்கையின் படிப்பும் நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளை. தம்பிக்குப் படிப்பு வரவில்லை. ஒன்பதாம் கிளாசுக்கு மேல் தாண்டாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இல்லா விட்டால் அவன் செலவும் சேர்ந்திருக்கும்.
நான் பி.எஸ்ஸி. ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தேன் ஹாஸ்டலில் தங்கி. ஸ்டடி ஹாலிடேஸில் ஊருக்கு வந்திருந்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் , எக்ஸாம் ஃபீஸ் என்று பணம் கட்ட வேண்டியிருந்தது. வீட்டிலிருந்த கடைசிப் பன்றியையும் விற்று விட வேண்டியதுதான்.
” பொட்டப் பன்னி. குட்டி போட்டா நமக்குத்தான் நல்லது. விக்கணுமா அவ்வா ?” என்று கேட்டபோது , ” அதையெலாம் யோசிக்க முடியாது. நீ வேலைக்குப் போய்ட்டா நூறு பன்னி வாங்கலாம் ” என்று சொல்லி விற்று விட்டது அவ்வா. விற்ற விஷயம் எப்படியோ பன்றிக்குத் தெரிந்து போய் வீட்டை விட்டு ஓடி விட்டது.
பதைபதைப்புடன் கையில் சுளுக்கியோடு எங்கெங்கோ தேடியலைந்தது அவ்வா. எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில்தான் விஷயம் தெரிந்தது. காட்டூர் கந்தன் எங்கள் பன்றியைப் பிடித்து விற்று விட்டான் என்று.
காட்டூர் கந்தன் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள காட்டூரில் ஒரு கொலை செய்து விட்டு எங்கள் ஊருக்கு வந்து பதுங்கியவன். அதற்குப் பிறகு இங்கேயே தங்கி விட்டான். பக்கத்திலுள்ள மேட்டுத் தெருவில் தான் அவன் குடிசை. எந்த வேலைக்கும் போகாமல் சிறு வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவ்வப்போது திருடுவதும் உண்டு. ஊரில் அவனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு.
அவ்வா நேராகக் கந்தனின் குடிசைக்குப் போனது. அப்போது கந்தன் குடிசையில் இல்லை. பக்கத்தில் வந்து விசாரித்தவர்களிடம் , ” அவன் மட்டும் உண்மையிலேயே ஆம்புளையா இருந்தா என் வூட்டுப் பக்கம் வரச் சொல்லுங்க ” என்று சொல்லி விட்டு வந்து விட்டது அவ்வா.
எனக்கு உள்ளுக்குள் திகில். ‘ இன்று ஒரு கொலை தான் விழப் போகிறது ‘ என்று முடிவு கட்டி விட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது அவ்வாவின் உயிரைக் காப்பாற்றுவது என திட்டம் செய்து கொண்டேன். ‘ நான் செத்தால் கூடப் பரவாயில்லை. அவ்வா செத்து விட்டால் தம்பி தங்கைகளின் கதி ?’ ஆனால் அவ்வாவிடம் இது பற்றி நான் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
அடுப்பைப் பற்ற வைத்து சோற்றுப்பானையை வைத்துவிட்டு அரிசியைக் களைய ஆரம்பித்தது. அப்போது அங்கே புயலைப் போல் வந்தான் கந்தன்.
” ஏய் வாடி வெளியே…. எவடீ என்னெ ஆம்பளயான்னு கேட்டது ?”
” டேய் கந்தா… எம் பன்னியத் திருடி வித்தியா நீ ?”
ஆமான்டீ , வித்தேன். என்னடீ பண்ணுவே ? பீ அள்ளுற தேவுடியா செருக்கிக்கு அவ்வளவு திமிரா ? வாடீ …. நான் ஆம்பளயா இல்லையான்னு காமிக்கிறேன் ” என்று சொல்லியபடி ஒரே தாவாகத் தாவி அவ்வாவின் முடியைப் பற்றியிழுத்தான்.
நான் செய்வதறியாமல் திகைத்து நின்றேன்.
கண்ணிமைப்பதற்குள் ஒருக்கணம் அவன் கையைத் தட்டி விட்டு விட்டு உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து அவன் முகத்தில் ஊற்றியது.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காத கந்தன் பன்றியைப் போல் அலறினான். மறுபடியும் உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து அவன் ஆண்மையில் ஓங்கிச் செருகியது.
நல்ல வேளையாக அவ்வா ஜெயிலுக்குப் போகவில்லை. கந்தனை என்ன செய்வதென்று போலீஸே திணறிக் கொண்டிருந்தது போலும். விபத்தில் மரணம் என்று சொல்லி கேஸை முடித்து விட்டது போலீஸ்.
அதற்குப் பிறகு அந்த நாய்கள் மாடிப்பக்கம் வரவில்லை.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சத்தம் வந்து கொண்டிருந்த திசையில் தேடிப் பார்த்தேன்.
ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி. பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தோன்றியது. முட்புதரில் சிக்கிக் கொண்டு குளிரில் நடுங்கியபடி கிடந்தது. அருகில் சென்றபோது குரைத்தது.
கவனமாக முட்களை விலக்கி விட்டுக் குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தேன். ஆர்வமாக வந்து பார்த்து விட்டுச் சென்ற அவந்திகா கம்பளியைக் கொண்டு வந்து போர்த்தினாள். ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றிக் கொடுத்தேன்.
ஆவலுடன் குடித்து விட்டு , ஓட முடியாமல் விழுந்தும் எழுந்தும் தடுமாறி வந்து என் மடியில் ஏறிக் கொண்டது அந்த நாய்க்குட்டி.
நன்றி: ஆறாம்திணை
மருபடியும் என் குழந்தைப்பருவத்தினை நினவு படுதி விட்டிர்கள்.மனித கழிவினை மனிதர் அள்ளும் நிலை இன்று இல்லை. எனினும் அவர்களின் உணர்வினை மிக அழகாக் கூறியுள்ளார் சாரு நிவேதிதா, வெளியிட்ட சிங்கமணிக்கும் நன்றி.
பதிலளிநீக்கு