பிழைகள், பிழைகள், பிழைகள்:
ஒரு வழக்கறிஞர் தொலைக்காட்சிச் செய்தியில் பேசுகிறார்:
"உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது' இந்தத் தொடரை மூன்று முறைக்கும் மேல் அந்நிகழ்வில் அவர் பயன்படுத்தினார். "உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என்று சொல்ல வேண்டிய அவர், உச்சநீதிமன்றத்திற்கே யாரோ உத்தரவிட்டுள்ளது போலச் செயப்பாட்டு வினையாக்கிப் பேசினார். அன்றியும் உத்தரவு - உத்திரவு ஆதலும் பிழை.
அந்த நற்செயலில் ஈடுப்படுவது, ஈடுப்படுவது என்று பலமுறை ஓர் அறிஞர் ஒரு தொலைக்காட்சியில் உரையாற்றும்போது சொன்னார். ஈடுபடுவது என்பதை ஈடுப்படுவது என்று அழுத்த வேண்டா. இயல்பாய் இருக்கட்டும்.
மற்றுமொருவர் உரையாற்றுகையில் அவரது தமிழ் உச்சரிப்பு நம்மை அதிர வைத்தது. நாம் அந்த கொள்கைகளைக் கட்டி காக்க வேண்டும். அந்தக் கொள்கைகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்று சொல்லத் தெரியாதவரா அவர்? "சமூகத்தில்... அதன் வளியை நாமுணர முடியாது' என்றார். வலி, வளியாகிவிட்டது. (வலி - துன்பம், வளி - காற்று) மேலும் பேசும்போது கவிதை குழந்தைகள் என இருமுறை சொன்னார். கவிதைக் குழந்தைகள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? இன்னும் தொடர்கிறார்:
"புள், மரம், செடியெல்லாம்...' இங்கே புல், மரம், செடி எனச் சொல்ல வேண்டியதைப் புள், மரம், செடி என்றார். (புல் - மண்ணில் வளரும் சிறு தழை; புள்- பறவை) லகர, ளகர வேறுபாடின்றி அல்லது லகரத்திற்கு ளகரம், ளகரத்திற்கு லகரம் ஒலித்தல் பெருங்கேடாம். இவ்வாறே ழகரத்தை ளகரமாக, லகரமாக ஒலித்தலும் மிகப் பெருங்கேடே.
இதுவும் தொலைக்காட்சி ஒன்றில் கேட்டதுதான்:
"மாளிகை மேடை (மேட்டை, மேடை என்றார்) ஒட்டிய பகுதியில் ஆதாரங்கள் இருக்கிறது... கோவில்கள் இருக்கிறது.... பள்ளிக்கூடங்கள் இருக்கிறது.... அடையாளங்கள் இருக்கிறது' ஓரிடத்திலாவது இருக்கின்றன என்ற பன்மையில் முடிக்கவில்லை. முடிவில் ஓரிடத்தில் குறிகோள் இல்லாமல் போய்விட்டது என்றார். குறிக்கோள் எனச் சொல்ல நா எழவில்லை போலும்.
ஒரு நூலில் படித்த சொற்றொடர்: "அந்தச் சந்தையைப் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் இயற்கையாகவும் இருந்தன' அதெப்படி வித்தியாசமாக இருப்பது, இயல்பாக இருக்க முடியும்? இது கருத்துப் பிழை. கடைசியில் இருந்தன என்று பன்மையில் முடித்துள்ளார். ஏன்? சந்தை ஒருமைதானே? வித்தியாசமாக, இயற்கையாக என்பதால் பன்மையில் முடித்தார் போலும்!
"புல்லாங்குழல்கள் சில நீளமானது; சில குட்டையானது' சில என்றால் நீளமானவை, குட்டையானவை எனப் பன்மையில்தான் முடிக்க வேண்டும்.
ஒலித் திரிபுப் பெயர்கள்
சட்டை- ஷர்ட் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஒலியே இது. பழந்தமிழில் மெய்ப்பை எனும் ஒரு சொல்லுண்டு.
பொத்தான் - பட்டன் என்னும் சொல் தமிழ் ஒலியேற்றுப் பொத்தான் ஆயிற்று. பொத்தலில் மாட்டப்படுவது என்பது வலிந்து சொல்லுதல் ஆகும்.
ஆஸ்பத்திரி - ஹாஸ்பிடல் எனும் சொல்லே ஆஸ்பத்திரியாயிற்று. (மருத்துவமனை- தமிழ்ப் பெயர்)
போத்தல் - பாட்டில் என்பதன் தமிழ் ஒலியே போத்தல். சீசா என்றொரு வழக்குச் சொல் உண்டு.
சால்வை - ஷால் எனும் சொல் சால்வை என்றாயிற்று.
புத்தகம் - புஸ்தகம் என்பதன் தமிழ் வடிவம் இது. (சுவடி, நூல், ஏடு என்பன தனித் தமிழ்ச் சொற்கள்) ஓலைச் சுவடியின் ஓரத்தில் பொத்தல் இட்டு ஓலைகளை அடுக்கிச் சேர்ப்பது. பொத்தல் அகம் - புத்தகம் என்று வலிந்து சொல்வார் உளர்.)
வங்கி - பேங்க் என்பதன் தமிழ் ஒலியமைப்பே இது. ப - வ ஆதல் தமிழில் பல உண்டு. பீமன் - வீமன், ரபீந்திரநாத் - ரவீந்திரநாத்.
பேங்க் என்பதைப் பாங்கு என்றே சொல்லலாம். பணத்தைப் பாங்காக வைக்கும் இடம் என்பதால்.
உலகு(?) - உலகம் எனும் சொல் திருமுருகாற்றுப்படை தொடங்கிப் பல்வேறு தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ள சொல். லோகம் என்பது வடசொல். லோகநாதனை உலகநாதன் என்போம். லோகம் உலகமாயிற்று என்பது ஒரு கருத்து. இல்லை உலகிலிருந்தே லோகம் வந்தது என்பார் உளர். உல், உல்கு என வேர்ச்சொல் காண்பர் அவர். வையம், ஞாலம், பார் என்பன தூய தமிழ்ச் சொற்கள்.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக