அண்மையில் ஒரு தலைவரைப் போற்றிப் பாராட்டிய மற்றொரு தலைவர், ஒப்புயர்வற்ற தலைவர்களில் ஒருவர் இவர் (பெயர்) என்று பேசியதாகச் செய்தி போட்டிருந்தார்கள். ஒப்பு, உயர்வு அற்ற என்றால் அந்தத் தலைவருக்கு ஒப்பானவர்களோ உயர்வானவர்களோ வேறுயாரும் இலர் என்பதுதானே பொருள்! அப்புறம் எப்படித் தலைவர்களுள் ஒருவர் என்றுரைப்பது! பலருள் ஒருவர் ஒப்பும் உயர்வும் அற்றவர் ஆவாரா?
பொருள் மாறிவிட்ட பழந்தமிழ்ச் சொற்கள்:
"மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' எனும் பிசிராந்தையார் பாட்டு வரிக்கு, "செத்துப்போன என் மனைவியும் பெருகிய பிள்ளைகளும்' என்று இந்நாளில் பொருள் கொள்ளக் கூடும். மாண்ட எனில் மாட்சிமையுடைய (மேலான) என்பது பழந்தமிழ்ப் பொருள். நிரம்பினர் என்பதற்கு கல்வி, அறிவு நிரம்பியவர்கள் என் பிள்ளைகள் என்பதுதான் சரியான பொருளாகும்.
துஞ்சிய என்றால் தூங்கிப் போய்விட்ட என்ற பொருள் இந்நாளில் கருதக்கூடும். "குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது' என வருமிடத்தில் குளமுற்றம் என்ற ஊரில் மாண்டுபோன (இறந்த) கிள்ளிவளவன் என்பதே சரியான பொருளாம்.
மடப்பயல் என்றால் முட்டாள் பையன் - அறிவற்றவன் என்று பொருள் கொள்கிறோம். மடம் என்பது இளமையைக் குறிக்கும் ஒரு சொல். (பூசை செய்யும் மடம் என்பது வேறு)
மானே மட மகளே என்றால்,மான் போன்ற இளம் பெண்ணே என்று பொருள். மடக்கொடி கேளாய் எனில் கொடி போன்ற மெல்லிய இளம் பெண்ணே கேட்பாயாக என்பதே பொருள். பெண்ணிற்குச் சிறந்த நான்கில் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) மடம் என்பது இளமையைக் குறிப்பதேயாகும். (காணாத ஒன்றைக் கண்டபோது ஒருவகையான வியப்பு ஏற்படும். அதுவே பயிர்ப்பு எனப்பட்டது.
எழுத்துப் பிழை தரும் இடர்ப்பாடுகள்
ஒரு திருக்கோவிலின் விழா அழைப்பிதழில் அணைவரும் வருக எனக் கண்டோம். (அனைவர்- எல்லாரும், அணைவர் - அணைப்பவர்) இப்படிப் பொருள் கெடலாமா?
மற்றொரு பெரிய இசை நிறுவனம் ஒன்றின் அழைப்பு மடலில் வருக! இசையின்பம் பெருக! என்றிருந்தது.
"இசையின்பம் பெற்றிட வருக' என்பதுதான் அவர்தம் கருத்து. ஆனால் பெறுக, பெருக எனப் பிழையாகிவிட்டது. இசையின்பம் பெருகிட வருக என்றெல்லாம் மழுப்பலாம். பருகிட என்று சொன்னாலாவது பொருத்தமாகும். அப்படியாயின் வருக, இசையின்பம் பருக என்றிருக்க வேண்டும்.
நல் +நாடு= நன்னாடு; சிலர் நன்நாட்டில் என எழுதுகிறார்கள். நல்ல நாட்டில் என்றெழுதலாம். புணர்ச்சி விதிப்படி நன்னாடு என்றெழுதுதலே சரியாகும். முன்னரே நான்கு நிலம்- நானிலம் என்பதைச் சிலர் நாநிலம் என்றெழுதுகிறார்கள். இது தவறு. நான்கு ஆகிய நிலம் என்று இதற்குப் பொருள் என்றெழுதியுள்ளோம்.
ஒரு பத்திரிகையில் வந்த விளம்பரம்: "குழந்தைப் பேரின்மையா?' இதைக் கண்டு வருந்தினோம். குழந்தைப் பேறின்மையா? என்று சரியாக எழுத வேண்டும்.
பேறு - பெறுதல். குழந்தைப் பேறு- பிள்ளையைப் பெறுதல். இதனைப் பேரில்லையா எனில் குழந்தைக்குப் பெயர் (பேர்) இல்லையா என்று பொருள் ஆகாதோ? குழந்தைப் பேறு என்று "ப்' என்ற மெய்யெழுத்தும் மறக்காமல் இடப்பட வேண்டும்.
சாற்றி, போற்றி, ஏற்றி
சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள். ஒரு சாமிக்கு கூர்ம பதக்கம் சாற்றி என்று செய்தித்தாளில் பார்க்க நேர்ந்தது. கூர்ம பதக்கம் சாத்தி என்றே எழுத வேண்டும். இவ்வாறே விழாக்களில் "பொன்னாடை போற்றி' என்று சொல்லுகிறார்கள். பொன்னாடை (?) போர்த்தி என்றே சொல்ல வேண்டும். உச்சரிப்பில் அச்சம் வருமெனில் அணிவித்து மகிழ்கிறோம் என்று சொல்லலாமே!
ஏத்துதல்- பாராட்டுதல், போற்றுதல் என்று பொருள் தரும் சொல். இறைவனை ஏத்திப் பாடினார் என்றால் இறைவனைப் போற்றிப் பாடினார் என்று பொருள். இதனை ஏற்றிப் பாடுதல் எனல் பிழை. ஏத்துதல் என்பதை ஏற்றுதல் எனச் சொன்னால் பொருளே மாறிவிடும். கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் எனுமிடங்களில் ஏற்றுதல் வரும். வணங்குதல், துதித்தல், போற்றுதல் யாதாயினும் ஏத்துதல் எனல் வேண்டும்.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக