நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் ஒரு வகை வரலாற்றுக் கதைப்பாடல்கள். இவை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாக கொண்டவை. மன்னனின் வீரம், போர் நிகழ்வுகள், போரின் தாக்கம் போன்றவைகளை இப்பாடல்களிலிருந்து அறியலாம். தமிழ் நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் வரலாற்றுக் கதைப்பாடல்கள் மிகக் குறைவாகவே இருப்பினும் இவைகளிலிருந்து ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.
வரலாற்றுக் கதைப்பாடல்களில், ஐவர் ராஜாக்கள் கதை, கன்னடியன் படைப்போர், மூன்றுலகு கொண் அம்மன் கதை, வெட்டும் பெருமாள் கதை, ராமப்பய்யன் அம்மானை, இரவிக் குட்டிப்பிள்ளை போர், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி, புலித்தேவன் சிந்து கட்டபொம்மன் கதைப்பாடல்கள் முதலியன முக்கியமானவை.
இவை வரலாற்று ஆராய்ச்சிக்கு முக்கிய ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன. இவ்வாய்வுக் கட்டுரையில் தென்னிந்திய வரலாற்று நிகழ்ச்சிகளில் ஒன்றான கான்சாகிபு சண்டை பற்றிய வரலாற்றுக் கதைப் பாடல்களில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அப்பாடல்களில் மூலம் அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் ஆராயப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தின் தென்பகுதிகளில் பரவியதை எதிர்த்து பாளையக்காரர்கள் போர் செய்தனர். கான்சாகிபு மதுரை சுபேதாரரான பிறகு ஏழு வருஷங்கள் மதுரையில் ஆட்சி செலுத்தினான். அதன் பிறகு நவாப்போடும் கம்பெனியோடும் பகைமைகொண்டு போர் நடத்தி வஞ்சகமாகச் சிறைப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டான். இந்த வரலாற்று நிகழ்ச்சியை கதைப் பாடல்கள் துல்லியமாக கூறுகின்றன.
கான்சாகிபு சிவகங்கை மீது படையெடுத்து சென்ற நிகழ்ச்சியைப் பின்வரும் கதைப்பாடல் பகுதி தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது
மதுரை வளர்கான் சாயபு நீலன் நல்ல
வரிசைபெறத் தேவடியில் நின்றுகொண்டு
மைத்துனன் வடக்கே போனானே அவன்
சீதைதனிலொருசாரி நடத்தவேணுமென்று
மறக்குதிரைமேற் சீனீவைத்து மதுரைக்
கான்சாகிபு கோட்டைவிட்டு வெளியில் வருகையிலே
ரேக்கலா ரெண்டையிழுத்து அதற்கு
நேரிட்ட குண்டுவண்டியின் மேலேத்தி
மூவாயிரஞ் சனங்கானு அப்போ
முன்னூறு வூருக்குச் சீறாக்குதிரையும் நடத்தி
மறக்குதிரை மேலேறிக் கொண்டு மதுரைக்
கான்சாகிபி சிலையுமான் புளியங்குளந்தாண்டி
மனையுமான் புளியங்குடிந்தாண்டி அப்போ
திருவாரூர் வீதியுமை தானந்தாண்டி
திருப்புவனக் கோட்டையிலே வந்து கானு
திடீரென்று கூடாரமடித்தாலோ துரையும்
மற்றொரு பாடல் கான்சாகிபுவின் திருபுவனம் படையெடுப்பை பின்வருமாறு கூறுகிறது.
மூணு நல்லா மோர்சாவளத்தி அதிலே
முடிமன்னன் பீரங்கி மேலேத்திவைத்து
முடியே யொருபளித்தாதீர்த்து அப்போது
மூணுநாள் வரைக்குமே யிறைத்தானே குண்டு
திருப்புவனங் கோட்டை தன்னிலேதான் ஒரு
தேங்காயளவுமே யிடித்துவிழவில்லை
சுப்ரமண்ய தேவரதிலிருந்து நல்ல
துடியான வெங்கல பீரங்கியையிழுத்து
முக்குறுணி மருந்து குண்டுபோட்டு அதற்கு
முதலான கிடாவெட்டி பொங்கலுமிட்டு
குபீலென்று ஒரு பளித்தாதீர்த்தான் அப்போ
கொட்டமிடுகான் சாகிபு கூடாரத்தெந்து
கூடாரக்கயிறு மறுந்து அப்போ
குபீலென்று ஏழுகுதிரைக் காலுத்தெந்து
ஏழெட்டுபேர்கள் தலையுடைய அப்போ
இசைதிகான் சாகிபு கண்ணாலே கார்த்து
நம்மைப் போலேயொரு மனிதன் இதிலே
இருக்கிறான் திருப்புவனம் வாங்கமுடியாது
திருப்புவனம் வாங்கமுடியாது என்று
சிவகங்கைமேல் சாரிநடந்திட்டான் கானன்
ராத்திரக்கிராத்தியே நடந்து அப்போ
நலமான சிவகங்கையை தீயாயெரித்து
மேல்வீட்டுக் கம்பளியை யெரித்து நானு
மீசையின் மேற்கைபோட்டு மேற்குமுகந்திருப்பி
பட்டணமெல்லாங் கொள்ளையடித்து அப்போ
படைமன்னன் கிழக்குமுகந்திருப்பியே கானன்
கான்சாகிப்புக்கும் ஆங்கிலேயருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, தான் தோற்று போகும் தருவாயில் இருந்த போது, கான்சாகிப்பு பின்வருமாறு சூளுரைக்கின்றான்.
பதினைந்து நாழகைக்குள்ளாக தளத்தை
பஞ்சு பஞ்சாயடிப்போனான் தானப்பநாயக்கா
பிரட்டனொரு தலையிருக்குமானால் அவன்
பிடிப்பாண்டா யெப்படியுந் திசைமதுரை கோட்டை
பிரட்டனுட தலைவிழுந்து போனால் அப்போ
பருந்தெடுத்த குஞ்ச்லோ மம்முதலிசார்பு
ஆர்க்காடு சென்ன பட்டணம் வரைக்கும் அப்போ
அடித்திடுவேன் ஆற்காட்டை பிடித்திடுவேனானும்
சுபேதாரவுல் தாருமாரே நீங்கள்
சொன்னபடி கேழ்க்கிறேன் சிப்பாய்மாரே
அண்ணனில்லை தம்பியில்லை யெனக்கு இப்போ
ஆதரவு கோட்டைக்கு ளொருத்தருமில்லை
உங்களையே நம்பினேனானும் எனக்கு
ஒருவர் துணையில்லையடா சிப்பாய்மாரே
மாசத்துக்கொன்பது ரூபாய் சம்பளம்
வாங்கியே தின்றீரே சிப்பாய்மாரே
இறுதியில் நவாப்படையினரால் தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறான். பின்பு கான்சாகிப்பின் உயிர் அற்ற உடம்பு துண்டங்களாக்கப்பட்டு புதைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலைகளை விளக்கும் ஓர் பாடலாவது,
கண்டுவிரல் தனையறுத்துப் பார்த்தார் ரத்தஞ்
சுறுக்காகப் புறப்படவே நவாபு துரை பார்த்து
கழுத்திலேய பர்கச் சூரிவைத்து மதுரைக்
கான்சாகிபு சிரிசினை சீக்கிரமறுத்து
கால்கையைத் துண்டு துண்டாயறுத்து மதுரைக்
கான்சாகிபை நாலுதுண்டாக வெட்டி
நத்தத்திலொரு கையை வைத்து
நவங்கண்ட திண்டிக்கல்லி லொருகாலைவைத்து
மேலே எடுத்துக்காட்டப்பட்ட பாடல்கள் கான்சாகிப் பற்றிய பாடல்களில் ஒரு சிலவே. ஆய்வு அறிக்கையின் அளவினை கருத்திற்கு கொண்டு மேற்கொண்ட ஒருசிலவே இவ்வறிகையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இப்பாடல்களில் பொதிந்துள்ள வரலாற்று செய்திகள் நுணுக்கமானவை. வேறு எந்த வரலாற்று சான்றுகளிலும் மேற்கண்ட வரலாற்று செய்திகள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கதை பாடல் இரண்டாம்தர வரலாற்று ஆதாரமாக பகுக்கப்பட்டிருப்பினும், கான்சாகிபு கதைப்பாடல்கள் தரும் வரலாற்று செய்திகளின் முக்கியத்துவத்தினை முன்னிறுத்தி நோக்கினால் கான்சாகிபு கதை பாடல்கள் தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் மிக முக்கியமான வரலாற்று ஆதாரமாகக் கொள்ளலாம்.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக