04/06/2011

தமிழ் மரபில் அழகியல் - தி.சு. நடராசன்

அழகு என்பதற்கு வரையறைகள் ஆயிரம் உண்டு. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, ருசிய அறிஞர் செர்னிஷேவ்ஸ்கி கூறுவது: ''அழகே, வாழ்க்கை (beauty is life) இது தான் அழகு பற்றிய உண்மையான வரையறை; அழகான பொருள் என்பது, ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை நினைவுபடுத்துவதாகும்.''

இந்த வரையறை, அழகுக்கும், வாழ்க்கைக்கும் மற்றும் அழகுக்கும் மனிதனுக்கும் உள்ள நெருக்கத்தைக் குறிப்பிடுகிறது. இந்த அழகு, அடிப்படையில் ஒரு பண்புநிலையாகும். அழகைச் சுவைப்பது அழகின் ஆற்றலில் ஈடுபடுவது, மனிதனுடைய அடிப்படையான ஓர் உந்துதல் ஆகும். சூழ்நிலை, வயது, வர்க்கம் முதலியவற்றின் காரணங்களினால் அழகைக் காண்பதிலும் அதனைப் புரிந்துகொள்வதிலும், அதனோடு உறவு கொள்வது அல்லது செயல்படுத்துவதிலும் வேறுபாடுகள் உண்டெனினும், ஏதேனும் ஒரு வகையில் எல்லா மனிதர்களும் அழகில் ஈடுபடவே செய்கிறார்கள். எனவே, இது மனித உணர்வு நிலையில் முக்கியமான இடம் பெறுகிறது.

இது, மனிதன், இயற்கை மற்றும் அம்மனிதன் படைத்த படைப்புக்கள் எனும் இவற்றில் காணப்படுகின்ற ஒரு சாராம்சமான பண்பு; அது பற்றிய ஓர் உணர்வு நிலை; பொருள்களின் ஒழுங்கமைவுகளிலும் அவற்றின் புலப்பாட்டுத் திறன்களிலும் மற்றும் அவை எதிர் கொள்ளப்படுகின்ற முறைகளிலும் காணப்படும் ஒரு நேர்த்தி, ஒரு பொருள், தன்னை அழகினால் வெளிப்படுத்திக் கொள்கிறது; அழகினால், பரஸ்பரம் தொடர்பு கொள்கிறது; ஒரு பொருளில் இயல்பாக உள்ள தன்மையாக மட்டுமின்றி, அதனைக் காண்போர் அல்லது கேட்போரின் உணர்வினையும் சார்ந்ததாக அமைவது அழகு. இது, இயற்கையின் உள்ளார்ந்த ஓர் இயல்பாக இருந்தாலும், மனிதனுடைய மனதினாலும் உழைப்பினாலும் படைப்பாற்றலினாலும் உருவாகின்ற கலையில் இது ஒரு பெரும் சக்தியாக விளங்குகின்றது. பல சமயங்களில், கலை என்பதே அழகு என்பதைக் குறிப்பதாகவும் அமைகிறது.

அழகியல் (Aesthetics) இந்த அழகை இன்னது, இத்தகையது என்று கண்டறிந்து விளக்குகிறது. அழகு எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பதைவிட, எவ்வாறெல்லாம் அது பற்றிய பார்வைகளும் கருத்தியல்களும் இருக்கின்றன என்பதில் அதிகம் கவனம் செலுத்துவது, அழகியல். பொதுவாக இவ்வழகியல், கலைகளின் மீது கட்டமைக்கப்படுகின்ற ஒரு கருத்தமைவு ஆகும். மேலும், ஓவியம், இசை, ஆடல் முதற்கொண்டு இலக்கியம் வரை பலவிதமான கலைகளுக்கும் அழகியலே, ஆதாரமான சக்தியாக விளங்குகிறது. ஆதலின் இவ் அழகியல், கலை - இலக்கியக் கோட்பாடாகவே கொள்ளப்பட்டு வருகிறது. மேலை நாடுகளில், இலக்கியக் கோட்பாடு பற்றி எழுதுகிறவர்களும், அதே மாதிரி, அழகியல் கோட்பாடும் அதன் வரலாறும் பற்றி எழுதுகிறவர்களும் அரிஸ்டாட்லின் கவிதையியலிலிருந்தே (Poetics) தொடங்குகிறார்கள்; அதுபோலவே, வடமொழியில் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள், கலை இலக்கியக் கோட்பாட்டையும் அழகியலையும் ஒன்றெனவே கொண்டு எழுதுகிறார்கள். வரலாற்று நிலையில் தமிழிலும், அழகியலையும் கலை - இலக்கியக் கோட்பாட்டையும் காண்பதற்குரிய மூலாதாரங்கள் பொதுவானவையாகவே இருக்கின்றன: தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு.

மேலும், இது தொடர்ந்து பல சிந்தனையாளர்களால், தத்துவவியலின் (Philosophy) ஒரு பகுதியாகவும் விளக்கப்படுகிறது. ஏனெனில், இது முக்கியமாக:-

1) மனிதனுக்கும், அதாவது, அவனுடைய உணர்வு நிலைக்கும் அவனுக்குப் புறவயமாக இருக்கின்ற பொருள்களுக்கும் அழகு என்பதை மையமாகக் கொண்ட - உறவுகளையும் அந்த உறவுகளின் விளைவுகளையும், வெளிப்பாடுகளையும் பேசுகிறது.

2) ஒரு நாகரிகம், ஒரு மரபு என்பதன் வெளிப்பாடாக அழகியல் இருக்கிறது; அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாக இருக்கிறது.

3) மனிதனுடைய அடிப்படை ஆற்றலாகிய ஆக்கத்திறனை / படைப்புத் திறனை (Creative energy) புலப்படுத்துவதாக அது இருக்கிறது.

4) அழகியல் என்பது, ஒரு வாழ்நெறியும் ஆகும்.

தமிழில் அழகியல் கோட்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில், இதுகாறும் உருவாக்கம் பெறவில்லை. ஆனால் இதற்குரிய மூலாதாரங்கள் (sources) தமிழ் மரபில் நிறையவே இருக்கின்றன; பரவலாகவும் தொடர்ச்சியாகவும் அவை காணக் கிடைக்கின்றன. தொன்மை நூலாகிய தொல்காப்பியம், ஒரு முக்கியமான ஆதாரமாகும். அது, முக்கியமாக, மொழியின் இலக்கணம் பற்றிப் பேசுவதாகவே அறியப்படுகிறது என்றாலும், அதன் நோக்கங்களில் / வழி முறைகளில், முக்கியமானது, கவிதைக்கோட்பாடு (poetics) பற்றிப் பேசுவதாகும், கவிதைக் கோட்பாடு என்பது அழகியலின் அடிப்படையான பகுதி; அதனுடைய தொடக்க காலக் கருத்தமைவு, கிரேக்கம், சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மையான செவ்வியல் மொழிகளில் எல்லாம், அவ்வாறே அது அறியப்பட்டும் வந்திருக்கிறது. தொல்காப்பியத்தின் பின், பிற இலக்கண நூல்கள் தொல்காப்பிய மரபைப் பின்பற்றினாலும் அவற்றுள் பல மாற்றங்கள் உண்டு. மேலும் முக்கியமாகச் சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் உள்ளிட்ட பல உரையாசிரியர்கள், கலை இலக்கியக் கோட்பாடு சார்ந்த அழகியல் சிந்தனைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளனர். அடுத்து, சங்க இலக்கியப் பாடல்களும் சிலம்பும் (முக்கியமாக அதன் அரங்கேற்றுகாதை) தமிழ் அழகியல் மரபைக் கட்டமைப்பதில் முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன. கம்பன் உள்ளிட்ட பிற இலக்கியங்களிலும் பலதரவுகளைக் காண முடியும்.

நூல்கள் வழியாகக் கிடைக்கும் ஆதாரங்கள் ஒருபக்கம் இருக்கத், தமிழர் தம் இசைமரபு, ஆடல் அல்லது நாட்டியமரபு, குடைவரைக் கோயில், மகாபலிபுரம், தஞ்சை, தாராசுரம், மதுரை, திருவில்லிபுத்தூர் முதலியவற்றின் கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள் முதலியனவும் மற்றும் நடராசர் சிலை வடிவம், சித்தன்னவாசல் ஓவியம் முதலியனவும் தமிழர்தம் அழகியலை அறிந்து கொள்ளவும் கட்டமைக்கவும் உதவும் மூலாதாரங்களாகும்.

வளமான மூலாதாரங்களும் தரவுகளும் இருந்தாலும், அவற்றிலிருந்து அழகியலைக் கட்டமைக்கின்ற முயற்சி, தமிழில் மிகவும் குறைவு. ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் ஆனந்தகுமாரசாமியும் (Dance of Siva) விபுலானந்த அடிகளும் (யாழ் நூல்) இத்துறையில் குறிப்பிடத்தக்க முன் முயற்சிகள் எடுத்தனர். பின்னர், மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் பற்றிய பொதுவான வரலாற்றுக் குறிப்புக்களைத் தந்தார். ஆனால், தொடர்ந்து பல பரிமாணங்களையும் பல தளங்களையும் கொண்ட தமிழ் அழகியலை ஆராயவும் கருத்தியல்களை உருவாக்கவும் போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இக்கட்டுரை, தமிழ் அழகியலைக், கட்டுரை என்ற வரையறுக்கப்பட்ட எல்லையிலிருந்து, முக்கியமான சில பண்புகளையும் சில பகுதிகளையும் வரைந்து காட்டுவதோடு அமைதியடைகிறது. மேலும் இதில் ஆராய்வதற்கு நிறைய இடமிருக்கிறது. தேவையிருக்கிறது - என்பதை இங்கே சொல்லித்தர வேண்டியதில்லை.

அழகியல் கோட்பாட்டைக் கட்டமைப்பதற்குத் திருக்கோவையார் என்ற சைவ இலக்கியப் பனுவலுக்கு அமைந்துள்ள உரையின் தொடக்கம் சிறந்த தளம் அமைக்கின்றது. திருக்கோவையார் என்ற பெயரிலுள்ள ''திரு'' என்ற அடைமொழிக்கு விளக்கம் சொல்லுகிற நோக்கில் அது அழகு பற்றிய சிந்தனையை முன் வைக்கிறது. ''திரு'' என்பது அழகே எனச் சொல்லி அதற்கு ஏர், எழில், வனப்பு முதலிய பல சொற்கள் வழங்குகின்றன என்று சொல்லி, அழகுக்கு விளக்கம் தருகிறது; ''திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு. இஃதென் சொல்லிய வாறோயெனின், யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ, அக்கண்டவற்கு அப்பொருள் மேற்சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன் மேல் (அவற்கு) விருப்பஞ் சேறல், அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வொன்றானும் பிறிதொன்றிற்கில்லாமையால், திரு என்பது அழகுக்கே பெயராயிற்று''. கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்ற தொடரை, மேலும் சில வரிகளில் திரும்பவும் சிலமுறை, கையாளுகிறது, அந்த உரை.

இந்த உரையிலிருந்து நமக்குக் கிடைப்பது:-

1) அழகு பற்றிய பொது வரையறை, மற்றும்

2) அழகு, இயங்கியல் (Dialectics) தன்மை கொண்டது என்பது.

3) அது, உணர்வு நிலையோடும் விருப்பத்தோடும் சார்புகொண்டது என்பது.

திருக்கோவை உரை, அழகிற்கு மூன்று ஆதாரங்கள் (premises) அல்லது பரிமாணங்கள் உண்டு என்கிறது. அவை, உரு, நலன், ஒளி என்பன. இவற்றுள் உரு என்பது (Shape and measurement) விகிதாச்சார முறையில் உறுப்புக்கள் அல்லது பகுதிகள் ஒழுங்கமைவு பெற்றிருக்கின்ற ஒரு பொருளின் தோற்றமுழுமையைக் குறிக்கின்றது. மேலும், இந்த உரு, (உருவாதல், உருக்கொள்ளுதல்) ஒருவகையான செயல்நிலையையும் விளைவையும் குறிப்பிடுகின்றது. அவ்விதத்தில், ஏனைய இரண்டு ஆதாரங்களான நலனும் ஒளியும், இந்த உருவின் வெளிப்பாடுகளாகவும், பயன்பாடுகளாகவும் இருப்பவை ஆகும். அடுத்து, நலன் என்பது, பொருளின் இசைவான ஒழுங்கமைவின் (harmony) சிறப்பினைக் குறிக்கின்றது. பொருத்தம் அல்லது தகவுடைமையையும் (appropriateness) மற்றும் ஏற்புடைமையையும் (relevance) குறிக்கின்றது. இனி, ஒளி (light, radiant energy that stimulates visual perceptions) என்பது, ஒரு பொருளின் கட்புலனாகும் தோற்றத்திறனையும் உணர்வோரின் உணர்வினை ஈர்க்கின்ற தன்மையினையும் குறிக்கின்றது. ஒளி இன்றேல் காட்சி ஏது? மேலும் ஒளி, தெளிவையும், பிற பண்புகளின் ஒரு மொத்தப் பயனை (effect)யும் குறிக்கின்றது.

இவ்வாறு, அழகு என்பது உரு, நலன், ஒளி ஆகிய மூன்று ஆதாரங்கள் கொண்டு அமைகிறது; தன்னுடைய இந்த மூன்று பண்புகளின் வழி, அது காண்போரையும் கேட்போரையும் விருப்பங் கொள்ளச் செய்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்திய தத்துவஞானியும் அழகியலாளருமாகிய மார்சிலோ ஃபிசிநோ (Marsilo Ficino) உலகின் இருத்தலுக்கு, அழகியல் முறையிலான ஒரு விளக்கம் தருவார். அது போது, அவர், ஒரு பொருளின் அழகுக்குக் காரணமாக மூன்று ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார்: கவர்ச்சி, விருப்பம், நிறைவு (attraction, desire, fulfilment) என்பன அவை. இவை திருக்கோவை உரைகளும் பண்பு நிலைகளோடு ஒத்துப் போகின்றன என்பது இங்கே அறியத்தகுந்தது.

அடுத்து, அவ் உரை வலியுறுத்திக் கூறுகின்ற கருத்து நிலையின்படி - அழகு என்பது ஒரே நேரத்தில் பொருள் பற்றியதும் அப்போது பார்ப்பவன் உணர்வு பற்றியதும் ஆகும் என்பது. அதாவது, அழகு என்பது தனியாக ஒரு பொருளின் பண்போ அல்லது பார்ப்பவரின் அகவயமான உணர்வு நிலையோ அல்ல. ஒரு பொருள் அப்பொருளைக் காண்பது - அதன் மேற்செல்லும் விருப்பம். அழகு இவ்வாறு அவ்வுரையாசிரியரால் விளக்கப்படுகிறது. புறவயமான பொருளும் (Object), அகவயமான உணர்வும் (Subject) இணைந்த ஒரு பரஸ்பர செயலுறவே அழகுக்கு அடிப்படையென்பது, இயங்கியல் சார்ந்த கருத்து நிலையேயாகும். அழகியலின் தளம், இந்த அடிப்படையிலிருந்து எழுப்புவதற்குரியது.

இத்தகைய கருத்து நிலை, தமிழில் பல்வேறு ஆசிரியர்களிடம் காணப்படுகின்றது. பொருளுக்கும், பொருட் புலப்பாட்டிற்கும், உணர்வுக்கும் உள்ள உறவுகளின் இன்றியமையாமையைத் தொல்காப்பியரும் காட்டியிருக்கிறார். ஒப்பு, உரு, சாயல், ஏர், எழில், ஆகியவை அழகியல் பண்புகள்; கற்பு, நாண், மடன் ஆகியவை சமூக மதிப்புக்கள்; வெறுப்பு, நோய், வேட்கை, நுகர்வு ஆகியவை மன உணர்வுகள். இவை, அவர் கூறுவன. இந்தச் சொல்வழக்குகள் எல்லாம், கட்புலனாகக் காட்டக் கூடிய பொருட்கள் அல்ல; (அதாவது தூலமானவையல்ல) என்றும் நாட்டிய (நாட்டப்பெற்ற) மரபின் நெஞ்சு கொள்வதற்குரியனவே என்றும் அவர் சொல்லுகிறார். குறிப்பாக ஒப்பு, உரு, சாயல், ஏர், எழில், ஆகியவற்றை ''நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள'' என்று அவர் சொல்லியிருப்பதும் இன்னொரு சூழலில், சொல்லின் பொருள்படு தன்மை கூறவந்த அவர், ''உணர்ச்சிவாயின் உணர்வோர் வலித்தே'' என்று சொல்லியிருப்பதும் இங்கே ஒருசேரக் கவனத்திற்குரியன.

இவ்வாறு, காண்போரின் விருப்பத்தோடு கூடிய உணர்வு நிலை கொண்டு, இயற்கை, மற்றும் செய் கலைகள் முதலியவற்றின் உரு, நலன், ஒளி ஆகிய பண்புகளின் ஆற்றலாக அழகு வெளிப்படுகின்றது. இத்தகைய அழகினைக் கண்டு, ஆராய்ந்து அது பற்றிய கருத்தமைவுகளைக் கட்டமைக்கிறது அழகியல்.

அழகின் தளங்களில், இயற்கை, புராதனமானது; எங்கெணும் நிறைந்து கிடப்பது; சக்தி நிறைந்தது. இயற்கையின் குழந்தையாக, இயற்கையோடு வளர்ந்தவன், மனிதன்; எனவே அதனுடைய ஆற்றலும் அழகும் மனிதனுடைய புறவய வாழ்க்கையிலும் அகவய உணர்வுகளிலும் படிந்து கிடக்கின்றன; அவற்றில் தொடர்ந்து அவன் ஈடுபடுகிறான்; தொடர்ந்து அவற்றோடு எதிர்வினை கொள்கிறான். விதம் விதமாய் அழகைப் பொதிந்து வைத்திருக்கும் இயற்கை, பாரதிதாசன் வியந்து சொன்னது போன்று,

விரிந்த வானே வெளியே - எங்கும்

விளைந்த பொருளின் முதலே

திரிந்த காற்றும் புனலும் - மண்ணும்

செந்தீ யாவும் தந்தோய்

தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்

செறிந்த உலகின் வித்தே

புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்

புதுமை! புதுமை! புதுமை!

உலகின் வித்தாக - எல்லாம் புதுமையாக - இருக்கிற, இந்த இயற்கை, ஆற்றலுக்கும் அழகுக்கும் ஊற்றுக்கண்ணாய் இருக்கிறது. குறிப்பாக, உற்பத்திக் கருவிகளும் மனித உழைப்புத் திறனும் வளர்ச்சிப் பெற்றிருக்காத காலப் பகுதிகளில் இயற்கையின் ஆற்றலே மனித உணர்வின் ஊற்றுக்கண்ணாக இருந்தது; தொடர்ந்து, தொழில் குழும முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம், உலகமயமாக்கல், முதலியவற்றின் காரணமாக இயற்கையையும் சுற்றுப்புறச் சூழல்களையும் சீரழிக்க முயற்சிகள் நடந்தாலும் இன்னும் இயற்கையின் ஆற்றலும், உள்பொதிந்து கிடக்கும் அதன் அழகும் அவற்றின் தேவையும் மனித குலத்தினால் உணரப்பட்டு வருகிறது.

இயற்கை, ஆற்றலுடையதாகவும் அழகுக்குரியதாகவும் தமிழ் மரபில் தொடர்ந்து வருணிக்கப்பட்டு வந்திருக்கிறது. செடி, கொடி, மரம், அவற்றின் பூ, இலை, கனி; ஆறு, அருவி, ஏரி, கடல் முதலிய நீர்நிலைகள்; மான், புலி, யானை, மயில், குயில் முதலிய விலங்கினங்கள் புள்ளினங்கள்; வெண்ணிலவும் விண்மீனும், வைகறையும் அந்தியும் எழிலியோடு (மேகத்தோடு) கூடும் அகண்ட வானம் - இவை அழகுக்குரிய இயற்கைப் பொருட்கள். சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் இந்த இயற்கை, அழகுக்கும் ஆற்றலுக்கும் உரிய இடமாகி வருணிக்கப்படுவது எவ்வாறு?

1) இயல்பாகி; அதாவது அதன் அழகு பலவிதமான கோணங்களுடனும் பரிமாண வளர்ச்சிகளுடனும் இடச் சூழ்நிலைகளுடனும் சித்திரிக்கப்படுவது. நேர்முகமாகவோ, உவம வாயிலாகவோ வருவது.

2) மனித ஆற்றலாக; அதாவது, மனிதனுக்குரிய சக்தியையும் உணர்வையும் இயற்கைப் பொருள்களின் மேல் ஏற்றிச் சொல்லுவது. அழகு சிரிக்கிறது என்று பாரதிதாசன் சொன்னாரே, அதுபோல், கண்ணகியும் கோவலனும் மதுரை வருகிறபோது, நுழைவாயிலில் கொடி ஆடுவது, ''வாரல்'' (வராதே) எனச் சொல்லுவது போலிருந்தது என்று இளங்கோ சொன்னாரே அதுபோல், கடலும் கானலும், விலங்கும், மரமும், புள்ளும் (பறவையும்), புலம்புறு பொழுதும் - ''சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்'' என்று தொல்காப்பியர், இந்த வகையான ஆற்றலை அல்லது ஒரு கற்பனையைச் சொல்லியிருப்பார். இது, இயற்கையை உயிருடையது போல் உணர்வுடையது போல் (animated / humanized) நெருக்கமுறக் காண்பது.

3) புனைந்துரையாக, இல்லாததைச் சொல்லுவது அல்ல - ஆனால், இருப்பதைத் தொகுத்தும், வேறிடத்து நிகழ்வதாகக் காட்டியும் சொல்வது. குற்றாலக் குறவஞ்சியில், ''தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகு... மந்திசிந்து கனிகளுக்கு வானரங்கள் கெஞ்சும்'' என்று சொல்லுவது போன்றது, இது.

4) தெய்வங்களைக் காணுதல்; அதாவது இயற்கையின் ஆற்றல், தெய்வீக ஆற்றலாக உருமாற்றம் பெறுகிறது. இடி, மின்னல், பிறை, ஆறு, மயில், காளை முதலியவை. மேலும் இயற்கை உடன் தெய்வங்கள் இருப்பது - கானுரை தெய்வம், காடமர் செல்வி, குன்றுதோறு ஆடும் குமரன். மேலும், மீமனித ஆற்றலோடு (supernatural) சொல்லுதல் - காவியங்களிலும் புராணங்களிலும் போல.

இனி, அழகின் வெளிப்பாடாக அல்லது அதற்குரிய இடமாக, இயற்கை கண்டறியப்படுகிறதென்றால், அது, எவ்வெச் சூழ்நிலைகளோடு, எவ்வெக் காரணங்களோடு அவ்வாறு அறியப்படுகிறது? இதனை இரண்டு வகைகளில் சொல்ல வேண்டும். ஒன்று - காதல் உள்ளிட்ட வாழ்நிலைகள் / அனுபவங்கள். இரண்டு - புவியியல் வரைவுகள் மற்றும் வாழிடங்கள் அல்லது இருப்புக்கள் பற்றியன.

முதலில் - வாழ்நிலைகள் அல்லது அனுபவங்களை மையமிட்ட அல்லது அவற்றை உணர்த்துவதற்கு உதவுகிற இயற்கை பற்றிய அழகியல் பார்வை, மிகவும் அடிப்படையானதாகும். தமிழ் மரபு கூறும் திணைப் பாகுபாடு இதனை மையமாகக் கொண்டே அமைகிறது. திணை என்பது ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலும் அதே போது அது சார்ந்த மற்றும் அதனை இலச்சினையாகக் கொண்ட ஒழுக்கமும் ஆகும். ஐங்குறு நூறு ஆகட்டும் அகநானூறு ஆகட்டும், அகத்திணைப் பாடல்களில் சொல்லப்படும் இயற்கையெல்லாம், வனமோ, வயலோ, மேய்ச்சல் காடோ, மணல் வெளியோ சங்கும் மீனும் ஒதுங்கும் கடலோரமோ - கூடுதல், ஊடுதல், பிரிதல் முதலிய காதல் நிலைகளுக்குப் பின்புலங்களாகவும் தூண்டு களங்களாகவும், இலச்சினைகளாகவும் அமைந்திருக்கின்றன. அதுபோல, இன்னும் சற்று நுட்பமாகக், காதலையும் வேண்டப்படும் திருமணத்தையும் குறிப்பால் உணர்த்தப் பயன்படும் உள்ளுறையுவமும் இறைச்சியும் இயற்கையின் மூலமே புலப்படுத்தப்படுகின்றன.

இயற்கையும், மனிதனும் பரஸ்பரம் நெருங்கிச் சார்ந்திருப்பதின் வெளிப்பாடு, இது. ஆனால், காலம் பின்செல்ல, மனிதத் தொகை கூடி, மனித மூச்சுக்கள் கூடிய ஊர்களும் வெளிகளும் கூடி, காடும் மேடும் கழனியும் குறைய, மனிதனுக்கு இயற்கையோடு கூடிய நெருக்கமும் குறைவது இயல்பே. எனவே இன்பமும் ஏக்கமும் கூடிக் குழையும் காதலும் மிக நெருக்கமாக இருப்பதைச் சங்க இலக்கியத்திற்குப் பின்வந்த இயற்கை மீதான பார்வை, குறைத்துக் கொண்டு விடுகிறது. இயற்கையோடு இயல்பாய் நிற்கும் உள்ளுறை, இறைச்சி முதலிய இலக்கிய உத்திகள் பிற்காலத்தில் காணாமல் போனதற்கு இது ஒரு காரணம்.

அடுத்து - இயற்கை பற்றிய காட்சி வடிவங்கள், மனித வாழ்வின் இருப்பிடங்களைச் சொல்லுவதற்கும் புவியியல் வரைவுகளைக் (Geographical locations) காட்டுவதற்கும் பயன் கொள்கின்றன. இனக்குழு வாழ்க்கை நிலைக்குப் பிறகு, ஆநிரை மேய்ப்பும் பயிர் தொழிலும் மீன் பிடிப்பும் பண்ட மாற்றும் என்ற வாழ்க்கை முறைக்கு வந்துவிட்ட பிறகு ''இடம்'' பற்றிய வரையறைகளும் உரிமையுணர்வுகளும் மனிதனை வந்தடைகிறபோது, சாலைகளும் பயணங்களும் முறைமைகளையும் திட்டங்களையும் உட்கொள்ளுகிறபோது, புவியியல் வரைவுகள் - அவை பற்றிய அறிவுகள் - அவனுக்குத் தேவைப்பட்டன. இயற்கை பற்றிய பார்வையும் இவற்றை ஓட்டி அமைகிற பான்மையை அடைகிறது.

தேர் ஊர்ந்து செல்ல உடன் வண்டிகளும், சாத்துகளும் செல்ல, பாணரும் விறலியும் இரவலரும் செல்ல என்று அமைந்த பாதைகளை வருணிக்கிற சங்க இலக்கியப் பாடல்கள் அதிகம். மேலும், அன்றையத் தமிழகத்துப் புவியியல் வட்டாரங்களை இணைக்கின்ற காரியத்தை ஆற்றுப்படைப் பாடல்கள் செய்தன. இயற்கை பற்றிய பார்வை, அந்த முறையிலேயே அவற்றில் அமைந்துள்ளன. முக்கியமாகச் ''சிறுபாணாற்றுப்படை''யில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. 269 அடிகள் கொண்ட இப்பாடல், ஒரு சில அடிகள் தவிர்ந்து, முழுவதுமே இயற்கையின் அழகு பற்றிப் பேசுகிறது. ஆற்றுப்படைப் பாடல்களின் பின்னணியில், சிலப்பதிகாரத்தில் கண்ணகி - கோவலன் பூம்புகாரிலிருந்து மதுரை வந்த பிரயாணத்தையும் இயற்கைச் சூழல்களையும் பார்க்கலாம். பின்னால் வந்த தேவாரம் முதலிய பக்தி நூல்களிலும் அதன் பிறகு வந்த தல புராணங்களிலும், இயற்கை இது போன்ற தளங்களை இனங்காட்டும் நோக்கிலேயே இடம் பெறுகின்றது. எனினும், பலபோது, இது, மரபுமுறையில் வாய்பாடுகளாகவே (Stereotyped formulae) இத்தகைய நூல்களில் இடம்பிடித்திருக்கின்றது என்பதையும் சொல்லியாக வேண்டும். பின்னால் வந்த கவிஞர்களில் கம்பனே இயற்கையின் அழகில் (தவிர, இராமன், சீதை, உள்ளிட்ட மனிதர்களின் அழகிலும்தான்) அதிகம் ஈடுபாடு காட்டுகிறான். இயற்கையை உயிரோட்டம் கொண்டதாகவும் மனித ஆற்றல் மற்றும் பல சமயங்களில் மீமனித ஆற்றல் படைத்ததாகவும் அவன் காட்டுகிறான். இன்றைய இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு, எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் கவனத்தை இயற்கை பற்றிய அழகியல் ஈர்க்கவில்லை. மேலும், நவீனத்துவம் - அதன் அழகியல் - (Aesthetics of Modernity) இயற்கைச் சூழலிலிருந்து சற்று விலகி ஒதுங்கிப் போய்விட்டது.

நாம், முன்னர்க் கூறியிருக்கிறோம் - அழகியலின் தளம், முக்கியமாக மூன்று என்பதை, அவை; மனிதன், இயற்கை மற்றும் மனிதனால் ஆக்கப்பட்ட செயற்கை அல்லது செய்கலை, மனிதனைப் பற்றிய அழகியல், அவனுடைய ஆளுமையையும் உட்கொண்டதுதான் என்றாலும், அத்தகைய ஆளுமைப் பண்புகளைத் தனியே, அழகு, எனக் குறிப்பிட்டுப் பேசுவது அரிதாகவே இருக்கிறது.

எழில்மிக வுடைய தீங்கனிப் படூஉம்

திறவோர் செய்வினை அறவதாகும்.

திறன் படைத்தோர் செய்கின்ற தீங்கனி போன்ற நல்ல செயல்களை எழில் மிகவுடையன என்று சேந்தம்பூதனார் அடையாளம் காட்டுகிறார். மற்றபடி இவ்வாறு குறிப்பிட்டுக் கூறும் வழக்கு மிக அரிதே. மனிதனின் தோற்றப் பொலிவு சார்ந்த அழகியலுக்கு விசாலமான தளத்தைச் சங்க இலக்கியம் தருகின்றது.

அழகு என்பது, ஒருவரையொருவர் நெருங்குவதற்குரிய உணர்வுபூர்வமானதொரு சாதனம். அவ்வகையில் அது ஒரு தகவலியல் தொடர்பையும் செய்கின்றது. உடல் அழகும், உடலின் அங்க அசைவுகளும் ஒருவகையான உடல் மொழியை (body language) உருவாக்குகின்றன. பிரதிநிதித்துவப்படுத்துகின்றன எனலாம்.

மனிதனின் தோற்றப் பொலிவு அல்லது உடல் அழகு பற்றிய கண்ணோட்டம், அழகியல் தளத்தில் முக்கியமானதொரு பகுதியாகும். மேலும், தமிழ் என்ற ஒரு இனத்தின் அழகு பற்றிய பார்வையை மட்டுமல்லாமல் அந்த இனத்தின் இன அடையாளத்தை (ethnic identity) உணர்த்தக்கூடியதாகவும் இது விளங்குகிறது. உடல் அழகு பற்றிய கருத்தோட்டத்தில், தமிழ் மரபில் ஐந்து அடிப்படைகள் இருப்பதாகக் கொள்ள முடியும்.

1) இளமை, வறுமை, நலமான உடல், அந்த உடலின் வலிமை ஆகியவற்றையும் விருப்பத்தோடு கூடிய உணர்வு நிலையையும் சார்ந்ததாகவே உடல் அழகு பற்றிய கருத்தியல் அமைகிறது.

வயோதிகர் பற்றியோ நோயால் உடல் மெலிந்தவர் பற்றியோ வருணிப்பது இல்லை; சிறிய குழந்தைகள் பற்றிய அழகுகூட அதிகம் கவனம் கொள்ளப்படவில்லை. குழந்தைகள் பற்றிக் குறிப்பிடும் சில பாடல்களும் கூடப் பெண் குழந்தைகளைப் பற்றித் தொடுவதில்லை. குழந்தைகள் அழகு - பற்றி ஓரளவாவது பேசுவது, கண்ணன் பற்றிப் பேசும் ஆழ்வார் பாடல்களில்தான்; அதுவும் பெண் குழந்தை பற்றி ஒன்றும் இல்லை. பின்னால், பிள்ளைத் தமிழ் நூல்களில்தான் குழந்தைகளின் அழகு விரிவாகவும் சிறப்பாகவும் பேசப்படுகிறது. மேலும் பெண் குழந்தைகள் பற்றிய பேச்சும் அழகும் அங்கே உண்டு. (அதுவும் கூடத், தெய்வக் குழந்தைகள் என்பதனாலா?)

2) தமிழ் மரபில் உடலியல் சார்ந்த அழகியல், பெண் உடலை - இளமை கொண்ட பெண்ணுடலை - மையமிட்டதாகவே அமைகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் அனுபவிப்பதும் ரசிப்பதும் அவனை முன்னிட்டே நடப்பதால், பெண்ணே - அதுவும் இளம் பெண்ணே - அழகுடையவளாகக் காட்டப்படுகிறாள். சில சமயங்களில், ''மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்'' என்றும் ''யாவருங் காணலாகா மாண்எழில் ஆகும்'' என்றும் அந்த ஆணின் மார்பு அழகு பேசப்பட்டாலும் ''மார்பு புணையாக ஆடும் வம்மே காதலந் தோழி'' என்று சொல்லுகிற வழக்குத்தான் - நோக்கந்தான் - அதிகம் காணப்படுகிறது. ஆனால், சிற்பக் கலையில் ஆண் - உடல் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. மேலும், கடவுளர்கள் பற்றிய பாடல்களில் ஆண்மை, இளமை, காதல் ஆகிய படிமங்கள் கொண்ட முருகனும் கண்ணனும் போட்டி போட்டுக் கொண்டு அழகுடையவர்களாக வருணிக்கப்படுகிறார்கள்.

பெண், அதிகம் உயரமில்லாதவள் - ''குறுமகள்''; கரிய நிறமுடையவள் - ''மாயோள்'' இவளுடைய அழகுடைய உறுப்புக்களென அதிகம் பேசப்படுவன: முலை, அல்குல், மற்றும் கண், தோள், கூந்தல், நுதல் ஆகியவை. ''முகிழ்த்துவரல் இளமுலை'', ''நெருங்கல் வெம்முலை'', ''நுண்நுசுப்பின் அகன்ற அல்குல்'', ''பணைப் பெரும் தோள்'', ''வாங்கமைபுரையும் வீங்கிறைப் பணைத்தோள்'', ''அல்கு படர் உழந்த அரிமதர் மழைக்கண்'', ''கலிமயிற் கலாவத் தன்ன ஒலிமென் கூந்தல்'', ''செம்பொறி திருநுதல்'' என்பன. பெண் - உடல் அழகு பேசும் சில தொடர்கள். இவை, கவர்ச்சியையும், பாலியலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டவையல்ல; அவையும் உண்டெனினும், அவளுடைய உடல் திறன், நலம், பயன் ஆகியவற்றையும் அவை முக்கியமாகக் கொண்டவை. முக்கியமாகத், ''தோள்'' பற்றிய அழகு. பருத்த தோள் என்று பன்முறை பேசப்படுகிறது. இது உழைப்பின் அடையாளமாக வந்த அழகேயாகும்.

3) உடலழகு, இயற்கைப் பொருளோடு இணைத்துக் காணப்படுகிறது; ஒன்றில் - உடலுக்கு, இயற்கைப் பொருள் உவமமாக அல்லது ஒப்பீடாகக் கூறப்படுகிறது; அல்லது - இயற்கைப் பொருளுக்கு உடல் அழகு உவமமாகவோ ஒப்பீடாகவோ கூறப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படையில், விறலி (ஆடு களமகள்)யின் கொங்கை வருணிக்கப்படுகிறது; அப்போது, அதனுடன், கோங்கு மலர் இணைத்துக் கூறப்படுகிறது. முதலில், கொங்கைக்கு, அந்தக் கோங்கு மலர் மொக்கு, உவமமாகக் கூறப்படுகிறது.

யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்

பூணகத் தொடுங்கிய வெம்முலை.

முலையின் அழகைக் கோங்கு மொக்குகளைக் காட்டி உணர்த்துகிறார். அடுத்துச், சில வரிகள் கழிந்து, உவமமும் பொருளும் இடம் மாறுகின்றன. இப்போது இயற்கைப் பொருளாகிய மலர் மொக்குகளின் அழகைச் சொல்ல வேண்டும். அதற்குக் கொங்கையின் வடிவம் உவமமாகிறது.

வருமுலை யன்ன வன்முகை யுடைந்து

திருமக மவிழ்ந்த தெய்வத் தாமரை

இவ்வாறு இயற்கையும் உடல் அங்கமும், ஒன்றற்கு இன்னொன்று, போன்மையாகி அல்லது பதிலியாக அமைகின்றன. அழகியல் பார்வைக்கு இயற்கையே அடிப்படை ஆதாரம்; மனித வாழ்வும் அந்த வாழ்வின் கண்ணோட்டங்களும் இயற்கையின் வழியோடு இணைந்திருக்கின்றன. இது போன்ற எடுத்துக்காட்டுகள் பல, இவ்வுண்மையைச் சொல்லுகின்றன.

4) உடல், இயல்பாக அன்றி ஒப்பனையோடும் புனைவோடும் அழகு செய்யப்படுகின்றது.

ஒப்பனை என்பது ஒரு கலை. தன்னுடைய உடல் பற்றிய உணர்வும், அழகாகத் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் ஒப்பனையை ஒரு தேவையாக ஆக்குகின்றன. ஆணின் மார்பு, சந்தனம் பூசிக் கொண்டதாகும். மலர் மாலை அணிந்து கொண்டதாகவும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. பெண் உடல் சார்ந்த அழகுக்கு ஒப்பனையும் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது. ஒப்பனையாக அல்லாமல், ஆனால், பிரிவு முதலியவற்றின் காரணமாகத் தேமல், சுணங்கு அல்லது திதலை, பெண்ணின் உடலில் தோன்றுவது சங்கப் பாடல்களிலும் திருக்குறளிலும் பன்முறை பேசப்படுகிறது. அடுத்து உடலில், முக்கியமாகக் கொங்கையில், தொய்யில் எழுதுவதும் குறிப்பிடப்படுகிறது; இழை (நகை), யணிவதும் கூறப்படுகிறது.

வனை புனை எழில் முலை

என்று, மலைபடுகடாம் கொங்கையின் அழகிற்கு மூன்று அடைமொழிகள் தருகின்றது. ஒன்று இயல்பானது - எழில், மற்றும் ஒப்பனையாக வினை - புனை - என்ற இரு செயல்கள் கூறப்படுகின்றன. மேலும்,

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்

தழையணிப் பொலிந்த ஆயம்...

என்று இப்பெண்கள் செய்கிற சில ஒப்பனைகளைத் தொகுத்துச் சொல்கிறது ஒரு பாடல். இவ்வளவு ஒப்பனைகள் செய்தும் இவர்களைப் ''புனையா ஓவியம்'' என்று சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. பெண்டிரின் அணிநலன்களைப் பிற்கால இலக்கியங்களும் விரிவாகச் சொல்லுகின்றன. சிற்பங்களிலும் சிலைகளிலும் பெண்கள், பெரும்பாலும் கழுத்திலே, காதிலே, கரத்திலே என்று அணிகளுடன் காட்சி தருவதே பெரும்பான்மை.

5) மிகை கற்பனையும் புராணிக மரபும் என்ற சூழல்களில், மனித உடல் அழகு, யதார்த்தத்திலிருந்து மாறுபட்டு, மீமனிதப் புனைவுகளுடன் சித்திரிக்கப்படுகிறது - சமய ஆதிக்கம் வந்த பின்னைய காலத்தில்.

கம்பனின் உடல் அழகு பற்றிய மீமனித - இயற்கையிகந்த - புனைவுகள் மற்றவர்களினும் அதிகமாகவே உள்ளன. கோயில் சிற்பங்களிலும் இத்தகைய புனைவுகள் கணிசமாகவும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்துடனும் விளங்குகின்றன. சிலம்பில் கண்ணகியின் உடல் அழகு, முதலிரவில் உலவாக் கட்டுரையாகக் கோவலன் மூலம் புனைந்துரைக்கப்படுகிறது. அவளுடைய உடல், மீமனித வடிவமெடுக்காவிட்டாலும் அந்த உடல் உறுப்புக்கள், கடவுளர்களால் கொடைகளாகக் கொடுக்கப்படுகின்றன என்று புராண மரபோடு சொல்லப்படுகிறது. பிறை போன்ற நெற்றியைச் சிவன் கொடுக்கத், தன்னுடைய கரும்புவில்லை இரண்டாக ஒடித்துக் காமன், இருபுருவங்கள் தர, முருகன், தனது கூரிய வேல் தன்னை இரண்டாக்கி இரு விழிகள் தந்தானாம். இளங்கோவடிகள் சமணராகக் கருதப்படுகிறவர். ஆனாலும் அன்றைத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்ட வைதீக சமயத்தோடு இப்படி அவர் சமரசப்படுத்திக் கொள்கிறார்.

''இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்'', ''செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்'' என்று தொல்காப்பியம் கூறும். இயற்கை போன்றே செயற்கையும் கவனிப்புக்கு உட்பட்டு வந்திருக்கிறது என்பதனையே இது காட்டுகிறது. மனிதனின் (செய்)கைபட்டு வெளிப்படும் ''செயற்கை'' குறிப்பிட்ட தோற்றத்தையும் குறிப்பிட்ட ஒரு செய்தியையும் கொண்டிருக்கிறது. இதனுள்ளும், மனிதனுடைய உள்ளார்ந்த படைப்பாக்கத் திறனையும் அறிவான்ற திட்ட முறையினையும் உழைப்பினையும் கொண்டதாக விளங்குகின்ற செய்கலை, அழகியலின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இயற்கையின் அழகு நுண்மையானது; அறுதியிட்டுச் சொல்லுவதற்கு அது அதிகம் இடம் தருவதில்லை. ஆனால் கலை, இன்னும் சற்றுத் துல்லியமாகவும், தெளிவாகவும் அறுதியிட்டுக் சொல்லக் கூடியதாகவும் (ஆனால் எல்லாம் ஓர் ஒப்பீட்டளவில்தான்) அமைந்திருக்கிறது. எனவே, அழகியல் சிந்தனையாளர்கள், இயற்கையின் அழகிலோ, உடலின் அழகிலோ கொள்கிற கவனத்தை விடக் கலையின்பால் அதிகக் கவனம் கொள்கின்றனர். கலைகள் பல திறத்தின; பலவகையின; எனவே, துலாம்பரமாக இன்னது இத்தகையது இன்ன அளவிலானது என்று அறிய முடியும் என்று கருதுகின்றனர். எனவே, பல சமயங்களில், அழகியலே கலையியல் கோட்பாடு தான் என்று பலர் கருதவும் செய்கின்றனர்.

இயற்கையோடு இணைந்து வாழ்கிற மனிதன், அந்த இயற்கையிலிருந்து கற்றுக் கொண்டவற்றைத்தான் கலை வடிவமாக ஆக்கிக் கொள்கிறான். இயற்கையின் ''மாதிரி''யாகவே (model) கலை அமைகிறது என்று கலைக் கோட்பாளர்கள் கூறுகின்றனர். மேலும், இயற்கையை அப்படியே நகல் எடுப்பது போல் ''போன்மை''ப் (imitation)படுத்தி அதன் பதிலியாக ஆக்கி - அப்படித்தான் கலை உருவாகிறது என்று சிலர் சொல்லுவர்; ஆனால் அது பொருந்தாது என அறிக. ஏனெனில் மனித அனுபவம் விசாலமானது; உறவுகளும் சிந்தனைகளும் இயற்கையையும் தாண்டி விசாலமானவை. எனவே, கலை வெறுமனே பதிலியாக அல்ல; மனிதப் படைப்பாற்றலின் - அவனுடைய கற்பனைத் திறனின் - ஒரு பகுதியாக விளங்குகிறது.

மனித உடலிலே தொய்யில் வரைவது, கண்ணிலே மை எழுதுவது முதலிய புனைவுகளும், ஆரமும் பூணும் வளையும் மலரும் முதலிய அணிகளும் உள்ளிட்ட ஒப்பனைகள் முதல், கால அளவை, இட அளவை ஆகிய தளங்களின் வழி எழுந்த ஒவியம், இசை, கட்டிடம் முதலிய பல்வேறு கலைகளும் அவை பற்றிய குறிப்புக்களும் செய்திகளும் பழங்காலத்தும் பின்னர் தொடர்ந்தும் தமிழில் உண்டு. எனினும் தமிழில், கவிதைக் கலைக்கு எழுந்த விளக்கமான கோட்பாடு, ஏனைய கலைக்கு அமைந்திருக்கவில்லை; எனினும், ஆங்காங்கே முக்கியமான பல இடங்களில் வெவ்வேறு சூழல்களில் கலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள், செயல்பட்ட நிலைகள் பற்றியும் அவற்றிற்கிடையே அமைந்த உறவுகள், பற்றியும் கூறப்பட்டிருக்கின்றவை. கலைகள் புலப்படுத்தும் அழகியலைக் கட்டமைக்க உதவக் கூடியவை.

கலைகளின் வரலாற்றை அல்லது வகைகளைத் தேடுவதோ, கலைகளின் அழகியலை விளக்குவதோ, இந்த கட்டுரையின் எல்லைக்குள் உள்ளிட்ட நோக்கமல்ல. இருப்பினும் இதனைச் சுருக்கமாகவேனும், ஒரு கட்டுக்குள் நின்று தொட்டுக் காட்டுவது அவசியம்தான். முக்கியமாகச் சங்ககாலப் பகுதியில் கிடைக்கிற தரவுகளைத் தொகுத்துக் காணுகிறபோது, ''செய்வது நேர்த்திபடச் செய்வது - கலைவயப்படுத்துவது - ஆக்குவது அல்லது படைப்பது'' என்ற அடிப்படையில் சிறப்பியலான ஒரு பத்தி நிலைக்களன்களை இனம்பிரித்துக் காணமுடிகிறது.

I) மனித உடம்புகளை எழுதி அணி செய்வது; மை எழுதுவது; கூந்தலைப் பின்னி அலங்கரிப்பது; புனைவு அல்லது ஒப்பனை

II) அந்த உடம்புகளில் - மார்பு, கழுத்து, காது, இடை, கால், கை முதலியவற்றில் அணிகள், இழைகள், பூண்கள், குழைகள், மற்றும் வளை, கழல் முதலியவற்றைக் கலைப் பொருள்களாகச் செய்வது, அணிவது.

III) மட்கலம், அருங்கலச் செப்பு, பலவகைப்பட்ட பாவைகள், பாவை விளக்கு, படுக்கைக் கட்டில், எழினி அல்லது படாம் போன்ற கலைப்பொருள்கள்.

iV) ஏர், புனை, தேர், கூர்வேல் முதலிய உற்பத்திக் கருவிகள்.

V) இயற்கையெழிலை ஒத்ததாக அமைக்கிற ஓவம் அல்லது ஓவியம்.

VI) மாடம், எழுநிலை மாடம்; அம்மாடங்களிலும் சுவர்களிலும் செய்யப்படுகின்ற கதைப் - புனைவுகள் மற்றும் தெருவீதிகள் அமைப்பு.

VII) விறல்பட ஆடுதல் (விறலியர்), வேடமிட்டு ஆடுதல் (பொருள்), கூத்து அல்லது நாடகம்.

VIII) பறை, துடி, முரசு, குழல், யாழ் முதலிய கருவிகள் வழிப்பட்ட இசை / பண்.

IX) பாட்டு, இசை, கூத்து மூன்றும் கூடி, ஒன்றாய் நிகழ்த்துகிற (Performing Art) கலை வடிவ நிகழ்வு; வேத்து அவை, பொது அவை என்று வேறுபட்ட சூழல்களில் நிகழ்த்தப்பெறும் நிலைப்பாடு.

X) மொழியோடு கூடிய கலை வடிவங்கள். பண்ணோடு கூடிய மொழி - பாட்டு; செய்யுள், உரை, நூல், அம்மை, தொன்மை, தொடர் நிலைச் செய்யுள் - எனும் இலக்கியக் கலைவடிவங்கள்.

இவை, பொதுவான கலை வெளிப்பாடுகள், கலை வடிவங்கள். இவற்றுள் பல சங்க காலச் சமுதாயத்திலேயே வளர்ச்சி பெற்றுமிருந்தன. இவையன்றியும், சங்ககாலச் சமுதாய வீழ்ச்சிக்குப் பின்னால், உற்பத்தியுறவுகளில் ஏற்பட்ட மாற்றம், நிறுவனவயப்பட்ட அரசுருவாக்கம், வைதீக சமய எழுச்சி, வேற்றுப்புலத்தார் வருகை ஆகியவற்றின் காரணமாக, ஏற்கனவே இருந்த கலை வடிவங்களை மாற்றங்கள் ஏற்பட்டதன்றியும் கோயில்கள் மையமிட்டு எழுந்த கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை ஆகிய பெருநிலையான கலைகளும் வளர்ச்சி பெற்றன. தனித்துவம், தமிழ் இன/மரபு அடையாளம், அதனைத் தாண்டிய சமய, புராண அடையாளங்கள் அவற்றிற்குரிய வரையறைகள் ஆகியவற்றோடு வளர்ச்சி பெற்ற இந்தக் கலைகள் தமக்குள் பல வடிவங்களையும், வகைகளையும், செய்திகளையும், நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன. எல்லாக் கலைகளுக்கும் அதனதன் அளவில் முக்கியத்துவமும் சிறப்பும் உண்டு; இழையோடும் அழகியல் பண்புகளும் உண்டு. இவற்றையெல்லாம் வகைதொகையாக விளக்குவது கலைகளின் வரலாற்றுக்கு உதவும் என்றாலும், அழகியல் கோட்பாட்டுக்கு, இதுகாறும் நாம் விளக்கியவாறு, கலைகளின் பொதுத்தன்மைகளை அறிந்து கொள்வதே அடிப்படையாகும்.

மனிதன், சமூக பொருளாதார நிலைகளில் வளர்கின்றபோது, அவன் நாகரிகப்படுவதும் சேர்ந்தே வளர்கிறது. நாகரிகத்தின் ஆழமான பதிவுகளோடும், மனித வாழ்வுகளின் மனநிலைகளோடும் அவனுடைய உழைப்பின் ரகசியத்தோடும் சம்பந்தப்பட்டது. அழகியல் தமிழ் மரபில் அழகியலை நாம் கண்டறிந்தோம் என்பது இந்த நிலையிலிருந்துதான்.

நன்றி: சமூக விஞ்ஞானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக