17/04/2011

புறநானூற்றில் ஒலித்த போர் எதிர்ப்புக் குரல் - வெ.பெருமாள் சாமி

சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்று புலவர்கள் புகழ்ந்தார்கள்; தர்மயுத்தம் என்று போற்றினார்கள்.

``ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

தென்புலவாழ்நர்க் கருங்க டனிறுக்கும்

பொன்போற்புதல்வர்ப் பெறாஅதீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென

அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்

கொல்களிறு மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும்

எம்கோ வாழிய குடுமி"

(``ஆவும் ஆவினது இயல்புடைய அந்தணரும் மகளிரும் பிணியாளரும் பிதிர்க்கடன் ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதீரும் எம்முடைய அம்புகளை யாம் விரையச் செலுத்தக் கடவேம்; நீர்நுமக்கு அரணாகிய இடத்தை அடையக் கடவீர்'' என்று சொல்லுகிற மேற்கோளையும் அதற்கேற்ற மறத்தையும் உடையவன் எம்முடைய வேந்தனாகிய குடுமி) என்று, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனைப் புகழ்ந்து புலவர் நெட்டிமையார் பாடினார். அம்மன்னன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றினார்.

`மன்னர்கள் போர்க்களத்திலும் அறநெறியையே கடைப்பிடித்தார்கள்; தர்மயுத்தமே நிகழ்த்தினார்கள்' என்பதற்கு இப்பாடல், மன்னராட்சியின் மாட்சியைப் போற்றும் தமிழறிஞர்களால் இன்றும் உதாரணமாகக் காட்டப்படுகிறது.

t;contentpane">பசுக்களையும் பார்ப்பாரையும் பெண்டிரையும் பிணியாளரையும் பிதிர்க்கடன் ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும் அரசர்கள் போரில் கொல்லக்கூடாது' என்பது அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும்' என்று இப்பாடல் கூறுகிறது..அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் போரைத் தொடங்க வேண்டும். அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்று அவ்வறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் குறித்துப் புலவர்கள் கூறும் செய்திகள் அறிஞர்களின் இக்கூற்றுக்கு அரண் செய்வனவாக இல்லை.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை "அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிறு மீமிசை கொடி விசும்பு நிழற்றும் எம்கோ" என்று புகழ்ந்துரைத்த புலவர் நெட்டிமையாரே, அம்மன்னன் நிகழ்த்திய போர்களின் கடுமையையும் அவற்றால் நிகழ்ந்த கொடுமைகளையும் கண்டு"அறனோ மற்றிது விறன்மாண் குடுமி" என்று உளம்நொந்து வினவிய நிகழ்வையும் புறநானூறு கூறுகிறது.

அம்மன்னன் இனக்குழுமாந்தரின் சீறூர்களின் மேல்பெரும்படை கொண்டு தாக்கி நிகழ்த்திய பேரழிவுகளைப் புலவர் நேரில் கண்டார். கண்டு வருந்தினார். அவ்வருத்தம் ஒரு பாட்டாக வெளிப்பட்டது.

"கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்

பாழ்செய்தனைஅவர் நனந்தலை நல்லெயில்

புள்ளினமிமிழும் புகழ்சால் விளைவயல்

வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்

தேர் வழங்கினை நின்தெவ்வர் தேஎத்துத்

துளங்கியலாற் பணையெருத்திற்

பாவடியாற் செற னோக்கின்

ஒளிறு மருப்பிற் களிறவர

காப்புடைய கயம்படியினை"

-புறநானூறு : 15

(பெருமானே, தேர்த்தடங்கள் குழிவாகப் பதிந்துள்ள தெருக்களையுடைய ஊர்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி அவ்விடங்களில் வெளுத்த வாயையுடைய கழுதைகளைப் பூட்டி உழுது இழிவு செய்தனை. நெற்பயிர் விளைந்துள்ள வயல்களில் வெண்மையான தலையாட்டமணிந்த குதிரைகளின் கவிந்த குளம்புகள் தாவத் தேரைச் செலுத்திப் பாழ் செய்தனை. அவர்களின் காவல் மிகுந்த நீர்த்துறைகளில் நினது யானைகளைப் படிவித்து நீராட்டிச் சீரழித்தனை) என்று, அம்மன்னன் இனக்குழு மாந்தரின் சீறூர்களில் போர் உடற்றி நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் குறித்து வருந்திக் கூறினார்.

முதுகுடுமிப்பாண்டியன் மட்டுமல்லாது, முடியுடைவேந்தர் அனைவருமே மண்ணாசை மற்றும் அதிகார எல்லையை விரிவுபடுத்துதலும் ஆதிக்கப் பரப்பை அதிகரித்தலும் ஆன பேராசை காரணமாக அண்டைப்புலங்களான குறிஞ்சி முல்லை நிலங்களில் இனக்குழுவாக வாழ்ந்த சீறூர் மக்கள் மேல் பெரும்படை கொண்டு தாக்கிப் பேரழிவு நிகழ்த்தினார்கள்.

ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழமன்னன் இனக்குழு மாந்தரின் சீறூர்களில் போருடற்றி நிகழ்த்திய அழிவுகள் குறித்துப் பாண்டரங்கண்ணனார் என்ற புவரர் பாடினார்.

``வினை மாட்சிய விரை புரவியொடு

மழையுருவின தோல் பரப்பி

முனை முருங்கத் தலைச்சென்றவர்

விளைவயல் கவர்பூட்டி

மனை மரம் விறகாகக்

கடிதுறை நீர்க்களிறு படீஇ

எல்லுப்பட விட்ட  சுடுதீ விளக்கம்

செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்

புலங்கெட விறுக்கும்....

............................

................

கரும்பல்லது காட்டறியாப்

பெருந்தண் பணை பாழாக

ஏமநன்னா டொள்ளெரி யூட்டினை"

-புறநானூறு : 16

என்பது அவர் கூற்று.

அம்மன்னன் போர்முனை கலங்கக் குதிரைப்படையுடன் சென்று, சீறூர் மாந்தரின் வயல்களில் விளைந்துள்ள நெல்லைக் கொள்ளையடித்தான். அவர்களின் காவல்மிக்க நீர்த்துறைகளில் யானைகளைப் படிவித்து நீராட்டினான். மனையிடத்து மரங்களை விறகாகக் கொண்டு ஊர்களைத் தீயிட்டு எரித்தான். கரும்பல்லது பிற பயிர்களை அறியாத நீர் வளம்மிக்க வயல்களையும் தீயிட்டு அழித்தான் என்று அம்மன்னன் நிகழ்த்திய அழிவுகளைப் புலவர் கூறினார்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நிகழ்த்திய போரின் கடுமையும் பேரழிவும் குறித்துப் புலவர் கல்லாடனார் பாடினார்.

``வெளிறினோன் காழ்ப்பணை நிலை முனைஇக்

களிறு படிந்துண்டெனக் கலங்கிய துறையும்

கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற்

சூர்நவை முருகன் சுற்றத் தன்ன நின்

கூர்நல்லம்பிற் கொடுவிற் கூளியர்

கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்

கொள்பத மொழிய வீசிய புலனும்

வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்

கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்

வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்

கனையெரி யுரறிய மருங்கும் நோக்கி

நண்ணார் நாண நாடொறும் தலைச்சென்று

இன்னும் இன்ன பல செய்குவன்"

-புறநானூறு

என்பது அவர் கூற்று

அம்மன்னன் இனக்குழு மாந்தர்களின் சீறூர்களில் இருந்த நீர்த்துறைகள் பாழாகுமாறு அவற்றில் தன் யானைகளைப் படிவித்து நீராட்டினான்.

கூரிய அம்பினையும் வளைந்த வில்லினையும் உடைய படைவீரர்கள் தம்மால் இயலும் அளவுக்கு வயலில் விளைந்திருந்த நெல்லைக் கொள்ளையடிக்கச் செய்தான். எஞ்சியவற்றைச் சீறூர் மக்கள் உணவாகக் கொள்ள இயலாதவாறு பாழ்படுத்தச் செய்தான்.

சீறூர்களில் இருந்த நல்ல இல்லங்களையெல்லாம் எரியூட்டி அழித்தான் என்ற செய்தியைக் கல்லாடனாரின் இப்பாடல் கூறுகிறது.

அரசர்கள் சீறூர் மாந்தர்மேல் நிகழ்த்திய போர்களால் நேர்ந்த அழிவுகளின் பொதுவான தன்மைகளை இப்பாடல்கள் கூறுகின்றன. போர்களில் வெற்றிபெற்ற அரசர்கள் தாம் வென்ற இனக்குழுமாந்தரின் சீறூர்களை முற்றிலும் தீயிட்டு அழித்தார்கள்; கழுதை ஏர் பூட்டி உழுது இழிவுபடுத்தினார்கள்.

விளைவயல்களையும் விளைச்சலையும் பல வகைகளில் பாழ்ப்படுத்தினார்கள். சிறூர் மக்களின் குடிநீர் ஆதாரங்களான நீர் நிலைகளில் யானைகளைப் படிவித்து நீராட்டிப் பாழ் செய்தார்கள். இத்தகைய அழிவுகளையும் இழிவுகளையும் போர்களில் வென்ற அரசர்கள் அனைவருமே நிகழ்த்தினார்கள் என்ற உண்மையை இப்பாடல்கள் கூறுகின்றன.

இவ்வாறு, இனக்குழு மாந்தர்கள் வாழ்ந்த சீறூர்களில் பேரழிவுகளை நிகழ்த்திய மன்னர்கள், அம்மக்கள் சேமித்து வைத்திருந்த பொன்னும் மணியுமான பெருஞ்செல்வங்களைக் கொள்ளையடித்துக் கவர்ந்து சென்றார்கள். அச்செல்வங்களைப் புலவர்க்கும் பாணர்க்கும் தானமாக வழங்கினார்கள். தாம் கைப்பற்றிய தேர்களையும் யானைகளையும் அவர்களுக்குப் பரிசிலாக வழங்கினார்கள். புலவரும் பாணரும் தம்மைப் புகழ்ந்து பாடியதால் அரசர்கள் அவர்களுக்குப் பெரும்பொருள் தானமாக வழங்கினர்.

இதுகுறித்து,

"சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்

பாசவற் படப்பை யாரெயில் பல தந்து

அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்

பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிஞ்''

என்று, பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர் காரிகிழார் கூறுகிறார்.

பரிசிலர்க்குப் பொற்றாமரைப் பூவும் களிறும் தேரும் பரிசிலாக நல்கிய மன்னர்கள் பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு பெருவேள்விகள் பலவற்றைச் செய்தார்கள். வேட்பித்த பார்ப்பார்க்கு நீர்வளம் மிக்க நிலங்களையும் பொன்னையும் தானமாக வழங்கினார்கள். இதனை,

"ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து"

என்று அவ்வையார் புகழ்ந்து பாடினார்.

பார்ப்பார்க்கு அரசர்கள் வழங்கிய நிலக்கொடையின் மிகுதி குறித்து,

"கைபெய்த நீர் கடற்பரப்பவும்

ஆமிருந்த அடை நல்கி"

(பார்ப்பார்க்குக் கொடுக்குங்கால் அரசர்கள் அவர்கள் கையிற் பெய்த நீர் கடல்வரை பரவிச்செல்லுமாறு நீர்வளம்மிக்க மருதநிலத்து ஊர்களை தானமாக வழங்கினார்கள்) என்று புலவர் சிறுவெண்டேரையார் புகழ்ந்து பாடினார்.

பார்ப்பாரைக் கொண்டு யாகங்கள் நிகழ்த்திய அரசர்களில் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, கரிகாற்பெருவளத்தான், ராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி,தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

செம்மண் நிலத்தைத் திருத்தி உழுது பண்படுத்தி ஆண்டைகள் பயறு விதைத்திருந்தனர். பயற்றஞ்செடிகள் செழித்து வளர்ந்து பசுமையாகக் காட்சியளித்தன. பசு ஒன்று அந்நிலத்தில் புகுந்து செடிகள் சிலவற்றை மேய்ந்துவிட்டது. அதனால் சினமுற்ற நிலவுடைமையாளரான ஆண்டைகள் பசுவின் உடைமையாளனான முதியவனின் கண்ணைக் குருடாக்கி ஒறுத்தனர்.

``முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்

பகடு பல பூண்ட உழவுறுசெஞ்செய்

இடுமுறை நிரப்பிய அருவினை கலித்துப்

பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென

வாய்மொழித்தந்தையைக் கண்களைந்து அருளாது

ஊர்முதுகோசர் நவைத்த சிறுமை"

என்று அகநானூறு(262) கூறுகிறது. விளைநிலங்களில் விளைந்துள்ள பயிர்களை அழித்தல் ஒறுப்புக்குரிய குற்றமாக அந்நாளில் கருதப்பட்டது.

இங்கு, சீறூர் மக்கள் பாடுபட்டுத் திருத்திய நிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பும் நெல்லும் ஆகியவற்றை அரசர்கள் தேரைச் செலுத்திப் பாழாக்கினர். தீயிட்டு அழித்தனர். அரசனது ஏவலால் படைவீரர்கள் அவற்றைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். கொள்ளை கொண்டது போக எஞ்சியவற்றை எவர்க்கும் பயன்படாதவாறு அழித்தார்கள் என்று புலவர்கள் பாடினார்கள். இவ்அழிவுச் செயல்கள் அவர்களின் வீரத்துக்கும் வெற்றிக்கும் அடையாளமாகப் புலவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டது.

பயற்றஞ்செடிகளைப் பசு மேய்ந்ததற்காகப் பசுவின் உடைமையாளனைக் கண்ணைக் குருடாக்கி ஒறுத்த நிலையில், விளைச்சலைத் தீயிட்டு அழித்த அரசர்களின் இச்செயல் ஒறுப்புக்கு உரியதாகாதா? அவர்களை ஒறுப்பார் யார்? ஒறுத்தல் எங்ஙனம்? என்ற வினாக்கள் நம்முன் எழுகின்றன. புலவர் நெட்டிமையாரின் உள்ளத்திலும் இவ்வினாக்கள் எழுந்தன.

``பாணர் தாமரை மலையவும் புலவர்

பூநுதல் யானை புனைதேர் பண்ணவும்

அறனோ மற்றிது விறன்மாண்குடுமி

இன்னாவாகப் பிறர்மண் கொண்டு

இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே"

-புறநானூறு:12

(வெற்றி மாட்சிமைப்பட்ட குடுமியே, பிறமக்களுக்குப் பெருந்துன்பம் விளைவித்து அவர் மண்ணை நீ கைக்கொண்டாய். நினக்கு இனியவரான பாணர், புலவர் முதலான பரிசிலர்க்குப் பொற்றாமரை மலர்களையும் யானைகளையும் தேர்களையும் பரிசிலாக வழங்கினாய். நினது இச்செயல் அறமாகுமா?) என்று புலவரின் மனக்குமுறல் வினாவாக எழுந்து பாட்டாக வெளிப்பட்டது. போர்களுக்கு எதிரான குரலாக ஒலித்தது. ஆனாலும் "புலவர் வஞ்சப்புகழ்ச்சியாக அரசனைப் புகழ்கிறார்" என்றே உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக