17/04/2011

ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும் - துரை இளமுருகு

ஆதித்த கரிகாலன் என்ற ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான். அவன் சுந்தர சோழன் இறக்கும் முன்னரே கொலை செய்யப்பட்டு மாண்டுபோனான் என்பதை வரலாற்று ஆசிரியர்களான் கே.கே. பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், கெ.ஏ.நீலகணட சாஸ்திரிகள் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டு தங்களது வரலாற்று நூலகளை எழுதியுள்ளனர். ஆனால் திருவாலாங்காட்டு செப்பேடுகள் அந்த உண்மையை மறைத்து உள்ளன.

மேற்சொன்ன நூலாசிரியர்களும் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதைப் பற்றித் தெளிவாக எழுதவில்லை. கே.கே.பிள்ளை ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகன் மனம் நொந்து தில்லை சென்று இறந்து போனான்; அதனால் பொன்முற்றத்து துஞ்சிய சோழன் அல்லது குளமுற்றத்து துஞ்சிய சோழன் என்று பெயர் பெற்றான் என்று எழுதி முடித்துக் கொள்ளுவார் [காண்க மேலது] சதாசிவப் பண்டாரத்தார் இன்னும் சற்று விரிவாக "அந்த கொலைப்பழியை மதுராந்தகன் மேல் சிலர் சுமத்துவர் ஆயின் அதற்கு தக்க சான்றுகள் இல்லை. மேலும் ராச ராச சோழன் தன்னுடைய அண்ணைக் கொன்ற மதுராந்தகன் இடத்தில் எப்படி அன்பு செலுத்தி இருப்பான்? ஆனால் ராச ராச சோழன் தன்னுடைய நாட்டு மக்கள் விரும்பியபோதும் தான் முடி சூடாமல் தன்னுடைய சிற்றப்பனுக்கு [மதுராந்தகத் தேவனுக்கு] விட்டுக் கொடுத்திருப்பானா?" என்ற வினாவை எழுப்புகிறார்.

இவ்வாறு எதிர்க் கேள்வியின் மூலம் ஆதித்த கரிகாலன் கொலையைப் பற்றி முடித்துவிடுகிறார். நமது ஆய்விற்கு இது போதாது. கெ.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் தமது நூலில் உடையார்குடி கல்வெட்டுகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார். அதை வைத்து கொலையாளிகள் யார் என்பதையும் அவர்களை ராச ராச சோழன் சரியாக தண்டனை கொடுக்காமல் தப்பிக்கவிட்டு விட்டான் என்ற நோக்கிலும் அவர் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்பது ஆகும். கொலையாளிகள் யார் என்பதை வீர நாராயண நல்லூர் சதுர்வேதி மங்கலம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட [தற்போது காட்டு மன்னார்கோவில் அருகில் உள்ள உடையாளூர்] ஊரைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஆகும். இவர்களுடன் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சில பார்ப்பனர்களும் கூடி ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசனைக் கொன்றுவிட்டனர்.

பட்டத்து இளவரசன் என்பது அரசனுக்கு மிக அணுக்கமான அதிகார மையமாகும். முப்படைகளின் தலைவன் அவனேயாகும். அவன் தனியாக ஆட்சி செய்வதற்கு என்று ஒரு பகுதியை அரசன் ஒதுக்கியும் கொடுக்கலாம். பொதுவாக இளவரசுப் பட்டம் கட்டும்போது அவனுக்கு மணம் முடித்திருப்பார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் அவ்வாறு மணம் முடித்ததாகத் தெரியவில்லை.

அரசியலில் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னனின் ஆதரவை பெற்றுத்தரும். அது போல மற்ற குறுநில மன்னர்களின் எதிர்ப்பையும் பெற்றுத்தரலாம். ஆனால் இந்த வாய்ப்பு ஆதித்த கரிகாலனுக்கு இல்லை. எனவே அவன் கொலை செய்யப்பட்டதைக் குறித்து யாரும் கவலைப்படாமல் இருந்ததிருக்கக் கூடும். அவனுடைய நண்பனாகக் கல்வெட்டுகளிலும் கல்கி ரா .கிருட்டிணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்திலும் குறிக்கப்பட்டுள்ளவன் பார்த்திபேந்திர பல்லவன் என்னும் குறுநில மன்னனாகும். இவன் பல்லவ குலத்தைச் சேர்ந்தவன். தொண்டை மணடலத்தை ஆண்டவன். அங்குள்ள பல கோவில்களுக்கு கொடை அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இவனுக்கும் வீரபாண்டிய தலைகொண்டவன் என்ற பட்டபெயரும் குறிக்கப்பெறுவதால் இவனும் சேவூர் போரில் பங்கெடுத்திருப்பான் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

ஆதித்த கரிகாலனைப் பற்றிய செய்திகளில் இரண்டு செய்திகள் உற்று கவனிக்கத்தக்கன.

1.கொலைக்கான காரணம் .

2. கொலையின் பயன் யாருக்குப் போய்ச் சேருகிறது?

கொலையாளிகளின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளது .

# 1 சோமன் ''''''

2 இவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன்

2 இவன் தம்பி பரமேசவ்ரன் ஆனா இருமுடிச் சோழ பிரும்மாதி ராஜனும்

3 இவரகள் உடன் பிறந்த மலையனூரானும் [ இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்]

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும்

4 ராமத்ததம் பேரப்பன் மாரும்

5 இவர்களுக்கு பிள்ளைக் கொடுதத மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும்

6 இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக #

இவ்வனைவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என்று உடையாளூர்க் கல்வெட்டு கூறுகிறது.. இவர்களுடைய நிலத்தைப் பறிமுதல் செய்துவிடுமாறு ராச ராச சோழன் முன்பு உத்திரவு இட்டதை இந்த கல்வெட்டு சுட்டுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு (வெண்ணையூருடையார் பரதன் என்னும் விஜய மல்லன் என்பவன்)115 பொன்னுக்கு வாங்கி அதை திருவனந்தீஸ்வரர் பட்டாரகர் கோவில் சிவப் பிராம்மணர்களுக்கு உணவு கொடுப்பதற்கு உரிய தானமாக வழங்கினான் என்பதே இந்த கல்வெட்டு கூறும் நேரிடைச் செய்தியாகும். இந்த கல்வெட்டு ஒன்றில்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி காணப்படுவதால் இதை இன்னும் சிறிது உற்று நோக்குவது கட்டாயமாகும்.

1 திரு குடவாயில் பாலசுப்ரமணியன் என்ற ஆய்வாளர் இந்த கல்வெட்டு கூறும் நேரிடையான செய்திகளை மட்டும் கணக்கில் கொண்டு உடையார்க்குடி கல்வெட்டு ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் ஒரு சிறு நூலினை எழுதியுள்ளார். அதைக் கொண்டு அவர் கல்வெட்டில் கூறாத செய்திகளையும் கூறி இந்த கல்வெட்டை கொண்டு ராச ராச சோழன் தன் தமையனாகிய ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை முறையாகத் தண்டிக்கவில்லை என்ற கூற்றை மறுக்கவும் செய்கிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் கொலையாளிகள் உடனே தப்பிச் சென்று இருப்பார்கள். அதனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பதில் அவர்களுடைய நிலத்தை ராச ராச சோழன் பறிமுதல் செய்தான் [இந்த செய்தி கல்வெட்டில் ஒருவாறு கூறப்பட்டிருக்கிறது] அந்த நிலம் ஊர் சபையின் நிர்வாகத்தில் இருந்ததது. பிறகு அதை ஒரு தனி மனிதர் வாங்கி சிவப் பார்ப்பனர்களுக்கு உணவு கொடுப்பதற்காக கோவிலுக்கு அளித்தார் என்று முடிக்கிறார். அத்துடன் விட்டிருந்தால் சரி. சேவூர் என்ற இடத்தில் நடந்த கடும் சண்டைக்குப்பிறகு ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் தலையைக் கொய்து குச்சியில் நட்டு நகர்வீதி வலம் வந்ததாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குடவாயில் பால சுப்பிரமணியன் இதைப்பற்றி எழுதும்போது “இது போர் விதிகளுக்கு முரண்பட்டது. இத்தகைய அறங்கொன்ற செய்கைக்கு பழிவாங்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை சேர்ந்த சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டான் என்று எழுதுகிறார். ஏதோ மற்ற அரசர்கள் தங்களுடைய போர்களில் நீதி தவறாமல் நடந்து கொண்டதுபோலவும் ஆதித்த கரிகாலன் விதிவிலக்கு போலவும் நமக்கு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் போர் என்பதே கொடுமையான ஒன்றுதான். எல்லா மன்னர்களும் தங்களது போர்களில் அரசர்களைக் கொல்வதுடன் மட்டுமின்றி பொதுமக்களையும் துயர்படுத்தியே வந்திருக்கின்றனர். சங்ககாலத்தில் மன்னர்கள் தாங்கள் வென்ற மன்னர்களின் பற்களைப் பிடுங்கி அதை தங்கள் அரண்மனைக் கதவுகளில் பதித்து வைத்திருந்தனர் என்ற செய்திகள் காணப்படுகின்றன.

சத்யாசிரியன் என்ற மேலைச் சாளுக்கிய மன்னன் நாட்டின் மீது படையெடுத்த ராச ராச சோழன் அந்த நாட்டில் செய்த கொடுமைகளை வேங்கி நாட்டுக் கல்வெட்டில் காணலாம். எனவே ஆதித்த கரிகாலன் எல்லை மீறி நடந்தான்; அதனால் பழி வாங்கும் நோக்கத்துடன் அவன் கொல்லப்பட்டான் என்பது சரியல்ல. எதற்காக கொல்லப்பட்டிருந்தாலும் கொலைகாரர்களை மதுராந்தகன் தன்னுடைய ஆட்சிக் காலமாகிய 15 வருடங்களும் பிடிக்கவில்லை. ராச ராச சோழன் தன்னுடைய ஆட்சிக் காலதிலும் பிடிக்கவில்லை. அவர்கள் உறவினர்கள் நிலங்களை மட்டும் பறித்துக் கொண்டான். அவ்வாறு நிலங்களைப் பறித்துக் கொண்டபோது அவர்கள் சோழ நாட்டில் இருந்தனரா அல்லது வேறு நாட்டிற்கு ஓடி விட்டனரா என்பதைப்பற்றி இக்கல்வெட்டு ஒரு சொல்லும் சுட்டவில்லை.

அப்படி இருக்க அவர்கள் சோழ நாட்டில் இருந்திருக்கமாட்டார்கள்; தப்பி சேர நாட்டுக்கு சென்று ஒளிந்து கொண்டிருப்பார்கள் என்று வலிந்து பொருள் கொள்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். பாண்டிய நாடு என்று சொல்லவில்லை ஏன்? அப்போது பாண்டிய நாடும் சோழ ஆட்சியில் கீழ் தான் இருந்தது. இவ்வளவு வலிந்து பொருள் கொள்ளக் காரணம் ராச ராச சோழன் தவறு செய்யவில்லை என்பதை காட்டுவதற்கே ஆகும்.

இனி அவர்கள் பார்ப்பனர் என்பதற்காக ராச ராச சோழன் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. கொன்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. அவர்களில் பாண்டியன் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர். மீதிப்பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பாண்டிய மன்னன் தலையைக் கொய்ததற்கு சோழ நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஏன் சினம் கொள்ளவேண்டும்? பார்ப்பனர்களுக்கு நாட்டுபற்றை விட சாதிப்பற்று அதிகம் என்பது இங்கு தெரியவரும் மற்றுமொரு செய்தியாகும்.  அது செல்க.

மேலும் நமக்கு சில தகவல்களையும் அருளிச் செல்லுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். அக்காலத்தில் பார்ப்பனர்கள் [பிராமணர்கள் என்ற சொல்லைத்தான் அவர் பயன்படுத்தி உள்ளார்] வாளெடுத்து போர் புரிந்தனர். போர்களில் பார்பபனர்களும் கொல்லப்பட்டனர் என்பதுதான் அது! நன்றி அய்யா! உங்களது செய்திகளுக்கு நன்றி! பார்ப்பனர்கள் போர் புரியும் திறம் படைத்தவர்கள் என்பதை நாங்களும் அறிவோம். நந்த மரபைச் சேர்ந்த மன்னர்களையும் போர்வீரர்களையும் அவர்கள் உறங்கும்போதும் கொன்றவன் புஸ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் தான் என்பதையும் அறிவோம்.

கிருஸ்னன் ராமன் என்ற மும்முடிச்சோழன் பிரும்மாதிராஜன் ராச ராச சோழன் படைத்தலைவன் என்ற உண்மையை அருள் கூர்ந்து தமிழ்த் தேசியர்களுக்கு சொல்லவும். அவர்கள்தான் ராச ராச சோழன் பார்ப்பனர்களை தன்னிடம் நெருங்கவே விடவில்லை என்று நமக்கு பாலர் பாடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது சிக்கல் போரில் பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனரா இல்லையா என்பது அல்ல. ஆதித்தகரிகாலனைக் கொன்ற பார்ப்பனர்களை ராச ராச சோழன் தண்டிக்காமல் விட்டு விட்டான் என்பதே. மனுநீதி கூட கொலை, திட்டமிட்ட கொலை புரியும் பர்ப்பனர்களுக்கு மரணதண்டனை வழங்கலாம் என்றுதான் கூறுகிறது. ராச ராச சோழன் மனு நீதியையும் விஞ்சிய பார்ப்பன அடிமை என்பதே எமது முடிவு. அதைத்தான் இந்த செய்தியும் உறுதி செய்கிறது.

கல்வெட்டுகள் கூறாத செய்திகளிலிருந்து திரு குடவாயில் பாலசுப்ரமணியன் சில முடிவுகளை செய்தது போலவே நாமும் சிலமுடிவுகளை செய்யவேன்டி இருக்கிறது. ஏன் வேறு சான்றுகள் இல்லை .

ராச ராச சோழன் ஒரு பேரரசன் தன்முனைப்பும் தான் என்ற கர்வமும் மிக்கவன். தன்னுடைய ஆட்சிக் காலதில் நடந்த செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிவு செய்தவன். தனக்கென்று ஒரு மெய்க் கீர்த்தியை ஏற்படுத்தி தன்னுடைய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்தவன். பதிவு என்றால் அப்படி இப்படி இல்லை. ஒரு சிறிய தகவல் கூட விட்டு விடாதபடிக்கு மிகக் கவனமாக பதிவு செய்தவன். ஒரு எடுத்துக்காட்டு காண்போம் .

தன்னுடைய பெரியகோவிலில் தேவரடியாளர்களாகக் கொண்டு வந்த பெண்டுகளின் பெயர்கள், அவர்கள் எந்த ஊரில் இருந்து வந்தனர் என்பதை எல்லாம் ஒரு தகவல் கூட தவறாமல் பதிவு செய்தவன். ஒரே ஊரில் இருந்து இரு பெண்கள் கொண்டு வரப்பட்டிருந்தால் எ.க திருவடி என்ற பெயருடைய இருபெண்கள் ஒரே ஊரில் இருந்து கொண்டுவரப் பட்டனர் எனவே அவர்களை தனித் தனியாக அடையாளம் பிரிப்பதற்காக ஒருத்திக்கு பெரிய திருவடி. மற்றவளுக்கு சிறிய திருவடி என்று வேறுபடுத்தி தளிச்சேரி கல்வெட்டில் பதிவு செய்தவன். தான் செய்த சிலைகளின் உயரம் எடை இவற்றை மிக நுணுக்கமாகப் பதிவு செய்தவன்.

கல்வெட்டுகளைப் பதிவு செய்வதற்காகவே பெரிய கோவிலைக் கட்டினானோ என அய்யுறும் விதமாக அக்கோவிலின் விமானம் தொடங்கி திருச்சுற்றுவரை [வெளி சுவர்] வரை எழுத்துக்களைப் பொறித்தவன். யாருடைய தானம் எங்கு பொறிக்கப்படவேண்டும் என்று முறைசெய்தவன்; அப்படிப்பட்ட ராச ராச சோழன் தன்னுடைய கல்வெட்டு ஒன்றில் கூட தமையன் ஆகிய ஆதித்த கரிகாலனைப் பற்றிக் குறிக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த உண்மை நம்மை மேலும் பல உண்மைகளை ஊகிக்கத் தூண்டுகிறது. சதாசிவப் பண்டாரத்தார், குடவாயில் பாலசுபிரமணியன் போன்றோர் (இவர்களுக்குப் பின் தற்போது நடன காசிநாதன்) ராச ராச சோழனைக் கொலை சதியில் இருந்து தப்புவிக்க முயல்கின்றனர். அவர்களுடைய வாதத்தை பின் வருமாறு கூறலாம்.

ராச ராச சோழன் தன்னுடைய தமக்கை [அக்கா] ஆகிய குந்தவையிடம் மிக்க அன்பு கொண்டிருந்தவன். அதுபோன்றே தன்னுடைய சிற்றப்பன் ஆகிய மதுராந்தக உத்தம சோழனிடம் மிக்க அன்பு கொண்டிருந்தான். மதுராந்தக உத்தம சோழன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுடன் தொடர்பு உடையவனாக இருந்தால் ராச ராச சோழன் அவனிடம் அன்பு செலுத்தியிருப்பானா?

நம்முடைய வாதம் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுடன் மதுராந்தக உத்தம சோழன், ராச ராச சோழன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்தது. அதனால் தான் இருவரும் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விட்டு விட்டனர். தமயன் கொலை செய்யப்பட்டவுடன் தம்பியாகிய ராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டால் அது மக்கள் மத்தியில் பல அய்யங்களை உண்டாக்கும். ராச ராச சோழனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாகும். எனவே தான் சோழ மணிமகுடத்தை மதுராந்தக உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுத்தான். அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தான். ஒன்று தன்னுடைய நற்பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படாது காத்துக் கொண்டான் . இரண்டாவது, இது கவனிக்கத்தக்கது, மதுராந்தக உத்தம சோழனுக்குப் பிறகு தான் ஆட்சிக்கு வரும்படியாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். அதன்படி மதுராந்தக உத்தம சோழன் ஆட்சிக்குப்பின்னர் ராச ராச சோழன் பதவி ஏற்கும் வண்ணம் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டப்பட்டது.

தமையன் கொலைக்குப் பிறகு துக்கத்தில் மூழ்கிப் போயிருந்த காரணத்தால் ராச ராச சோழன் மணிமகுடத்தை மறுத்துவிட்டான் என்று கூறுபவர்கள் இந்த செய்தியை கவனத்தில் கொள்ளவேண்டும். அரச பதவியை மறுதலித்தவன் இளவரசுப் பதவியை மறுதலிக்கவில்லை. என்வே இவை எல்லாம் திட்டமிட்டு நடிக்கப்பட்ட நாடகம். இந்த நாடக அரங்கேற்றத்திற்கு உடையார்குடி பார்ப்பனர்கள் உதவியுடன் ஆதித்த கரிகாலனைக் கொல்வது முக்கியமான கட்டமாகும். அதில் உதவிய பார்ப்பனர்களை மதுராந்தக உத்தம சோழனோ அல்லது ராச ராச சோழனோ எவ்விதம் தண்டிக்க இயலும்? இதுவே அவர்கள் தண்டிக்காமல் விடப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். மேலும் கொலையாளிகள் பார்ப்பனர்கள். எனவே அவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தினால் அரசனுக்கு ப்ரம்மஹத்தி தோஸம் உண்டாகுமென்று மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கும் நல்ல வாய்ப்பு. இந்த காரணத்தால் தான் தன்னுடைய எந்த கல்வெட்டிலும் ராச ராச சோழன் ஆதித்த கரிகாலனைப் பற்றி குறிப்பிடவில்லை.

அவன் மட்டுமன்று அவனுக்குப்பின்னர் வந்த எந்த சோழ மன்னனும் அவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மதுராந்தக உத்தம சோழன் கலி இருள் நீங்கும்படி ஆட்சி செலுத்தி மறைந்தவுடன் ராச ராச சோழன் மணி முடி சூடிக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. அப்பொழுது . மதுராந்தக உத்தம சோழனின் மகன் வயதுக்கு வந்தவனாய் இருந்தான். எனவே அவனை தன்னுடைய அமைச்சரவையில் ஒரு முக்கிய பொறுப்பு கொடுத்து மகிழ்வித்தான் .

இவ்வாறாக சைவப் புலி, சிவபாத சேகரன் என்றெல்லாம் புகழப்படும் ராச ராச சோழன் சோழநாட்டின் ஆட்சி அவனுக்கு உரியதாக இருந்தும் அதை தன்னுடைய சிற்றப்பனுக்கு விட்டுக் கொடுத்த தியாகச் செம்மல்; இவ்வாறு எல்லாம் புகழப்படும் ராச ராச சோழன் ஒரு அரசியல் சாணக்கியன். சுந்தரசோழனின் இரண்டாவது மகனாகப் பிறந்தும் தனக்கு எவ்விதத்திலும் உரிமை இல்லாத சோழ நாட்டு மகுடத்தை சூதால் கைப்பற்றியவன் என்பது நமது கருத்து ஆகும். இதற்கு பார்ப்பனர்கள் மிகவும் உதவியாக இருந்திருத்தல் வேண்டும். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அவன் பார்ப்பனர்களுக்கு பல கொடைகளை வழங்கினான். அவர்கள் மனம் கோணாதபடி தன்னுடைய ஆட்சியைச் செலுத்தினான். ஆதித்த கரிகாலன் பெயரை வரலாற்று ஆவணங்களில் பதிவு பெற்றுவிடாதபடி பார்த்துக்கொண்டான்.

அவனுடைய காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட திருவாலங்காட்டு செப்பேடுகள் ஆதித்த கரிகாலன் மரணத்தைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறுவதற்கும் இதுவே காரணமாகும். இந்த கொலையினால் ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவே பிற்காலத்தில் இறைத்தொண்டில் ஈடுபட்டு தஞ்சை பெரியகோவிலைக் கட்டினான். மரபுப்படி சோழ மன்னர்கள் தில்லையில் முடிசூடிக் கொள்ளுவதே வழக்கமாகும். ஆனால் ராச ராச சோழன் முடிசூட்டு விழா அப்படி நடக்கவில்லை. தில்லை வாழ் பார்ப்பனர்களுக்கும் அவனுக்குமிடையில் சிறிது உரசல் இருந்ததாகத் தெரிகிறது. தில்லைக் கோவிலுக்கு எவ்விதகொடையும் அளிக்காத சோழ மன்னன் ராச ராச சோழனாகத்தான் இருக்கமுடியும். தில்லைக்குப் போட்டியாக தஞ்சை ராஜராஜேஸ்வரத்துப் பெரியகற்றளியை கட்டி முடிக்க நினைத்தான். அதில் ஒர் அளவிற்கு வெற்றியும் பெற்றான். ஆனால் சிவ மதத்தில் இக் கோவில் சிறப்பிடத்தைப் பெற முடியவில்லை. கட்டிடக் கலையில் பெற்ற சிறப்பை அது மத அளவில் பெறமுடியவில்லை.

1 பிற்காலசோழர் வரலாறு சதாசிவப்பண்டாரத்தார் ராமையா பதிப்பகம் சென்னை

பாகம் 1 பக்கம் 84 -85

2 கே .கே பிள்ளை

3 குடவாயில் பாலசுப்ரமணியம். வரலாறு காம் இதழ் 2425 , 26 உடையார்க்குடி கல்வெட்டுகள் ஒரு மீள் பார்வை. இணையதளம் www. varalaru .com

4 நடன காசி நாதன் கீற்று இணையதளம் www. keetru .com

5 கே.ஏ நிலகணட் சாஸ்த்ரி THE CHOLAS
6 திருவாலாங்காட்டு செப்பெடுகள்south indian inscriptions XVI.- Inscriptions of Parakesarivarman (Aditya II Karikala) who took the head of Vira-Pandya or the Pandya (King)
# குறியிடப்பட்டவை கல்வெட்டுகளில் காணப்படும் வரிகள். அவைகளில் இருக்கும் பிழைகளை திருத்தும் உரிமை நமக்கு இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக