இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வகைகளுள் தனித்தன்மையோடு ஆளுமை பெற்று விளங்குவன புதுக்கவிதைகள் எனலாம். நுட்பமான கருத்துக்களைச் சுருக்கமாகவும், செறிவாகவும் வெளிப்படுத்தும் தன்மையில் புதுக்கவிதை சிறக்கிறது எனக் கருதலாம். அதாவது பொருள் ஆழமுடையது புதுக்கவிதை என்றும் கூற இடமுண்டு. அவ்வகையில் கவிஞர் அப்துல்ரகுமானின் பித்தன் கவிதைத் தொகுப்பானது முரண் என்ற உத்திவழி பொருள் வெளிப்பாட்டைத் தருவதாகும். முரண் உத்திவழி அமையும் பொருள் வெளிப்பாட்டில் நடப்பியல் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
நடப்பியல்:-
நடப்பியல் என்பதை நடைமுறையியல் எனலாம். அதாவது இன்றைய உலக இயக்கம் (அ) சமூக இயக்கத்தின் வெளிப்பாடே நடப்பியல். பொதுவாக உலக இயக்கத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை முரண்களே. அதாவது இரவு - பகல், ஆண் - பெண், பிறப்பு - இறப்பு என்று ஒன்றுக்கொன்று முரணான இரண்டால் தான் உலக இயக்கம் நடைபெறுகிறது. இத்தகு நடப்பியலை முரண் உத்தியை ஆதாரமாகக் கொண்டு அமையும் பித்தன் கவிதைகளில் காண்பது இங்கு பொருத்தமாகிறது.
பண்படா மனமும் பண்பாட்டு முரணும்:-
ஆடை என்ற கவிதையில் சட்டையைக் கிழித்துக் கொண்டிருக்கும் பித்தன், உங்கள் ஆடை கள்ளமின்மைக்குப் போர்த்திய சவக்கொடி என்று ஆடையை இகழ்கிறான். இதனை நடப்பியலாகக் காணும்போது இன்றைய நாகரிக மாற்றத்தினால் விழைந்த குறைபாட்டைக் காணமுடிகின்றது. அதாவது ஆதிகால மனிதனாய் நிர்வாணமாகவும், இலை தழைகளை அணிந்துகொண்டிருந்த காலத்திலும் நமது பார்வைக்குத் தெரியாத ஆபாசம், ஆடை அணிந்து கொண்டபின் நமது பார்வைக்குத் தெரிகிறது. ஆடை அணியாதபோது இருந்த அந்தக் கள்ளங்கபடமற்ற மனம் பிற்காலத்தில் சலனப்பட்டுப்போனது. இதனால்தான் பித்தன் உங்கள் ஆடை கள்ளமின்மைக்குப் போர்த்திய சவக்கொடி என்கிறான். அதாவது உடலை மறைக்க வேண்டிய நமது ஆடை வெளிக்காட்டுவதாக விளங்குவதே இன்றைய நிலையாக விளங்குகிறது எனலாம்.
இச்செய்தியினை இசுலாம் மதத்தின் நபிமொழிகள் என்னும் நூல்வாயிலாகவும் அறியமுடிகின்றது. எண்ணற்ற ஆண்டுகள் பழமையான இந்நூலில் பிற்காலத்தில் உலக அழிவிற்கான காரணங்களாகப் பலவற்றைக் குறிப்பிடுகையில், பிற்காலத்திய மக்கள் இறுக்கமான ஆடைகளோடு நிர்வாணமாகத் திரிவார்கள் என்பதாகக் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி பித்தனின் கூற்றோடு ஒப்புநோக்கத்தக்கது.
தேங்கிய நீர் பாசியையும், அணைந்த நெருப்பு சாம்பலையும் உடுத்திக்கொள்ளும். அதுபோலத்தான் மனிதன் ஆடை உடுத்துகிறான் என்பது பித்தனின் கூற்றாகிறது. இதிலிருந்து நீரோட்டம் தடைப்படும்பொழுது பாசி தோன்றுகிறது. நெருப்பின் இயக்கம் நிறைவுறுகையில் சாம்பல் தோன்றுகிறது. நம் மன ஓட்டம் சீராக ஓடாது தடைப்படும்போதுதான் சலனம் தோன்றுவதும், பார்வை நிர்வாணத்தை நாடுவதும் என்பதாக விளக்கம் பெற முடிகிறது.
கொள்கையும், கொள்கையின்மையும்:-
அறிக்கை என்ற கவிதையில் பித்தனை நோக்கி உன் கொள்கை என்ன என்று கவிஞர் கேட்க அவனோ கொள்கையின்மையே தன் கொள்கை என்கிறான். ஒரு குறிப்பிட்ட கொள்கைக்குள் அடங்குபவன் கூண்டின் கூரையையே வானமென்று வாதாடும் கூண்டிற் பறவையாகிவிடுகிறான். ஓர் உரையை மட்டும் ஏற்பவன் உண்மையின் பல பரிமாணங்களைக் காணாமல் போய்விடுகிறான் என்பதாகக் கூறும் பித்தன்,
மதவாதி
என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது
என்கிறான்
இது மதக்கோட்பாட்டின் உண்மையை வெளிக்கொணர்வனவாக அமைகின்றது. அதாவது இறைவன் என்பவன் ஒருவனே. அவன் மதத்தின் பெயரால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படலாம். இதை உணராமல் மதத்தை மட்டும் பின்பற்றும் மதவாதிதான் என் மதத்தார் பின்பற்றும், என் மதம் வழிபடும் இறைவனே இறைவன் என்று இறைவனுக்கும் வரையறை செய்வான்.
அதனால்தான் தன்னை ஒரு தேனீ என்று சொல்லும் பித்தன் பூக்களின் வேறுபாடுகளைத் தேனீ இலட்சியம் செய்வதில்லை. எல்லாப் பூக்களிலும் தேன் உண்டு என்பதும், தேன் என்பது ஒன்றுதான் என்பதும் தேனீக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்வதில், இறைவன் ஒருவனே என்பதைப் பித்தன் உணர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. எனவே பூக்களாய் வேறுபடாமல் தேனாய் ஒன்றுபடுங்கள் என்பது, மதங்களால் வேறுபடாமல் இறைவனால் ஒன்றுபடுங்கள் என்ற சிந்தனைக்கு வழியமைக்கிறது.
ஒருமைப்பாடு முரண்:-
சிதறு தேங்காய் என்ற கவிதையில் சிதறு தேங்காய் உடைக்கப்பட அதனைப் பொறுக்க விழையும் ஒருவனைத் தடுக்கும் பித்தனின் கூற்றுக்கள் இடம்பெறுகின்றன. உடைந்து கிடப்பவர்கள் நாம்தான் நம்மைத்தான் நாம் பொறுக்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று கூறும் பித்தன்,
வீட்டிலும் வெளியிலும்
நீங்கள் / சிதறிக் கிடப்பதை
அறியவில்லையா?
மனமும்
வயிறும் உடைக்க
நீங்கள் ஒருவரே
இக்கூற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் குடும்பம் என்ற நிலையில் ஒருவராகவும் அதனைத்தாண்டிச் சமூகம் என்ற வெளியில் மற்றொருவராகவும் விளங்குகின்றோம் என்பதை அறிகிறோம். இங்கு மனத்திற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வயிற்றுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மனத்தால் உடைக்கப்படுவது என்பது ஏற்கவேண்டிய ஒன்றைச் சூழ்நிலையின் காரணமாக ஒதுக்கிவிடுவது. வயிற்றால் உடைக்கப்படுவது என்பது பசிக்கொடுமை காரணமாக நாம் சிலவற்றைச் செய்துவிடுவது எனலாம்.
படிப்பறிவும், பட்டறிவும்:-
புத்தகம் என்ற கவிதையில் மழைக்காகப் பள்ளியில் ஒதுங்கிய பித்தன் புத்தகங்களைப் பார்த்து,
புத்தகங்களே
சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள் என்கிறான்
இதில் முரணைக் காணலாம். பித்தன் இவ்வாறு கூறக் காரணம் இன்றைய கல்வியானது வேலையில்லாப் பட்டதாரிகளைப் பெருமளவு உருவாக்குவதும், தொழில் தருவனவாக இல்லை என்பதும் தெரிகிறது. உலகில் நடைபோடத் தேவையானது இந்த ஏட்டுக்கல்வியைக் காட்டிலும் அனுபவக் கல்வியே என்பது பித்தனின் கருத்தாகிறது.
அதனால்தான் பித்தன்,
காகித ஓடங்களை
நம்பி இருப்பவர்களே
நீங்கள் எப்படி
அக்கரை போய்ச் சேருவீர்கள்? என்கிறான்
முடிவாக:-
இன்றைய சமூகத்தில் நாகரிகத்தின் மாற்றமென்று நாம் இறுக்கமான ஆடைகளோடு திரியும் நிலையும், மதங்களின் பெயரால் மனிதம் மறைந்து கிடக்கும் நிலையும், ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் குடும்பம், சமூகம் என்ற இரண்டு நிலைகளுக்கு ஏற்பக் காணப்படும் இரட்டைநிலையும் ஏட்டுக் கல்வியைக் காட்டிலும் அனுபவக் கல்வியே உலகில் நடைபோடப் பெரிதும் உதவுகிறது என்பன போன்ற நடப்பு நிகழ்வுகள் கட்டுரையின் வழி வெளிப்படும் முடிவுகளாகின்றன.
நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக