13/03/2011

தமிழ் நவீன நாடகங்களில் - நடப்பியல் - பா. குமார்

முன்னுரை:-

மேலை நாட்டார் நமக்குத் தந்த இலக்கிய கொடை ''நவீன இலக்கியம் - ''நவீனம்'' என்ற சொல் பழமையின் நிராகரிப்பு என்று பொருள் கொள்ளாமல், புதிய சமூக மாற்றத்திற்கான புதிய கூறுகளின் தோற்றம். பழைய கூறுகளின் உதிர்வு என்று பொருள் கொள்ள வேண்டும். இது காலத்தின் சிருஷ்டி, கலை இலக்கிங்கள் அனைத்துமே அவ்வக்கால வாழ்வின் சித்தரிப்புக்கள் என்பதால் நாடகமும் அது தோன்றும் கால வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும் என் நவீன நாடக ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.

அவர்கள் வாழ்வின் போலித்தனங்களையும், அதீத கற்பனைகளையும் வெறுப்பது, அவற்றை மேடையேற்றுவது, அவற்றை பார்வையாளருக்கு உணர்த்திக் காட்டுவது. இம்முயற்சியில் உறுதியாக இருக்கின்றார்கள். நாடகத்திற்கு மேடை, ஒப்பனை, வண்ணவிளக்குகள், காட்சி நிர்மாணம், மேடைப் பொருட்கள் போன்ற அவசியமற்ற ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை.

நடப்பியல்:-

நடப்பியல் இயக்கம் இலக்கியத்தை மரபாகிய அடிமைத்தளையின்றும் விடுவிப்பதற்காகத் தோன்றியது. அன்றாட வாழ்க்கை அனுபவங்களை விளக்கி, இயற்கைத் தன்மையை வலியுறுத்துகின்றது என்பர். (1.142) நடப்பியல் படைப்பில் மிகை நவிற்சி அளவாகவே பயன்படுத்தப்படும். ஏதாவது ஒரு உணர்ச்சியையோ, பாத்திரத்தின் தன்மையையோ, அழுத்தமாகப் பதியவைக்க இந்த உத்தி பயன்படுத்தப்படும்.

சோசலிச நடப்பியல்

தனிமனித உணர்வு மாற்றங்களைச் சித்தரிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தை மாற்றவல்ல, சமுதாய உணர்வு மாற்றங்களைச் சித்தரிப்பது சோசலிச நடப்பியலின் தொடக்கம். நடப்பியல் உலகைச் சித்தரிப்பதற்கு நிகழ்காலத்தில் காலூன்றி நின்று உலகை நோக்க வேண்டும். வருங்கால வளர்ச்சியைக் காட்ட, மனித குலத்தின் கனவுகளில் இருந்தும் காட்சிகளில் இருந்தும், கலைக் கூறுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நடப்பியலை விட்டு விலகுவதாகவோ, கற்பனை உலகில் சஞ்சரிப்பதாகவோ எண்ணக் கூடாது

நடப்பியலும், குறிக்கோள் கலையும்

இவ்விரண்டும் கவிதை, நாடகம், காவியம், புதினம் முதலிய பல இலக்கிய வகைகளோடு தொடர்புடையன. கலைப்படைப்பின் இயல்பிற்கு ஏற்ற வண்ணம் இவை மிகுந்தோ, குறைந்தோ காணப்படும் என்கிறார் நா. பிச்சமுத்து.

நடப்பியலின் சிறப்புத்தன்மை என்று வரும்போது 1. சுவையாகப் படைக்க முயலுதல் 2. நடைமுறை வாழ்வின் பல பகுதிகளையும் சுவையாக்கிக் கொண்டு விளக்குதல் 3. நிகழ்கால நிலையைக் காட்டுதல் எனக்கூறலாம்.

தமிழ் நவீன நாடகங்களில் - நடப்பியல்

தமிழ்க்கலைகளை - தமிழ்மரபை - அந்தக் காலச் சமூக பொருளாதார பிண்ணனியில் புரிந்து கொண்டு, மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்பத் தமிழ் கலைகளை வளர்ப்பதும், அதை நவீனப்படுத்துவதுமான ஒரு பார்வை தமிழுக்குத் தேவைப்படுகின்றது. அது இன்று நவீன நாடகத்துறையில் உணரப்பட்டிருக்கின்றது.

நீதித்துறை விமர்சனம்

''ஞானி'' அவர்கள் எழுதிய ''பலூன்'' நாடகத்தில் நீதித்துறையில் ஏற்படும் முறையற்ற விசாரிப்புக்களை முன்வைத்து தன் கோபத்தை வெளிக்காட்டி இருக்கின்றார். ''வேலியே பயிரை மேய்ந்த கதையாக'' இதை கருத நேரிடுகிறது. மக்களின் அடிப்படை உரிமையைக் கோரும் போராட்டம் நடக்கின்றது. அதில் காவலரின் கட்டு மீறிய அடக்குமுறையால் கலவரத்தைத் தூண்டியவர்கள் இவர்களே என சிங்காரம், ரகு, சத்யன், ஆனந்தன், சபாபதி, உஷா ஆகியோர் நீதி மன்றத்திற்கு வரவழைக்கப்படுகின்றார்கள். இங்கு கேட்கப்படும் வினாக்களுக்கு நேரடியான விடைகளைத் தராமல் தங்கள் அத்துமீறிய கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் ஒரு சான்று.

அரசாங்க வக்கீல் - மேடம் நீங்க சிகரெட் பிடிக்கிறதுண்டா?

உஷா - நான் சாதாரண சிகரெட் பிடிக்கிறதில்ல. கஞ்சா போட்டுத்தான் பிடிப்பேன். அதுதான் என்கேரக்டர்....

ஜட்ஜ் - ஸ்டாப் தன் நான்சென்ஸ், பிஹோப் பிராப்பர்லி திஸ் இஸ் ய கோர்ட் ரூம்

உஷா - தென் வாட்? என் கேரக்டரையும் பிகேவியரையும் பத்தி இவர் என்ன எஸ்டா பிளிஸ் பண்ணப் போறார்? ஒரு சாதாரண பஸ்பேர் ஹைக்காக் கண்டிச்சு ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு வந்துட்டா, அதை உங்களால பொறுத்துக்க முடியல, இல்ல? ஒங்க வீட்டுப் பொண்ணு ஒங்க பேச்சை மீறிட்டமாதிரி பயம் வருது இல்ல, உங்க டாட்டர்சை மாதிரி நானும் பத்தினிதான். அவங்க வெளியில வரல. நான் வந்திருக்கேன்.

எனும் பகுதியில் நியாமும் தார்மீகக் கோபமும் வெளிப்படுகின்றது. சாதாரண மனித மனத்திற்குத் தோன்றும் நடைமுறையில் உள்ளதை உள்ளபடி காட்டும் சிந்தனைக் கலைக் கூறே நடப்பியல். இங்கு இயல்பான மனித மனக்கோபம் வெளிப்படுவதைக் காட்டியிருக்கின்றார்.

தனி மனிதக் கொடுமை

சென்னைக் கலைக்குழுவால் ''கண்ணகி'' என்னும் நாடகம் உருவாக்கப்பட்டது. உண்மைக் கதையை வைத்து எழுதப்பட்டது. இந் நாடகம் ஒரு காவல் நிலையத்தில், காவல் அதிகாரிகளாலேயே கற்பழிக்கப்பட்ட ஒரு அவலப் பெண்ணின் வாழ்க்கையையும், அதற்குப் பின் அவள் ஒரு புரட்சிப் பெண்ணாக மாறிய எழுச்சியையும், இந்நாடகம் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. நவீன அரசியலில் நவீன மனிதனுக்கு ஏற்படும் கொடுமைகள், சீர்கேடுகள், அவளின் அன்றாடப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இக்கலைக்குழு நாடகங்களைத் தயாரித்து சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றது.

அரசியல்

மக்கள் நலனைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தமக்குள் தாமே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, அரசியலை ஒரு பொழுதுபோக்காக்கி, அவரவர் வெற்றி தோல்விகளையே குறிக்கோளாகக் கொண்டு, அப்பாவி மக்களை ஓட்டுப் போடச் சொல்லி, அவர்களைப் பலிகடாக்களாக்கும் அரசியல் வாதிகளின் இயல்பினைச்சுட்டும் வகையில் ந. முத்துச்சாமி அவர்கள் ''நாற்காலிக்காரர்'' எனும் நாடகத்தில் கதைப்பொருளாக்கி இருக்கின்றார். ''சீட்டுக்கட்டு குழு ஒன்று, கோலிக்குண்டு குழு ஒன்று, இரு குழுவினரும் நட்பாகவும் பகையாகவும் ஆட்டம் ஆடுகின்றனர். ஆட்டங்கள் பின்னர் மாற்றிக் கொண்டே செல்கின்றனர். கோஷம் போடற ஆட்டம், வாழ்க - ஒழிக ஆட்டம் தொடர்கிறது. இதில் வெற்றி தோல்வி கண்டுபிடிக்க முயல்கிறார்கள். தொடர்கிறது இறுதியில் பறவை விளையாட்டு ஆடலாம் என முடிவாகிறது.

கூஜாவில் உள்ள குறைந்த அளவு தண்­ரில் கல்லைப்போட்டு தண்­ர் மேலெழும்புவதைக் காணும் ''காக்கை விளையாட்டு'' எட்டுத் திக்கும் சென்று முழுங்குகிறார்கள். கூழாங்கல்லைக் கொடுத்து விரும்பிய வண்ணம் போடச் செய்கிறார்கள். இறுதியில் ஒரு கல் இருக்கிறது அதனை நாற்காலிக்காரரைக் கொண்டு போடச் சொல்கின்றார்கள்.

''சீட்டுக் கட்டுக் கோஷ்டியை எனக்கும் பிடிக்காது. அது நம்ம தேசத்து மரபில்லை, நம்ம தேசத்து விளையாட்டு இல்லை. அது மனிதனை அடிமையாக்குகின்றது. சூதாடியா ஆக்கிடுது. கோலிக்குண்டு நம்ம ஆட்டம், நம்ம தேசத்து கல்தோன்றின காலத்திலேயே அந்த ஆட்டமும் தோன்றியிருக்கனும் அதனாலே நம்ம தேசத்து விளையாட்டாக கோலிக்குண்டு கோஷ்டிக்குத்தான் என் கல் என்று கூறி அந்தக் கல்லைக் கோலிக்குண்டு குழுவினரின் கூஜாவில் போடுகிறார். வெற்றி பெற்ற குழு ஊர்வலம் செல்கின்றது. தோற்ற குழு கூஜாவை உடைத்துவிட்டு, ஒழிக குரலிட்டு, ஒருவரை ஒருவர் உதைத்து அங்குமிங்கும் ஓடுகிறார்கள். இறுதியில் கலவரத்தில் நாற்காலிக்காரர் விக்கி கூக்குரலிடுகிறார். இந்நாடகத்தில் இடம்பெறும் சீட்டு, கோலி, கூஜா, கூழாங்கல் அனைத்தும் குறியீடுகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அழுக்கடைந்த சமுதாயத்தைக் காட்டுவது நடப்பியலுக்கு ஒத்தது. அனைத்துலகப் பார்வை இங்கு அமைவதைக் காணமுடிகின்றது.

தலித்தியப் பார்வை

ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று தன்முகம் காட்டத் தயங்கியுள்ள நிலையில் அவர்களின் உள்ளக் குமுறல்களை நவீன நாடகங்கள் வெளிக்காட்டுகின்றன. ஞானியின் ''பலூன்'' கதையில் அறுவரில் ஒருவன் தாழ்த்தப்பட்ட இனத்தவன். இருபத்தெட்டு வயது இளைஞன் பேசுகிறான்.

''என் பேரு சிங்காரம். நான் ஒரு பறையன். பறையன்னு சொல்லிக்கிடறதுல எனக்கொன்னும் வெக்கம் இல்ல. நான் எதுக்கு வெட்கப்படணும்? ஹரிஜன், கிரிஜன்னு சொல்றதெல்லாம் பிராடு, பறையனும் பள்ளனும் கடவுளோட புள்ளைன்னா அந்தக் கடவுள் ஏன் கோவில விட்டு வெளியே வந்த எங்க நிலைமைய பாக்கல? அப்ப நாங்க என்ன கடவுளோட வெப்பாட்டிக்குப் பொறந்த புள்ளைங்களா? என்று வாதிடுகிறான். ''சுரண்டப்பட்ட வர்க்கச் சார்பினை விளக்குவது'' என்ற நடப்பியல் கோட்பாட்டை இங்கு முன்வைக்கிறார்.

சாதி - மதப் போராட்டம்

சென்னையில் இயங்கிவரும் ''பல்கலை அரங்கம்'' என்னும் நாடகக்குழு ''தீனிப்போர்'' என்ற நாடகத்தை நிகழ்த்திக் காட்டியது. காட்டில் வாழும் குள்ளநரி ஒன்று, காட்டில் உள்ள விலங்குகளையே வேட்டையாடிச் சலிப்புற்று, நாட்டில் உள்ள விலங்குகளைப் பதம் பார்க்க நாட்டு எல்லைக்கு வருகிறது. அத்தருணத்தில் நாட்டிலே வாழ்ந்து சலிப்புற்று, காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட நாட்டு நாய் ஒன்று காட்டு எல்லைக்கு வருகின்றது. அந்த எல்லையில் முயல் கூட்டங்கள் மேய்வதைக் கண்ட நரியும், நாயும் அவற்றின் மீது பாய, ஒன்றோடு ஒன்று மோதி சண்டையிட்டுக் கொள்கின்றன. இதன் விளைவு காட்டு விலங்குகளுக்கும் நாட்டு விலங்குகளுக்கும் பெருத்த போர் நிகழ்கின்றது. போரின் முடிவில் இவ்விருவகை விலங்குகளும் சைவம் - அசைவம் என்று பிரிகின்றது. இது நாடகத்தின் கதை - இதில் காட்டு விலங்குகளும், நாட்டு விலங்குகளும் சமுதாயத்தின் குறியீடுகள். நம்முடைய சமுதாயத்தில் நிகழும் சாதி மாத போராட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நாடகம் அமைந்திருக்கிறது. இதில் சாதி, மதம், பேதங்களைச் சாடும் சமத்துவச் சமுதாயத்தைக் காண விழைகின்ற மனித நேய நடப்பியல் சிந்தனையைக் காண முடிகிறது.

பெண்ணின் கதை

இந்திராப் பார்த்தசாரதியின் ''கொங்கைத் தீ'' எனும் நாடகம் பெண்ணின் கதையைப் பற்றிப் பேசுகின்றது. இதனைச் சொல்லும் போது

''இச் சமுதாயத்தின் போலிதர்மத்தைச்

சுட்டெரிக்கும்

பெண்மைக் கனல்தான்

கொங்கைத் தீ''

எனக் கதைப் பொருளாகத் தெளிவுப்படுத்துகின்றார். கோவலனைப் பற்றி தேவந்தி சொல்லும் போது

அவரவர் குணமே அவரவருக்கு விதி இது வாழ்க்கையின்

சட்டம்

மாற்ற இயலாது

நிலை கொள்ளா உள்ளம், கோவலன் இயல்பு

என்கிறார். இறுதியில் ''கண்ணகி'' மதுரையை எரிப்பதோடு கதை மடிகின்றது. மீட்டுருவாக்கம் செய்து நவீன இலக்கியப் பாங்கில் இதனை அமைத்திருக்கின்றார். இது போலவே பிரமிள் ''நட்சத்திரவாசிகள்'' எனும் நாடகத்தில் பெண்ணியம் பற்றிச் சொல்லிக் சொல்கின்றனர்.

நகர வாழ்க்கை - நரக வாழ்க்கை

சென்னைக் கலைக்குழுவின் ''மாநகரம்'' என்ற நாடகத்தில் சென்னை வாழ்க்கையின் சீர்கேடுகளைக் கோர்வையாக்கி, நிகழ்ச்சிகளாக மாற்றியிருக்கின்றார்கள். நகர வாழ்க்கையில் போதிய வசதியில்லாமல் அவதிப்படும் ஏழை மக்களின் அவல நிலைகளை நாடகம் உள்ளடக்கமாகக் கொண்டு அமைகின்றது.

அது போல் இவர்களின் ''உரம்'' எனும் நாடகம் ஒரு ஏழை விவசாயிக்கு விவசாயத் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவுகிறோம் என்று வரும் அரசாங்கத்தால் ஏற்படும் தொல்லைகள் பற்றி நாடகம் பேசுகின்றது. இங்கு அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகளும், நிகழ்வுகளும் விளக்கும் நடப்பியல் தன்மை பேசப்படுகின்றது.

சுற்றுப்புறச் சூழல்

மதுரை நிஜநாடகக் இயக்கத்தினரின் ''சுற்றுப்புறச் சூழல்'' என்ற நாடகம் நகரங்களில் வாழும் மக்கள் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளால் என்னென்ன அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் என்னென்ன நோய்கள் வருகின்றன என்ற கருத்தை நாடகம் புலப்படுத்துகின்றது. குறிப்பாக நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஆகியவை வெளியேற்றும் புகை மண்டலங்களால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்கின்றது. இது நவீன உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாகும். இங்கு சமூக நிகழ்வு இந்நாடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள்

தற்காலச் சடங்குகளில் ஒன்றினைப் பின்பற்றி ''சுவரொட்டிகள்'' என்ற நாடகம் துவங்குகின்றது. ''நோட்டீஸ் ஒட்டக்கூடாது'' என்று எச்சரிக்கை செய்தும், மீறி அதில் ஒட்டுவது என்பது தினசரி நாம் காணும் நிகழ்வாகும். இந்தக் காலத்து சுவரொட்டிகள் உண்மைகளை, உணர்த்துவதற்கு மாறாக உள்ளதைக் குழப்பும் வாசகங்களாக இருக்கின்றது என்பதை இந்நாடகம் காட்டுகின்றது. வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ''சுவரொட்டிக் கலாச்சாரத்தை'' இந்நாடகம் காட்டுகின்றது.

சான்று

முகமூடிய தீட்டிய சுவரொட்டிக்கு அருகே ஏணியில் முகமூடியுடன் ஒருவன் நிற்க, தரையில் தலையாட்டும் பொம்மைகளாக மற்றவர்கள் நிற்பது சமூகத்தை வேலிக்குள்ளாக்குவதாக அமைகிறது. இங்கு சாதாரண ஒரு சுவரொட்டிக் கலாச்சாரம் கதையாக்கப்பட்டு சமூக அவலங்களை பிரதிபலித்துக் காட்டுமுகமாக அமைவது சிறப்பு.

மனநோயாளி

''ருத்ரன்'' என்பவர் எழுதிய ''விசாரணை'' எனும் நாடகம் நடுத்தரவர்க்க திருமணமாகாத இளைஞன் ஒருவன் ஒரு அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வருகின்றான். அவன் விடுதியில் தங்கி இருக்கின்றான். அவன் விடுதியிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வது, வேலை பார்ப்பது, மாலையில் அங்கிருந்து விடுதிக்குச் செல்வது. இப்படியே தின வாழ்க்கை ஓடுகிறது. பின்னர் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதால் சமுதாயத்தின் முன் குற்றவாளியாகிறான். அவனது கனவில் அவன் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது. இறுதியில் அவன் மனநோயாளி என்று நாடகம் உறுதி செய்கிறது.

இவ்வாறு சமுதாயத்தில் மக்கள் ஏதாவது ஒரு வகையில் மனநோய்க்கு சம்மந்தப்பட்டவர்களாகவே உள்ளனர் என்பதை இந்நாடகம் உணர்த்துகின்றது. உளவியல் அடிப்படையில் இந்நாடகம் அமைகின்றது.

நவீன நாடகங்களில் கதைப் பொருள்கள்

நிகழ்கால வாழ்வில் மக்களிடையே ஏற்படும், தற்கொலை, விரக்தி, தோல்வி, தனிமை, நோய், துன்பம், மன உளைச்சல், தியாகம் அறிவுத்தாகம், பெண்ணுரிமை போர், நம்பிக்கை, ஒற்றுமையுணர்வு, அரசியல் போன்றவைகள் இன்றைய நாடகங்களின் கதைப் பொருளாகத் திகழ்கின்றன. நவீன நாடகக்குழுக்கள் எடுத்துக் கொள்ளும் கதைப் பொருட்கள் என்று எடுத்துக்கொண்டோமானால்

1. மனித வாழ்க்கையிலுள்ள அபத்தங்களை வெளிக்கொணர்தல்

2. சமகாலப் பிரச்சனைகளைப் பேசுதல்

3. தற்கால அரசியல் - சமூகச் சீர்கேடுகளைச் சொல்லல்

4. தனிமனிதம் - சமுதாயப் போராட்டங்களின் உரிமை பற்றிப் பேசுதல்

5. மனநோயாளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்

6. பழைய புராண - இதிகாச - வரலாற்றுக் கதைகளைச் சமகாலப் பிரச்சனையோடு ஒப்பிடல் என்று அமைகிறது.

முடிவுரை

காலத்தின் தேவையறிந்து அவ்வக்கால மக்களின் விழிப்பிற்கும், மேம்பாட்டிற்கும் எது உதவுவதாக இருக்கின்றதோ அது அக்காலத்தில் நவீனமாகிறது. நடப்பியல் நெறி நவீன நாடகங்களில் வரப்பெறத் துவங்கிவிட்டன. யதார்த்தம் சார்ந்த காலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதாக இருப்பதால் இதுவே இன்றைய ''நவீனத் தமிழ் நாடக'' மாக இருக்கிறது. இங்கு இயங்குதல், குழுக்கள் தங்களுக்குகென்று ''கருத்துகளை'' வைத்துக் கொண்டு அதனடிப்படையில் நாடகங்கள் நடிக்கப் பெற்று வருவது போற்றுதலுக்குரியது.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

1 கருத்து:

  1. நல்ல பதிவு. நடப்பியல் குறித்த சில சந்தேகங்களுக்கு விடையாக அமைந்தது. முடிந்தால் மீநடப்பியல் குறித்து பதிவிடுங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு