13/03/2011

நீர் வழிபாடு பெண் தெய்வமான வரலாறு - முனைவர். தாயம்மாள் அறவாணன்

வடக்கே வேங்கடத்துக்கும், தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பண்டைத் தமிழ்நாடு பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் வடக்கே உள்ளது. வடக்கே 13.35 மேற்கே 76 டிகிரி 15'' கிழக்கே 80 டிகிரி 20'' என்ற எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதி வெப்ப மண்டலப் பகுதியாகும். வடதுருவ, தென்துருவப் பகுதிகளைப் போலவோ கிரேக்கம், ரோமபுரி உள்ளிட்ட ஐரோப்பியக் கண்டப் பகுதிகளைப் போலவோ குளிர்ப்பகுதி அன்று. எனவே தமிழ் நாட்டுப் பகுதியில் தண்­ர்த் தேவை மிக மிக இன்றியமையாத ஒன்றாகத் தொன்று முதல் இருந்திருந்தல் வேண்டும். கொடும் கோடைகளில் நீரில்லாமல் நீர் நிலைகள் வறண்டு, செடி, கொடிகள் வாடி, இவற்றால் உயிரினங்களும் வாடி, வதங்கியதைப் பண்டைத் தமிழ்ப் பாடல்கள் காட்டுகின்றன. இதில் உச்சமான ஒரு காட்சியைக் கலித்தொகை படம் பிடிக்கிறது. நீரை உட்கொள்வதிலும் நீரில் முற்றுமாக மூழ்கி நீராடுவதிலும் இயல்பான ஈடுபாடு கொண்ட யானைகள் குடிக்கச் சிறிது கூட நீரில்லாமல் வாடியதைக் கவிநயம் படவும், காதல் நயம் படவும் கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது.

பாலைப்பாடல்கள் நெடுகிலும் நீரின்றி உயிர்கள் வாடிய காட்சிகள் படம் பிடிக்கப்பெற்றுள்ளன. இப்பாலை வருணனைகளில் இருந்து நாம் உய்த்துணர வேண்டிய இன்னொரு செய்தியும் உள்ளது. தமிழகத்து ஆறுகள் இன்றைப் போல, அன்றும் பன்னிரெண்டு திங்களும் நீர் நிரம்பி ஓடும் உயிர் ஆறுகள் அல்ல. நீர் வற்றிய ஆறுகளையும், ஆற்று மணல் மேடுகளையும் பண்டைய இலக்கியங்கள் எடுத்துக் காட்டுதலில் இருந்து இதனை உய்ந்து உணர முடிகின்றது. வெப்ப மண்டலப் பகுதி வாழ்க்கை என்பதால் நீர் வேட்கை ஏனைய குளிர் மண்டலப் பகுதியை விட மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும் பின்னாளில் வழிப் போக்கர்களின் நீர் வேட்கையைப் போக்குவதற்காகத் தண்­ர்ப் பந்தல் அமைக்கப் பெற்ற செய்தியை இலக்கியங்களும் அப்பூதி அடிகளார் வரலாறும் புலப்படுத்துகின்றன. தாகத்திற்குத் தண்­ர் அளிப்பது ஓர்அறமாகவே (நீர் அறம்) போற்றப்பட்டு வந்தது.

வெப்ப மண்டலம் என்பதால் உடல் வியர்ப்பது இயல்பு ஆயிற்று உள் சென்ற நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால். வெப்ப மண்டல உயிர்களுக்குத் தாகம் மிகுதியாக இருந்தது இயல்பே. இதன் இன்னொரு விளைவு வியர்வை. மேலுடம்பை, அழுக்கு உடலாகவும், வியர்வை நாற்ற உடலாகவும் ஆக்கியது. அழுக்கையும் நாற்றத்தையும் போக்க நாள் தோறும் குளித்தல் இப்பகுதி மக்களுக்கு இன்றியமையாத ஒன்று ஆகியது. எனவேதான் திருவள்ளுவ மேதை புறந்தூய்மை நீரான் அமையும் (குறள் - 298) என எடுத்துரைத்தார் மக்கள் ஆற்றிலும், குளத்திலும் பிற நீர் நிலைகளிலும் மூழ்கிக் குளிப்பதையும் தமிழிலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. நீர் நிலையில் சென்று குளித்தல் காலைக் கடன்களுள் ஒன்றாக இருந்ததைத் திருவெம்பாவையும், திருப்பாவையும், எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறு நீர் தமிழர் வாழ்க்கையில் தாகம் தீர்க்கும் உணவுப்பொருளாகவும், உடல் அழுக்குப் போக்கும் புற;ந்தூய்மையாக்கியாகவும் அமைந்திருந்ததை அறிகிறோம். நீரைத் தாகத்துக்குக் குடிப்பதுடன் ஓர் உணவாகவே தமிழர் கருதிப் போற்றியுள்ளனர். இன்றும் தமிழர் இல்லங்களில் உணவு பறிமாறப்படும்பொழுது, முதலில் குடிக்க நீர் வைப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதைக் காணுகிறோம். குளிர் மண்டல நாடுகளில் உள்ளோர் உணவு உண்ணும் போது, நீரை இன்றியமையாத ஒன்றாகப் பரிமாறுவது இல்லை. புறநானூறு, உணவு உண்டபின் அருவியிலிருந்து கொட்டும் நீரைப் பருகி மகிழ்ந்ததை எடுத்துக் காட்டுகிறது.

தமிழருடைய அக வாழ்க்கையில் மட்டுமல்லாமல் புறவாழ்க்கையிலும் நீர் இன்றியமையாத ஒன்றாக அமைந்தது. தமிழகத்தில் மிகுதியாக விளையும் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு நீர் இன்றியமையாத ஒன்றாகும். தமிழக உணவுப் பொருள்களின் உற்பத்தி மிகுதியும் தண்­ரைச் சார்ந்தே அமைந்திருந்தது. இத் தண்­ர் தமிழர்க்கு மழை நீராகவும், ஆற்று நீராகவும், குளம், குட்டை, ஏரி, கிணறு ஆகியவற்றில் தேக்கி வைக்கப்பட்ட நீராகவும் அமைந்திருந்தது. அனைத்து நீருக்கும் அடிப்படை மழையே என்பது தெளிவு. எனவே மழை இன்றித் தமிழர் வாழ்வு இல்லை. ஆகவேதான் தமிழர் மழையை வழிபடலாயினர். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தை அடுத்து, வான்சிறப்பு என்னும் அதிகாரத்தை வைத்தது இதனைக் காட்டும்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் (திருக்குறள் - 11)

நீர்இன்று அமையாது உலகு (திருக்குறள் - 20)

எனத் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுவதில் இருந்து உலகத்துக்கு அடிப்படையே மழைநீர் என்பது தெளிவு. வானம் பார்த்த பூமி எனத் தமிழரிடையே வழங்கும் மொழியும் இதனை வற்புறுத்தும். சிலப்பதிகாரத்தை வடித்து அளித்த இளங்கோ அடிகள் மழையை வணங்கத் தகும் தெய்வமாகப் போற்றுகிறார்.

''மாமழை போற்றதும் மாமழை போற்றதும்

மேனின்று தான் சுரத்த லான் - (சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்துப்பாடல் 7-9)

மழை என்ற பொருளைத் தரும் மாரி என்ற சொல்லே தமிழர் வணங்கும் தாய்த் தெய்வம் ஆயிற்று. மாரியம்மன் வழிபாடு, தமிழரிடம் பெரும்பான்மையாகப் பரவி இருக்கும் வழிபாடாகும். தண்­ரைச் சுமந்து வரும் ஆறுகளைத் தாயாகக் கருதுவதும், போற்றுவதும் தமிழர் மரபு ஆகும். ஆறுகளைப் பெண்ணாகவும், தாயாகவும் தமிழர் கருதினர். காவேரி அம்மன் வழிபாடும், காவிரித்தாய் என்ற அமைப்பும் இதனை உறுதிப்படுத்தும், ஆக, குடிக்க, குளிக்க, உயிர்க்கு நிகராகும் பயிர்களை வேளாண்மை செய்ய நீர் என்பது தமிழரின் தனிப் பெருந் தேவையாக விளங்கியது.

நீர் வணக்கம்: தமக்கு மிகுந்த உதவியாக, பயன் தருவதாக இருப்பனவற்றைப் போற்றுவதும், வழிபடுவதும் தமிழருடைய பொதுப் பழக்கமாகும். இவ்வடிப்படையிலேயே நிலத்தையும், தீயையும், காற்றையும், வானையும் இவர்கள் வழிபட்டனர். நிலம், தீ, காற்று வானம், ஆகிய நான்கு பூதங்களையும் விட நீர் தமிழக மக்களுக்கு மிகவும் உதவுவதாக இருந்தது. எனவே நீரை வணங்கும் வழக்கம் தோன்றியது. ஒரு தாய் குழந்தையைப் பெற்று பாலூட்டி, சீராட்டி வளர்ப்பதுடன் கடைசி வரை தன் குழந்தையைப் புரப்பவளாகவே விளங்குகிறார். இது தாய்மையின் இயல்பு, பெண்மையின் இயல்பு, எனவே தமிழர் தாயை வழி பட்டனர். அதுவே தாய்த் தெய்வ வழிபாடாக வளர்ந்தது. தண்­ரையும் தமிழர் பெண்ணாகவும், தாயாகவும் உருவகித்துப் போற்றியதுடன் தெய்வமாகவும் போற்றினர். எனவே தான் ஆறுகள் பெண்ணாகவும், தெய்வமாகவும் உருவகிக்கப் பட்டன. ஆறுகளுக்குக் காரணமாய் மழையே வழிபாட்டுக்குரிய தெய்வமாயிற்று, கி.பி. 2-ஆம் நூற்றாண்டளவிலேயே மழை வணக்கம். கடவுள் வணக்கத்துக்கு இணையாக மலர்ச்சி பெற்று விட்டதைச் சிலப்பதிகாரத்தின் முகப்பில் இடம் பெற்றுள்ள மங்கல வாழ்த்துப் பாடல் சுட்டுகிறது. முதலாவதாகத் திங்களையும், அடுத்ததாக ஞாயிற்றையும் போற்றி வணங்கும் அடிகளார் தொடர்ந்து மழையைப் போற்றி வணங்குகிறார்கள். பின்னாளில் மழை வேண்டிப் பெண்கள் எடுக்கும் பாவை நோன்பாக இது விரிவாக்கம் பெற்றது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி திங்கள் மும்மாறி பெய்யும் (திருப்பாவை 3: 1-3 என்றும்)

சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய்'' (திருப்பாவை - 4 ) என்றும் பொழியாய் மழை (திருவெம்பாவை - 16) என்றும் மழை வேண்டல் அமையப் பெற்றுள்ளது. ஆகவே தண்­ர் பெண்ணாகவும், தாயாகவும், தெய்வமாகவும் போற்றப்பட்டு வந்தது: வருகிறது

உடல் மேல் சேர்ந்த அழுக்கையும், வியர்வை நாற்றத்தையும் நீராடல் நீக்கியது. நீர் வழிபடும் நிலையை எய்திய பின் நாளில், நீர் நிலைகளும் வழிபடும் நிலையை எய்தின. புற அழுக்கை நீர் போக்குவது போல, குறித்த நீர் நிலைகளில் குறித்த காலத்து நீராடினால் அக அழுக்கும் நீங்கும் என்று நம்பப்பட்டது. குமரியிலும், காவேரியிலும், கங்கையிலும், குடந்தை மகாமகக் குளத்திலும் நீராடினால் செய்த பாவம் (அழுக்குப்) போகும் என்று கருதப்பட்டது. மணிமேகலையில் இடம் பெற்றுள்ள ஆபுத்திரன் தாய் வரலாறும் பிற தமிழர் நம்பிக்கைகளும் இதனைக் காட்டுகின்றன. இந்நம்பிக்கை பெருகிய பிறகு நீர் வழிபாடு மேலும் உரம் பெற்று மூட நம்பிக்கையாகத் தமிழரிடையே பல்கியது இதனை மறுக்கும் முகமாகவே திருவள்ளுவர்.

புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப்படும் - என்றும்

மனத்தது. மாசாக மாண்டார் நீராடி (குறள் - 298, 278) என்றும் எழுதினார்.

இவ்வாறு திருவள்ளுவர் மற்றும் இளங்கோ அடிகளாலும் மற்றும் பல அறிஞர்களாலும், போற்றப்பட்ட நீர், பண்டையகாலத் தொட்டு இன்று வரை, ''நீர்'' ஒரு பெண் தெய்வமாக போற்றி வணங்கப்பட்டு வருகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக