13/03/2011

இறையனார் களவியலில் நக்கீரரின் பங்கு - ம. பெரியசாமி

முன்னுரை:

இனக்குழு சமூகமாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம் நிலவுடைமைச் சமூக நிலைக்கு மாறும்போது சில நிலையான வாழ்வு முறையை வாழ்ந்து, தம் வாழ்வு முறையினை இலக்கியங்களில் பதிவு செய்து, தமிழ் மொழியின் நிலையினையும் தம்கால நிகழ்வினையும் பதிய வைக்கிறது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து காலங்கடந்து உருவானதுதான் ''இறையனார் களவியல்'' என்ற நூல். இதற்கு உரை எழுதிய நக்கீரர் அகப்பொருள் மரபுக்கு ஆற்றிய வகையை இக்கட்டுரையில் அறியலாம்.

இலக்கிய வகை:

சங்க இலக்கியம் அகம் என்றும் புறம் என்றும் இரண்டு நிலைகளில் உள்ளன. அவ்வகையான அகத்திற்கும், புறத்திற்கும் இலக்கணம் கூறும் விதமாக பழமையான நூல் தொல்காப்பியம் காணப்படுகிறது. தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் அகநிலை இலக்கணம் கூற்று அடிப்படையில் காணப்படுகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியல் உரை, களவு நிகழ்வுகளை காட்சி அடிப்படையில் விளக்கிச் செல்லுகிறது.

இறையனார் களவியல் அறுபது நூற்பாக்களில் முப்பத்தி மூன்று நூற்பாக்கள் களவுக்கும், இருபத்தியேழு நூற்பாக்கள் கற்புக்கும் பிரித்து காட்டுகின்றனர். குறுகிய நூற்பாக்களைக் கொண்டாலும் உரையாசிரியர் நக்கீரர், காட்சி அடிப்படையில் விளக்கிச் செல்லும் போக்கு, அகப்பொருள் வளர்ச்சி நிலையினை பதிவு செய்வதோடு மட்டுமின்றி பிற்கால அகப்பொருள் வளர்ச்சிக்கும், கோவை இலக்கியத்திற்கும் உரையாசிரியர்க்கும் வித்தாக அமைகின்றார்.

பாயிரம்:

''இறையனார் களவியல்'' நேரடியாக ''அன்பின் ஐந்திணை'' என்று பாடு பொருளுக்குச் செல்வதால், நூல் என்பது முழுமை பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த உரையாசிரியர் நக்கீரர்,

''ஆயிரமுகத்தான் அகன்றதாயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே''

என்று சான்று காட்டி, பொதுப்பாயிரத்தையும், சிறப்புப்பாயிரத்தையும் விளக்கி நூல் தோன்றிய வரலாற்றினையும் விளக்கியுள்ளார்.

களவியலின் விரிவு நிலை:

தலைவனும், தலைவியும் தங்கள் பெற்றோருக்கும், ஊராருக்கும் தெரியாமல் களவு வாழ்க்கை மேற்கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு கூற்று நிகழ்வதை தொல்காப்பியர் தலைவனுக்கு 21+5 இடங்களிலும், தலைவிக்கு 10+37+3 இடங்களிலும், தோழிக்கு 32 இடங்களிலும் கூற்று நிகழும் என்று களவியலில் குறிப்பிடுகின்றார். தம்கால நிகழ்வை அறிந்த இறையனார் களவியலின் உரையாசிரியர் நக்கீரர், இயற்கைப் புணர்ச்சி, பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, இரந்து குறையுறுதல், மதியுடம்படுத்தல், குறி நிகழுமிடம், களவு நிகழுமிடம், அறத்தோடு நிற்றல், வரைவு கடாதல், உடன்போக்கு என்று களவு நிகழ்வுகளைக் காட்சி அடிப்படையில் விளக்கி விரிவான விளக்கம் தருகிறார். இத்தகைய போக்கு பிற்கால இலக்கணத்திற்கும், உரையாசிரியருக்கும், கோவை இலக்கியத்திற்கும் அடிப்படையாக அமைகிறது.

கருப்பொருளின் விரிவு:

கருப்பொருள் என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்துநிலங்களில் வாழும் உயிரினங்கள் ஆகும். இதை தொல்காப்பியர்,

''தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை

செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப'' (அகத்திணை - 18)

எட்டுவகை கருப்பொருள் என்று குறிப்பிடுகிறார். ''இறையனார் களவியல்'' நூற்பா ''அன்பின் ஐந்திணை'' என்று குறிப்பிடுகின்றது, ஆனால் உரையாசிரியர் நக்கீரர் ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, அங்குள்ள விலங்கு, மரம், பறவை, பறை, அவர்களது தொழில், யாழ், தலைமகனது பெயர், தலைமகளது பெயர், நீர்நிலைகள், ஊர், பூ, மக்கள் பெயர் என்று ஆறு கூடுதலாக எழுதி கருப்பொருள் பதினான்கு என்று வரையறுக்கிறார். இந்த விரிவான பட்டியல் சங்க இலக்கிய திணைப்பாடல் பகுப்புக்கு வழிவகுக்கின்றன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் தமது உரைகளில் கருப்பொருள் பட்டியலை விரிவாகக் குறிப்பிடுகின்றனர்.

பாங்கனின் செயல்பாடுகள்:

களவுக் காலத்தில் தலைவன், தலைவியைச் சந்திக்க பாங்கன் அல்லது தோழி உதவியை நாடவேண்டியிருக்கும். இதைத் தொல்காப்பியர்

''பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப''

என்று குறிப்பிட்டவர் அவை என்னவென்று விளக்கவில்லை. இதை இறையனாரும் ''பாங்கிலன் தமியோள்'' (இறையனார் - 3) என்று கூறி விரிவாக விளக்கவில்லை. ஆனால் இறையனார் களவியலின் உரையாசிரியர் நக்கீரர், தொல்காப்பியர் குறிப்பிடும் பாங்கன் நிமித்தத்திற்கு உற்றதுவினாதல், உற்றதுஉரைத்தல், கழறியுரைத்தல், கழற்றெதிர்மறை, கவன்றுரைத்தல், இயல்இடம் கேட்டல், இயல்இடம் கூறல் என்று பன்னிரண்டில் ஏழு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். இத்தகைய பாங்கனின் செயல்பாடுகள் தலைவனையும், தலைவியையும் இணைக்கும் பொருட்டு அமைகின்றன.

எண்வகை மணத்தின் விளக்கம்:

மணம் என்பது ஆணும், பெண்ணும் மனம் ஒத்து இணைவது. இத்தகைய மணத்தைத் தமிழக மரபில் ''காதலித்து மணம் செய்வது'', ''பெற்றோரால் மணம் செய்வது'' என்று இரண்டு வகைப்படுத்தலாம். இந்த இரண்டுவகை மணத்தோடு, ஆரியரின் எண்வகை மணத்தை தொல்காப்பியர்,

''மறையோர் தேஎத்து மன்றல் எட்டு'' (களவு-1)

என்று குறிப்பிடுகிறார். இதனை இறையனார்,

''அந்தணர் அருமறை மன்றல் எட்டு'' (இறையனார்-1)

என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரும், இறையனாரும் விரிவாகக் கூறாத எண்வகை மணத்தை அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், அசுரம், இராக்கதம், பைசாசம்) என்று தமிழ்ப்படுத்தி விரிவாகக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் எண்வகை மணத்தின் விரிவான நிலையை தொல்காப்பிய உரையாசிரியர்களும், எடுத்தாள்வதை அறியமுடிகின்றன.

களவுக்கு காலமும் காதலர் வயதும்:

எத்தகைய நிகழ்வாக இருந்தாலும் அது ஓர் எல்லையைக் கொண்டிருக்கும், அப்படிப்பட்ட நிலையில் தொல்காப்பியர் கூறாத களவின் கால எல்லையை இறையனார்,

''களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்

திங்கள் இரண்டின் அகமென மொழிப'' (இறையனார்-32)

இரண்டு திங்கள் என்று குறிப்பிடுகின்றார். இரண்டு மாத கால எல்லையைக் கொண்ட இக்களவு காதலர்க்கு எந்த வயதில் வரும் என்பதை உரையாசிரியர் நக்கீரர் தலைவிக்கு பதினோரு வயது பத்துமாதம், தலைவனுக்கு பதினைந்து வயது பத்து மாதம் இருக்கையில் காதல் வரும், இத்தகையக்களவுக்காதல் அம்பல் அலராகி கற்புநிலைக்கு வரும்போது இரண்டு மாதம் நிறைவுறும். அப்போது தலைவிக்கு பன்னிரண்டு வயதும், தலைவனுக்கு பதினாறு வயதும் நிறைவுறும் என்று குறிப்பிடுகின்றார். இந்தக் களவுக்கு உண்டான காலமும், காதலர்கள் வயதும் குறிப்பிடுதல் அகப்பொருள் வளர்ச்சியினைக் காட்டுகின்றன.

முச்சங்க வரலாறு:

களவு நிகழ்ச்சிகளைக் கூறுவதாக வந்த இறையனார் களவியலின் உரை தமிழ்மொழியினை முதன்மைப்படுத்தும் பொருட்டு மூன்று சங்க வரலாற்றினை நக்கீரர்,

முதற்சங்கம்

புலவர்களின் எண்ணிக்கை : 4449

சங்கம் வளர்த்த ஆண்டு : 4440

முன்னிலை வகித்த மன்னர்கள் : 89

இடம்: கடல்கொண்ட மதுரை.

இடைச்சங்கம்

புலவர்களின் எண்ணிக்கை : 3700

சங்கம் வளர்த்த ஆண்டு : 3700

முன்னிலை வகித்த மன்னர்கள் : 59

இடம்: கபாடபுரம்.

கடைச்சங்கம்

புலவர்களின் எண்ணிக்கை : 449

சங்கம் வளர்த்த ஆண்டு : 1850

முன்னிலை வகித்த மன்னர்கள் : 49

இடம்: மதுரை.

என்று குறிப்பிடுகின்றார். மேற்குறிப்பிட்ட புலவர்களின் எண்ணிக்கையும், சங்கம் வளர்த்த ஆண்டும், முன்னிலை வகித்த மன்னர்களையும், முதன் முதலில் இறையனார் களவியல் உரையே குறிப்பிடுகிறது. புலவர்கள் கூடி தமிழ் உரையாடிய அவையை இலக்கியங்கள்,

''தொல்லானை நல்லாசிரியர்

புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்'' (மதுரைக்காஞ்சி:761-762)

''நிலன்நாவில் திரிதரும் நீள்மாடக் கூடலார்

புலன்நாவில் பிறந்தசொல் புதிது உண்ணும்'' (கலித்தொகை-35)

புதுமொழி கூட்டுண்ணும் - கலித்தொகை- 68

தமிழ்கெழு கூடல் - (புறநானூறு - 68)

என்ற தொடர்களும், அவை, கூடல் என்று சொல்லும் சங்கத்தையும், தமிழையும் இணைத்தே பேசுகின்றன.

முடிவுரை:

இறையனார் களவியல் என்ற இலக்கணநூல் அறுபது நூற்பாக்களைக் கொண்டிருந்தாலும், அவற்றிற்கு உரையெழுதிய நக்கீரர் உரை தமிழுக்கு வளம் சேர்க்கும் பொருட்டு முச்சங்க வரலாற்றையும், அகப்பொருள் மரபுகளையும், சில புதுமைகளையும் விரித்துக் குறிப்பிட்டதன் வாயிலாக தமிழின் வளர்ச்சியினை அறியமுடிகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக