27/03/2011

நாட்டுப்புற நம்பிக்கைகள் - முனைவர் பா. நீலாவதி

நாட்டுப்புறக் காப்பியம் என்று சிறப்பிக்கப்படுவது காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரம். அக்காப்பியம் நாட்டுப்புறக் கூறுகளில் பலவற்றை வெளிப்படுத்துகிறது. நாட்டுப்புறப்பாடல்களை வரிப்பாடல் வடிவிலும், கலைகளை கூத்துக்கள் மூலமாகவும் சிலம்பு வடித்துத் தருகிறது. இதுபோன்றே அக்கால மக்களின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் அறியமுடிகிறது. அவற்றில் பிறப்பு பற்றிய நம்பிக்கைகளை இக்கட்டுரை தொகுத்தளிக்கிறது.

முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றிய நம்பிக்கைகள்:-

நாட்டுப்புற மக்கள் முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். சிலப்பதிகார காலத்து மக்கள் இப்பிறப்புக்கு முன் பழைய பிறப்பு ஒன்று உண்டு என்பதில் நம்பிக்கை வைத்திருந்தனர். சிலப்பதிகாரம் முற்பிறப்பு, இப்பிறப்பி, மறுபிறப்புப் பற்றிக் கூறுகின்றது. அம்மக்கள் ஒருவன் அல்லது ஒருத்தியின் வாழ்க்கை இறந்தபின் முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. அதாவது மரணத்திற்குப் பின்னும் ஒரு வாழ்க்கை இருப்பதாக நம்பினர். இந்த வாழ்க்கை அவரவர் இவ்வுலகில் செய்த நல்லறங்களுக்குத் தகுந்தபடி அமைவதாக கருதினர். ஒரு குரங்கு இப்பிறப்பில் தானம் செய்தால் அடுத்தபிறப்பில் விண்ணோர் வடிவத்தைப் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இதனை சிலம்பு,

''பெருவிறல் தானம் பலவும் செய்து; அங்கு

எண்ணால் ஆண்டின் இறந்தபிற்பாடு;

விண்ணோர் வடிவம் பெற்றனன்''

என்று குறிப்பிடுகிறது. கோவலன் கொலையுண்டு இறந்த பிறகு வானோர் வடிவத்தைப் பெறுகிறான்.

''வானோர் வடிவம் பெற்ற''

கண்ணகி கோவலன் அரட்டன் செட்டியின் மக்களாகப் பிறப்பதும் மாதரி சேடக்குடும்பியின் மகளாகப் பிறப்பதும் படிப்பவர்க்கு பிறப்புப் பற்றிய நம்பிக்கையை உணர்த்துகின்றன.

முந்தையபிறப்பில் ஒருவன் செய்த தீவினையின் பயன் அவனை அடுத்த பிறப்பிலும் வந்து துன்பப்படுத்தும் என்றும் நம்பினர்.

''இம்மை செய்தன யானறி நல்வினை;

உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத்

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது''

கண்ணகி கோவலனை விட்டுப் பிரிந்திருப்பதற்குக் காரணம் அவள் பழம்பிறப்பில் கணவனுக்காகச் செய்ய வேண்டிய நோன்பு ஒன்றிலிருந்து தவறியதாக தேவந்தி கூறுகிறாள்.

''....................... பொற்றொடிஇ

கைத்தாயும் அல்லை கணவற்கு, ஒரு நோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக; உய்த்துக்''

முந்தைய பிறப்பில் இட்ட சாபம் கூட இப்பிறப்பில் வந்து சூழும் என நம்பினர். முற்பிறப்பில் நீலி இட்ட சாபம்தான் கோவலனைக் கொலையுண்ணும்படிச் செய்தது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

''எம்முறுதுயரம் செய்தோர் யாவதும்

தம்முறுதுயரம் இற்றாகும் என்றே

விழுவோள் இட்ட வழுவில் சாபம்

பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள்நீ''

என்று இடம்பெற்றுள்ளது.

முற்பிறப்பில் நல்லது செய்தால் நல்லது நடைபெறும் என்றும் கெட்டது செய்தால் கெட்டது நடைபெறும் என்றும் நம்பினர்.

''இறந்த பிறப்பின் எய்தியவெல்லாம்

பிறந்த பிறப்பிற் காணாயோ, நீ''

என்ற வரிகளில் இதனைக் காணலாம்.

கூத்தும் மறுபிறப்பும்:-

குரவைக்கூத்திலும், இசையிலும் ஈடுபாடு மிகுந்திருந்த மக்களின் மறுபிறப்புப் பற்றியும் சிலம்பு கூறுகிறது. ஆயர்முதுமகளான மாதரி திருமாலுக்கு முற்பிறப்பில் குரவைக்கூத்து எடுத்த காரணத்தால் மறுபிறப்பில் திருமாலுக்கு அடித்தொண்டு பூண்ட குடும்பத் தலைவனுக்கு மகளாய்த் தோன்றினாள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

''போன பிறப்பில் பொருந்திய காதலின்

ஆடிய குரவையினரவணைக் கிடந்தோன்

சேடக் குடம்பியின் சிறுமகளாயினள்''

என்ற அடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்புப் பற்றிக் கூறுவதுடன் ஏழுபிறப்புப் பற்றியும் கூறுகிறது.

''ஏழ்பிறப்பு அடியோம் வாழ்க நின் கொற்றம்''

என்பதால் இச்செய்தி தெளிவுறும்.

அக்காலத்தில் மக்கள் யானை, குரங்கு, புழு எல்லாம் முற்பிறப்பில் மனிதனாகப் பிறந்து இருக்கின்றன என்றும் இவைகள் மீண்டும் மனித உடலில் புகலாம் என்றும் நம்பினர். இக்கருத்து அக்கால மக்களிடையே செல்வாக்கு பெற்றிருப்பதற்குக் காரணம் மனித உடலினின்று சென்ற உயிர் விலங்கின் உடலிலும், விலங்கிலிருந்து சென்ற உயிர் நரகரது உடலிலும் புகலாம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

''மக்கள் யாக்கை பூண்டமன்னுயிர்

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்

விலங்கின் யாக்கை விளங்கிய இன்னுயிர்

கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்''

என வருகிறது.

கவுந்தியடிகள் காமுகர்கள் இருவரை நரிகளாகச் சபித்ததைச் சிலம்பு காட்டுகிறது.

''எள்ளுநர் போலும் இவர் எம்பூங்கோதையை

முள்ளுடைக் காட்டின் முது நரி ஆகுக''

என்று சபிக்கப்பட்டுள்ளது.

வானுலகத்திற்குச் சென்ற உயிர் வேண்டுமானால் சிலகாலம் வானுலகத்திலே தங்கலாம் அல்லது மனித வடிவில் பிறக்கலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.

''விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்

மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்''

இந்நம்பிக்கைக்கு ஆதாரமாக விளங்குபவர்கள் ஊர்வசி சயந்தன் ஆவர்.

மேற்கண்ட பிறப்பு பற்றிய நம்பிக்கைகளில் பல இன்றும் நாட்டுப்புற மக்களிடையே நிலவி வருவதைக் காணலாம்.

நன்றி: வேர்களைத்தேடி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக