29/03/2011

மாணிக்கவாசகரும் நாட்டுப்புற நம்பிக்கையும் - ப.இராசமாணிக்கம்

''கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்று ஈண்டு வாராநெறி'' (மெய் உணர்தல்) திருக்குறள்

என்ற திருவள்ளுவர் வாக்கினை மெய்யாக்கியவர்கள் ஞானிகள். சுகத்தை வென்று நிலைத்த சுகானுபவத்தைப் பெறுவதே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள் உண்மைப் பொருளை ஆராய்ந்து ஈடேற நினைப்பவர்கள். மாணிக்கவாசகரும் இத்தகைய நிலையில் நின்று தம் அனுபவத்தைச் சமூகம் கடைத்தேற முன் வைக்கின்றார்.

நாட்டுப்புறச் சமுதாயம் பல நம்பிக்கைகளைக் கொண்டே இயங்குகின்றது என்று கூறினாலும் தெரிந்த அறிவுடைய வீடுபேற்றினை அடையத் துடிக்கும் ஞானிகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை மாணிக்கவாசகரின் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

பக்தி ஒன்றே தன்னைப் பிறவிப் பிணியிலிருந்து களைய முடியும் என்ற நம்பிக்கை நாட்டுப்புறச் சமுதாயத்தில் மக்கட் கொண்டிருந்த நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

முன்பிறப்பில் செய்த நல்வினை தீவினைக் காரணமாக இப்பிறப்பில் இன்ப துன்பங்களை நிச்சயிக்கப்படுகின்றன என்று மக்கள் நம்புகின்றனர். ஊத்தை போனாலும் ஊழ்வினை போகாது என்ற பழமொழியே மேற்கண்ட நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த ஒன்றாகும்.

மாணிக்கவாசகரின் அற்புப் பத்து என்ற தலைப்பிலான பாடல்களை மட்டும் இச்சிறு ஆய்வுக் கட்டுரை எடுத்துக்கொண்டு நாட்டுப்புற நம்பிக்கைகளை விளக்க முற்படுகிறது.

பிறவி பற்றிய நம்பிக்கை:-

மாணிக்கவாசகர் பிறவியை நோயாகவே நினைக்கிறார் என்பது, வாயில்களையுடைய உடல் மீண்டும் மீண்டும் பிறப்பதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை நன்கு உணர்ந்ததாலே,

''பொச்சையான இப் பிறவியிற்

கிடந்து நான் புழுத்தலை நாய்போல'' (பா:9)

என்று தன்னை நாயாகக் கூறிக் கொள்கிறார். சிவபெருமான் திருவடி அடைதலே தன் நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அடர்த்தியான இருளும், நெறிமயக்கமும், கொடிய விலங்குகளின் குணங்களையொத்த பண்புகளும் உடம்பில் உறைகின்றன எனக் கூறுகின்றார்.

''பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு.'' (மெய் உணர்தல்-1) திருக்குறள்

என்ற குறளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது. தொடர்ந்து அடர்ந்து துன்புறுத்தும். இப்பிறப்பினையும், இறப்பினையும் விட்டு நீங்கும் வழியினை நினையாமல் மேலும் மேலும் இப்பிணியில் உழல்கின்றேன் என்ற துன்பம் கலந்த வேண்டுதலை அறிய முடிகிறது. இந்நிலை - தலை எழுத்து சிரைத்தால் போகுமா? என்ற நாட்டுப்புறப் பழமொழியோடு ஒத்துப்போகிறது.

அந்தரத்தில் ஊசலாடும் ஊசல் போலவே உடலும் உயிரும் ஆடிக்கொண்டிருக்கின்றன. தொங்கிக் கொண்டிருக்கும் ஆடிக் கொண்டிருக்கும் கயிறாகிய உயிர் எப்போது வேண்டுமானாலும் அறுபடலாம். மீண்டும் அது பிணைக்கப்பட்டு ஊசல் தொடர்வது போன்று இப்பிறவியும் தொடர்கிறதே என்ற வேதனை வெளிப்பாடு,

''ஊசலாட்டும் இவ்வுடல்உயிர்

ஆயின இருவினை அறுத்து'' (பா:8)

என்று வெளிப்படுகிறது. மற்றோர் பாடலில்,

''மையலால் இந்த மண்ணிடை

வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டு'' (பா:8)

என்று தன்னைக் குறை கூறிக் கொள்கிறார். ஊழின் பெருவலியாவுள? என்பதைப் போல தடுமாற்றமுடைய ஆசையினால் இப்பேற்றினை இழந்து விடுவேனோ? என்ற அச்சம் வெளிப்படுவதை அறிய முடிகிறது.

தங்களுக்கு ஏற்படும் இன்பதுன்பங்களுக்கு, எல்லாம் விதிதான் காரணமென்று நாட்டுப்புறச் சமுதாயம் நம்புவதை மாணிக்கவாசகரும் நம்புகிறார் என்பதை இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

''தலையை லவுந்து தாழம்பூ சூடீனிங்கோ

தலையிலே போட்ட எழுத்து தாயார் அறியலையோ''

என்ற பழமொழியும் நினைவு கூரத்தக்கது.

மாதர் மயக்கம்:-

மனதில் எழும் ஆசைகளிலே தலையாய விருப்புடையது மங்கையர் மேல் செல்லும் காம இச்சை ஆகும். இத்தகைய விருப்பிலே மானிடர்கள் சிக்கித் திளைத்து மூழ்குதல் என்பது இயற்கை. ஆனால் மாணிக்கவாசரும் இச்சிக்கலில் மூழ்கித் தத்தளிப்பது என்பது வியப்பான செய்தியாக அமைகிறது.

மானிடப்பிறவி மிக உயர்ந்தது என்பதை ஒளவைப்பிராட்டியும் கூறுகிறார். மாணிக்கவாசகர் இதை உணராமலில்லை. அறியாமலுமில்லை. இருப்பினும் புலனடிமைக்கு ஆளானேன் என்பதை ஒத்துக் கொள்கிறார். இத்தகைய விபரீதத்திற்குப் பிறகே மனம் தெளிந்து உண்மை உணரத் தலைப்படும் போக்கினை,

''வணங்கும் இப்பிறப்பு இறப்பிவை

நினையாது மங்கையர் தம்மோடும்

பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத்

தழுந்திநான் பித்தனாய்த்திரிவேன்'' (பா:6)

என்று வெளிப்படையாகக் கூறுகிறார். பினையின் காரணமாகத் தொடரும் இப்பிறப்பில் பெண்கள்பால் மையல்கொண்டு பின்னால் அலைகின்ற நிலையினைக் கூறுவதோடமையாது.

''சாந்தமார் முலைத் தையல்நல்

லாரோடுந் நிலைதடுமாறாகி'' (பா:2)

என்று புலம்பும் மாணிக்கவாசகரின் மனநிலையை, ஆராயுமிடத்து பெண்கள் தவத்திற்கும், மனவொருமைக்கும் இடையூறு என்று சமணர்கள் கருதியது போன்று இவரும் நினைக்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மற்றோர் பாடலில்,

''கருங்குழலினார் கண்களால்

ஏறுண்டு கலங்கியே கிடப்பேன்'' (பா.4)

என்று பிறப்புக்கு ஏதுவாகிய பொய்களையே விரும்பிக் கூறித்திரியும் பெண்களினால் வருந்தி அழிந்து விடுவேனோ என்று அஞ்சுகிறார்.

சங்ககாலந் தொட்டே மக்களிடையே இறைவழிபாடு, நம்பிக்கைகள், தொடர்ந்து காணப்படுகின்றன. அத்தகைய வழிபாட்டு நம்பிக்கைகள், நாட்டுப்புற மக்களிடையே மட்டுமல்லாது இறைவனை அடையத் துடிக்கும் ஞானிகளிடத்தும் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதை மாணிக்கவாசகரின் பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

நவீன மயமாக்கல், உலகமயமாக்கல், ஆங்கிலக் கல்வி என அறிவியலின் வியத்தகு மாற்றங்களை மானுட சமூகம் உள்வாங்கி மாறி நின்றாலும் அடிப்படையில் மக்கள் நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்த வாழ்வை வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. இவை நமது நாட்டுப்புற முன்னோர்களின் எச்சமாகக் கொள்ளலாம். மேலும் மக்களின் வாழ்வை மேம்படுத்த எண்ணிய ஞானிகள் தங்கள் கருத்துக்களைப் பாடல்களாக வடித்தபோது இந்த நம்பிக்கைகளை மனதில் கொண்டார்கள் என்பதையே இக்கட்டுரை காட்டுகிறது.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக