03/02/2011

கண்ணகி - மீள் பார்வை - அ. நந்தினி

தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவி கண்ணகியின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் விளைவாக இன்றுவரை தமிழக, கேரள மக்கள் கண்ணகியைத் தெய்வமாக வணங்கி வருகின்றனர். சிலப்பதிகாரப் பனுவலின் பல இடங்களில் அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்திப் பாடியுள்ள செய்திகளும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தாய்வழிச் சமூகம் மறைந்து பெண்ணை அடிமை நிலையில் வைத்திருந்த காலகட்டத்தில் வாழ்ந்த கண்ணகியின் செயல்பாடுகள் பெண்ணுக்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மீறிய புரட்சிப் பெண்ணின் செயல்பாட்டினை ஒத்ததாகவும் அமைந்துள்ளன. அவ்வகையில் சிலப்பதிகாரப் பனுவலை அடிப்படையாக வைத்து கண்ணகியின் பாத்திரப் படைப்பை மீள்பார்வை செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கற்பு என்பதை மையமிட்டே ''பத்தினி'' என்னும் அடையாளம் பெண்ணுக்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கற்பு என்பதற்கு விளக்கம் கூற வந்த தொல்காப்பியர்,

''கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே'' (தொல் 1088)

என்று கூறுகிறார். அதன் பின்பு, ''கற்பெனப்படுவது சொற் திறம்பாமை'' என்று கணவனின் சொல்லுக்கு எதிராகப் பேசாத பெண்மையின் தன்மையே கற்பு எனக் கூறப்பட்டது. இக்கற்பு என்னும் கோட்பாடுகளை முன்னிறுத்தியே ''பத்தினி'' என்ற பெண்ணின் அடையாளம் அமைகிறது.

மேலே கூறிய இரண்டு தன்மைகளும் கண்ணகியின் வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. அவள் ''கொடுப்பக் கொள்வதுவே'' என்பதற்கேற்ப மனைவியாகின்றாள். அதே போல ''சொற்திறம்பாமை'' என்பதற்கேற்ப எதிர்மொழி கூறாமல் வாழ்கிறாள். எனவே இங்குக் கண்ணகியின் கற்பு முன்னோரின் வாக்குப்படிச் சிறப்புடையதாகிறது.

''பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின்'' (குறள்:59)

என்ற குறட்பாவின் மூலம் வள்ளுவரும், கற்பு என்று கூறப்படும் ''உறுதித் தன்மை ஒரு பெண்ணுக்கு உண்டாகப் பெற்றிருந்தால் அப்பெண்ணினும் பெருமைப்பட தக்கவையாக வேறு எவையும் இல்லை'' என்று கூறுவதற்கேற்பச் சிலம்பில் கண்ணகியின் கற்பு திண்மையுடன் கூடியதாக அமைந்துள்ளது. ''பிரிந்த கணவனை மீண்டும் பெறவேண்டும் என்பதற்காகப் புற ஆற்றலாகிய தெய்வத்தின் துணையை நாடாதவள் கண்ணகி. காமவேள் கோட்டம் கை தொழுதால் பிரிந்த கணவனைப் பெறலாம் என்று தேவந்தி கூறியபொழுது ''பீடு அன்று'' என இரண்டு சொற்களால் அறம் சுட்டினாள் கண்ணகி. கணவனைப் பெறுவதெனின் தன் பொறையாகிய பெருந்தவத்தால் பெறுதல் வேண்டுமே அன்றி, வேறொரு கடவுளை வணங்கி அவனைப் பெறுவது பெண்மைக்குப் பீடு தராது என அவள் உரைப்பது அவளின் கற்பின் திண்மையை உணர்த்துகிறது'' (மா.ரா.போ. குருசாமி, சிலம்புவழிச் சிந்தனை, பக். 4-5) என மா.ரா.போ குருசாமி கூறுவது கண்ணகியின் வைராக்கியமான மனதைக் காட்டுவதாக அமைகிறது. இப்பண்பு சங்க இலக்கியத் தலைவியர் அனைவருக்கும் உரிய ஒரு பொதுமைப் பண்பாகவே அமைந்துள்ளதையும் காணமுடிகிறது ''முல்லை சான்ற கற்பினாள்'' என்பதும்கூட முல்லை நில உரிப்பொருளான இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பதை மையமாகக் கொண்டது. இது தலைவனைப் பிரிந்து தலைவி தனித்து இருத்தல் என்ற பிரிவையும் உள்ளடக்கியது. இதனையொட்டியே கண்ணகியின் வாழ்விலும் பிரிவு என்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. சிலம்பின் ஆரம்பத்தில் கானக் குறவர்கள்,

''பொழம்பு வேங்கை நலங்கினர் கெழுநிழல்

ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு'' (பதிகம் - 4-5 வரிகள்)

என்று கூறுவதிலிருந்தே இப்பனுவலில் ''பத்தினித் தெய்வம்'' என்ற ஆக்க முயற்சி தொடங்கிவிடுகிறது. சாத்தனாரின் மூலம் கண்ணகியின் வரலாறை அறிந்த இளங்கோவின் மனத்திலும் கண்ணகி உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறாள். எனவே இளங்கோ காப்பியத்தின் வழிநெடுகிலும் அக்கருத்தை எடுத்துச் செல்கிறார். அல்லது அக்கருத்தை மையமாகக் கொண்டே தமது காப்பியத்தை வளர்த்துச் செல்கிறார் என்பதை அறியமுடிகிறது.

கண்ணகியின் நலம் பாராட்டும் கோவலன் அவளைத் தெய்வங்களுக்குச் சமமாக எண்ணிப் பாராட்டுகிறான். மேலும் ''சாலி ஒரு மீன் தகையாள்'' என்றும் ''தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்'' என்றும் இளங்கோ கூறுவதன் மூலமும், வேங்கை மரத்தடியில் கண்ணகியைக் கண்ட குறவர்கள் ''சிறுகுடியீரே, சிறுகுடியீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே'' எனத் தெய்வமாக வழிபடுவதன் மூலமும், தெய்வமேறப் பெற்ற சாலினி தன் நிலை மறந்து,

''இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து

ஒருமா மணியாய் உலகில் தோன்றிய

திருமா மணி''

என்று பாடுவதன் மூலமும் ''காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாமமல்லது நவிலாது என் நா'' என்று அருகனைத் தவிர பிற கடவுளார் பெயரைக்கூட கூறமாட்டேன் எனக் கூறிய கவுந்தியடிகள் தன் கொள்கையை விட்டுவிட்டுக் ''கற்புக் கடம்பூண்ட வித்தெய்வமல்லது, பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்'' எனக் கூறுவதாலும் கண்ணகியின் வாழ்வைக் கேட்ட சேரமாதேவி ''பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்'' எனக் கூறுவதாலும், ''இமய மால்வரக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுதவோர் கற்கேயாதலின்'' என்று கூறுவனவற்றின் மூலமும் கண்ணகியை இளங்கோவடிகள் ''பத்தினித் தெய்வம்'' என்னும் நிலைக்கு உயர்த்துகிறார். இதை ஒரு திட்டமிட்ட கதைப்போக்கின் வழியே நகர்த்தி உயர்த்தும் ஒரு போக்கு என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் கண்ணகியின் வாழ்வை முழுவதும் அருகிலேயே இருந்து கண்டவர்கள் யாரும் இல்லை. வாய்மொழியாகக் கூறப்பட்ட கதையை மையமாகக் கொண்டே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டுள்ளது. எனவே முழுக்க முழுக்க உண்மை வரலாறே எழுதப்பட்டுள்ளது எனக் கொள்ள முடியாது. கண்ணகி கதை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கூறப்படுவதை வைத்தே இதனை அறிய முடிகிறது. கண்ணகி கதை என்று மலையாள நாட்டில் கூறப்படும் கதையைச் சிலம்புடன் ஒப்பு நோக்கினால் வேறுபாடுகள் தெற்றென விளங்கும்.

கண்ணகியைப் போன்றே சிறப்புப் பெற்ற கோப்பெருந்தேவி, மாதவி போன்றோரின் வாழ்வு ஏன் பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்த்தப்படவில்லை என்ற வினா எழும்புகிறது. கற்பைத் தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்று மூன்றாகச் சான்றோர் பிரிப்பர். இதில் தலைக்கற்பு என்பது கணவன் இறந்தவுடன் அவனுடன் அந்த நிமிடமே இறக்கும் பெண்ணின் தன்மையைக் குறித்தது. இதற்குச் சான்றாகக் கோப்பெருந்தேவியின் வாழ்வு அமைகிறது. கணவன் இறந்த பிறகு அவனது சிதையில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது இடைக்கற்பு என்னும் தன்மையுடையது. இதற்குச் சான்றாகச் சிலம்பில் பாத்திரம் இல்லை. கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பு நோற்று விதவையாக வாழ்பவளின் கற்பு கடைக்கற்பு எனப்பட்டது. இதற்குச் சான்றாக மாதவியின் வாழ்வு அமைகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று கற்பு நெறிகளில் எதிலும் அடங்காத ஒரு தன்மையைக் கண்ணகியின் வாழ்வு காட்டுகிறது. இக்கற்புக் கோட்பாட்டின்படி நோக்கினால் பத்தினித் தெய்வம் கோப்பெருந்தேவியே என்பது தெளிவாகும். ஆனால் சிலம்பில் கண்ணகியே பத்தினித் தெய்வம் என்று போற்றப்படுகிறாள். இது கண்ணகியைக் கடவுளாக்கிய முயற்சிக்குச் சான்று பகர்வதாக அமைவதைக் காணமுடிகிறது.

குடிமக்களை எந்தக் குறையும் இல்லாமல் காக்கும் பொறுப்பு மன்னனுடையது என்றும், மண்ணகத்து உயிர்களுக்கெல்லாம் ஆதரவாய் நன்மைகள் செய்து துன்பத்தைப் போக்குவது தெய்வத்தின் கடமை அல்லது அருள் என்றும் மக்கள் நம்புகின்றனர். தன் அரசாட்சிக்கு உட்பட்ட நாட்டில் தனது தவறான தீர்ப்பினால் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் இறப்பதற்குத் தாம் காரணமாகி விட்டதை அறிந்த பாண்டிய மன்னன் உயிர் துறந்து சிறப்புப் பெறுகிறான். ஆனால் அவன் இறந்த பிறகும் தெய்வம் என்று போற்றப்படுகின்ற கண்ணகி, பொதுமக்கள் வாழும் ஊரையும், அவர்களின் உடமைகளையும் தீக்கிரையாக்குகிறாள். இது மக்களைக் காக்கும் தெய்வம் செய்யும் செயலா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு ''ஊழ்வினை'' என்று கூறியது மட்டுமே தீர்வாகாது. அந்தணர்களை மட்டும் ஆண்களில் எரியாமல் தப்பித்துக் கொள்ள எதற்கு வாக்களிக்க வேண்டும். இதுவே சிலப்பதிகாரம் ஒரு திட்டமிட்ட கதைப்போக்கின் வழியே தமது கதை நகர்த்துதலைச் செய்ததற்குச் சான்றாக அமைகிறது. மேலும் இறந்தவர்கள் மட்டுமே விண்ணுலகை அடைய முடியும் என்பது ஆகம நியதி அதனால்தான் ''திரிசங்குச் சொர்க்கம்'' என்ற ஒன்றை விசுவாமித்திர முனிவன் உருவாக்கினான் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. ஆனால் சிலம்பில் கண்ணகி பதினான்காவது நாள் மனித உருவுடன் விண்ணுலகம் சென்றாள் என்பது சந்தேகத்துக்குரியதாகிறது.

இவ்வாறு எழும் பல வினாக்களின் மூலம் சிலப்பதிகாரம் கண்ணகியைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக் காட்டும் ஒரு பணியைப் பிரதானமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. அதனால்தான் சிலம்பில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைவரும் கண்ணகியைத் தெய்வமாகவே பார்க்கின்றனர். அவ்வாறு பார்க்கும் பாத்திரப் படைப்புகள் அனைவரும் இளங்கோவின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கருத்துப் பாத்திரங்களாகவே உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது. அக்காலத்தில் ''அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப'' (தொல். 1045) போன்ற கருத்தாக்கங்களின் மூலம் பெண்களை அடிமை நிலையில் வைத்திருந்த போக்கினை மீறித் தன் கணவன் கள்வன் அல்லன் என்று விவாதித்த ஒரு புரட்சிப் பெண்ணாகவே கண்ணகியின் வாழ்வு அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

சாத்திரங்களையும், சடங்குகளையும் போற்றிய அக்காலத்தில் தேவந்தி கூறியதை ஏற்காமல் ''பீடு அன்று'' என்று மறுத்த இடத்திலும், கோவலனிடம் ''விருந்து இழந்த என்னை'' என்று கூறுமிடத்திலும், வழக்காடு காதையிலும், மேலும் சில இடங்களிலும் கண்ணகி அக்காலப் பெண்களின் வாழ்விலிருந்து விலகி புதுமைகளைச் செய்த புரட்சிப் பெண்ணாகிறாள் என்பதே உண்மை. பத்தினித் தெய்வம் எனக் கூறுவது ஆக்கப்பட்ட வரலாறே என்பது தெளிவாகும்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக