பெண்ணியச் சிந்தனையோடு எழுதிவரும் பெண் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கணிசமான அளவுக்கு வளரத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்வகையில் ராணிசிதரனும் ஈழத்து இலக்கிய உலகுக்கு அறிமுகமாகி வரும் ஒருவராக விளங்குகிறார். தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற இவர் தற்பொழுது ஆசிரிய, ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். சிறுதைத் துறையில் நடுகல் இவரது மூன்றாவது படைப்பாகும். இத்தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
''நடுகல்'' என்பது நினைவுச் சின்னமாகும். இக்கதை போர்ச்சூழலில் தன் மகனுக்காக ஒரு தாய் செய்த தியாகத்தை உணர்த்துகிறது. நிலாந்தன் போன்ற போராளிகளும், அவனின் தாய் போன்ற தியாகிகளும் நிறைந்த இயல்பைக் காண முடிகிறது.
''எச்சங்கள்'' போர்ச்சூழலில் மக்களின் வாழ்வில் ஏற்படத் தொடங்கியுள்ள மாற்றங்களை இனங்காட்டுகிறது.
காலச்சுவடுகள் இந்திய அமைதிப்படையின் அட்டகாசங்கள் எந்த அளவுக்கு அநியாயமாக மனித உயிர்களை அழித்துக் குடுஃம்பங்களை நாசமாக்கின என்பன எடுத்துக்காட்டுகின்றது.
ஞாபகங்கள் என்ற கதை, சிறுகதை பாத்திரங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
''ஒட்டுமா'' சாதியமைப்பும், பிரதேச வாதமும் மக்களை வதைக்கச் செய்வதைக் காட்டுகிறது.
''ஒரு கிராமம் அழுகிறது'' என்ற சிறுகதை மருத்துவத் துறையில் பட்டம் பெற்றுத் தனது கிராமத்து மக்களுக்குச் சேவை செய்ய விரும்பிய இளைஞன் ஒருவன் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு மரணமான நிலையையும், அதனால் மனம் பாதிக்கப்பட்ட தாயின் நிலையையும் எடுத்துரைக்கிறது.
''குருதட்சிணை'' என்ற படைப்பு ஆசிரியர்க்கும், மாணவர்களுக்கும் இடையே நிலவும் தலைமுறை இடைவெளியை இனங்காட்டுகிறது.
மச்சம், வாழ்தல் என்பது ஆகிய சிறுகதைகள் பெண்ணிய நோக்கத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவ்விரு சிறுகதைகளே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
பெண்ணியம் - விளக்கம்:-
பெண்ணியம் என்ற சொல் (Feminism) என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். இச்சொல்லுக்குப் பலரும் பலவிதமான விளக்கங்களை வழங்குகின்றனர். ஆகவே பெண்ணியம் எது என்று வரையறுத்துக் கூற முடியவில்லை.
''பெண்ணியம் என்பது பெண்ணின் நிலையை அதாவது உலகத்தோடு பெண் எத்தகைய தொடர்பு கொண்டிருக்கிறாள், எவ்வாறு அவள் அடக்குமுறைக்கு ஆளாகிறாள், ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற நிலை நிலவுதல் போன்ற பல செய்திகளை நன்கு அறிவதும், அவ்வறிவினை மேற்கூரிய நிலையை மாற்றியமைக்கத்தக்க சக்தியாகப் பயன்படுத்தலும் ஆகும் என்று ராஜம் கிருஷ்ணன் கூறுகிறார்''. மேலும் அவரே ''பெண்ணியம் ஸ்தூலமான வரலாற்றுக் கலாச்சார நடைமுறைகளிலும், பார்வைகள், உணர்வுகள், செயல்பாடுகளில் நிலையிலும் கொண்டிருப்பதால் இதன் வரைமுறையானது மாற்றமடையக்கூடும். மாற்றமடையவும செய்யும்'' (கா,பெண்) என்கிறார்.
பெண்ணியத்தின் நோக்கம்:-
பெண்கள் அடிமைப்பட்ட நிலைக்கு அடிப்படைக் காரணம் ஆண் ஆதிக்கமே. பாலின ரீதியான ஒடுக்குமுறையே வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நிலவுகிறது. சமூகம், அரசியல், குடும்பம், பொருளாதாரம், கலை போன்றவற்றில் அதன் இனம் கண்டு அதற்கு எதிராக இயங்கப் பெண்கள் தம்முள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தைக் காணச் செய்வது பெண்ணியத்தின் நோக்கம் என்று விஜயலட்சுமி எஸ். சுட்டிக்காட்டுகிறார். (ப. 24)
மச்சம் என்ற சிறுகதை:-
மச்சம் ஒருவருக்கு அழகைத் தருகிறது. மற்றொருவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறது. ஆனால் இக்கதையில் மச்சம் ஒரு பெண்ணின் இல்லற வாழ்க்கையே சீர்கெடச் செய்கிறது. ஆக மச்சம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வேறுவேறு நிலையை ஏற்படுத்துகிறது.
கீதா கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவள். படிப்பு முடிந்தவுடன் அவளுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். பெற்றோர் பார்த்த வரனையே வாழ்க்கைத்துணையாக ஏற்க சம்மதிக்கிறாள். கல்லூரியில் பயில்கின்ற காலத்திலேயே அவளைத் திருமணம் செய்ய நினைத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவன் பார்த்திபன், அவளுடைய அன்பிற்காக ஏங்கி, அத்தகைய அன்பு கிடைக்கப் பெறாமல் மனம் உடைந்து போனவன், கீதாவிற்குத் திருமணம் என்ற செய்தியை அறிந்த, அவன் அவள் திருமண்ம் செய்து கொள்ள இருந்த மாப்பிள்ளைக்கு மொட்டைக் கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்தில், முன்பொரு நாள் பேச்சுவாக்கில் கீதாவின் தோழி சுமதி அவளுடைய நடு முதுகில் ஐம்பது சத அளவில் மச்சம் இருக்கிறது என்று கூறியதை எழுதி அனுப்புகிறான்.
ஆண்கள் தனக்கு வரப்போகிற பெண் எப்படி இருக்க வேண்டும் என்று பல கற்பனைகள் செய்து வைத்திருக்க கூடியவர்கள். ஆடை அணிகலன்கள் மிகுதியாக இல்லாவிட்டாலும் கற்பு என்ற அணிகலன் அவளிடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கீதாவின் கணவனும் அத்தகைய எதிர்பார்ப்பு உடையவன். ஆகவே தன்னுடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக திருமணம் முடிந்த அன்று அவளிடம் ''உன் முதுகில் ஐம்பது சத அளவில் மச்சம் இருக்கிறதா?'' என்று கேட்கிறான். இக்கேள்வியை எதிர்ப்பார்க்காத கீதா அவனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறாள். மாப்பிள்ளையும் அவ்வாறே வெளியே செல்கிறான். அவன் வெளியே போவதைப் பார்த்த கீதாவின் பெற்றோர்கள் கேள்விக்குறியோடு அவளைப் பார்க்கின்றனர்.
கீதாவின் தாய் என்ன நடந்தது என்று அறியும் ஆவலிலும், அதே சமயத்தில் மாப்பிள்ளை வீட்டை விட்டு வெயியே செல்லாமலும் தடுக்க வேண்டும் என்று முற்படுகிறாள். அதற்கு கீதா ''அம்மா நான்தான் அவரைப் போகச் சொன்னேன் நாங்கள் செய்துகொண்ட கல்யாண ஒப்பந்தம் சரிவராது விடுங்கோ போகட்டும்'' (ப.55) என்று தாயிடம் சொல்கிறாள். ஆனால் தந்தையிடம் அவ்வாறு சொல்ல முடியவில்லை. ''அப்பா கலியாணம் முடிந்த முதல் நாளே ஒருவன் தன் மனைவியிடம் எதைக் கேட்க கூடாதோ அதை அவன் என்னிடம் கேட்டான் எனக்குப் பிடிக்கல்லே'' - ப.56 என்று காரணத்தை எடுத்துரைக்கின்றாள்.
இல்லறத்தை வெறுத்த சீதா வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கிறாள். அங்கு அவளுடைய கல்லூரி தோழி, மாலாவின் வீட்டில் தங்கி இருக்கிறாள். அப்பொழுது ஒருநாள் அங்கு பார்த்திபன், மாலாவின் வீட்டிற்கு வருகிறான். அவனை எதிர்ப்பார்க்காத கீதா, ஓ! பார்த்திபன் எங்கே வந்தீங்க என்று கேட்கிறாள். அவனும் மாலாவின் கணவரும் ஒரே அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரிகின்றார்கள். மாலாவின் கணவர் வீட்டிற்கு வரமுடியாத நிலையில் பொருளைக் கொடுக்கும்படி சொன்னார் என்று காரணம் சொல்கிறான்.
அவனுடைய பழைய நினைவுகளோடு கூடவே குற்ற உணர்வின் உறுத்தலும் நிலைகுலையச் செய்கிறது. இவன்தான் மொட்டைக் கடிதம் எழுதினான் என்பது கீதாவிற்கு தெரியாது.
ஒருநாள் மாலாவிடம், கீதாவை மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்கிறான். அவள் கீதாவிடம் கேட்டுப் பதில் அளிப்பதாகச் சொல்கிறாள். மாலா, கீதாவிடம் இச்செய்தியைக் கேட்கின்றபோது முதலில் மறுத்தவள், மாலாவின் ஆலோசனையினால் மறுமணத்திற்குச் சம்மதிக்கிறாள். இச்செய்தியை மாலா, பாத்திபனிடம் சொல்கிறாள்.
கீதாவின் சம்மதத்தினைப் பெற்ற பார்த்திபன் மகிழ்ச்சியின் காரணமாகக் ''கீதா நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்'' ''என்ன உண்மை?'' உங்கள் நடுமுதுகில் ஐம்பது சத அளவிலான மச்சம் இருக்கிறதாமே? உங்கள் சினேகிதி சுமதி சுற்றுலா போனபோது நீங்கள் கடலில் குளிச்சீங்களாம். அப்போதுதான் கண்டதாகவும், கீதா உனக்குக் கிடைச்சால் பெரும் அதிர்ஷ்டக்காரன் நீ என்று சொன்னாள் என்று கூறுகிறான். அதற்குக் கீதா நீங்கள் இதை யாருக்குச் சொன்னீர்கள்? என்று கேட்கிறாள். நடந்த உண்மையை அவன் மூலம் அறிந்த கீதா அவனையும் வெறுக்கிறாள்.
இறுதியில் வாழ்க்கைத் துணையாக யாரையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக அவளுடைய மச்சம் அதிர்ஷ்டமே என்பதை உணர்கிறாள். கீதாவைப் பொறுத்தவரையில் சந்தேகப்பட்ட கணவனையும், சந்தேகத்தைச் தூண்டச் செய்த பார்த்திபன் போன்றவர்களையும் ஏற்காத துணிவு வரவேற்கத்தக்கதாகும்.
வாழ்தல் என்பது என்ற சிறுகதை:-
ஒருவர் தன் வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறை செய்து வாழ்வர். மற்றொருவரோ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழ்பவர்களும் உண்டு. ஆக வாழ்க்கை என்பது அவரவர்களின் சூழ்நிலையைப் பொறுத்தது.
''வாழ்தல் என்பது'' என்ற சிறுகதையின் கவிதா ஒரு குடும்பத் தலைவி. அவளுக்கு இரு குழந்தைகள் உண்டு. பள்ளியில் பயில்கின்றனர். அவள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். தன் நிறுவன பணியின் காரணமாகப் பிற ஊர்களுக்குச் சிறப்பு கருத்தரங்கிற்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்கின்ற போது இரயிலில் பயணம் செய்வது இயல்பு அதே இரயிலில் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு மனைவி, குழந்தைகளைப் பார்ப்பதற்காக மனோகரனும் வருகின்றான். அப்படித் தொடர்ந்து வருகின்ற போது கவிதாவும், மனோகரனும் சந்திப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன. பின்னர் இருவரும் நட்பு என்ற உறவுடன் பழகுகின்றனர். அந்த நட்பினால், கவிதா வெளியூரில் நடக்கும் கருத்தரங்கிற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே மனோகரனிடம், அவளுக்கும் சேர்த்துப் பயணத்திற்கான பதிவினைச் செய்துவிட்டு, தகவலைத் தொலைப் பேசி மூலம் தெரிவிக்கின்றான். தொலைபேசியை எடுத்தவர் கவிதாவின் கணவன். ஏற்கனவே சந்தேகப் பேர்வழி இத்தொலைபேசி செய்தியைக் கேட்டு மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் ஆகிறான். காரணம் அவன் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருக்கக்கூடியவன். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த அவளிடம் வீட்டு வாசல் படியேறும் முன்னமே செய்தி என்னவென்று சொல்லாமல்
''வீட்டுக்கு ஒரு புருஷன் வெளிக்கு ஒரு புருஷன் என்று எத்தனைப் பேரை வைச்சிருக்கிறாய்?'' (ப. 104) எனக் கேட்கிறான். கணவனின் கடுஞ்சொல்லின் காரணம் புரியாமல் திகைத்து நிற்கிறாள். பின்னர் அவனே, ''யாரோ மனோகரனாம், அவன்தான் கள்ளக்காதலன் சிலிப்பறெற்ஸ்'' புக் பண்ணி இருக்கிறாரம். இரண்டு பேரும் உல்லாசமாக, சல்லாபமாக.... என்று சொல்லி முடிக்கும் முன்பே காரணத்தைப் புரிந்துகொண்ட கவிதா கணவனிடம், ''நிறுத்துங்க இப்படி வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு வெக்கமா இல்லை?'' என்று கேட்கிறாள். அதற்கு அவன் ''எதடி வெக்கம்? யாருக்கடி வெக்கம்?'' என்று காலாலும் கையாலும் கண்மூடித்தனமாக அவளைத் தாக்குகிறான். அடியைத் தாங்க முடியாத கவிதா ''இனி என் மேல் கை வைத்தால் சும்மா இருக்க மாட்டேன். எனக்கும் உனக்கும் உள்ள உறவு இந்த நேரத்தில் இருந்து அறுந்துவிட்டது'' என்று கூறுகின்றாள் (ப.105).
வாழ்தல் என்பது ஆணுக்குப் பெண் அடிமை என்ற கட்டுப்பாடுகள் சிலவகையில் இல்லாத வரை பிரச்சனை இல்லை. எல்லாவகையிலும் பெண்ணை அடக்கி ஆள நினைக்கின்ற ஆண்களுக்குக் கவிதாவைப் போன்றமுடிவு வரவேற்கத்தக்கது. பெண் என்பவள் வெறும் போகப் பொருள் அல்ல, அவளுக்கும் உள்ளம், உணர்வுகள், சுதந்திரம் அனைத்தும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆணுக்கு அடங்குதல் என்பது சிலவற்றுக்குத்தான். அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்க யார் நினைத்தாலும் அதைத் தடுத்து நிறுத்தி தன்னிச்சையாக வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டக் கூடியவள் பெண். அதிலும், கவிதா, கீதா போன்றவர்கள், வேலை பார்க்கின்றவர்கள், தன சொந்த காலில் நிற்பவர்கள், அடிமைத்தனத்தை வெறுப்பது என்பது ராஜம் கிருஷ்ணனின் பெண்ணின் கருத்தினை ஒப்பு நோக்கத்தக்கதாகும். யாருக்கும் அடிமையாகாமல், யாரையும் அடிமைப்படுத்தாமல் இருப்பதே வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே முடிவாகும்.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக