03/02/2011

திருநாவுக்கரசர் - முதல் அறப்போராளி - சரளா ராசகோபாலன்

இந்திய விடுதலை வரலாற்றில் காந்தியடிகளின் தலைமையில் சாதி, சமய, மொழி, இன, பால் வேறுபாடின்றி மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டனர். ஆங்கிலேயரை விரட்டினர். கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் இருந்த நிலைமை கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலும் இருந்தது.

இன்று அகிம்சாவாதி என்றதும் நம்முன் காந்தியடிகளின் உருவமே முன்நிற்கிறது. அவர் ஆங்கிலேயருக்கு எதிராக அறப்போர் புரிந்த போராளி எனலாம். அவருக்கு முன்னால் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவனுக்கு எதிராக அறப்போர் புரிந்த போராளியாக திருநாவுக்கரசர் இருந்தார் எனலாம்.

மொழி, இனம், சமயம், நாடு ஆகியவற்றால் வேறுபட்ட களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றியபோது, தேவார முதலிகளின் தலைமையில் பக்தி இயக்கம் தோற்றம் கண்டது. தமிழகத்தின் சமுதாய, பண்பாட்டுச் சீரழிவிற்குக் காரணமான சமண, பௌத்த மதங்களை விரட்ட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இத்தொடக்கம் சோழர் காலம் வரை நீடித்தது. பிற மதத்தவரை நீக்கும் தொண்டில் சைவமே முன் நின்றது. சைவ சமயத்தில் முதல் அறப்போராளியாகத் திருநாவுக்கரசர் விளங்கினார்.

சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகப் பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்த பெருமை திருநாவுக்கரசருக்கு உரியது. தன் பக்தியியக்கத்தைச் சாதி வேறுபாடற்ற, பொருள் ஏற்றத்தாழ்வற்ற, ஒன்றே சிவம் என எண்ணுகின்ற மக்களைக் கொண்டதாக அமைக்க விரும்பினார்.

சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும்

குலமும் கொண்டென் செய்வீர்

பாத்திரம் சிவமென்று பணிதிரேல்

மாத்திரைக்கு ளருமாற் பேறரே (திருமுறை - 5:60:3)

என்றார்.

''சங்கநிதி பதுமநிதி இரண்டும்தந்து

தரணியொரு வானளாவத் தருவரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்பே மல்லோம்

மாதேவர்க்கே காந்தர் அல்லாராகில்

அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே'' (திருமுறை - 6:95:11)

என்றார். தன் இலட்சியப் பாதையில் அடியிட்டு நடந்த அந்த அறப்போராளியின் அறநெஞ்சையும், இறைவன்பால் கொண்ட நம்பிக்கையையும், உறுதியையும் அறியமுடிகிறது.

திருநாவுக்கரசரின் அறப்போர் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. 1. பல்லவ மன்னனுடன் அறப்போர், 2. சமணர்களுடன் அறப்போர், 3. இறைவனுடன் அறப்போர். அறப்போராளிகளுக்குரிய பண்பு நலன்கள் அறப்போரில் வெற்றி பெறத் துணை நின்ற பாங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.

சத்திய சோதனை:-

அறப்போராளிகள் உடல், உள்ளம், சொல் ஆகியவற்றில் தூயராக இருக்க வேண்டும். பற்றற்ற உள்ளத்தினராகத் திகழ வேண்டும். பொன், பொருள், மங்கைக்கு மயங்காதவராக இருக்க வேண்டும். புலன் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும்.

அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார், ''ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்'' என்றார். திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை இறைவனே சோதித்தார். உழவாரப் பணிகள் செய்த இடத்தில் பொன்னும் நவமணிகளும் நிறைந்திருந்தன. அப்பர் அவற்றை மதியாது கல்லொடும் மண்ணொடும் புல்லொடும் சேர்த்து நீக்கினார். அப்பருக்கு முன் விண்ணக நடனமகளிர் வந்து ஆடினர். மயக்க விரும்பினர். நாவுக்கரசரோ சிவனைத் தவிர வேறு சிந்தனையற்றவராய் தன் கொள்கையில் நிலைநின்றவராய் மனம் தடுமாறாதவராக நின்றார். அவர்களை நோக்கி,

தம்மானைத் தன்மகனைத் தண்ண லாரூர்த்

தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்

எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்

இடையிலேன் கெடுவீர்கள் இடறேன் மின்னே'' (6:27:1)

என்று அறிவுறுத்தினார்.

தொண்டு உள்ளம்:-

அறபோராளிகள் தொண்டு உள்ளத்தினர். சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்பவர்கள் - முதல் அறப்போராளியான திருநாவுக்கரசர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளையும் பின்பற்றினார். ஆயினும் உழைப்பு நெறியை விளக்கினார். தொண்டு வாழ்வை மேற்கொண்டார். ''திருநாவுக்கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் என்று வாகீசர் தோன்றியதற்கான காரணத்தைச் சேக்கிழார் கூறினார். (திரு :1) ''என்கடன் பணிசெய்து கிடப்பதே'' என்று அப்பரே தன் நோக்கத்தை வெளியிட்டார். கையில் உழவாரப் படை தாங்கித் துப்புரவாளராகத் திகழ்ந்தார். ஞான சம்பந்தருக்கு முதியவராகிய தான், பல்லக்குத் தூக்கும் எளியராய் மாறினார். மழையின்றிப் பஞ்சத்தால் வருந்தியவருக்கு இறைவனருளை வேண்டி உணவு அளித்தார்.

அஞ்சாமை:-

தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பல்லவ அரசன் மகேந்திரவர்மன் சமண சமயத்தினன். அவனுடைய ஆளுகையில் தான் தருமசேனராக - சமணத் தலைவராக இருந்தார் நாவுக்கரசர்.

அவர் சிவன் அருளால் சூலைநோய் நீங்கியதைக் கண்ட சமணர்கள் அஞ்சினர். அழுக்காறு கொண்டனர். தம் சமயம் இனி வீழ்ந்தது என்று மருண்டனர். மன்னனிடம் ''சைவம் சார்ந்து நம் சமயத்தை அழித்தார் தருமசேனர்'' எனப் பொய்யுரை புகன்றனர். மன்னவனும் வெகுண்டு, நாவுக்கரசரை அழைத்து வரக் கட்டளையிட்டான்.

அறப்போராளியான நாவுக்கரசர், அஞ்சாமை மிக்கவர். பாராளும் மன்னனால் தன் உயிருக்குத் தீங்கு விளையும் என்பதை அறிந்தவர். ஆயினும் அவருடைய அஞ்சாமை, பேரரசனையே எதிர்க்கத் துணிந்தது. தனியொரு மனிதனாய் படைபலம் மிக்க மாமன்னனின் ஆணைக்கு அடங்க விரும்பவில்லை. அஞ்சா அறப்போராளியான அவர்.

''நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இன்பமே யெந்நாளும் துன்ப மில்லை'' (6:98:1)

என்றார். வந்த காவலர்கள் அடிபணிந்து நின்றதால், இரங்கி, ''ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று நினைந்து சென்றார். அறப்போராளிக்கு வேண்டிய அஞ்சாமையுணர்வை நாவுக்கரசர் பெற்றிருந்தார்.

இன்னா செய்யாமை:-

பகைவர்கள் தனக்குச் செய்யும் தீங்குகளைப் பொறுத்தலும் தீங்கு செய்த பகைவர்களுக்கு மனத்தாலும் தீங்கு செய்யாதிருத்தலும் அறப்போராளியின் தன்மையாகும்.

''எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை'' (குறள்-317)

என்ற வள்ளுவரின் வாக்கின்படி நடத்தலே அறப்போராளியின் செயலாகும். வள்ளுவர் வழியில் நாவுக்கரசர் ஒழுகினார்.

சமணர் பொய்மொழி கேட்ட பல்லவன், ஆண்ட அரசை உருகுபெருந்தழல் வெம்மை நீற்றறையினுள்ளிருக்க ஆணையிட்டான். திருநாவுக்கரசர் இறைவன் இணையடி நிழலையே தலைக்கொண்டு தொழதிருந்தார். நீற்றறையானது நாவுக்கரசருக்கு இளவேனிற் பொழுதாய், மாலைத் தென்றலாய் தண்­ர்த் தடாகமாய், வெண்ணிலவாய், யாழொலி முழங்கும் இன்னிசை அரங்காய், இறைவன் திருவடி நீழலெனக் குளிர்ந்தது.

''மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொகையும் போன்றதே

ஈச னெந்தை இணையடி நீழலே'' (5:90:1)

என்னும் பாடல் அவருடைய ''இன்னா செய்யாமை'' தன்மையை உணர்த்துகிறது. சமணர் இட்ட தீ பையவே அரசன் வயிற்றுக்குள் புகுமாறு ஞானசம்பந்தர் செய்தது போல நாவுக்கரசரும் மன்னவன் வயிற்றுக்குள் நீற்றறையின் வெப்பத்தை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. துன்பம் பொறுத்தார். மன்னனை வென்றார்.

உண்ணா நோன்பு:-

பொது வாழ்வில் ''உண்ணா நோன்பு'' என்ற உயரிய தத்துவத்தை - அகிம்சையின் ஆயுதத்தை இவ்வுலகில் காந்தியடிகள் அறிமுகப்படுத்துவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாவுக்கரசர் அதனைக் கைக்கொண்டார்.

பழையாறைக்கு வந்த வாகீசர், பழையாறை வீதிகளில் கோயில் கொண்டுள்ள பெருமானைச் சமணர்கள் மறைத்துத் தங்கள் கோயில்போல ஆக்கி வைத்துள்ளதைக் கேட்டு மனம் வருந்தினார். இறைவனிடம், ''வண்ணங் கண்டு நான் உம்மை வணங்கியன்றிப் போகேன்'' என்று உண்ணா நோன்பு மேற்கொண்டார். இறைவன் மன்னனிடம் அடையாளக் குறிகள் காட்டினான். ''நம்மையரசு கும்பிடுவான் நெறியிலமணர் தமையழித்து நீக்கிப் போக்கு'' என்று அரசனின் கனவில் கூறினான்.

அவனும் இறைவன் கூறிய அடையாளத்தின் வழி கண்டு, சமணர் தூரறுத்தான். அரசன் ஈசனுக்கு விமானம் ஆக்கினான். வழிபாட்டிற்கு நிபந்தங்கள் அளித்தான். நாவுக்கரசரும் பழையாற்று இறைவனைக் கண்டு களித்தார். முதல் அறப்போராளியான திருநாவுக்கரசர், சமணருக்கு எதிராக உண்ணா நோன்பு இருந்து நடத்திய அறப்போரில், சமணரை வென்றார்.

மனவுறுதி:-

ஒவ்வொரு அறப்போராளிக்கும் ஓர் இலக்கு உண்டு. அதை நோக்கியே அவர் மனவுறுதியுடன் செயல்படுவார். பல தலங்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி வழிப்பட்ட அப்பர், கயிலையில் உமையொரு பாகனாக இருந்த இறைவனைக் காணும் உயர்ந்த இலட்சியத்தை மேற்கொண்டார். அந்த இலட்சியப் பாதையில் எதிர்ப்பட்ட இடையூறுகளைக் கடந்தார். வெற்றி பெற்றார். இது இறைவனுக்கு எதிராக வாகீசர் மேற்கொண்ட அறப்போராகும்.

காளத்தி நாதரைத் தொழுது, பெருமலைகளையும் கான்யாறுகளையும், அவை தொடர்ந்த நாடுகளையும் கடந்த பின் திருப்பருப் பதத்தை அடைந்தார். விஞ்சையர், இயக்கர், கின்னரர், நாகர் முதலியோர் நாளும் வந்து வணங்கும் அம்மலையை வணங்கிப் பதிகம் பாடி வழிபட்டார். அதன்பின் தெலுங்கு, கன்னட, மாளுவ நாடுகளைக் கடந்தார். கங்கையைக் கடந்து காசிக்குச் சென்றார். பின்னர் மனிதர் செல்ல முடியாத வழிகளிலும் மனவுறுதியுடன் சென்றார். கால்கள் தேயக் கைகளால் தாவித் தாவிச் சென்றார். கைகள் மணிக்கட்டு அளவும் தேய்ந்தன. மார்பினால் தேய்ந்து உந்திச் சென்றார். உடம்பு முழுவதும் தேய்ந்த பிறகு இறைவன் முனிவர் வேடந்தாங்கி அவரிடம் வந்தான். ''உம் உடம்பு அழியும்படி நீர் இந்தக் கொடிய காட்டில் வந்ததென்ன?'' என்று கேட்டான்.

''வண்டுஉலாம் குழல் மலைமக ளுடன்வட கயிலை

அண்டர் நாயகர் இருக்கும் அப்பரிசு அவர் அடியேன்

கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்

கொண்ட என்குறிப்பு இதுமுனி யேஎன'' (பெ.பு.திரு. : 364)

விடையுறுத்தார் நாவுக்கரசர்.

திருநாவுக்கரசர் அறப்போராளிக்குரிய உள்ளத்தூய்மை, தொண்டுள்ளம், அஞ்சாமை, இன்னா செய்யாமை, உண்ணா நோன்பு மேற்கொள்ளல், மனவுறுதி, துன்பம் பொறுத்தல், கொள்கை உறுதி ஆகிய பண்பு நலன்களைப் பெற்றிருந்தார். அவர் பல்லவ அரசனுக்கு எதிராகவும், சமணர்களுக்கு எதிராகவும், இறைவனுக்கு எதிராகவும் நடத்திய அறப்போராட்டத்தில் வெற்றி கண்டார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறபோராளி காந்தியடிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். முதல் அறப்போராளி என்ற சிறப்புக்கு உரியவரானார்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக