03/02/2011

நடைச்சித்திரத்தில் எஸ்.வி.வி.யின் பங்களிப்பு - இரா. சுப்பையா

எஸ்.வி.வி-யின் கதைகள் ஆனந்த விகடனில் தொடர்கதைகளாக வெளிவந்தவையாகும். அவர் காலக் கட்டத்திலேயே இன்றைய மத்திய வர்க்கப் பிரச்சனைகள் தலைகாட்டத் துவங்கிவிட்டது என்பது அவர் படைத்த கதைகளின் வாயிலாக அறிய வருகிறது. கற்பனை கலக்காது சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை மறைக்காமல் வெளிப்படையாகக் காட்டியிருப்பது அவர் படைப்புக்களாகும். இன்றும் அவர் எழுத்துக்களானது வாசகர்களின் மத்தியில் அன்னியம் ஆக்கப்படாமல் மனதில்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் ஆகும். அவரது கதைகள் யாவும் சமூகத்தில் வாழும் மாந்தர்களை மையமிட்டதாகவே உள்ளன. எளிமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருப்பதற்கு இதுவும் முக்கிய ஒன்றாகும். எஸ்.வி.வி. முதலில் ஆங்கிலத்தில் தான் ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராகப் பணியாற்றிய ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) ஒரு திறமையான பத்திரிகை ஆசிரியர் நடுத்தர வகுப்பு வாசகர்களை பத்திரிக்கையில் எஸ்.வி.வி. தமிழில் கதைகள் எழுதினால் மிகவும் நன்கு ரசிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். முப்பது, நாற்பதுகளில் விலகி, சரளமான தமிழ் புகுந்திருந்த காலமாகவும் இருந்தது. நடுத்தர வகுப்பு வாசகர் வர்க்கமானது அப்படிப்பட்ட இதழ்களுக்காகக் காத்திருந்த காலமும் அதுவாகும். மேற்படியான சூழல்களையும், தேவைகளையும், ரசனைகளையும் நன்கு உணர்ந்து கொண்ட கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி, ஹாஸ்யரத்னம் என்று போற்றப்படும் எஸ்.வி.வி. போன்றவர்களின் தமிழ் எழுத்துக்களானது, பத்திரிக்கை உலகத்துக்குப் பயனைத் தரும் என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டார். அந்த விளைவின் பயனாகத்தான் 1933-ஆம் ஆண்டு எஸ்.வி.வி-யின் முதல் தமிழ்க் கதை ''தாகூயிணியின் ஆனந்தம்'' ஆனந்த விகடனில் பிரசுரமாயிற்று என்பது தெரியவருகிறது.

அன்றைய காலக்கட்டத்திலிருந்து, ஆனந்த விகடனால் எஸ்.வி.வி. வளர்ந்தாரா? அல்லது அவரால் ஆனந்த விகடன் வளர்ந்ததா? என்று கூற முடியாத நிலையில் அவரும் வளர்ந்தார், ஆனந்த விகடனும் வளர்ந்தது எனலாம். எஸ்.வி.வி-யின் தமிழ்க் கதைகள் யாவும் ஆனந்த விகடன் வாசகர்களுக்காக எழுதப்பட்டவையே என்றும் கூறலாம். அத்தமிழ்க் கதைகள் எல்லாமுமே, சமூகத்தின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமிட்டே எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களாகவும், அலுப்பு ஏற்படாத தன்மை கொண்டதாகவும் அமைந்திருந்தன எனலாம். ஆங்கில மொழியில் கதை எழுதும் பொழுது, அம்மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினைப் போல் தமிழ் மொழிக் கதைகளுக்குக் கொடுக்கவில்லை எனவும் எண்ணத் தோன்றுகிறது. நடுத்தர மக்களின் வாழ்வையும், அன்றாட வாழ்க்கை நாளினைக் கழித்து வரும் மக்களையும், அவர்கள் பின்பற்றி வாழ்ந்து வந்த குடும்பச் செயல்களையும் கொண்டே எஸ்.வி.வி-யின் கதைச் சித்திரங்கள் அமைந்திருந்தன. அவரின் நடையானது குடும்பம் எனும் வட்டத்தினை விட்டு ஒரு துளியும் விலகாமல் அதோடு ஒன்றி இணைந்த மாந்தர்களைக் கொண்டே பின்னப்பட்டிருந்தது. அவர் எழுதிய புதினங்கள் குடும்ப அமைப்பினை விட்டு விலகவில்லை. சிறுகதைகளும் அதுபோலவே இருந்தன. அச்சிறுகதைகளில் கூறப்படும் கதைப்போக்குத் தனித்தன்மை கொண்ட தனிச் சிறப்பாகவும் உள்ளது.

சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சமூக மரபுகளுக்கு ஏற்பவே வாழுகிறான். எனவே, தனிமனிதனின் குணங்களும், பழக்கங்களுமே சமூகத்தின் நிலையினை வெளிப்படுத்துகின்றன. எனவே தனி மனிதன் வாழும் வாழ்க்கையும் எண்ணப்படுகின்றது. எனவே, தனிப்பண்புகளைக் கொண்ட மாந்தர்களின் வாழ்க்கையினை எஸ்.வி.வி. தம் சிறுகதைகளில் கதைச் சித்திரங்களாகக் காட்டியுள்ளார். அவர் எழுத்தால் எழுந்த வாழ்க்கை கதைச் சித்திரங்களை நடைச் சித்திரங்களாகக் கருதுவதற்குரிய அமைப்பு இருக்கிறது எனலாம்.

நடைச்சித்திரம் - பொருள் விளக்கம்:-

படைப்பாளர்கள் தாம் வாழும் காலத்தில் கண்ணில் கண்ட காட்சிகளை, நிலைநிறுத்திக் கொண்டு, அவற்றைச் சித்திரங்களாக வெளிக்காட்டும் பொழுது தம் மனத்தில் நிலைத்து நிற்கச் செயததனை இயல்பான தன்மையில் வடிவமைத்துக் காட்சியாக்குகிறார். இதனைப் படைப்பாளரின் தனித்தன்மை என்றும் தனிப்பண்பு என்றும் கூறலாம். இதற்கு, தனக்கென ஏற்படுத்திக் கொண்ட முறை என்றும், பாணி என்றும் தமிழ் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. மேலும் எழுத்தால், பேச்சால் உருவாக்கப்படுகிறது என்றும் ஒருவரைப் பற்றிய உரைநடைச் சித்திரம் என்றும் அவ்அகராதி பொருளுரைக்கிறது. இவ்விளக்க உரைக்கு ஏற்பவே எஸ்.வி.வி-யின் கதைகளை எண்ணமிட முடிகிறது.

நடைச்சித்திரத்தின் தனித்தன்மை:-

தனித்தன்மை வாய்ந்த மனிதனின் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றும் நடைச்சித்திரங்களாக அமைகின்றன. எஸ்.வி.வி., ஆங்கில மொழியில் கதைகள் எழுதும் பொழுது கொடுத்த கவனத்தினை, தமிழ் மொழிக் கதைகளில் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தமிழ் வாசகர்கள் அதைப் பெரிதுபடுத்தியதாகவும் தெரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனால் அவர் சமூகப் பிரச்சனைகளையும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும், கனமான கருத்தையும் சாதாரணமான நடையில் தெளிவாக எடுத்துக் காட்டினார் எனலாம். மாமியார் - மருமகள் சிக்கல்களையும், இளம் தம்பதிகளின் ஊடல் நிலையினையும், சம்பளத் தட்டுப்பாடு பிரச்சனையையும், வீடு கிடைக்காத திண்டாட்டத்தினையும், குடும்பத்தில் ஒருவராக நின்று, அவர்களுக்குப் பழக்கப்பட்ட மொழியில் கலந்து சித்திரங்களாக வடிவமைத்தார். அதுவும் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது எனலாம்.

எஸ்.வி.வி-யின் கதைகளில் ஆளுமைக் கூறுகள்:-

ஆளுமைக் கூறுகளினைக் கொண்டு தான் எஸ்.வி.வி. தம் படைப்புகளில் ஒன்றான ''வாழ்க்கையே வாழ்க்கை'' எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் உள்ள சித்திரங்கள் யாவினையும் நடைச்சித்திரங்களாக அமைத்துள்ளார். குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளைக் ''குடும்ப விநோதங்கள்'' என்ற பார்வையில் ஒன்பது சித்திரங்களையும் ''உலக இயல்பு'' என்ற பார்வையில் பனிரெண்டு சித்திரங்களையும் காட்டியுள்ளார். இச்சித்திரங்கள் யாவும் மக்களின் பேச்சு வழக்குச் சொற்களிலும், அவர்கள் வாழுகின்ற நடை, உடை, பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவும் தீட்டியுள்ளார். மக்களின் நடப்பியல்புகளாக நிகழ்வனவற்றை உலக இயல்புகளாகவும் சிந்தித்துள்ளார். எஸ்.வி.வி. காட்டும் நடைச் சித்திரங்களான வாழ்க்கைச் சித்திரங்கள் யாவுமே குறுகிய பக்கங்களின் அமைப்பிலே உள்ளதால் நடைச்சித்திரங்களின் ஆளுமைக் கூறுகளுக்கு உட்பட்டே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் புலப்படுகின்றது. தமக்குரிய வெளிப்பாட்டுத் தன்மையில் வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டினாலும், அதில் முக்கியமாக நகைச்சுவைக்கு முக்கிய பங்கினைக் கொடுக்கிறார். கதைகளில் அங்கம் வகிக்கும் மாந்தர்களின் பண்பாட்டு மரபுகளினை நகைச்சுவைகளின் ஆற்றலிலேயே காட்டியுள்ளார் என்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது. நடைச்சித்திரங்களினை அமைப்பது தமக்குரிய கருத்து வெளிப்பாடு எனினும், அதில் நகைச்சுவையினைக் கலப்பதன் மூலம் நடைச்சித்திரங்களுக்கு வடிவமைத்தவர் என்றாலும் பொருத்தமாகும்.

தமிழ் வளர்ச்சிக்கு எஸ்.வி.வி.யின் பங்களிப்பு:-

1. வாழ்க்கையே வாழ்க்கை

2. செல்லாத ரூபாய்

3. ஹாஸ்யக் கதைகள்

4. தீபாவளிக் கதைகள்

5. கோபாலன் ஐ.ஸ’.எஸ்.

போன்ற நூல்களாகும்.

நடைச்சித்திரத்தில் எஸ்.வி.வி.-யின் பங்கு:-

நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள் தானே, இவர்கள் முகப் பொலிவுடன் நம் முன் தோன்றுகிறார்களே என்று நாம் நினைக்கும் வண்ணம் அவர்களுடைய நடையுடை பாவனைகளை அர்த்த புஷ்டியுடைய சொற்களால் வர்ணிக்கும் ரசவாதம் வ.ரா.வின் கை கண்ட வழியாக இருந்தது. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் வாழ்க்கையைப் பார்த்தவர்களையெல்லாம் மீண்டும் வாசகர் முன் கொண்டு வந்து நிறுத்துதலில் வெற்றி பெற்றார் என்று வா.ரா.வை சிட்டி, பெ.சு. மணி கூறுவதுபோல், வ.ரா.வின் சமகாலத்தவரான எஸ்.வி.வி. தம் எழுத்துலக வாழ்க்கையில், சிறுகதைகளைப் படைத்து, அதில் வாழ்க்கைச் சித்திரங்களை, நடைச் சித்திரங்களாக வடிவமைத்துள்ளார். முப்பதுகளின் மத்தியில் ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி எனபவர் எஸ்.வி.வியைத் தமிழில் ஆனந்த விகடனுக்கு எழுத வைத்து, அவர் திருவண்ணாமலையில் அப்படியாகப் பெரும் வெற்றி காணாத வக்கீல் என்கிற மாதிரி அவர் பெயர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் என அறிவித்த பிறகுதான் புதிருக்கு விடை கிடைத்தது. ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் எஸ்.வி.வி. என்பவர் பிரபலமாக ஆனந்த விகடன் மூலம் தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமான, நெருங்கிய பெயராக உருவெடுத்தார்.

ஆரம்பத்தில் பல கட்டுரைகள், கதைகள், தொடர் கதைகள் Stephen Leacock, "Jerome K. Jerome" போன்ற அப்போது பிரபலமான ஆங்கில ஹாஸ்ய ஆசிரியர்களைத் தழுவித் தொடர்ந்து எழுதினார். பின்னர் 1938, 1939-க்குப் பிறகு அவர் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும அவருக்கே இயற்கையாக உள்ள ஒரு ஹாஸ்யமும், சிந்தனைத் தெளிவும் இடம் பெற்றன என எஸ்.வி.வி.யைப் பற்றிக் க.நா.சு. கூறுகிறார். ஆக, எஸ்.வி.வியும், தம் இலக்கியப் படைப்புலக வாழ்க்கையில் புதினங்களையும், சிறுகதைகளையும் படைத்திருப்பது போல் வாழ்க்கையில், தம் மனதைப் பாதித்த நிகழ்வுகள், தம் மனிதில் பதிந்து நின்ற நிகழ்ச்சிகள், இவைகளையெல்லாம் சுவையான சித்திரங்களாகக் கொடுத்தார். அவர் தம் சித்திரங்களுக்கு வண்ணங்களாக வந்தவர்களின் எண்ணங்களை, நடையுடை பாவனைகளைக் கனம் நிறைந்த சொற்களால் வர்ணனையின் ஆற்றலுடன் வெளிப்படுத்தினார். தம்மையும், அச்சித்திரங்களில் சிதறி வெளிக்காட்டிக் கொண்டார். அவர்தம் வாழ்க்கையில் மிக நுட்பமாகப் பார்த்து அனுபவித்தவை வாசகர்களின் கண்களுக்கு வாழ்க்கைச் சித்திரங்களெனும் நடைச்சித்திரங்களை நிலை நிறுத்தினார் எனலாம்.

ஆக, எஸ்.வி.வி.-யின் கதைக் களம் எல்லாமே அவருக்குப் பழக்கமான குடும்பங்கள், அவர் சார்ந்திருந்த சமூகம், அது சந்தித்த அன்றாட பிரச்சனைகள், அதன் சின்னச் சின்ன ஆசைகள், ஏக்கங்கள், கனவுகள், பிரச்சனைகள் ஆகியவற்றை எஸ்.வி.வி. அவர்கள் ரசிக்கும் விதத்தில் கதைகளைப் புனைந்தார் என எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் குறிப்பிடுவது போல் எஸ்.வி.வி.யின் வாழ்க்கைச் சித்திரங்கள் எனும் நடைச் சித்திரங்கள் அமைந்தன எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக