12/02/2011

இலக்கியப் பார்வை

இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும்.  நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்தப் பகுதியில்  சுருக்கமாகப் பார்க்கலாம்.

* ஆசாரக்கோவை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை. இதை எழுதியவர்  பெருவாயின் முள்ளியார். "ஆசாரம்' என்றால்  "ஒழுக்கம்'. "ஆசாரம்' என்ற வார்த்தையைப் பார்த்தவுடனேயே புரிந்திருக்கும்! இது  சமஸ்கிருதச் சொல் என்று! ஆம்.. இந்நூலில் வடமொழிக் கருத்துக்களே அதிகமாகப் புதைந்துள்ளது. எம்மொழியானால் என்ன! நல்ல கருத்துக்களைச் சொல்கிறதே! எனவே, தமிழிலக்கியம் இந்நூலை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நூலில் 101 பாடல்கள் உள்ளன.  நன்றியறிதல், பொறுமை, இன்சொல், இன்னா செய்யாமை, கல்வி, ஒப்புரவு, அறிவு, நட்பு ஆகிய நற்பண்புகள் இதில் சொல்லப் பட்டுள்ளன. மேலும், இன்றும் நாம் வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறைக் கருத்துக்கள் இதில் போதிக்கப்படுகின்றன. ஒருவர் வெளியே கிளம்பும் போது "எங்கே போகிறீர்கள்?' எனக் கேட்கக்கூடாது.  பின்னால் நின்று கூப்பிடக்கூடாது, பயணம் கிளம்பும் போது தும்மல் வந்தால் உடனே கிளம்பக்கூடாது ஆகிய ஆசாரக்கருத்துக்கள் இந்நூலில் உள்ளன.

* முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்த மூன்று முத்தல்லவோ..
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முக்கியமானது திரிகடுகம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருட்களும் சேர்ந்தது திரிகடுகம். இம்மூன்றும் நோய் போக்கும் தன்மையுடைவை போல, இந்த நூல்களிலுள்ள பாடல் ஒவ்வொன்றும் சொல்லும் மூன்று கருத்துகளும் மனிதனிடம் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் என்பதால், இப்படி ஒரு பெயரை வைத்தார் இந்த நூலின் ஆசிரியர் நல்லாதனார். இதில், கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 101 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமாலை இந்த நூலாசிரியர் வணங்கியுள்ளார். இந்த நூலிலுள்ள 100 பாடல்களிலும் மூன்றாவது வரியில் ஒரு விசேஷம் உண்டு. என்ன தெரியுமா? மூன்றாம் அடியின் கடைசி வார்த்தை "இம்மூன்றும்' அல்லது "இம்மூவர்' என்று இருக்கும். இந்நூல் உணர்த்தும் நல்ல கருத்துக்களைப் பற்றி ஒரு சில வரிகளை உதாரணத்துக்குப் பார்ப்போமா!.
1. தோள்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை- பலமிழந்து போனாலும் அல்லது வறுமை வந்தாலும் நற்குணங்கள் குறையக்கூடாது.
2. வருவாயுட் கால் வழங்கி வாழ்தல்- வருமானத்தில் கால் பகுதியை தானம் செய்.
3. நெஞ்சம் அடங்குதல் வீடாகும்- மனதைக் கட்டுப்படுத்தி வைத்தால் தான் வீடுபேறாகிய முக்தி கிடைக்கும்.
4. கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்- கண்ணுக்கு அழகு தாட்சண்யம்
5. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்- விடாமுயற்சியுள்ள உழைப்பாளிக்கு கடன் என்பதே இல்லை.  இப்படி அருமையான கருத்துக்களைக் கொண்ட இந்த நூலை முழுமையாகப் படித்தால், இன்னும் எவ்வளவு நல்ல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம்! படிப்பீர்களா!

* களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று "களவழி நாற்பது'. இதை பொய்கையார் என்ற புலவர் (சங்க கால பொய்கையார் அல்ல) பாடியுள்ளார். ஏர்க்களம் பாடுதல், போர்க்களம் பாடுதல் என இந்நூல் இருவகைப்படும். களவழி நாற்பது நூல் போர்க்களத்தைப் பற்றி பாடுகிறது. செங்கணான் சோழனுக்கும், சேரமான் இரும்பொறைக்கும் கடும் போர் ஏற்பட்டது. இதில் சேரமான் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுதலை செய்ய வேண்டி, பொய்கையார் இந்தப் பாடல்களைப் பாடினார்.  இந்த நூலில் யானைப்போர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை திருவிழா அந்தக் காலத்திலேயே கொண்டாடப்பட்டது பற்றி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக