03/02/2011

பெண்கள் சாதகப் பகுதிகள் - அ. சிவபெருமான்

சாதகலங்காரம், சாதகசிந்தாமணி, சாராவளி, வராகர் ஓராசாத்திரம், பலதீபிகை முதலான சோதிட நூல்களில் பெண்கள் சாதகப் பலன் கூறும் அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. அந்நூல்களிலிருந்து சில செய்திகளை நோக்குவோம்.

பெண்களுக்குரிய மூன்று சாதக முறைகள்:-

சாதகங்களை (Horoscope) மனிதர் சாதகம், மனிதர்கள் நீங்கலாகவுள்ள ஏனையவற்றின் சாதகம் என இரண்டு பெரும் பிரிவுக்குள் அடக்கலாம். மனிதர் சாதகங்களை யோனி சாதகம் என்றும், மனிதர்கள் நீங்கலாக உள்ள ஏனையவற்றின் சாதகங்களை வியோனி சாதகம் என்றும் குறிப்பிடுவர்.

மனிதர் சாதகங்களை ஆண்சாதகம், பெண்சாதகம் இருவருக்கும் உரிய நட்டசாதகம் என்று மூன்றாகக் கொள்ளலாம். இவற்றில் ஆண் சாதகம் என்பது ஆணின் பிறந்த நேரங்கொண்டு கணிக்கப்படுதலாகும். ஆண்களுக்கு இவ்வொரு வகையில் மட்டும் சாதகம் கணித்துப் பலன் கூறப்படுவது உண்டு. இம்முறை அன்று முதல் இன்றுவரை நடைமுறையிலுள்ள வழக்கமாகும்.

பெண்களுக்குப் பிறப்பு, தெருட்சி, விவாகநேரம் ஆகிய மூன்று வகையில் சாதகம் அமைதல் உண்டு. பெண்ணின் பிறந்த காலம் கொண்டு கணிக்கப்படும் சாதகத்திற்குப் பிறப்புச் சாதகம் என்று பெயர். பெண்ணின் பிறப்பைக் கொண்டு சாதகம் கணிக்கப்படுதலைப் போன்று, பெண்ணின் தெருட்சிக் (இருது) காலம் கொண்டு சாதகம் கணித்துப் பலன் கூறுதலும் உண்டு. இதற்குத் தெருட்சி சாதகம் என்று பெயர். பெண்ணின் திருமணக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் சாதகத்திற்கு விவாகநேர சாதகம் என்று பெயர். இனி ஒவ்வொன்றாய் அறிவோம்.

பெண்ணின் பிறப்புச் சாதகம்:-

பெண்ணின் பிறந்த காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு கணிக்கப்படும் சாதகம், ''பிறப்புச் சாதகம்'' எனப்படும். இதனைக் கொண்டு பெண்களுக்குரிய பலன்கள் கூறப்படுவது உண்டு.

இருது சாதகம்:-

பெண்ணின் பிறப்பைக் கொண்டு சாதகம் கணிக்கப்படுதலைப் போன்று பெண்ணின் இருதுகாலம் கொண்டு சாதகம் கணித்துப் பலன் கூறுதல் உண்டு. இச்சாதகம், பெண் பருவம் எய்திய நாள், நேரம் கொண்டு கணிக்கப்படும். இதன் முக்கியத்துவத்தை,

''பெண்களுக்கு ஜனன காலத்தைப் போலவே முதல் ருது காலமும் மிகவும் முக்கியமானதென சோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அப்பொழுதே அவள் ''பெண்'' என அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவளாகையால் அந்த முதல் ருது காலத்திற்கு அமைக்கப்படும் சாதகமும் முக்கியமானது போலும்''

என்றவாறு அறிஞர் வலியுறுத்துவர். இருது சாதகத்தில் ஒரு பெண் இருதுவான வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், இலக்கினம் இவைகளைக் கொண்டு பலன் கூறுதலுண்டு. தமிழகத்தில் நகர மக்களைக் காட்டிலும் நாட்டுப்புற மக்கள் இருது சாதகத்தில் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

விவாக நேர சாதகம்:-

பெண்ணின் திருமணக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் சாதகத்திற்கு ''விவாகநேர சாதகம்'' என்று பெயர். இச்சாதகம் வழக்கில் இருந்தமையைப் பின்வரும் ''வராகர் ஓராசாத்திரம்'' என்று சோதிட நூல் பாடலடிகள்,

''தெரிவையர் பிறந்த நாளும்

தெருட்சியும் விவாக நாளும்

உரைசெயும் படியே கொள்க

என்றனர் உணர்ந்த நூலோர்'' என்றவாறு கூறுகின்றன.

மேற்பாடலடிகள் கூறும் கருத்தின் வாயிலாகப் பெண்களுக்குப் பிறப்பு, தெருட்சி (இருது), விவாகநாள் ஆகிய மூன்றினைக் கொண்டு சாதகம் கணிப்பர் என்ற செய்தி பெறப்படுகின்றது. பிறப்பு, இருது ஆகிய இரண்டு முறைகளில் சாதகம் கணித்தல் என்பது பலரும் அறிந்த செய்தியாகும். ஆனால் மூன்றாவதாகக் கூறப்பெற்ற விவாகநாள், கொண்டு சாதகம் கணித்தல் என்பது பலரும் அறியாத செய்தியாகும். இம்முறை தற்காலத்தில் வழக்கில் இல்லை என்றே கூறலாம். மேலும், அச்செய்தி மேலது நூலைத்தவிர ஏனைய சோதிட நூல்களில் குறிப்பில்லை என்றும் கருதலாம். சோதிட நூல்களில் ''விவாகநாள்'' கொண்டு சாதகம் கணித்தல் என்ற செய்தி எங்கும் இடம்பெறவில்லை, விவாக நாள் கொண்டு சாதகம் கணித்தல் என்பது என்னவெனில், திருமண நாளின் போது மணமகன், மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணியும் நேரத்தைக் குறித்துக் கொண்டு இலக்கினம், நவாம்சம் முதலானவைகளைக் கண்டறிந்து பலன் கூறுதலாகும். தற்காலத்தில் இம்முறை வழக்கில் இல்லையெனினும் இனி வழங்கப்படுத்தினால் புதிய பலன்களைக் கண்டறியக்கூடும்.

''தெரிவையர் பிறந்த நாளும்'', எனத் தொடங்கும் சோதிடப் பாடல் பிறப்பை முதல் நிலையில் குறிப்பிட்டு இரண்டாம், மூன்றாம் நிலைகளில் முறையே தெருட்சியையும், விவாக நேரத்தையும் குறித்துள்ளது எனவே, இம்மூன்றினுள்ளும் பிறப்புச் சாதகமே சிறப்புடையது.

ஒரு சில சோதிடர்கள் பெண்ணின் தெருட்சி சாதகத்தை ஏற்க முன்வருவதில்லை. ஏனெனில் தெருட்சிக் காலம் பெண்களால் மிகத் துல்லியமாக அறிய முடிவதில்லை. அடுத்து, இரவு தூக்கத்திலும் தெருட்சி ஏற்பட வழியிருப்பதால் அக்காலத்தைத் துல்லியமாக அறிதல் என்பது இயலாத ஒன்றாகு. எனவே, ''பிறப்பே சிறப்பென்க''.

பெண்கள் சாதகத்தில் சூரியனும் செவ்வாயும்:-

பெண்கள் சாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேரக்கூடாது என்ற கருத்தை உணர்த்தும் வகையில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களைச் சாதகாலங்காரத்திலும், சாதக சிந்தாமணியிலும் காணலாம். அவ்வாறு கூறப்பட்டுள்ள அக்கருத்தை ஆராய்ந்து உண்மையை அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சாதகாலங்காரத்தில் சூரியனும் செவ்வாயும்:-

கீரனூர் நடராசர் அருளிய சாதகாலங்காரத்தில் பெண்கள் சாதகப்பகுதியில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்தால் உண்டாகும் பலன்கள் குறித்து இரண்டு பாடல்கள் உள்ளன. அப்பாடல்களும் கருத்துகளும் வருமாறு,

''மோகமுடன் கதிர்செவ்வாய் கூடியுமே நிற்கில்

முழுப்பாவி ஆவள்என்றே மொழிந்திடுவர் பலரும்''

கருத்து:-

சூரியனும் செவ்வாயும் கூடியிருந்தால் அச்சாதகி முழுப்பாவி ஆவள்.

''இடுசெவ்வாய் கதிர்கூடி எங்கேநின் றாலும்

இவளும்வா லிபந்தன்னில் அமங்கலையே ஆவள்''

கருத்து:-

தீக்கோள்களாகிய செவ்வாய் சூரியன் மட்டும் கூடி எவ்விடத்தில் நின்றாலும், அச்சாதகி வாலிப வயதிலேயே அமங்கலை ஆவள்.

சாதக சிந்தாமணியுள் சூரியனும் செவ்வாயும்:-

தில்லைநாயகப் புலவரருளியது சாதக சிந்தாமணியாகும். இந்நூலில் பெண்கள் சாதகப் பகுதியில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்தால் உண்டாகும் பலன் குறித்து ஒரு பாடல் உள்ளது. அப்பாடலும் கருத்தும் வருமாறு:

''செய்யபெண் சாத கத்தைச்

செப்பிடில் இலக்கி னத்தில்

வெய்யவன் செவ்வாய் நிற்கில்

விதவையாய்த் தரித்திரி ஆவள்''

கருத்து:-

பெண்கள் சாதகத்தில் இலக்கினத்தில் சூரியனும் செவ்வாயும் நிற்கில் விதவையும் தரித்திரியும் ஆவள்.

மேற்குறித்த கருத்துக்களை இலக்கினத்தில் அறிகின்றபோது பெண்கள் சாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேரக்கூடாது என்ற விதி பெறப்படுகின்றது. இக்கருத்தை நாம் அவ்வாறே, ஏற்றுக் கொள்ளாமல் நுட்பமாகவும் பார்க்க வேண்டும். நுட்பமாகப் பார்க்கும் முறைகள்.

1. சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் நிலையில், சூரியன் அந்த இராசிக்கு எப்பொழுது வந்தார் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். சூரியன் அந்த இராசிக்கு வரும் நிலையில் செவ்வாய் அடுத்த இராசிக்குப் போகும் நிலை ஏற்படலாம். அல்லது செவ்வாய் அந்த இராசிக்கு வரும் நிலையில், சூரியன் அடுத்த இராசிக்குப் போகும் நிலை ஏற்படலாம். இராசியில் ஒன்றாக இருப்பது போல் தோன்றினாலும் விரைவில் இடமாற்றம் ஏற்படுமானால் தோஷம் மிகக் குறைவு என்க.

சான்றாக மிதுன ராசியில் சூரியனும் செவ்வாயும் உள்ளனர் எனக் கொள்வோம். ஆனால், மிக விரைவில் சூரியன் கடகராசிக்குப் போகும்நிலை இருப்பதால் சூரியன் செவ்வாய்ச் சேர்க்கைக் குற்றம் ஒன்றும் செய்யாது.

2. ஓர் இராசியில் சூரியனும், செவ்வாயும் சேர்ந்து இருக்கும்போது அக்கோள்களுடன் புதன், குரு முதலிய நல்லோர்கள் நின்றால் தோஷம் குறைவென்க, அல்லது அவர்களைக் குரு பார்த்தாலும் தோஷ நிவர்த்தி என்க.

3. சூரியனும் செவ்வாயும் பலக்குறைவுடன் சேர்ந்து நின்றாலும் தோஷம் இல்லை.

4. இரண்டாமிடம், ஏழாமிடம் இலக்கினம் ஆகியவற்றின் பலங்களையும் இவ்விடத்தில் நோக்குக.

சூரியனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால் விதவையாவாள் என்ற கருத்தைச் சோதிட நூல்கள் குறித்திருந்தாலும் அக்கருத்தை அப்படியே ஏற்கக்கூடாது. சூரியன், செவ்வாய் பலம், இதனுடன் சேர்ந்த கோள்கள், அவர்களைப் பார்த்த நல்லோர்கள் நிலை, சூரியன், செவ்வாய் இடப் பெயர்ச்சி, (இராசிமாறும் நிலை) ஏழாம் வீடு முதலான பல நிலைகளை ஆராய்ந்து அதன்பின் பலன்களைக் கூறுதல் வேண்டும்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக