அகவாழ்வில் இம்மைமாறி மறுமையாகினும் நீயே என் கணவன், யானே உன் நெஞ்சு நேர்பவள் என்றும், நிலத்தினும் பெரியது, வானினும் உயர்ந்தது, நீரினும் ஆரளவுடையது தான் தலைவனுடன் கொண்ட அன்பு என்றும் காதலனைச் சந்திக்க விடாது அடைத்து வைத்த தாயை நரகத்துக்குச் செல்லும்படி உரைக்கும் பெண்களுமே சங்க மகளிராக அறியப்பட்டுள்ளனர். இத்தகைய பொது பிம்பத்திலிருந்து மாறுபட்டுச் சுய சிந்தனை உடையவர்களாகவும், தவறைத் தட்டிக்கேட்பவர்களாகவும் சில பெண்கள் விளங்கியுள்ளனர். இத்தகு சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்களை விளக்குவதாய் இக்கட்டுரை அமைந்துள்ளது.
தவறைக் தட்டிக் கேட்டல்:-
ஆடவரும், பெண்டிரும் கூடியுள்ள ஓரிடத்தில் கூட்டத்தில் நின்ற ஆடவன் ஒருவன் பூங்கொம்பு போன்ற ஒருத்தியின் மேனியைக் கூர்ந்து நோக்கினன். இதனை அப்பெண்ணின் தோழியருள் ஒருத்தி கண்டனள். உடனே அவள் அவனைக் கடிந்துரைக்கிறாள். இதனை,
''கோட்டியுள் கொம்பர் குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரம்இலி என்மரும்'' (பரி. 50-51)
என்னும் அடிகள் விளக்கும். தன்னையன்றித் தன்னுடைய தோழியை ஒருவன் தவறான நோக்கத்துடன் பார்க்கிறான் என்றவுடன் அவனை நேரடியாகக் கடியும் சங்க மகளிரின் துணிவு பாராட்டுதற்குரியது.
ஏமாற்றிய ஆடவனுக்கு எதிரான குரல்:-
சங்க காலத்தில் ஒரு தலைவன் தலைவியையோ தலைவி தலைவனையோ ஏமாற்றியதாகப் பாடல் பாடுதல் மரபு இல்லை என்பர் வ.சு.ப. மாணிக்கனார். தலைவன் தன்னை ஏமாற்றிவிடுவானோ என ஐயுற்ற தலைவிகூட
''யாருமில்லைத் தானே கள்வன், தானது பொய்ப்பின்
யானெவன் செய்கோ'' (குறுந். 25)
என வருந்திய நிலையே காணப்படுகிறது. இதுவே அக்காலப் பெண்களுக்கும் உரிய பொது இயல்பாக இருந்துள்ளது.
இதற்கு மாறாகத் தன்னை ஏமாற்றிய ஒரு தலைவனை நீதியின் முன் நிறுத்திய ஒரு பெண்ணைப் பற்றி நற்றிணை பதிவு செய்துள்ளது. கள்ளூரில் வாழ்ந்த பெண் ஒருத்தியுடன் தலைவன் ஒருவன் களவொழுக்கம் ஒழுகினான். பின்னர் அப்பெண் யார் என்று அறியேன் எனப் பொய்ம்மொழி பகன்றான். உடனே அப்பெண். சான்றோர் அவையத்திற்குச் சென்று தன்னுடன் களவொழுக்கம் ஒழுகியவன் தன்னை ஏமாற்றியதாக வழக்குரைத்தாள். விசாரணை செய்த சான்றோர் பொய்ம்மொழி பகன்ற தலைவனை மரத்தில் பிணித்தனர். பின் அவன் தலையில் சுண்ணாம்பைக் கொட்டி ஊர்மக்கள் அனைவரும் அறியும்படி அவனுக்குத் தண்டனை வழங்கினார். இதனை,
''கள்ளூர்த்
திருநிதற் குறுமக ளணிநலம் வவ்விய
அறனி லாள னறியே னென்ற
திறனில் வெஞ்சூ ளறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியர்ப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசா லவையத் தார்ப்பினும் பெரிதே'' (அகநா. 256)
என்னும் பாடலடிகள் விளக்கும்.
இதனால் ஒரு பெண் தன்னை ஏமாற்றியவனை நினைத்து அழுது கொண்டிராமல் தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று துணிந்து செயல்பட்டமை தெளிவாகும்.
தலைவியின் தந்தை கொடுத்த சீதனம்:-
சங்க காலத்தில் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்குப் பரியப் பொருள் கொடுத்தமையைப் பல பாடல்கள் உணர்த்தும். மாறாகத் தலைவனுக்குப் பொருள் கொடுத்துத் தலைவியைத் திருமணம் செய்து கொடுத்ததைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தந்தை ஒருவன் தன் மகள் விரும்பக்கூடியவன் ஏழ்மையுடையவனாக இருப்பதை அறிந்து அவனுக்குத் தன் செல்வம் முழுவதையும் கொடுத்துத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தனன். தலைவனோ, செல்வம் வந்ததும் தன் ஏழ்மையை மறந்து பரத்தையரை நாடிச் சென்றனன். பரத்தமையொழுக்கம் கொண்டு திரும்பிய தலைவன் தோழியிடம் வாயில் வேண்டினன். அப்பொழுது தோழி, ''உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செருகியும் தலையணிபூண்டு பொலிவுற்ற பரத்தையர் ஆயமொடு நீ விழவாடி வருகின்றாய். ஆனால் ஒரு பசுவினால் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்திய உனக்கு இல்வாழ்க்கை தலைவியால் வந்தது என்று ஊரார் கூறுவர்'' (குறுந் - 295) என்றுரைப்பள். இது தோழிகூற்றாக இருப்பினும் உண்மையை உரைக்கும் கூற்றாகும்.
முன்பு ஒரு பசுவை மட்டும் வைத்து ஏழ்மையில் வாழ்ந்தவன் இன்று பரத்தையர் இல்லத்திற்குச் செல்வதற்குத் தந்தை கொடுத்த செல்வமே காரணம் என்பதால் அவன் திருந்துவதற்காகக் கடிந்துரைக்கிறாள். தலைவியின் பெற்றோர் செல்வத்தால் உயர் நிலையில் வாழும் தலைவனை இப்பாடல் பதிவு செய்துள்ளது. ''உள்ளது சிதைப்போர் உளரெனப் படார்'' என்று வாழ்ந்த சங்க காலத்தில் தலைவியின் பெற்றோர் தம் செல்வத்தையும் சிதைத்து வாழ்ந்த தலைவனைக் காணமுடிகிறது. தலைவியின் பெற்றோர் கொடுக்கும் வரதட்சணைக்கான ஊற்றுக்கண்ணும், அதை அவன் தவறாகப் பயன்படுத்தும் பொழுது தலைவி கண்டிப்பதையும் காணமுடிகிறது. வாயில் நேரும் பிற பெண்களிடையில், இப்பெண்ணின் துணிவு சுட்டத்தக்கது.
இதனைப் போன்றே பரிபாடலிலும் திருமணமான ஒரு தலைவன் தன் மனைவியின் அணிகலன்களைப் பரத்தை ஒருத்திக்குக் கொடுத்தமையும், அதை அணிந்து கொண்ட பரத்தை தலைவனுடன் சேர்ந்து வையையில் நீராடுவதற்கு வந்தமையும் (பரி.20) பாடப்பட்டுள்ளன. அவ்வையைக்குத் தலைவியும் தோழியர் கூட்டமும் நீராட வந்தபொழுது தங்களால் காணாமற் போனதாகக் கருதப்பட்ட தலைவிக்குரிய வளையல்களையும் முத்து மாலையையும் பரத்தை அணிந்திருப்பது கண்டு தலைவியிடம் உரைக்கின்றனர். தலைவி அஞ்சாமல் சென்று என்னுடைய தந்தை எனக்குக் கொடுத்த அணிகலன்கள் இவை, கொடுத்துவிடு என்று நேரடியாகக் கேட்பது அவளின் உரிமைக் குரலை நன்கு வெளிப்படுத்தும். இந்நிகழ்வுகள் மூலம் தலைவியின் பெற்றோர் தலைவியைத் திருமணம் செய்து கொடுக்கும்பொழுது அவளுக்குச் சீதனம் கொடுக்கும் வழக்கம் இருந்தமையை அறிய முயலும்.
இவற்றால் சங்க காலத்திலேயே வரதட்சணை கொடுக்கும் வழக்கம் தோன்றிவிட்டமையும், அவ்வரதட்சணைப் பொருளைத் தலைவன் தவறாகப் பயன்படுத்தும் பொழுது அதனைக் கேட்டுக் கண்டிக்கும் பெண்களையும் காண முடிகிறது.
கணவனைப் பிரியத் துணியும் மனைவி:-
''கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'' என்னும் பழமொழி சங்க காலத்திற்கும் பொருந்தும். சங்ககால மகளிரும் இத்தகைய மனப்போக்கு உடையவர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர். தலைவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதனை மறந்து ஒழுகுதல் இல்லற மாண்பாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் சென்றதனால் வருந்திய தலைவி அவனை விட்டு நீங்கி தந்தையில்லத்திற்குச் செல்ல முடிவெடுத்தமை வியப்புக்குரியதாகும். இதனைத் தோழி தலைவனிடம்,
''நீர்நீ டாடிற் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தன் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே'' (குறுந். 354)
என்று கூறுவது விளக்கும். அன்பில்லாதவனோடு வாழ்வதைக் காட்டிலும் தந்தை இல்லத்திற்குச் சென்று வாழ்வதே சிறப்பு என்று துணிந்த தலைவியை இப்பாடல் எடுத்தியம்புகின்றது.
பெண் வஞ்சினம்:-
''வஞ்சினம்'' என்பதை ஆடவர்க்குரியதாகப் புறப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. தன்னை எதிர்த்த பகைவரை அழிக்கக் கருதும் அரசன் வஞ்சினம் உரைத்தல் மரபு. வீரர்களும் வஞ்சினம் உரைப்பர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் வஞ்சினம் அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு பெண் வஞ்சினமுரைத்து அதனை முடித்துக் காட்டிய நிகழ்வை அகநானூறு உரைக்கின்றது.
கோசர்களின் ஆட்சிக் காலத்தில் அன்னிமிஞ’லி என்பவளின் தந்தை ஆநிரை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். ஒருநாள் பசு ஒன்று பயிற்றில் புகுந்தது. இதற்காக நடந்த விசாரணையின்போது தன் பசு மேய்ந்ததை அவர் மறைக்காது உண்மையுரைத்தார். எனினும் கோசர்கள் அவருடைய கண்ணைப் பிடுங்கித் தண்டித்தனர். இதனை அறிந்த அன்னிமிஞ’லி தன் தந்தை தவறை ஏற்றுக் கொண்டதன் பின்பும் தண்டனை வழங்கிக் கண்ணைக் கெடுத்தவர்களைப் பழிவாங்குவேன் என்று சூளுரைக்கின்றாள் (அக.நா.196,262). தன் வஞ்சினம் நிறைவேறும் வரை கலத்திலிட்டு உணவு உண்ணாமல், தூய ஆடை உடுத்தாமல் தவக்கோலம் பூண்டுவாழ்கின்றாள். தனது தந்தைக்குத் தீங்கிழைத்தவர்கள் மன்னராக இருந்த போதிலும் அவர்களுக்கெதிராக வஞ்சினம் கூறி திதியன் துணை கொண்டு வஞ்சினம் முடிக்கிறாள். பெண்ணால் எதையும் நிரூபித்துச் சாதிக்க முடியும் என்பதையும் காட்டியவள் அன்னிமிஞ’லி என்ற சங்கப் பெண்.
மேற்சுட்டியவற்றால் சங்ககாலத்தில் மாறுபட்ட சுயசிந்தனை உள்ள பெண்களும் வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகும். பெண்ணுக்குச் சம உரிமை கிடைத்த இக்காலச் சமூகத்தில் வாழக்கூடிய பெண்களைப் போலச் சங்கமகளிர் பல நிலைகளில் மேம்பட்டுத் திகழ்ந்துள்ளனர். தவறு செய்பவனைத் தட்டிக் கேட்பவர்களாகவும், தந்தை தனக்களித்த சீதனத்தைக் கணவன் தவறான வழியில் செலவிடும் பொழுது அதைக் கண்டிப்பவர்களாகவும் விளங்கியுள்ளனர். பெண் என்று கருதி மூலையில் முடங்கிவிடாமல் மன்னரைக் கண்டும்கூட அஞ்சாது, எடுத்த செயலை முடிக்கும் துணிவுடைய சங்க மகளிரின் உரிமைக் குரல்கள் இக்கால மகளிருக்கு முன்மாதிரியாகும்.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக