03/02/2011

உளவியல் நோக்கில் தி. ஜானகிராமனின் ''அன்பே ஆரமுதே'' புதினம் - க. சிவனேசன்

தி. ஜானகிராமன் அவர்களால் ''கல்கி'' வார இதழில் 1962 முதல் 1964 முடிய தொடர்கதையாக எழுதப்பெற்று, பின்னர் ஏப்பிரல் 1965 - இல் நூல் வடிவம் பெற்ற புதினம் ''அன்பே ஆரமுதே'' ஆகும். இக்கதையை உளவியல் நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை விளங்குகிறது.

தி. ஜானகிராமன் - ஓர் அறிமுகம்:-

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவங்குடி என்னும் சிற்றூரில் பிறந்தவர் தி. ஜானகிராமன். இவரது பெற்றோர் தியாகராஜ சாஸ்திரிகள், நாலெட்சுமி அம்மையார் ஆவர். இவரது காலம் 1921 முதல் 1982 வரை ஆகும். இவர் 1979-ல் ''சக்தி வைத்தியம்'' என்னும் சிறுகதை நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் (Psychology):-

சிக்மண்ட் ஃபிராய்டு என்பவரே நவீன உளவியலின் தந்தை ஆவார். இவரது காலம் 1856 - 1939 ஆகும். இவர் மனிதனின் நனவிலிமனம் பற்றியே பெரிதும் ஆராய்ந்தார். இவரது கோட்பாடுகள் ஃபிராய்டிசம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இவரைத் தொடர்ந்து சூரிச் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் கார்ல் குஸ்தாவ் யூங், பேராசிரியர் ப்ளுலர் ஆகியோர் சிறந்த உளவியல் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர். ஆல்பிரட் அட்லெர், ஸ்டெகல் போன்றோர் ஃபிராய்டிசத்திற்கு எதிரான கருத்தாக்கங்களை உருவாக்கியவர்கள் ஆவர். எனினும் நவீன உளவியல் ஃபிராய்டின் கோட்பாடுகளைப் பின்பற்றியே இயங்குகிறது எனலாம்.

உளவியலின்படி, மனம் இரண்டு வகைப்படும். அவை,

1. நனவு மனம் (Conscious Mind)

2. நனவிலி மனம் (Unconscious Mind)

அவற்றுள் நனவிலி மனம் மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். அவை,

அ. ''இட்'' (ID) எனப்படும் இச்சை உணர்வு.

ஆ. ''ஈகோ'' (Ego) எனப்படும் தான்

இ. ''சூப்பர் ஈகோ'' (Super Ego) எனப்படும் மனச் சான்று என்பனவாகும்.

மனிதனின் அடிமனதில் அமுக்கப்பெற்ற நிறைவேறாத ஆசைகள், கனவுகள், படைப்புக்கள் போன்ற வடிவங்களில் மாற்றுரு கொண்டு தம்மை வெளிக்காட்டுகின்றன.

தாழ்வு மனப்பான்மை, குற்ற மனப்பான்மை, பதிலீடு, தப்பித்தல், மனோபாவம், தற்கொலை, கனவுகள் போன்ற உளவியல் கூறுகள் மனிதனின் அடிமனத்தில் இருந்து தோன்றுபவை எனலாம்.

அன்பே ஆரமுதே - புதினம்:-

சென்னை மாநகரில் வீடு வீடாகச் சென்று மருத்துவம் செய்பவர் அனந்தசாமி. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் ருக்மணி. ருக்மணியின் அழகினைக் கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்ளும் அனந்தசாமி. தம் திருமண நிச்சயநாளில் யாரிடமும் சொல்லாமல் பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரிஷ’கேசம் சென்றுவிடுகிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வரும் அவர் குற்ற மனப்பான்மையுடன் ருக்மணியின் வாழ்வில் இடையூறு ஏற்படுத்தியமைக்காக வருந்துகிறார். அதனால் மடைமாற்றம் பெறும் அவர் மருத்துவச் சேவையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்; பல்வேறு குடும்பங்களுக்கு உதவுகிறார். கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றும் ருக்மணி திருமணமே செய்யாமல், அனந்தசாமியை நினைத்துக் கொண்டே உடலாலும், உள்ளத்தாலும், தூய வாழ்க்கை நடத்துகிறார்.

தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex):-

தொடக்கத்தில் சிக்மண்ட் ஃபிராய்டின் சீடராக விளங்கி, பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர் ஆல்பிரட் அட்லட் ஆவார். அவரால் உருவாக்கப்பட்ட கொள்கையே தாழ்வு மனப்பான்மை எனப்படும். ''தாழ்வு மனச்சிக்கல்'' ஆகும். மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடும் மனிதன், தன்னைத்தானே தாழ்த்தி மதிப்பிடும் மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை எனப்படும்.

''இந்த உலகில் உள்ள மக்களில்

குறைந்தது பாதிப் பேராவது

தாழ்வு மனப்பான்மை என்ற

நோய் கண்டு அவதிப்படுகிறார்கள்''

என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தாழ்வு மனப்பான்மை கொண்டவராக ''அன்பே ஆரமுதே'' புதினத்தின் கதைத்தலைவன் அனந்தசாமி விளங்குகிறார். அனந்தசாமிக்கு, தான் அழகற்றவன் என்னும் எண்ணம் காணப்படுகிறது.

''அழகான பெண்ணை எனக்கு கொடுக்க

வந்தார்களே அது ஒரு அக்கிரமம்''

என்று அனந்தசாமியின் கூற்றாகவே அவரது தாழ்வு மனப்பான்மை வெளிப்படுகிறது. திருமணத்திற்குப் பெண்ணை நிச்சயம் செய்ய அனந்தசாமி தமது குடும்பத்தாருடன் சென்றபோது, அங்கிருந்த விவேகானந்தா படம்,

''நீ எங்கேடா வந்தே இங்கே என்று

கேட்கிறார் போலிருந்தது''

என்கிறார் தி.ஜா. இதன் மூலம் அனந்தசாமியின் தாழ்வுமனப்பான்மை வெளிப்படுகிறது.

குற்ற மனப்பான்மை (Guilty Consciousness):-

மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொள்பவரிடம் காணப்படுவது ''குற்ற மனப்பான்மை'' (Guilty Consciousness) ஆகும். பலகாலம் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட இச்சை உணர்வு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு மனிதனைத் தவறச் செய்து விடுகிறது. பின்னர், அத்தவறே குற்ற உணர்வாக மாறுகிறது. யூங் மனிதர்களை,

1. அகமுகத்தவர் (Introvert)

2. புறமுகத்தவர் (Extrovert)

என இரண்டாகப் பிரித்துள்ளார். இவர்களின் ''அகமுகத்தோர்'' எனப்படுவோர் புற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி வாழ்வர். அவர்கள் தங்கள் மன எழுச்சிகளைப் பிறர் அறியாமல் மறைப்பர். ருக்மணி என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்வதாக ஏற்பாடுகள் செய்த பிறகு, கடைசி நேரத்தில் மனம் மாறி வெளியேறியதால் அனந்தசாமியிடம் குற்ற உணர்வு ஏற்படுகிறது. ''குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்'' என்பதற்கேற்ப ருக்மணியுடனான திருமண ஏற்பாட்டு முறிவு அனந்தசாமியின் உள்ளத்தில் நிரந்தர வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

பதிலீடு அல்லது மடைமாற்றம் (Sublimation):-

ஒரு துறையில் குறைபாடு உடையவர்கள், பிறிதொரு துறையில் ஆற்றல் வாய்ந்தவர்களாகத் தன்மை மடைமாற்றம் செய்து கொள்வதையே உளவியலார் ''பதிலீடு'' என்பர். இளம் பெண் ஒருத்தியின் துயர வாழ்விற்குத் தாம் ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டோமோ? என்ற எண்ணம் அனந்தசாமியிடம் பதிலீட்டை ஏற்படுத்துகிறது. மேலும் வயதான காலத்தில் தன்னுடன் இருந்த தன் தாய் இறந்து போனதால் பொதுச்சேவை செய்தல் என்னும் எண்ணம் அனந்தசாமியிடம் மேலோங்கி நின்றது. விளைவு அவர் சென்னை நகர வாசிகள் பலரது இல்லங்களுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கும் மருத்துவச் சேவையை மேற்கொள்கிறார். அப்பணி அவருக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.

தப்பித்தல் மனப்பான்மை (Escapping Attitude):-

பேரழகு வாய்ந்த ருக்மணி சிவந்த நிறமும் நிறைந்த அறிவும் கொண்டவளாகக் காட்டப்படுகிறாள். ஆனால், கருப்பு நிறம் கொண்ட அனந்தசாமி, ருக்மணிக்குத் தாம் எந்த வகையிலும் பொருத்தமற்றவர் என்று எண்ணுகிறார். அதன் விளைவாக இல்லறத்தின் மீது வெறுப்புக் கொள்ளும் அனந்தசாமி துறவறத்தில் ஈடுபட எண்ணி ரிஷ’கேசம் செல்கிறார்.

''இந்த ஆண் பிள்ளைகளுக்கு, நல்ல தேர்ந்த அழகு என்றால் பயம் வந்து விடுகிறது. அது கம்பீரமாக நிமிர்ந்து பார்க்கிற பொழுது வெட்கப்பட்டுக் கொண்டே, நடுங்கிக் கொண்டே ஓடி விடுகிறார்கள்''

என ருக்மணியின் தோழி நாகம்மாளின் கூற்றாகத் தி.ஜா. அனந்தசாமியின் பலவீனத்தை மதிப்பிடுகிறார். சிக்கல்களை எதிர்கொள்ள முடியாதோர். அதனின்று தப்பித்துச் செல்லும் மனோபாவம் கொண்டோராய் விளங்குகின்றனர். தமது திருமண நிச்சயதார்த்தத்தின் போது வீட்டிலிருந்து வெளியேறும் அனந்தசாமி பின் ரிஷ’கேசம் செல்கிறார். இல்லறத்தினின்று தப்பித்துத் துறவறத்தை விரும்பும் மனோபாவம் அவரிடம் இருந்தது. அதனால்தான் இறுதிவரை அவர் ''திருமணம்'' என்னும் பந்தத்தை நாடாதவராகவே இக்கதையில் காட்டப்பட்டுள்ளார். ருக்மணி, இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தினாலும், அனந்தசாமி தம் மருத்துவச் சேவைக்குச் சிறிதும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மட்டும் வாழும் மாறுபட்ட வாழ்வே போதும் எனப் பதிலளிக்கிறார். காரணம் இல்லறம் என்பதிலிருந்து தப்பித்து வாழும் மனோபாவம் அவரிடம் காணப்படுவதே ஆகும்.

இக்கட்டுரையிலிருந்து கீழ்க்காணும் முடிவுகள் காணக் கிடைக்கின்றன. கதையின் தலைவன் அனந்தசாமி தாழ்வு மனப்பான்மை கொண்டு, குற்ற உணர்வுடன் வாழ்கிறார். பின்னர் அக்குற்ற உணர்வே பொதுச்சேவை என்னும் பதிலீடாக மாற்றம் பெறுகிறது. இறுதியில் இல்லறம் என்பதிலிருந்து விலகி, தப்பித்தல் மனோபாவத்துடன் திருமணத்தை விரும்பாதவராக ஓர் இல்லறச் சந்நியாசம் மேற்கொள்கிறார் அனந்தசாமி. இவ்வாறு தி. ஜானகிராமன் படைத்துள்ள அன்பே ஆரமுதே புதினம் உளவியல் கூறுகளை உள்ளடக்கிய புதினமாக விளங்குகிறது.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக