12/02/2011

இலக்கியப் பார்வை - 9

நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சிவஞான முனிவர்

சிவஞான போத பேருரை என்னும் நூலை எழுதியவர் சிவஞான முனிவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்தார். பெற்றோர் ஆனந்தக்கூத்தர்- மயிலம்மை. இலக்கணம், இலக்கியம், மொழி பெயர்ப்பு, சமயம், புராணம், உரைகள் என அத்தனை வகை இலக்கியங்களையும் ஆக்கி அளித்தவர். அகிலாண்டேஸ்வரி பதிகம், கலசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், சோமேசர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக்கோவை, பஞ்சாக்கர தேசிகர் மாலை, சிவதத்துவ விவேகம், தருக்க சங்கிரக அன்னப்பட்டியம், காஞ்சிப்புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் என்று சிறப்பித்துக் கூறுவர். திருத்தணி கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், காஞ்சி சிதம்பரம் முனிவர் ஆகியோர் இவரது மாணவர்கள். சிவஞான போத சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை, தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி, நன்னூல் விருத்தியுரை, கம்பராமாயண முதல் செய்யுள் சங்கோத்திர விருத்தி ஆகிய உரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
வீரராகவ முதலியார்
காஞ்சிபுரம் அருகிலுள்ள புதூர் கிராமத்தில் பிறந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். "அந்தகம்' என்றால் "பார்வையற்ற' என்று பொருள். இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர் என்பதால் "அந்தகக்கவி" என்னும் அடைமொழியைப் பெற்றார். சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூர் உலா, திருக்கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
நவீன கம்பர்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருச்சியில் பிறந்தவர். இவர் திருவாவடுதுறை மடத்தில் புலவராக இருந்தார். தினமும் இவர் 300 பாடல்கள் பாடியதாகச் சொல்வர். 22 புராண நூல்கள், 10 பிள்ளைத்தமிழ் நூல்கள், பத்து அந்தாதிகள், இரண்டு கலம்பகம், ஏழு மாலை நூல்கள், மூன்று கோவை நூல்கள், ஒரு உலா மற்றும் லீலை நூல்களை எழுதியுள்ளார். இவரை "நவீன கம்பர்' என்று பாராட்டுவார்கள்.

நன்றி – தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக