12/02/2011

இலக்கியப் பார்வை – 8

மணநூல் என்றால் எது ?
சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை எழுதியவர் திருத்தக்கதேவர். இவர் சமணசமயத்தைச் சார்ந்தவர். சீவகன் என்பவனின் வரலாற்றை இந்நூல் விளக்கமாக கூறுகிறது. சிந்தாமணி என்பது கேட்டவர்க்கு கேட்ட பொருளை குறைவில்லாமல் வழங்கும் சிறப்புடைய தெய்வமணியாகும். சீவகசிந்தாமணியில் 13 இலம்பகங்கள் அமைந்துள்ளன.  ஒவ்வொரு இலம்பகத்திலும் சீவகன் அடைந்த பேற்றை விளக்குகிறது. இந்நூலுக்கு "மணநூல்'
என்னும் பெயரும் உண்டு. சீவகன் எட்டு மகளிரை மணம் செய்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.  ஏமாங்கதம் நாட்டில் ராசமாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் சச்சந்தன். இவனது மனைவி விசயை. அமைச்சர் செய்த சூழ்ச்சியால் நாட்டை இழந்த சச்சந்தன் உயிரிழந்தான். கர்ப்பவதியான ராணி விசயை, மயில்பொறி என்னும் விமானத்தில் பறந்து சென்று, ஒரு சுடுகாட்டில் இறங்கினாள். அங்கு ஒரு ஆண்குழந்தையை பெற்றுவிட்டு இறந்து போனாள். அவனை கந்துக்கடன் என்னும் வணிகன் எடுத்து வளர்த்தான். அவனுக்கு "சீவகன்' என்று பெயரிட்டான். அச்சணந்தி என்னும் குருவிடம் கல்வி பயின்றான் சீவகன். காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்னும் எட்டுப் பெண்களை திருமணம் செய்தான். பின்னர், தன் முந்தையை வரலாற்றை அறிந்து, அமைச்சரை வென்று நாட்டை மீட்டான். இந்த நூலிலுள்ள நாமகள் இலம்பகம் சீவகன் குருகுலத்தில் படித்தது பற்றியும், மணமகள் இலம்பகம் அமைச்சரை வென்று நாட்டைக் கைப்பற்றியதையும், பூமகள் இலம்பகம் அவன் அரியணை ஏறியதையும், முக்தி இலம்பகம் சீவகன் வீடுபேறாகிய மோட்சம் பெற்றதையும் விளக்குகிறது.  இதுதவிர காந்தருவதத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம் ஆகியவை அந்தந்த பெண்களை திருமணம் செய்தது பற்றி விவரிக்கின்றன.  சந்திர சூடாமணி, கத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைப் பின்பற்றி இந்நூல் எழுதப்பட்டதாகும். மேல்நாட்டு அறிஞரான ஜி.யு. போப் இந்நூலைப் பற்றி,"கிரேக்க மொழியில் உள்ள இலியட், ஒடிசி காப்பியங்களுக்கு இணையானது சீவகசிந்தாமணி,'' என்று பாராட்டியுள்ளார். வீரமாமுனிவர் திருத்தக்கதேவரை "தமிழ்ப் புலவர்களின் தலைமைப்புலவர்' என்று பாராட்டியுள்ளார். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

நன்றி – தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக