இக்கால இலக்கிய வகைகளில் ''கவிதை''யும் ஒன்றாகும். தமிழில் ''கவிதை'' என்னும் இலக்கிய வகை காலந்தோறும் பல மாறுதல்கள் பெற்று வருகின்றது. பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ வேண்டும்; பெண்டிரைக் குடும்பத்தில் அடிமைகளாக நடத்தும் நிலை மாற வேண்டும் என்பதைப் பெண் கவிஞர்கள் தங்களுடைய கவிதைகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர். அக்கவிதைப் படைப்புகளின் வழிப் பெண்ணியச் சிந்தனையைச் சமுதாயத்திற்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.
''பெண்ணியம் என்பது பெண்களின் மீதான ஒடுக்கு முறைகளை ஆராய்வதாகும், ஆண் மேலாதிக்கத்தை இனம் காட்டுவது சமூகத் தோற்றத்தை ஆராய்வது''1 என்பதாம்.
பெண்ணின் பங்குநிலை (Role): பெண்கள் இல்லத்திற்குரியவர்களாக உருவாக்கப்படுகின்றனர். ஆனால், இல்லற அமைப்பிலும் பெண்கள் முதலிடம் பெறவில்லை. இரண்டாம் இடத்தைத் தான் பெறுகின்றனர்.
மனைவியின் பங்குநிலை (Role of wife): மனைவி என்பவள் கணவனைச் சார்ந்து வாழ்பவள் ஆவாள். கணவன் எப்படிப்பட்டவனாயினும் அவனுடன் அனுசரித்து வாழ்வதே மனைவியின் முழு முதற் கடமையாகும். ''கல்லானாலும் கணவர் புல்லானாலும் புருசன்'' என்ற பழமொழிக்கேற்ப, அவனை மதித்து இல்லறப் பணிகளைச் செய்வதே மனைவியின் கடமையாகும். அ.சங்கரி ''அவர்கள் பார்வையில்'' என்ற கவிதையில் மனைவியின் கடமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
''சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தையைப் பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்.''2 என்கிறார்.
தாயின் பங்குநிலை (Role of Mother): இவ்வுலகில் தாய்மைப் பண்பை, மிகச் சிறந்ததாகவும், தெய்வத் தன்மை பொருந்தியதாகவும் போற்றுகின்றனர். அன்பு, தியாகம், பொறுமை ஆகிய குணங்கள் உடையவளாய்த் தாய் போற்றப்படுகிறாள். குடும்பத்தில் தாயின் பங்கே முதன்மை இடத்தைப் பெறுகிறது கணவனையும், குழந்தைகளையும் பேணிக் காப்பது தாயின் தலையாய கடமையாகும். வீட்டின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதால் அவள் பொறுப்பும், சுமையும் இரு மடங்காகிறது.
''எங்களுக்காக அழுது சிரித்துத்
தன்கனவுகளை எங்கள் மீது திணித்து
அது நடக்காத போது,
அழிச் சாட்டியம் செய்து
தோற்றுப் போய்
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வப்போது நிறைய அன்பு செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்கக் கதைகளும் சொல்லுவதே இல்லை.''3
''தாயிற் சிறந்த கோயிலுமில்லை'' என்ற வாக்கிற்கேற்ப, பண்பின் பிறப்பிடமாகத் திகழும் தாயின் அன்பு தான் இவ்வுலகில் அனைத்துக்கும் மேலானது.
பெண்ணின் கற்பு நிலை: பெண் கற்புக்கடம் பூண்டு ஒழுகுதல் வேண்டும்.
''உயிரினும் சிறந்ததன்று நாணே நாணினும்
செயிர்நீர் காட்சிக் கற்புச் சிறந்ததன்று''4
என்று தொல்காப்பியம் கூறுகிறது. கற்பின் நிலையைக்
''கணவன் உயிர்போனாலும்
மதுரையை எரித்துக்
கற்பை நிரூபித்தாள் கண்ணகி;
கற்பு இல்லையேல்,
பற்றி எரியுமா?
மதுரை மாநகரம்!
ஆணித்தரமாய் கேட்டது
கண்ணகி கட்சி''5
என்ற கவிதை வரிகளால் அறியலாம்.
ஆணின் ஐயநிலை: ஆணொருவன், பெண்ணைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதென்பது பொதுவான நிகழ்வாகி விட்டது. ஆனால் பெண், தன் கணவனைச் சந்தேகப்படுதல் என்ற நிலை சமுதாயத்தில் காணப்படவில்லை. ஆண், பெண் சந்தேகப்படுதல் என்பது அந்நாள் தொடங்கி இந்நாள் வரை தொடர்ந்து வரும் துயரச் செயலாகும்.
''காம்பவுண்டுச் சுவரை
அனைத்து நிற்கும் மரத்திடம்
இரவெல்லாம் கிளி சொல்கிறது
ஏதேதோ செய்தி
அதனிடம் இல்லை
தன் இருப்பிடத்தின் மீது
வீண் சந்தேகங்களும்
.............
நானும் அதுவும்
விரோதத்துடனும் சந்தேகத்துடனும்
பிந்தை பொழுதுகளை எதிர்கொள்கிறோம்.''6 என்ற கவிதை வரிகள் ஆணின் சந்தேக நிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
ஆண் உயர்வில் பெண்டிரின் பங்களிப்பு: ''உயர் வாழ்க்கைக்கும், உயிர் வாழ்க்கைக்கும் துணை புரிவோர், ''பெண் தெய்வம்'' உண்மை என்பது உன்னற்பாலது'' என்பார் திரு.வி.க.
வத்ஸலா எழுதிய ''சுயம் என்னும் கவிதைத் தொகுப்பில் ஆண் உயர்விற்குப் பெண் என்பவள் காரணமாக அமைகிறாள் என்பதைப்
''பெற்ற பட்டங்களை அலமாரியில் பூட்டி,
அழகுக் குறிப்புப் பார்த்து, அலங்கரித்துக் கொண்டு,
சமையல் குறிப்பு எழுதிப் பரிசு வாங்கிக்
கணவனின் வெற்றிகளுக்குப் பின்னால் நிற்கும்
பெண்'' என்று அறிவுறுத்துகின்றார்.
முடிவுரை: இக்கட்டுரையின் வாயிலாகப் பெண் கவிஞர்களின் புதுக்கவிதைகளில், ''பெண்ணியச் சிந்தனையில்'' சமுதாயத்தில் பெண்ணின் பங்குநிலை, பெண்ணின் கற்புநிலை, ஆணின் ஐயநிலை, ஆண்களின் உயர்வில் பெண்டிரின் பங்களிப்புப் போன்றவை புதைந்துள்ளமை புலப்படுத்தப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்:
1.டாக்டர். இரா.பிரேமா, பெண்ணியம் அணுகுமுறைகள், ப.191.
2.அ.சங்கரி, தமிழ்ப்பெண் கவிதைகள், ப.46.
3.கனிமொழி, அகத்திணை, ப.26, 27.
4.தொல்காப்பியம், களவியல் நூற்பா.22.
5.தாமரை, ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், ப.24.
6.சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், ப.42.
நன்றி: தமிழ் புத்திலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக