30/01/2011

தமிழ்மொழி வரலாற்றில் அண்ணா ஒரு திருப்புமுனை - அ.சீ. மகாலெட்சுமி

தமிழ்மொழி வரலாற்றில் எண்ணற்ற மேதைகள், மொழி எழுச்சியை வளர்த்து புரட்சி ஏற்படுத்தியுள்ளனர். மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் வரிசையில் அறிஞர் அண்ணாவும், தமிழ் மொழி வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அரசியல், வரலாறு சமூகம் போன்றவைகளில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய அண்ணாவை மக்கள் உணர்ந்தாலும், தமிழ் மொழித்துறையில் அவர்நிகழ்த்தியுள்ள சாதனைகளையும், மாற்றங்களையும் போதிய அளவு மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே தமிழ்மொழி வரலாற்றில் அறிஞர் அண்ணா எவ்வாறு திருப்புமுனையாக விளங்குகிறார் என்பதை இக்கட்டுரை ஆய்வு நோக்கில் எடுத்துரைக்கிறது.

தமிழின் நிலை: சோழர் காலத்தில் தமிழன் நிலை சிறந்து விளங்கியது. சோழ அரசர்களால் தமிழ் மொழி உயர்ந்திருந்தது என்பதை,

''பிற்காலச் சோழரின் காலத்தில் தமிழ் இலக்கியம் புகழேணியின்

உச்சியை அடைந்தது. அவர்கள் தமிழ்மொழியை ஆதரித்ததால்

அவர்கள் அவைக் களத்தில் தமிழணங்கு குறுநகை செய்து

பொலிவுடன் வீற்றிருந்தாள்''

என்று கே.கே. பிள்ளை குறிப்பிடுகின்றார். இவ்வாறு சிறந்தோங்கிய தமிழ், வடமொழியோடு சேரத்தொடங்கிப் பின்னாளில் மணிப்பிரவாள நடையினை வடமொழி கற்ற அறிஞர்கள் தமிழில் புகுத்தினர். தமிழிலும் வடமொழிச் சொற்கள் கலக்கும் முயற்சியினைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிஞர்கள் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். இதனை, ''முத்தும் பவளமும் கலந்த மாலை போல் தனி அழகு ஏற்படுகிறது என்று சொல்லி வடமொழி படித்த அறிஞர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். மணிப்பிரவாள நடை என்று அதற்குப் பெயர் தந்து பரப்ப முயன்றார்கள்''. என்று மு.வ. அவர்கள் குறிப்பிடுகிறார். எனவே தமிழ் மொழியோடு வடமொழி கலந்திருந்ததை உணரலாம். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ்நாடு அயலவரின் கைகளில் இருந்ததால் தமிழ்மொழி தாழ்நிலை அடைந்தது. ''அயலவரின் ஆட்சிக்கு அடிமையான தமிழ்நாட்டில் தமிழ்மொழி தாழ்நிலையை அடைந்தது. ஆட்சியாளர்களின் ஆதரவின்மையால் தமிழ்மொழி வளர்ச்சி தடைப்பட்டதுடன் தன்நிலை திரிந்து கேடும் அடைந்தது.'' என மது.ச. விமலானந்தம் கூறுவார். தமிழக வரலாற்றில் தமிழன் நிலையினை இதைப்போன்ற பல நூல்களில் அண்ணா கற்றுணர்ந்தார் எனலாம்.

தமிழ் பற்றிய விழிப்புணர்ச்சி: ''கால்டுவெல்லின் திருநெல்வேலி மாவட்ட வரலாறு(1881) அ.சு. கனகசபைப் பிள்ளையின் 1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்(1904) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் சோழர்(1924) பாண்டியர் அரசு(1929) போன்ற பல நூல்கள் தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக்காட்டின. இவற்றால் தமிழரிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.'' கால்டுவெல் தமிழ்மொழியின் தன்மையைத் தமிழர்களுக்கு உணர்த்தியதால் தமிழர்கள் விழிப்புணர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து தந்தைப்பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தமிழரிடையே மேலும் விழிப்புணர்வு பெறக் காரணமாக அமைந்தது. கால்டுவெல், தந்தைப்பெரியார் போன்றவர்கள் அண்ணாவிற்குத் தமிழ் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

முத்தமிழை வளர்த்த அண்ணா: பெரியாரின் நட்பு அண்ணாவின் மொழி ஆற்றலுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பேச்சால் இயற்றமிழை வளர்த்தார். முதலமைச்சராகப் பதவி ஏற்கும் பொழுது தமிழ்மொழியிலேயே பதவி ஏற்பு உறுதிமொழியினை மேற்கொண்டார். தமிழ் இசை தெலுங்கு, சமஸ்கிருத மொழியால் வீழ்ச்சி பெற்றிருந்தது. இதையறிந்த அண்ணா தமிழ்மொழி எல்லா இடங்களிலும் பிறமொழிப்பாடலால் நிரம்பியிருக்கிறது என்பதனைக் குறித்து ''தமிழரின் இசைப்பற்று தியாகய்யர் காலத்துப் பலப்பல நூ‘ற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. கடலைக் கண்டால் ஒரு பாடல், கரியைக் கண்டால் ஒரு பாடல், தளிரைக் கண்டால் ஒரு பாடல் எனத் தமிழர் தமது உணர்ச்சியை இசை வடிவில் எத்தனையோ சிறப்புடன் வெளிப்படுத்தி வாழ்ந்தனர். இசைச் செல்வத்தை இவ்வளவு பெற்று முன்னம் வாழ்ந்த தமிழர் இன்று கேட்பது தமிழ் இசையை அல்ல. தமிழ் நாட்டில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாக இருக்க வேண்டும்.'' என்று அண்ணா தமிழ் இசைக்குரிய தன்மையை விளக்கி இசைத்தமிழை வளர்க்கப் பாடுபட்டார். முத்தமிழில் ஒன்றான நாடகத்துறையிலும் ஓர் இரவு, வேலைக்காரி, ரங்கூன் இராதா, போன்ற நாடகங்களை எழுதித் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தார்.

தமிழ்மொழியில் இறைவழிபாடு: கோவிலில் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற முறையை மாற்றித் தமிழில் தெய்வ வழிபாட்டை நடத்த வேண்டும் என்று முயன்று வெற்றி கண்டார். இதனை, ''நாம் இந்த அர்ச்சனை முறை மாறுவதைக் கொண்டு மாபெரும் புரட்சி வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது என்று கருதிப் பொன்னார் மேனியனைப் போற்றுதும் என்று கூறித் திருப்திப்பட்டுவிடவில்லை. இது துவக்கம் இதைத்தொடர்ந்து செய்யப்பட வேண்டியவை பலப்பல உள'' எனத் தமிழ்நாடு நாளிதழில் குறிப்பிடுகின்றார். இறைவழிப்பாட்டிலும், தமிழ் அமையச் செய்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறார்.

இந்தி மொழி எதிர்ப்பு: தமிழ் எழுத்துக்களில் பிறமொழி கலந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்ற நோக்கோடும், ஒரு வட்டார மொழியை ஆட்சி மொழியாக்குவது இந்திய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்ற நோக்கோடும் இந்தி எதிர்ப்பினை வளர்த்தார். இந்தியா பரந்த நிலப்பரப்பு இதில் ஒரு மொழி ஆட்சி என்பது இயலா ஒன்று என்று கருதியே, ''இந்தியா ஒரு நாடல்ல, ஒரு உபகண்டம். பல இனமதத்தோர் வாழும் ஒரு பரந்த நிலப்பரப்பு. இங்கே ஒரு ஆட்சி நிலவ முடியாது. அது போலவே ஒரே மொழி அரசாங்க மொழியாவதும்.'' என்று அண்ணா குறிப்பிடுகிறார் என்பதைத் தமிழ்ப்பித்தன் விளக்குகின்றார். தமிழ்மொழி மட்டும் அரசு மொழியாக தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதியாகவே விளங்கினார். தமிழர்களைப் பேச்சாலும், எழுத்தாலும் இந்தி எதிர்ப்பு உயர்வினைத் தூண்டி, பல இடங்களிலும் இந்த எதிர்ப்புக்காக கூட்டம் கூட்டி உரையாற்றினார்.

தமிழ்மொழியை ஆட்சிமொழி ஆக்குதல்: தமிழ் ஆட்சிமொழியாக, எல்லாத்துறையிலும் தமிழே சிறந்து விளங்கவேண்டும் என்பதில் தனியாக ஆர்வம் காட்டினார். அதனுடைய விளைவாக, ''தாய்மொழி தமிழ் உலகமொழி ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றல் செய்தார்'' பல சோதனைகளைக் கடந்து தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்கினார்.

ஆய்வு முடிவுகள்: தமிழ்மொழியின் இயல், இசை, நாடகம். என்ற முத்தமிழையும் வளர்த்தார். தமிழில் பிறமொழிக் கலப்பை வெறுத்தார். ஏனெனில் தமிழுடன் பிறமொழி கலந்தால் தமிழும் தமிழினமும் அழியும் என நம்பினார். ஆகையால் தமிழோடு கலந்து கொண்டிருக்கிற வடமொழியை எதிர்த்தார். அரசின் மும்மொழிக் கொள்கையும் எதிர்த்துப் போராடினார். தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்று வரும்பினார். அதுபோலவே தமிழை ஆட்சி மொழியாகவும் ஆக்கிக் காட்டினார்.

அரசியல், வரலாறு, சமுதாயம் என பலவற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய அண்ணா, தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தார்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக