''கண்ணால் நகை செய்வாள்'' என்று
காட்டுவதற்காகத்தான் -
கண்ணகி என்று பெயரிட்டார்களாம்
கண்ணகி என்று பெயரிட்டதால் தானா
அந்தக் கண்கள் -
அழுது கொண்டே இருந்தன''?
கண்ணகி தன் கணவனுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவு, அவனைப் பிரிந்து இருந்த நாட்களே அதிகம், அதனால்தான் அவள் அழுது கொண்டே இருந்தாள். தான் அழுவதைக் தன் கணவனுக்குக் கூடக் காட்டாத என்று மறைத்து அழுது கொண்டான். தன்னை அமைதிப்படுத்திக் கொண்டாள், கண்ணகி என்ற பெயரிட்டதனால், அவன்,
''கைநீட்டி முதலில் கழற்றிக் கொண்டது
கண்ணகி மங்கையின் கண்நகையை அல்லவா!''
கோவலன் கண்ணகியை விட்டுப்பிரிந்து செல்லும் போது கண்ணகியின் கண்ணகையும் கழற்றிக் கொண்டு சென்றான். சென்றவன் திரும்பி வந்தான். ''இதுவரை நீ சோழ நாட்டில் இருந்து தனிமையை அனுபவித்தாய் மதுரை சென்று மாங்கலியத்தை இழந்து ஆற்றாத் துன்பம் அனுபவிப்பாய் என்றல்லவா'' ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டிற்று.
தனிமனை (யாள்) வாழ்க்கை : திருமணம் முடிந்த அன்று கோவலன் கண்ணகியை வருணிக்கின்றான்.
''மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே தேனே''
என்று வருணித்துக் சில ஆண்டுகள் மட்டும் உடனிருந்த அவன் மாதவியைக் கண்டு அவளுடன் சென்றுவிட்டான். மேடையில் நடனமாடிய கால்களுடன் சென்று அவன் கண்ணகியின் கால்களை இல்லத்திற்குள்ளே உலா வர விட்டு விட்டான். திருமணம் முடிந்து தனி வாழ்க்கை மரபுப்படி வைத்தார்கள். தனி வாழ்க்கை என்று இருவரையும் தனித்தனியே வாழ வைத்து விட்டனர். கோவலன் ஒரு பக்கமும், கண்ணகி ஒரு பக்கமும் பெரியவர்கள் வைத்தது தனிமனை வாழ்க்கை, ஆனால் இங்கு நடந்தது தனி மனையாள் வாழ்க்கை.
கோவலன், கண்ணகியை விட்டு நடனம் ஆடிய மாதவியுடன் சென்று விட்டான். கோவலன் சென்றது அவள் கலையை ரசித்தே என்றாலும் பின்பு அவளுக்கே குழந்தை பெறும் பாக்கியத்தைத் தருகிறான். இதில் மாதவி மீது எந்தக் குற்றமும் இல்லை. கோவலன் கலையின் மீது கொண்ட அளவுக்கு அதிகமான பற்றே காரணம். பிரிந்து சென்றவன் அவளையும் தவிக்கவிட்டு அவளுடன் கருத்து மாற்றம் கொண்டு வந்தான். வந்தவன் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் வந்தானோ என்று எண்ணிக் கால் நகையை கழற்றிக் கொடுக்கிறாள் கண்ணகி. அப்போது இதை விற்று வாழ வழி தேட வேண்டும் என்று, அதுவும் மதுரையில் ஊழ்வினை இங்குதான் தூண்டுகிறது. மாதவியுடன் கொண்ட கூட்டுறவு உடைகிறது பார்த்தால் பிறர் பழிப்பாரே என்று எண்ணி இரவோடு இரவாக மதுரைக்குப் புறப்படுகிறான்.
கோவலன் வீட்டிற்குத் திரும்பி வருகிறான் - திருந்தி வருகிறான், இங்கே கண்ணகியின் பெண்மை, கோவலன் மீது கொண்ட காதல் கணவனை மதிக்கும் பண்பு காட்டப்படுகின்றது. கணவன் என்னுடன் மதுரை புறப்படு என்று சொன்னவுடன் மறுப்பு ஏதும் கூறாமல் உடனே எழுந்து புறப்பட்டாள். கண்ணகி காட்டு வழிப் பாதையாக ஊர் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக மதுரை நோக்கிப் புறப்படுகின்றாள். இடையில் கவுந்தியடிகளைச் சந்திக்கின்றனர். அவரும் மதுரைக்குச் செல்வதாகச் சொன்னதும் கண்ணகிக்குத் துணை என்று எண்ணிக் கோவலன் மகிழ்கிறான். மதுரை வந்து சேர்ந்ததும் மாதரியிடத்தில் அடைக்கலமாகின்றனர். அங்கே கோவலனும் கண்ணகியும் இருக்கின்றனர்.
''இதுவரை உன்னைத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்று விட்டேன்'' என்று கோவலன் பேசுகிறான். தன் தவற்றை எண்ணி வருந்துகிறான். அப்போது கண்ணகி, ''கணவன் இல்லாமையால் அறவோர்க்கு அளித்தலும் அந்தனர் ஓம்பலம் விருந்தினர் உபசரித்தலும் இல்லாமல் இருந்தேன்'' என்கிறாள். மனம் விட்டு பேசுகின்றனர். கண்ணகி மூலம் இடித்துரைப்பதன் வாயிலாக இளங்கோவடிகள் கோவலன் மீது கொண்ட கோபத்தை இங்குதான் காட்டுகிறார். இறுதியில் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு செல்கிறான். கோவலன் முதலில் கழற்றியது கண் நகை, இறுதியில் கழற்றியது கால் நகையை, கண் முதலாகக் கதையை ஆரம்பித்த கோவலன் நிகழ்வைக் கண்ணகியின் காற்சிலம்பால் முடிக்கிறார் இளங்கோவடிகள்.
கோவலன் நகையை வாங்கிக் கொண்டு சென்றான். அங்கே பொற்கொல்லன் ''தான் செய்த தவற்றை யார் தலையில் கட்டுவது'' என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான். இவன் ஊழ்வினை உந்துதலால் அவனிடம் சென்று சேர்கிறான். பொற்கொல்லன் அரசவை சென்று திரும்புகிறான். கோவலனைத் கொல்வதற்கு ஆட்களோடு வந்த வீரர்களில் ஒருவன், ''பார்த்தால் பழிபாவம் அறியாத இவனா களவு செய்தான்'' என்று கேட்க, கீழ்மகன் ஒருவன் கோவலனைக் கொன்று விடுகிறான். யானையையே அடக்கிய ஒருவன், ஒரு கீழ்மகனால் கொலை செய்யப்படுகிறான்.
கணவன் வருகைக்குக் காத்திருந்த கண்ணகி பல ஆண்டுகள் கழித்துப் பெற்ற இன்பமும் பலனின்றிப் பரிதவித்து நிற்கிறாள். கோவலன் கள்வன் என்ற கொலையுண்டான் என்று கேட்டதும் கலங்குகினாள். தன் கணவன் கள்வன் அல்ல என்பதை நிரூபிக்க அரண்மனை நோக்கி நடக்கிறாள். தன் எஞ்சிய மற்றொரு சிலம்பைக் கையில் கொண்டு தெய்வமே பயம் கொள்ளுமாறு வீதியில் நடக்கிறாள். இதுவரை தன் கணவன், மாமன், மாமியார், கவுந்தி, மாதவி ஆகிய யாருடனும் அதிகம் பேசாத கண்ணகி இங்கு அதிகம் பேசுகிறாள். வாயிற் காப்பானை நோக்கி,
''வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!''
என்று பேசுகிறாள். மேலும் கணவனை இழந்தாள் கடையகத்தாள், என்று அறிவிக்கும்படி கூறுகிறாள். அமைதியின் வடிவமாக இருந்த கண்ணகியின் கோபத்தை வாயிற் காப்பாளன் விளக்குகிறான்.
''வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள்
கானகம் உகந்தகாளி, தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
பொற்றொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே''
என்று அரசனிடம் கூறுகிறான்.
கண்ணகி தன் கணவனுடன் வேற்றூர்க்குச் சென்றதாகவும் அங்கு கணவனுக்கு நீங்க முடியாத துன்பம் உண்டானதாகவும் அவ்வூர் அரசனிடம் தான் சென்று வழக்குரைத்தாகவும் கனவு கண்டாள். கோவலன் காவல் வேந்தனின் பெருநகரிலே ஒரு கீழ்மகனால் மனம் நாறும் ஐங்கூந்தலை உடையவனாக இவள் நடுநடுங்கித் துயர் எய்தவும் யான் உடுத்த ஆடையும் பிறரால் கொள்ளப்பட்டு விட எருமைக் கடாவின் மீது ஊர்ந்து செல்லவும் கனவு கண்டான். பாண்டிமாதேவி, செங்கோலும், வெண்குடையும் செறிந்த நிலத்தின்கண் மடங்கிக் கீழே சரிந்தன. நம் கோமானது கொற்றவாயிலின் கண்ணே மணியானது நடுங்க எம் உள்ளமும் அதனால் நடுங்கியது. இரவிலே வானம் வில்லிடும். பகற்காலத்தே விண்மீண்கள் எரிந்து கீழே விழும் போன்ற தீய நிமித்தங்களைக் கனவிடைக் கண்டதாகச் சொன்னாள். கண்ட கனவை யாரிடமாவது சொல்லிவிட்டால் அது பலிக்காது. ஆனால் மூவர் கனவு கண்டு அதனை மூவருமே அடுத்தவரிடம் சொல்லியும் கனவு பலித்து விட்டது ஊழ்வினையால்.
கண்ணகிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு காரணம் யார்? இராமயணத்தில் சீதையின் செயலால் அவளுக்குத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் எந்தப் பாவமும் அறியாத கண்ணகி இங்கே துன்பப்படுகிறாள். ஏனோ அவளும், அவளை அறியாமல் ஒரு காரணமாகி நின்று விட்டதால், முதலில் பெற்றோர்கள் தவறு செய்தது. சிறுவயதில் திருமணம் முடித்துத் தனிவாழ்க்கை வைத்த பெற்றோர்கள் மற்றொரு காரணம், கோவலன் கலையின் மீது கொண்ட பற்றும் ஒரு காரணம், பின்பு பொற்கொல்லன், அடுத்தது பாண்டிமாதேவி, இவள் கோபமாகச் சென்றதால் பாண்டியன் அவளைச் சமாதனாப்படுத்த விரும்பிப் பின்செல்ல, வாய் தவறி வார்த்தையை மாற்றிச் சொன்னான். இறுதியில் கண்ணகியும் ஒரு காரணமே, கணவன் கொலையுண்டான் என்ற செய்தியைக் கேட்ட கண்ணகி கொண்ட கோபத்தைத் தன்னைப் பிரிந்து சென்ற போது சிறிதளவேனும் காட்டி இருந்தால் அவனை மாதவி பக்கம் இருந்து திருப்பி இருக்கலாம். மேலும் திருத்தியிருக்கலாம்.
கண்ணகிக்கு நேர்ந்த துன்பத்திற்குக் காரணம் கண்ணகியே தான். அரசனிடம் இந்த அளவிற்குப் பேசும் அவள் முன்பே மாதவி உறவில் கணவனிடம் பேசியிருக்கலாம். மேலும் விலையுயர்ந்த மாணிக்கப் பரல்களைக் கால்களில் அணிந்ததால் என்னவோ அவளுக்கு வாழ்க்கை நிலைக்கவில்லை. மாணிக்கப்பரல் அணிந்த கண்ணகியை விட்டுவிட்டு, நாட்டியம் ஆடும் மாதவியினைத் தேடிச்சென்றான் கோவலன்.
கண்ணகி என்ற பெயரிட்டிருந்தும் அந்தக் கண்கள் அழுது கொண்டே இருந்தன. கோவலன் செய்த முன் வினைக்கேற்பக் கொலை செய்யப்படுகிறான். ஆனால் இங்கே அழுவது கண்ணகி, கண்ணகியைப் பற்றி இளங்கோ சொல்லும்போது ''வண்ணச் சீறடி மன்மகள் அறிந்திலன்'' என்பார். கோவலன் தன் தவற்றை எண்ணி வருந்துகிறான். தன் கணவன் தன்னைப் பிரிந்து சென்ற போதும் மாமன் மாமியருக்குத் தன் துயரத்தைத் தெரிவிக்காத பண்பு கண்ணகியிடத்து மேலோங்கி நிற்கிறது. கணவன் புது வாழ்வு தருவான் என்று நினைத்த போது வாழ்வே பறிபோகிறது. இதுவரை அமைதியாகக் காட்டப்பட்டக் கண்ணகி பொங்கி எழுகிறாள்.
''தீப்பொறியாக அல்ல
எரிமலையாக
மதுரையை அழிக்கும்
புது அலையாக''
மதுரையை அழித்தும் மனம் அமைதி கொள்ளாத கண்ணகி நடந்து கொண்டே இருக்கிறாள். மலை உச்சிக்கு அங்கே தன் கணவன் வரவுக்குக் காத்திருக்கிறாள். கணவன் வருகிறான் வானுலகிற்குக் கூட்டிச் செல்ல இங்கேயும் வந்தான். மதுரைக்குக் கூட்டிச் செல்ல இவள் இழந்தது மாங்கல்யத்தை, வானுலகத்தின் என்ன நிகழுமோ? இனியும் கண்ணகி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
நன்றி: பிறதுறைத் தமிழியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக