30/01/2011

தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு - அ. ஜோஸ்பின் புனிதா

தொல்காப்பியர் கூறும் அகத்திணை மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவள் செவிலியாவாள். நற்றாயை விடச் செவிலித் தாயும் தோழியும் தலைவியின் காதல் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செவிலி பற்றித் தொல்காப்பியம் மற்றும் சங்க அக இலக்கியங்கள் வழி ஆராயப்படுகின்றது.

தொல்காப்பியத்தில் செவிலி:

தொல்காப்பியர் களவியல், கற்பியல் ஆகிய இரு இயல்களில் செவிலியின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றார்.

''ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின்

தாயெனப்படுவாள் செவிலியாகும்'' (தொல்.பொருள்களவு-112)

என்கிறார். நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்குரிய மறைப்பொருள் யாவற்றையும் கூறும் கட்டுப்பாடு உடையவளாதலின் தாய் எனப்படுவாள் செவிலி என்று கூறுகின்றார்.

தலைவன் தலைவியின் ஒழுகலாறு அயலாருக்குப் புலனாகி அவர் தூற்றப்பட்டவிடத்தும் தலைவிமாட்டு உள்ளதாகிய வேட்கை அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுதும் புணர்ச்சியால் தலைவியின் உடல் மாறுபாடு அடைந்தவிடத்தும், தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும், கட்டு வைப்பித்த வழியும், செவிலியும், நற்றாயும் தலைவியின் நிலை கண்டு வெறியாட்டு மேற்கொண்ட பொழுதும், காதல் மிகுதியால் தலைவனை எள்ளிக் கனவின்கண் அரற்று தற்கண்ணும், இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும், தெய்வத்தை வேண்டியும், தலைவன் வரையாது பிரிந்தவழி ஒழிந்த தலைமகள் அலராடுதலும் இன்றி, வேறுபாடும் இன்றி, ஒரு மனப்பட்டிருந்த உள்ளக் கருத்தை அறிந்த வழியும், தலைவன் குடிமை தன் குடிமையோடு ஒக்குமென அறைதற் கண்ணும் என்று இவ்வாறாக பதின்மூன்று நிலைகளில் செவிலி கூற்று நிகழும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். (தொல். பொருள் களவு:113)

''கிழவோன் அறியா அறிவினள் இவளென

மையாறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிழவியின் அறிதலும் உரித்தே'' (தொல். பொருள். களவு:115)

என்று நற்றாய் - செவிலித்தாய் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.

''தாய் அறிவுறுத்தல் செவிலியோ டொக்கும்'' (தொல் பொருள்.களவு:136)

நற்றாய் களவொழுக்கம் அறிவுறுத்தல் செவிலியோடு ஒக்கும் என்றும் எடுத்துரைக்கிறார்.

''கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்குரிய ஆகும் என்ப'' (தொல். பொருள். கற்பு:151)

என்பதனால் இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும் நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவை என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

அறத்தொடு நிற்றல்:

தலைவியின் செயல்பாடுகளில் மாற்றத்தினைத் தமது நுண்ணுனர்வினால் அறிந்த செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள்.

''பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய

நால்ஊர்க் கோசர் நல்மொழி போல

வாய்ஆ கின்றே தோழி ஆய்கழல்

செயலை வெள்வேல் விடலையொடு

தொடுவளை முன்கை மடந்தை நட்பே'' (குறுந்தொகை - 15)

இப்பாடலில் தலைவி உடன் போக்கு போன பிறகு தோழி செவிலித்தாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பிறகு செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பின் வரும் பாடல் செவிலி அறத்தொடு நிற்றலுக்கும் சான்றாகக் காட்டத்தக்கதாகும்.

இற்செறிப்பு:

தலைவி தலைவனோடு களவொழுக்கம் புரிதலை அறிந்த செவிலி தலைவியை மறைமுகமாக இற்செறிக்கின்றாள். ஊரில் அலர் தூற்றப்படுவதாலும் தலைவியிடத்து காண்பதாலும் இந்நிகழ்வினைச் செவிலி செய்விக்கின்றாள்.

''அன்னையு மறிந்தன அலரும் ஆயிற்று

நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்''

என்ற இப்பாடலில் எங்கள் தாயும் நமது களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள். ஊர் முழுவதும் பழிச்சொல்லும் பரவுகிறது. இதுகாறும் இன்பமாக இருந்த எங்கள் வீடும், நாங்களும் தனிமைத் துயரத்தை அனுபவிக்க ஏற்றதாகிவிட்டது என்று தலைவி தலைவனிடம் புலம்புகின்றாள்.

''புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை

தான் அறிந்தன்றோ இலளே பானாள

சேரிஅம் பெண்டிர் சிறுசொல் நம்பி

கடுவான் போல நோக்கும்

அடுபால் அன்னஎன் பசலை மெய்யே''

என்னும் இப்பாடலில் தலைவனோடு கொண்ட உறவை இதுவரை அன்னை அறியவில்லை. எனினும் பாதிநாள் இரவில் சேரியின் அழகிய பெண்டிர் சிறுசொல்லாகிய அலரை நம்பிக் காய்ச்சிய பால் போன்ற என் பசலை படர்ந்த உடலைச் சுடுதல் போல அவள் நோக்குவாள். இவ்வாறு அலர் காரணமாகவும், பசலைக் காரணமாகவும், தாய் தலைவியின் களவிளை உணர்கின்றாள் என்பது கூறப்படுகின்றது.

வெறியாட்டு:

தலைவி தினைபுனம்காக்கச் செல்கின்றாள். சென்ற இடத்தில் தலைவனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் களவு நிகழ்கின்றது. ஆனால் தாய் சென்ற இடத்தில் தலைவிக்கு அணங்கு ஏறப்பெற்றாள் என்று எண்ணி வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துகின்றாள்.

''..............தோழி வேறு உணர்ந்து

அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி

வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து

பொன்நேர் பசலைக்கு உதவா யாறே'' (நற் - 47.7 -11)

என்னும் இப்பாடலில் தாய் தலைவியின் நிலையினை அறிந்து வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவது கூறப்படுகின்றது.

குழந்தை பராமரிப்பு:

செவிலி தலைவியை அரவணைத்து வளர்த்ததோடு மட்டுமல்லாமல் தலைவியின் குழந்தையையும் அரவணைத்து அன்பு காட்டி வளர்க்கும் நிலையினையும் கீழ்வரும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

''வெறிஉற விரிந்த அறுவை மெல்அணைப்

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசுநெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர்கெழுமடந்தை ஈர் இமை பொருத்த'' (நற் - 40, 5-9)

இப்பாடலில் நறுமணம் உண்டாக விரிந்திருந்த நூலாடையுடைய மெல்லிய படுக்கையில் அண்மையிற் பிறந்த புதல்வன் செவிலி அருகில் உறங்குகிறான். சிறப்பு மிக்க தலைவி வெண்சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அண்மைக்காலத்தில் பசிய நெய் விளக்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கிக் கிடந்தான் என்று தலைவியின் மகன் செவிலித்தாய் அருகில் உறங்கியதாகக் கூறப்படுகின்றது.

உடன்போக்கு:

தலைவன் தலைவி ஆகிய இரு குடும்பத்தார்களும் திருமணத்திற்கு உடன்படாதபோது உடன்போக்கு நிகழும். உடன்போகிய தலைவியை நினைந்து மனையிலிருந்து புலம்புதல் தாய்க்குரியதாகவும் மனையிலிருந்து புலம்புதல் மட்டுமின்றிப் பின்சென்று தேடுதல் செவிலிக்குரியதாகவும் அமைகின்றன.

''ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லும் தாயரும் உளரே'' (தொல். அகத்திணை. 37)

நற்றாய் செவிலி இருவரது செயல்களும் உணர்வால் ஒன்றுபட்ட படைப்பில் செயலால் வேறுபடும் தொல்காப்பியர் தாயர் எனப் பன்மைப்படுத்திக் கூறியமை மனைப்புறத்துச் சென்று தேடிய தாயைச் செவிலி எனப் பாகுபடுத்தக் காரணமாய் இருந்திருக்கலாம். வீதிகளில் சென்று தேடியவள் செவிலி, இருந்து புலம்பியவள் தாய் என்று விளக்கம் தருகின்றனர்.

தலைவன் தலைவியிடம் பொய் சொல்லியும் பாராட்டியும் மயக்கிக் கொண்டு சென்றுள்ளான் என்று தாய் கூறுகின்றாள். தலைவனைப் பொய்யன் என்றே கூறுவதைக் காணமுடிகிறது.

''ஏதிலன் பொய்மொழி நம்பி''

''கூர்வேல் விடலை பொய்ப்போகி

சேக்குவள கொல் லாதானே''

''மையணல் காளை பொய்புகலாக

அருஞ்சுரம் இறந்தனள்''

என்று செவிலித்தாய் தலைவி தலைவனின் பொய்யுரைகளையும் இன்சொல்லினையும் நம்பிப் பாலை வழியில் சென்று விட்டாள் என்று தலைவனை இடித்துரைத்துத் தலைவியின் எதிர்கால வாழ்வினை எண்ணி வருந்தும் நிலையை அறியமுடிகிறது.

செவிலி - தோழி:

தலைவியின் செவிலித்தாய் தான் தோழியின் தாயாவாள். செவிலியின் சிறப்பைப் போற்றும் முறையில் தொல்காப்பியர் தாய் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவள் செவிலியே ஆகும் என்று கூறி அதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுவார்.

''தோழிதானே செவிலியது மகளே'' (தொல்.பொருள். களவு-123)

செவிலி தோழியின் நற்றாயாகவும் தலைவியின் வளர்ப்புத் தாயாகவும் நிகழ்கிறாள். தோழி - செவிலி ஆகியோரின் சொந்த வாழ்வியல் நிகழ்வுகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் உள்ளது. தலைவிக்கு அமைந்த தோழியைப் போன்றே நற்றாய்க்குத் தோழியாகச் செவிலி படைக்கப்பட்டுள்ளாள். செவிலியின் கணவனைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. தலைவிக்குள்ள உரிமைகள் அனைத்தும் தோழிக்குத் தருவதைப் போன்று நற்றாய்க்குள்ள உரிமைகள் அனைத்தும் செவிலிக்கும் வழங்கப்படுகின்றன.

ஒரு குடும்பத்தில் பிறந்த இருதலைமுறையினர் தலைமக்கள் வாழ்வில் பெரும்பங்கு கொண்டு அவர்களுக்காகத் தொண்டாற்றும் சிறப்பைப் பெறுகின்றனர். அவர்கள் செவிலியும் தோழியும் ஆவார்.

''அரிநகைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரிமெலிந் தொழியச் பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி'' (நற்.110 6-8)

என்னும் இப்பாடலில் தோழியை எவ்வாறெல்லாம் செவிலித்தாய் வளர்த்தாள் என்னும் குறிப்பு இல்லை. செவிலி தலைவியின் நலனில் அக்கறைக்கொண்டு அவளின் வாழ்வுக்காகவே வாழ்ந்த இயல்பினளாக விளங்குகிறாள்.

செவிலியின் உயர்பண்புகள்:

தலைவியின் களவினைத் தோழி கூறுவதற்கு முன்பு செவிலித்தாய் தமது நுண்ணறிவினால் அறிந்து கொள்ளும் மனநிலை கொண்டவளாக இருப்பதனை அறிய முடிகிறது. பின்னர் இற்செறிப்பின் மூலம் செவிலி தமது குலப்பெருமையும், குடிப்பெருமையும் காக்கும் கடமை உணர்வு மிக்கவளாகக் காணப்படுகிறாள். வெறியாட்டு பற்றிய செயல்களைக் காணும் போது தலைவி மீது கொண்டுள்ள பாச உணர்வு வெளிப்படுகிறது.

தலைவி உடன்போக்குச் சென்ற பிறகு செவிலி நற்றாயிடம் அறத்தொடு நின்று தமரின் உடன்பாட்டுடன் நாடறிய நல்மணம் செய்விக்க விழைகின்றாள். இவற்றால் செவிலியின் மனஉணர்வும், கடமையுணர்வும், பொறுப்புணர்வும் வெளிப்படுவதனை அறிய முடிகிறது.

சங்ககாலச் சமுதாயத்தில் பெண்ணின் உணர்வுகள் பெண்களால் மதிப்பளித்தும் போற்றியும் காக்கும் நிலையைச் சங்க அக இலக்கியங்களில் காணப்படும் பெண் பாத்திரங்களான நற்றாய் - செவிலி, தலைவி - தோழி மூலம் அறியலாம்.

இன்றைக்கும் கிராமப்புற சமுதாயங்களில் ஒரு தாயின் குழந்தையை மற்றொரு தாய் பராமரித்தலும், பாலூட்டி வளர்த்தலும் போன்ற நிகழ்வுகளைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் காணும் பொழுது ஒரே கணத்தினைச் சார்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு உள்ளத்து உணர்வுடன் செய்ல்பட முடியும் என்பதை கண்டு கொள்ள முடிகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக