24/06/2010

புணர்ச்சி

கந்தன் + வந்தான் = கந்தன் வந்தான்

மா + மரம் = மாமரம்

இவ்வாறு சொற்கள் ஒன்றோடொன்று சேருவது புணர்ச்சி எனப்படும். இவற்றில் முதல் சொல் நிலைமொழி எனப்படும்; வந்து சேரும் மொழி (இரண்டாம் சொல்) வருமொழி எனப்படும்.


1. இயல்பு புணர்ச்சி - விகாரப் புணர்ச்சி
1. மா + மரம் = மாமரம்


மா - நிலைமொழி
மரம் - வருமொழி

மாமரம் - புணர்ச்சி


இவ்வாறு இரண்டு சொற்களும் எவ்வித மாறுதலும் இல்லாமல் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
2.

1.அவரை + காய் = அவரைக்காய்...க்
புளி + பழம் = புளியம்பழம் ...அம்

அந்த + காக்கை = அந்தக்காக்கை...க்

இவ்வாறு இரண்டு சொற்கள் புணருகையில், இடையில் எழுத்துக்கள் தோன்றுவது உண்டு.


2.பல் + பொடி = பற்பொ...ல்-ற் ஆனது.
கள் + குடம் = கட்குடம்...ள்-ட் ஆனது.

மண் + குடம் = மட்குடம்...ண்-ட் ஆனது.

இவ்வாறு நிலைமொழியில் கடைசி எழுத்து வருமொழியின் முதலெழுத்தை நோக்கி அதற்கு ஏற்பத் திரிதலும் உண்டு.


3.மரம் + வேர் = மரவேர்...(ம்) கெட்டது.
பெருமை + வள்ளல் = பெருவள்ளல்... (மை) கெட்டது.

பெருமை + நன்மை = பெருநன்மை... (மை) கெட்டது.


இவ்வாறு நிலைமொழியின் ஈற்றெழுத்துக் சில இடங்களில் கெடுதலும் உண்டு. இவை முதலிற் கூறிய இயல்பு புணர்ச்சிக்கு மாறாக விகாரப்பட்டு வருவதால் விகாரப் புணர்ச்சி எனப்படும்.
மேலே சொல்லப்பட்ட மூவகை விகாரப் புணர்ச்சிகளும் முறையே (1) தோன்றல் விகாரம், (2) திரிதல் விகாரம், (3) கெடுதல் விகாரம் எனப்படும்.


2. உடம்படுமெய்
1.

கிளி + அழகு = கிளி + (ய்) + அழகு = கிளியழகு
தீ + எரியும் = தீ + (ய்) + எரியும் = தீயெரியும்

பனை + ஓலை = பனை + (ய்) + ஓலை = பனையோலை


இங்கு நிலைமொழி ஈற்றல் இ.ஈ.ஐ. என்னும் உயிர் எழுத்துக்கள் இருக்கின்றன; வருமொழி முதலில் உயிர் எழுத்துக்கள் உள்ளன. இவையிரண்டும் புணரும்போது, இவற்றை உடம்படுத்த (ஒன்று சேர்க்க) இடையில் `ய்' என்னும் மெய் தோன்றுகிறது. இது யகர உடம்படுமெய் எனப்படும்.
2.

பல + ஆடுகள் = பல + (வ்) + ஆடுகள் = பலவாடுகள்
பலா + இலை = பலா + (வ்) இலை = பலாவிலை


என்று இவ்வாறு முன் சொன்ன இ.ஈ.ஐ ஒழிந்த ஏனைய உயிர்களின்முன் வருமொழி முதலில் உயர் வந்தால் இடையில் `வ்' என்னும் உடம்படுமெய் தோன்றும். இது வகரவுடம்படுமெய் எனப்படும்.

தே + ஆரம் = தே + (வ்) + ஆரம் = தேவாரம்
சே + அடி = சே + (ய்) + அடி = சேயடி = சே + (வ்) + அடி = சேவடி


`ஏ' என்னும் உயிரெழுத்து நிலைமொழி ஈற்றில் நிற்க, வருமொழி முதலில் உயிர் வந்தால், சில இடங்களில் யகரவுடம்படு மெய்யும், சில இடங்களில் வகர வுடம்படு மெய்யும் தோன்றும் என்பதும் மேல் வந்த எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்.
இவ்வாறு இடையில் வந்து உடம்படுத்தும் மெய்யெழுத்து ``உடம்படுமெய்'' எனப்படும்.


3. வேற்றுமைப் புணர்ச்சி - அல்வழிப் புணர்ச்சி
1.

நீர் + கொடுத்தான் = நீர் கொடுத்தான் - வேற்றுமைத் தொகை.
நீரை + கொடுத்தான் = நீரைக் கொடுத்தான் - வேற்றுமை லிரி.


இவ்வாறு வேற்றுமை உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வரச் சொற்கள் புணருவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்.
2.

கொல் + யானை = கொல்யானை
கருமை + குதிரை = கருங்குதிரை

பவளம் + வாய் = பவளவாய்

கபிலர் + பரணர் = கபிலபரணர்

வந்து + போனான் = வந்துபோனான்


இவ்வாறு வரும் வினைத்தொகை முதலியனவும், எழுவாய்த்தொடர் முதலியனவும் அல்வழிப்புணர்ச்சி (வேற்றுமை அல்லாத வகையில் சொற்கள் புணருதல்) எனப்படும்.

4. ண, ன - ஈற்றுப் புணர்ச்சி
1.

கண் + கடை = கட்கடை
பொன் + தகடு = பொற்றகடு


வேற்றுமைப் புணர்ச்சியில் ண, ன - வல்லினம் (க,த) வர ட, ற ஆயின.

மண் + மாட்சி = மண்மாட்சி
பொன் + மாட்சி = பொன்மாட்சி

இவை இரண்டும் மெல்லினம்

மண் + வன்மை = மண்வன்மை
பொன் + வன்மை = பொன்வன்மை

இவை இரண்டும் இடையினம்
வேற்றுமைப் புணர்ச்சியில் மெல்லினமும் இடையினமும் (ம, வ) வர, ண, ன இயல்பாயின.

2.

மண் + பெரிது = மண்பெரிது
பொன் + பெரிது = பொன்பெரிது
மண் + மாண்டது = மண்மாண்டது
பொன் + மாண்டது = பொன்மாண்டது
மண் + யாது = மண்யாது
பொது + யாது = பொன்யாது

இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் வல்லினமும், மெல்லினமும், இடையினமுமாகிய மூவினமும் வர, ண, ன இயல்பாயின.
3.

தூண் + நன்று = தூணன்று
கோன் + நல்லன் = கோனல்லன்
பசுமண் + நன்று = பசுமணன்று

இவ்வாறு தனிக்குற்றெழுத்தைச் சாராமல் பிற எழுத்துக்களைத் சார்ந்து வரும் ண, ன - அல்வழிப்புணர்ச்சியில் வருமொழி முதலில் வரும் ந திரிந்துவிடத்துத் தாமும் கெடும்.

தூண + நன்மை = தூணன்மை (ந - ணவாகத் திரிய ண் கெட்டது)
வலியன் + நன்மை = வலியனன்மை ( ந - னவாகத் திரிய ன் கெட்டது)


இவ்வாறு வேற்றுமைப் புணர்ச்சியிலும் நகரம் கெடும்.
4.

1.பாண் + தொழில் = பாண்டொழில் - சாதிப் பெயர்
அமண் + சேரி = அமண்சேரி - குழுப்பெயர்
என வேற்றுமைப் புணர்ச்சியிலும் ண வல்லினம் வர இயல்பாயிற்று.


2.எண் + பெரிது = எட்பெரிது
சாண் + கோல் = சாட்கோல்
அல்வழிப் புணர்ச்சியிலும் ண, வல்லினம் வரத் திரிந்தது.


3.எண் + பெரிது = எண்பெரிது
சாண் + கோல் = சாண்கோல்
என்று அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாக வருதலே சிறப்பு.


4.பாண் + குடி = பாணக்குடி
அமண் + சேரி = அமணச்சேரி
என்று சாதிப் பெயர்களும் குழுஉப் பெயர்களும் `அ' என்னும் சாரியை பெறுவதும் உண்டு.


5.மண் + குடம் = மட்குடம்
பொன் + குடம் = பொற்குடம்
என வேற்றுமையில் வல்லினம் வர ணகர னகரங்கள் முறையே டகர றகரங்களாகத் திரிந்தன.


6.தேன் + மொழி = தேன்மொழி
தேன் + மொழி = தேமொழி
இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் னகரத்தின் முன் மெல்லினம் வரின் அந்த னகரம் இயல்பாதலும் உண்டு; அழிதலும் உண்டு.


7.தேன் + மலர் = தேன்மலர்
தேன் + மலர் = தேமலர்
இவ்வாறு வேற்றுமைப் புணர்ச்சியிலும் னகரம் இயல்பாதலும் உண்டு; அழிதலும் உண்டு.


8.தேன் + குழம்பு = தேன்குழம்பு - இயல்பாயிற்று.
= தேக்குழம்பு - வலிமிக்கது.
= தேங்குழம்பு - மெலிமிக்கது.
இவ்வாறு அல்வழிப் புணர்ச்சியில் னகரத்தின் முன் வல்லினம் வரின் அந்த னகரம் இயல்பாதலும் உண்டு; அன்றி, அது கெட்டு, வந்த வல்லினம் மிகுதலும் உண்டு; மெல்லினம் மிகுதலும் உண்டு.


9.தன் + பகை = தன்பகை
= தற்பகை
என் + பகை = என்பகை
= எற்பகை

இவ்வாறு வல்லினம் வர, ன் உறழ்தலும் உண்டு.


5. ல, ள - ஈற்றுப் புணர்ச்சி
1.

கால் + பொறை = காற்பொறை...ல் - ற் ஆனது.
முள் + குறை = முட்குறை...ள் - ட் ஆனது.

இது வேற்றுமைப் புணர்ச்சி.
2.

கால் + குறிது = கால்குறிது, காற்குறிது
முள் + குறிது = முள்குறிது, முட்குறிது

இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் வல்லினம் வர, ல், ள் உறழ்ந்து வந்தன.
3.

கல் + நெரிந்தது = கன்னெரிந்தது...ல் - ன் ஆனது.
வாள் + மாண்டது = வாண்மாண்டது...ள் - ண் ஆனது.

இஃது அல்வழிப் புணர்ச்சி; வருமொழி முதலில் மெல்லினம் வந்துள்ளது.
4.

கல் + மலை = கன்மலை...ல் - ன் ஆனது.
வாள் + மாண்பு =...ள் - ண் ஆனது.

இது வேற்றுமைப் புணர்ச்சி; வருமொழி முதலில் மெல்லினம் வந்தது.
5.

கால் + யாது = கால்யாது
முள் + வலிது = முள்வலிது

அல்வழிப்புணர்ச்சியில் ல், ள் முன் இடையினம் வர ல், ள் இயல்பாயின.
6.

கல் + யானை = கல்யானை
தோள் + வலிமை = தோள்வலிமை

வேற்றுமைப் புணர்ச்சியில் ல், ள் இடையினம் வர, இயல்பாயின.
7.

கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது

இவ்வாறு தனிக்குறிலின் பின் நின்றால் ல், ள் - அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வர, முன் சொன்னபடி றகர டகர மெய்களாகத் திரிதலே அன்றி, ஆய்தமாகத் திரிந்தும் வரும்.
8.

வேல் + படை = வேற்படை
வாள் + படை = வாட்படை

அல்வழிப்புணர்ச்சியில் வல்லினம் வர, ல், ள் - ற், ட் ஆகத் திரிந்தன.
9.

இல் + பொருள் = இல்லை பொருள்
= இல்லைப் பொருள்

இங்கு ல் என்பது ஐகாரச் சாரியை, பெற, வருமொழி முதலில் வந்த வல்லினம் மிக்கும் மிகாமலும் வந்தது.
10.

இல் + பொருள் = இல்லாப் பொருள்

இங்கு ல் என்பது `ஆ' சாரியை பெற, வந்த வல்லினம் மிக்கது.
11.

இல் + பொருள் = இல்பொருள்

இவ்வாறு இயல்பாக வருதலும் உண்டு.
12.

புள் + கடிது = புள்ளுக்கடிது
புள் + நன்று = புள்ளுநன்று
புள் + வலிது = புள்ளுவலிது

இவ்வாறு புள், வள் என்னும் இரண்டு சொற்களும் அல் வழிப்புணர்ச்சியில் யகரம் அல்லாத மெய்கள் வந்தால் `உ' என்னும் சாரியை பெற்றும் புணரும்.
13.

புள் + கடுமை = புள்ளுக்கடுமை
புள் + நன்மை = புள்ளுநன்மை
புள் + வன்மை = புள்ளுவன்மை

இவ்வாறு புல், வள் என்னும் இரண்டு சொற்களும் வேற்றுமைப் புணர்ச்சியிலும் யகரம் அல்லாத மெய்கள் வந்தால், `உ' என்னும் சாரியை பெற்றும் புணரும்.

6. குற்றியலுகரப் புணர்ச்சி
1. குற்றியலுகரம்: படு, பாடு - இவ்விரண்டையும் உச்சரித்துப் பாருங்கள். முதல் டு வ்விலுள்ள உகரத்தை விட இரண்டாம் டு வ்விலுள்ள உகரம் ஓசையிற் குறைந்து இயல்வதைக் காணலாம். இயல்பான குறில் ஒரு மாத்திரை ஓசை உடையது. ஆதலால் முதல் உகரம் ஓரு மாத்திரை ஓசை உடையது. அதைவிடக் குறைந்து இயலும் இரண்டாம் உகரம் அரை மாத்திரை ஓசை உடையது. இவ்வாறு குறைந்து இயலும் உகரம் குற்றியல் உகரம் எனப்படும்.

குற்றியல் உகரம் தனி நெட்டெழுத்துக்குப் பின்னும், இரண்டு முதலிய எழுத்துக்களுக்குப் பின்னும், சொல்லின் கடைசியில் வல்லின மெய்களின் மேல் ஏறிவரும்.

2. குற்றியலுகர வகை: இக்குற்றியலுகரம் ஈற்றுக்கு அயல் எழுத்தை நோக்க ஆறு வகைப்படும். கீழ்வரும் உதாரணங்களைக் காண்க.


ட் + உ
1.பட்டு - வன்றொடர்க் குற்றிய லுகரம்.
பட்டு - வல்லினம்

ட் + உ

2.தொண்டு - மென்றொடர்க் குற்றியலுகரம்.
தொண்டு - மெல்லினம்

தீ + உ

3.வீழ்து - இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
வீழ்து - இடையினம்

ட் + உ

4.மாடு - நெடிற்றொடர்க் குற்றியலுகரம்.
மாடு - தனி நெடில்

ற் + உ

5.பயறு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
பயறு - ய் + அ + உயிர்

த் + உ

6.அஃது - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்.
அஃது - ஆய்தம்

3. முற்றியலுகரம்: படு, நுங்கு - டு வ்வில் உள்ள உகரமும், நு வ்வில் உள்ள உகரமும் ஒரு மாத்திரை ஓசை உடையவை. இங்ஙனம் ஒரு மாத்திரை ஓசை உடைய உகரம் முற்றியல் உகரம் எனப்படும்.
4. குற்றியலுகரம்:


நாடு + யாது = நாடியது
பட்டு + யாது = பட்டியாது
குரங்கு + யாது = குரங்கியாது

நாடு, பட்டு முதலிய சொற்களின் ஈற்றிலுள்ள குற்றியலுகரம், வருமொழி முதலிய யகரம் வந்ததால் இகரமாகத் திரிந்தது. இங்ஙனம் திரியும் இகரம் குற்றியலிகரம் எனப்படும். இதன் மாத்திரை அரை.
குற்றியலுகரப் புணர்ச்சி


1.காசு + இல்லை = காசில்லை
பட்டு + உண்டு = பட்டுண்டு
இவற்றால், குற்றியலுகரத்தின் முன் வருமொழி முதலில் உயிர்வரின், குற்றியலுகரம் தான் ஏறியுள்ள மெய்யை விட்டுக் கெடும் என்பது தெரிகிறது.


2.நாடு + யாது = நா (ட் + உ) + யாது
= நா (ட் + இ) + யாது
= நாடியது
பட்டு + யாது = பட் (ட் + உ) + யாது
= பட் (ட் + இ) + யாது
= பட்டியாது

இவ்வாறு வருமொழி முதலில் யகரம் வரின், குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் தெரியும்.


3.செலவு + ஆயிற்று = செல (வ் + உ) + ஆயிற்று
= செல + வ் + ஆயிற்று
= செலவாயிற்று
வருமொழி முதலில் உயிர்வரின், குற்றியலுகரம் போலவே முற்றியலுகரமும் தான் ஏறியுள்ள மெய்யை விட்டுக் கெடும் என்பதை அறிக.


4.செலவு + யாது = செல (வ் + உ) + யாது

= செல (வ் + இ) + யாது
= செலவியாது

ய வரின் குற்றியலுகரம் போலவே முற்றியலுகரமும் சில இடங்களில் இகரமாகத் திரியும்.

5.எழுத்து + கோணல் = எழுத்துக் கோணல் (வேற்றுமைப் புணர்ச்சி)
எழுத்து + சிறியது = எழுத்துச் சிறியது (அல்வழிப் புணர்ச்சி)
கழுத்து + பட்டை = கழுத்துப் பட்டை (வேற்றுமைப் புணர்ச்சி)
கழுத்து + குறுகியது = கழுத்துக் குறுகியது (அல்வழிப் புணர்ச்சி)
இங்ஙனம் வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன்வரும் வல்லினம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வழிப் புணர்ச்சியிலும் மிகும்.


6.
1.நண்டு + கால் = நண்டுக்கால் - வேற்றுமைப் புணர்ச்சி
குரங்கு + தலை = குரங்குதலை - வேற்றுமைப் புணர்ச்சி

2.நண்டு + பெரியது = நண்டு பெரியது - அல்வழிப் புணர்ச்சி
குரங்கு + பெரியது = குரங்கு பெரியது - அல்வழிப்புணர்ச்சி

இவ்வாறு மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் வேற்றுமைப் புணர்ச்சியில் மிகும்; அல்வழியில் மிகா.


7.ஆறு + பாலம் = ஆற்றுப்பாலம்
காடு + பாதை = காட்டுப்பாதை
சேறு + பாக்கம் = சேற்றுப்பாக்கம்
ஆடு + கால் = ஆட்டுக்கால்
வயிறு + வலி = வயிற்றுவலி
சோறு + பை = சோற்றுப்பை

இவ்வாறு நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள டகர றகர மெய்கள், வருமொழியோடு சேரும் போது, பெரும்பாலும் இரட்டிக்கும். அவ்வாறு இரட்டித்தவற்றின் முன் வரும் வல்லினம் மிகும்.

7. வல்லெழுத்து மிகும் இடங்கள்
1.

1.ஆற்றை + கட = ஆற்றைக் கட

2.பாலை + பருகு = பாலைப் பருகு

3.படத்தை + பார் = படத்தைப் பார்

இவ்வாறு இரண்டாம் வேற்றுமை விரிக்கு முன்வரும் க, ச, த, ப மிகும்.
2.

1.காட்டுக்கு + போ = காட்டுக்குப் போ

2.வீட்டிற்கு + செல் = வீட்டிற்குச் செல்

3.வேலைக்கு + கூலி = வேலைக்குக் கூலி

இவ்வாறு நான்காம் வேற்றுமை விரிக்கு முன்வரும் க, ச, த, ப மிகும்.
3.

1.வர + சொல் = வரச்சொல்

2.போக + போகிறாயா = போகப் போகிறாயா?

3.இருக்க + கூடாதா = இருக்கக் கூடாதா?

இவ்வாறு அகர ஈற்று நிகழ்கால வினையெச்சங்களுக்கு முன்வரும் வல்லினம் மிகும்.
4.

1.நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்

2.தொலைவாய் + சென்றார் = தொலைவாய்ச் சென்றார்

3.ஒழுங்காய் + காட்டு = ஒழுங்காய்க் காட்டு

இவ்வாறு ஆய் ஈற்று வினையெச்சங்களுக்கு முன்னும் வல்லினம் மிகும்.
5.

1.ஓடி + பார் = ஓடிப்பார்

2.தேடி + காண் = தேடிக் காண்

3.ஊதி + செல் = ஊதிச் செல்

இவ்வாறு இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் க, ச, த, ப மிகும்.
6.

1.அ + கண்ணாடி = அக்கண்ணாடி

2.இ + படை = இப்படை

3.எ + படை = எத்தடை

இவ்வாறு சுட்டு எழுத்துக்களுக்கு முன்னும், `எ' கர வினாவின் முன்னும், மொழி முதலில் வரும் வல்லினம் மிகும்.
7.

1.அந்த + காக்கை = அந்தக்காக்கை

2.அங்கு + போ = அங்குப்போ

3.எப்படி + செய்தான் = எப்படிச் செய்தான்

இவ்வாறே அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் முன்வரும் க, ச, த, ப க்கள் மிகும்.
8.

1.ஆடு + கால் = ஆட்டுக்கால்

2.வீடு + தோட்டம் = வீட்டுத்தோட்டம்

3.காடு + பசு = காட்டுப் பசு

இவ்வாறு நெடில் தொடர்க் குற்றியலுகரத்தின் முன்வரும் வல்லினம் மிகும்.
9. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் மென்றொடர்க் குற்றியலுகரம் வன்றொடர்க் குற்றியலுகரம் ஆகியவற்றிக்கு முன்வரும் வல்லினம் மிகும் என்பதைக் குற்றியலுகரப் புணர்ச்சியில் காணலாம்.

10.

அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை
விளங்கா + கேள்வி = விளங்காக்கேள்வி
அடங்கா + கோபம் = அடங்காக்கோபம்
உண்ணா + குதிரை = உண்ணாக்குதிரை

இவ்வாறு வல்லினம் வரும்.11.

1.தாய் + பறவை = தாய்ப்பறவை

2.வாய் + கால் = வாய்க்கால்

3.தயிர் + சட்டி = தயிர்ச்சட்டி

4.தமிழ் + கல்வி = தமிழ்க்கல்வி

5.மோர் + குழம்பு = மோர்க்குழம்பு

இவ்வாறு `ய், ர், ழ்' களுக்கு முன்னும் க, ச, த, ப க்கள் மிகும்.
12.

பெய்யாக் கொடுக்கும்
``புரண்டு விழாப் பெருநிலத்தில்''
கேளாக் கொடுத்தான்

என்பன போன்ற, `செய்யா' என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களுக்கு முன்னும் க, ச, த, ப க்கள் மிகும்.
13.

1.இரும்பு + பாதை = இருப்புப்பாதை

2.செம்பு + குடம் = செப்புக்குடம்

`இரும்பு, செம்பு' என்பன மென்றொடர்க் குற்றியலுகரங்கள். இவை புணருங்கால் முறையே `இரும்பு, செப்பு' என வன்றொடர்க் குற்றியலுகரங்களாகும்; அப்பொழுது வருமொழியில் உள்ள வல்லினம் மிகும்.
14.

தீ + சட்டி = தீச்சட்டி
பூ + பந்தல் = பூப்பந்தல்
ஈ + காடு = ஈக்காடு

இவ்வாறு தீ, பூ, ஈ முதலிய ஓரெழுத் தொருமொழிகளுக்குப் பின்வரும் க, ச, த, ப க்கள் மிகும்.
15.

1.பண்டு + காலம் = பண்டைக்காலம்

2.இன்று + கூலி = இற்றைக்கூலி

3.இரண்டு + பிள்ளை = இரட்டைப் பிள்ளை

இவ்வாறு ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் க, ச, த, ப க்கள் மிகும்.
16.

1.மன்றம் + சாமியார் = மன்றத்துச் சாமியார்

2.பத்து + பத்து = பதிற்றுப்பத்து

இவ்வாறு அத்து, இற்று என்னும் சாரியை பெற்று வரும் பெயர்கட்குப் பின்னும் க, ச, த, ப க்கள் மிகும்.

8. வல்லெழுத்து மிகா இடங்கள்
1.

1.நல்ல + காலம் = நல்ல காலம்

2.படித்த + பையன் = படித்த பையன்

இவ்வாறு பெயரெச்சங்கட்கு முன்வரும் க, ச, த, ப க்கள் மிகா.
2.

1.கொன்று + தின்றது = கொன்று தின்றது

2.வந்து போனான் = வந்து போனான்

இவ்வாறு சில வினையெச்சங்கட்கு முன்வரும் க, ச, த, ப க்கள் மிகா.
3.

1.தம்பீ + கேள் = தம்பீ கேள்

2.வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்

3.புலி + பாய்ந்தது = புலி பாய்ந்தது

இவ்வாறு விளி, வியங்கோள், எழுவாய்த் தொடர்கட்கு முன்னும் க, ச, த, ப க்கள் மிகா.
4.

1.ஏழு + பணம் = ஏழு பணம்

2.ஒரு + தாய் = ஒரு தாய்

3.மூன்று + கன்றுகள் = மூன்று கன்றுகள்

இவ்வாறு எண்ணுப் பெயரின் முன்னும் க, ச, த, ப க்கள் மிகா.
5.

1.கல்வி + கேள்வி = கல்வி கேள்வி

2.நன்மை + தீமை = நன்மை தீமை

இவ்வாறு உம்மைத் தொகையிலும் க, ச, த, ப க்கள் மிகா.
6.

1.போயின + குதிரைகள் = போயின குதிரைகள்

2.நடந்தன + பசுக்கள் = நடந்தன பசுக்கள்

இவ்வாறு வினைமுற்றுத் தொடர்களுக்கு முன்வரும் வல்லினம் மிகா.
7.

1.வீழ் + புனல் = வீழ் புனல்

2.காய் + கதிர் = காய் கதிர்

இவ்வாறு வினைத்தொகைக்கு முன்வரும் வல்லினம் மிகா.
8.

1.யா + போயின = யா போயின

2.யா + சொன்னான் = யா சொன்னான்

இவ்வாறு யா என்னும் வினாவிற்கு முன்வரும் வல்லினம் மிகா.
9.

1.கதை + சொல் = கதை சொல்

2.உரைநடை + கற்பி = உரைநடை கற்பி

இவ்வாறு இரண்டாம் வேற்றுமைத் தொகை முன்வரும் வல்லினகம் மிகா.
10.

1.முருகனோடு + பேசு = முருகனோடு பேசு

2.வீட்டிலிருந்து + புறப்படு = வீட்டிலிருந்து புறப்படு

இவ்வாறு மூன்றாம் வேற்றுமை விரி முன்னும், ஐந்தாம் வேற்றுமை விரி முன்னும் வரும் வல்லினம் மிகா.
11.

1.கண்ணகி + கற்பு = கண்ணகி கற்பு

2.எனது + புத்தகம் = எனது புத்தகம்

இவ்வாறு ஆறாம் வேற்றுமைத் தொகை முன்னும் விரி முன்னும் க, ச, த, ப க்கள் மிகா.
12.

1.இரண்டு + காய்கள் = இரண்டு காய்கள்

2.நான்கு + பழங்கள் = நான்கு பழங்கள்

இவ்வாறு எட்டு, பத்து ஒழிந்த உயிரீற்று எண்ணுப் பெயர்களுக்கு முன்வரும் வல்லினம் மிகா.

9. செய்யுள் விகாரங்கள்

1.``அற்புக்கு ஆழியன் னான்அரிச் சந்திரன்'' - `அன்பு' என்னும் சொல் `அற்பு' என்று (மெல்லின வல்லினமாகத் திரிந்து நின்றது. இது வலித்தல் விகாரம் எனப்படும்.

2.``தண்டையின் இனக்கிளி கடிவோள், பண்டைய னளல்லள் மானோக் கினளே.''- இங்குத் `தட்டை' என்னும் சொல் `தண்டை' என்று வந்தது; அதாவது, மெல்லினமாகத் திரிந்தது. இது மெலித்தல் விகாரம் ஆகும்.

3.``கற்பக நீழலைக் காக்கும் தேவர்.'' - இங்கு `நீழல்' என்னும் சொல்லின் முதல் `நீழல்' என நீண்டு வந்தது. இது நீட்டல் விகாரம் எனப்படும்.

4.``நன்றென்றேன் தியேன்.'' - இங்குத் `தியேன்' என்னும் சொல் `தீயேன்' என்று குறுகி வந்தது. இது குறுக்கல் விகாரம் ஆகும்.

5.``அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே.'' - இங்கு `ஆசிரியனே' என்று இருக்கவேண்டிய சொல், `ஆசிரியன்னே' என்று னகர மெய் விரித்து வந்தது. ஆகவே, இது விரித்தல் விகாரம் எனப்படும்.

6.``தருகெனத் தந்து'' - ஈண்டுத் `தருக' என்ற சொல்லும், `என' என்ற சொல்லும் புணர்ந்தன. இவ்வாறு புணருங்கால், `தருக + என = தருகவென' என்று வக்ரவுடம் படுமெய் இடையில் வருதல் வேண்டும். இவ்வாறின்றி, `தருக' என்பதன் ஈற்றில் உள்ள அகரம் தொகுத்துத் `தருகென' என நின்றது. இவ்வாறு அகரம் தொக்கது தொகுத்தல் விகாரம் எனப்படும்.

முதற்குறை முதலியன

1.``மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி'' - இங்குத் 'தாமரை' என்ற சொல் `மரை' என வந்தது. இவ்வாறு சொல்லின்கண் உள்ள முதல் எழுத்துக் குறைந்தது முதற்குறை விகாரம் ஆகும்.

2.``ஓதி முது போத்து'' - இங்கு முதலில் உள்ள `ஓதி' என்ற சொல் `ஓந்தி' என்ற சொல்லின் விகாரமேயாகும். `ஓந்தி' என்பது ஓணான். இச்சொல்லின் இடையில் உள்ள ஓரெழுத்துக் குறைந்து வந்துள்ள காரணத்தால், இஃது இடைக்குறை விகாரம் எனப்படும்.

3.``நீல் உண் துகிலிகை கடுப்ப'' - இங்கு `நீலம்' என்னும் சொல்லே `நீல்' என்று கடைசியில் உள்ள எழுத்துக்கள் குறையப்பெற்று நின்றது. கடைசியில் குறைந்து வரும் இவ்விகாரம் கடைக்குறை விகாரம் எனப்படும்.

வலித்தல் முதலிய ஆறு விகாரங்களும் முதற்குறை முதலிய மூன்று விகாரங்களும் செய்யுளுக்கே உரியவை. இவற்றுள் முதற்குறை முதலிய மூன்றும் பகாப்பதத்தில் மட்டுமே அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக