யாப்பு - யாத்தல் (கட்டுதல்), தொழிற் பெயர். இங்கு யாக்கப்படும் (கட்டப்படும்)
செய்யுளுக்கு ஆகி வருதலால் தொழிலாகு பெயர்.
யாப்பு, செய்யுள், பாட்டு, பா, கவி - ஒரு பொருட் சொற்கள்.
எலும்பு, நரம்பு, இரத்தம், கொழுப்பு, தசை முதலியவற்றால் நமது உடம்பு கட்டப்பட்டிருத்தல் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய உறுப்புக்களால் கட்டப்பட்டதே செய்யுளாகும்.
1. எழுத்து, அசை முதலியன
1. எழுத்து
முன் சொல்லப்பெற்ற உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும். மெய் எழுத்துக்கள் பதினெட்டும், உயிர்மெய் எழுத்துக்கள் 216 -உம், ஆய்த எழுத்து ஒன்றும் செய்யுளுக்கு உரிய எழுத்துக்களாம்.
2. அசை
எழுத்துக்களால் ஆவது அசை - அது (1) நேரசை, (2) நிரைசை என இருவகைப்படும்.
1.அ, அல், ஆ, ஆல்: இவ்வாறு தனிக்குறில் அல்லது தனி நெடில் தனித்தோ, ஒற்றடுத்தோ வருவது நேரசை.
2.பட, படல், இறா, இறால்: இங்ஙனம் இருகுறில் இணைந்தோ அல்லது ஒற்றடுத்தோ வரினும், அல்லது ஒரு குறிலும் நெடிலும் சேர்ந்தோ அல்லது ஒற்றடுத்தோ வரினும் அவை நிரையசை.
3. சீர்
எழுத்துக்களால் ஆவது அசை. அதுபோல அசைகளால் ஆவது சீர், அஃது (1) ஓரசைச் சீர், (2) ஈ.ரசைச் சீர், (3) மூவசைச் சீர், (4) நாலசைச் சீர் என நான்கு வகைப்படும்.
1.
1.``பாலொடு...நீர்'' - இக்குறளில் உள்ள கடைச் சீர் `நீர்' என்பது, இஃது ஓரசைச் சீர், இது நேரசைச் சீர். இதனை `நாள்' என்னும் வாய்ப்பட்டால் புலவர் வழங்குவர்.
2.``நன்றறி...இலர்.'' - இக்குறளில் உள்ள கடைசிச் சீர் `இலர்' என்பது. இதுவும் ஓரசைச் சீர். இது நிரையசைச் சீர். இதனை `மலர்' என்னும் வாய்ப்பாட்டால் புலவர் வழங்குவர்.
2.``குன்றக் குறவன் மடமகள் காண்மினோ.'' - இவ்வடியில் நான்கு சீர்கள் இருக்கின்றன.
1.குன் - றக்
குன் - நேர்
றக் - நேர்
2.குற - வன்
குற - நிரை
வன் - நேர்
3.மட - மகள்
மட - நிரை
மகள் - நிரை
4.காண் - மினோ
காண் - நேர்
மினோ - நிரை
இவற்றை இங்ஙனம் அசைகளாகப் பிரித்தல்,
1.முதற் சீரில் நேரசையும் நேரசையும் (நேர் நேர்),
2.இரண்டாம் சீரில் நிரையசையும் நேரசையும் (நிரை, நேர்),
3.மூன்றாம் சீரில் நிரையசையும் நிரையசையும் (நிரை நிரை),
4.நான்காம் சீரில் நேரசையும் நிரையசையும் (நேர் நிரை) இருத்தலைக் காணலாம்.
இந்த நான்கில் ஒவ்வொன்றும் 1.நேர் நேர் - தேமா
2.நிரை நேர் - புளிமா
இவை இரண்டும் `மா' என முடிவதால் மாச்சீர்கள் எனப்படும்.
3.நிரை நிரை - கருவிளம்
4.நேர் நிரை - கூவிளம்
இவை இரண்டும் `விளம்' என முடிவதால் விளச்சீர்கள் எனப்படும்.
இவை நான்கும் இயற்சீர் எனப் பெயர் பெறும். இவை பெரும்பாலும் ஆசிரியப்பாவில் மிகுதியாகப் பயின்று வருவதால், ஆசிரிய வுரிச்சீர் என்றும் கூறப்பெறும்.
3.(அ) ``வானாறு பொறுத்தான்றன் இணைமலரைத் தேடினனே.'' - இவ்வடியில் நான்கு சீர்கள் இருக்கின்றன. இவற்றை அசைகளாகப் பிரிப்போம்:
1.வா - னா - று
வா - நேர்
னா - நேர்
று - நேர்
2.பொறுத் - தான் - றன்
பொறுத் - நிரை
தான் - நேர்
றன் - நேர்
3.இணை - மல - ரைத்
இணை - நிரை
மல - நிரை
ரைத் - நேர்
4.தே - டின - னே
தே - நேர்
டின - நிரை
னே - நேர்
இவையெல்லாம் மூவகைச் சீர்கள். இவற்றை எளிதிற் கூறத்தக்க வாய்ப்பாடுகளைக் கீழே காண்க:
1.நேர் நேர் நேர் - தேமாங்காய்
2.நிரை நேர் நேர் - புளிமாங்காய்
3.நிரை நிரை நேர் - கருவிளங்காய்
4.நேர் நிரை நேர் - கூவிளங்காய்
இவை `காய்' என முடிவதால், காய்ச்சீர்கள் எனப்படும்.
இவை நான்கும் வெண்பாவில் மிகுதியாகப் பயின்று வருவதால், வெண்சீர் என்றும், வெண்பாவுரிச்சீர் என்றும் பெயர் பெறும். (கனிச்சீர்கள் இங்குத் தேவையில்லை)
சீர்பிரித்து வாய்பாடு கூறுதல்
4.
1.முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
முயற்-சி திரு-வினை யாக்-கும் முயற்-றின்-மை
முயற்-சி - நிரை நேர் - புளிமா
திரு-வினை - நிரை நிரை - கருவிளம்
யாக்-கும் - நேர் நேர் - தேமா
முயற்-றின்-மை - நிரை நேர் நேர் - புளிமாங்காய்
2.இன்மை புகுத்தி விடும்
இன்-மை - நேர் நேர் - தேமா
புகுத்-தி - நிரை நேர் - புளிமா
விடும் - நிரை - மலர்
இவ்வாறு சீர்களை அசைகளாகப் பிரித்து. ஒவ்வொன்றுக்கும் வாய்பாடு கூற அறிதல் வேண்டும்.
தளை (இலக்கணமும் வகையும்)
இன்மை புகுத்தி
இன்-மை - நேர் நேர் - தேமா
புகுத்-தி - நிரை நேர் - புளிமா
ஒரு சீரின் ஈற்றசையும வருசீரின் முதலசையும் பொருந்தும் பொருத்தமே தளை என்பது.
1.கந்-தா - நேர் நேர்
கா-வா - நேர் நேர்
இச்சீர்கள் இரண்டும் ஈ.ரசைச்சீர்கள். இயற்சீர்கள், ஆசிரிய வுரிச்சீர்கள் எனப்படும். நின்றசீரின் ஈற்றசை நேர்: வருஞ்சீரின் முதலசையும் நேர். இவ்வாறு ஆசிரிய வுரிச்சீர்களில் `நேர் - நேர்' ஆகப் பொருந்துவது நேர் ஒன்றிய ஆசிரியத் தளை எனப் பெயர் பெறும்.
2.இவ்-வணி - நேர் நிரை
அவ-னது - நிரை நிரை
இந்த இரண்டும் ஆசிரிய வுரிச்சீர்களே. இங்கு நிரை நிரையாகப் பொருந்துகின்றன. இவ்வாறு `நிரை - நிரை'யாகப் பொருந்துவது நிரை ஒன்றிய ஆசிரியத் தளை எனப்படும். இவை பெரும்பாலும் ஆரியப்பாவில் வரும்.
3.மேற்சொன்ன முறை மாறி, `நிரை-நேர்', `நேர் நிரை' என இவ்வியற்சீர்கள் மாறிப் பொருந்துவதும் உண்டு.
1.அவ்-வணி - நேர் நிரை - கூவிளம்
எங்-கே - நேர் நேர்
`விள' முன் `நேர்'
2.கண்-ணா - நேர் நேர் - தேமா
வரு-வாய் - நிரை நேர்
`மா' முன் `நிரை'
இவை பெரும்பாலும் வெண்பாவில் வருபவை, ஆதலால் இவை `இயற்சீர் வெண்தளை' எனப்படும்.
எனவே, ஈ.ரசைச் சீர்களால் (1) நேர் ஒன்றிய ஆசிரியத் தளை, (2) நிரை ஒன்றிய ஆசிரியத்தளை (3) இயற்சீர் வெண்தளை, என்னும் மூவகைத் தளைகள் உண்டாதலை அறிக.
4.
1.(1) மண்-ணத-னில் - நேர் நிரை நேர் - கூவிளங்காய்
ஆ-குங்-கால் - நேர் நேர் நேர்
`காய்' முன் `நேர்'
2.மதிப்-பரி-தால் - நிரை நிரை நேர் - கருவிளங்காய்
மன்-னனே - நேர் நிரை
`காய்' முன் `நேர்'
காய்ச்சீராகிய வெண்பாவுரிச்சீர் நேரசையோடு பொருந்துதல் (`காய்' முன் `நேர்' வருதல்) வெண்சீர் வெண்டனை வெண்பாவுக்கே பெரிதும் உரிய சீர்களால் அமைந்த வெண்பாவுக்கே பெரிதும் உரிய தளை) எனப்படும்.
வெண்தளையின் இலக்கணம்
(1) இயற்சீர் வெண்தளை, (2) வெண்சீர் வெண்தளை என வெண்தளை இருவகைப்படும்.
1.மாமுன் நிரை, விளமுன் நேர் - இயற்சீர் வெண்தளை.
2.காய் முன் நேர் - வெண்சீர் வெண்தளை. இவை இரண்டும் வெண்பாவுக்கே உரிய தளைகள்.
அடி
செய்யுளில் வரும் வரிக்கு அடி என்பது பெயர். அந்த அடி குறைந்த அளவு இரண்டு சீர்களைக் கொண்டு வரும்.
1.குறளடி - இரண்டு சீர்களைக் கொண்டது.
2.சிந்தடி - மூன்று சீர்களைக் கொண்டது.
3.நேரடி - நான்கு சீர்களைக் கொண்டது. இஃது அளவடி என்றும் கூறப்படும்.
4.நெடிலடி - ஐந்து சீர்களைக் கொண்டது.
5.கழி நெடிலடி - ஆறும் ஆறுக்கு மேற்பட்ட சீர்களையும் கொண்டது.
2. எதுகைத் தொடை முதலியன
1. எதுகைத் தொடை
``கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.''
முதலடியில் முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் ஒன்றி வரத்தொடுப்பது எதுகைத் தொடை எனப்படும்.
2. மோனைத் தொடை
``கடுங்கை வயலுழவர் காலைத் தடிய''
இவ்வாறு ஓரடியிலுள்ள சீர்களில் ஏதேனும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருதல் மோனைத் தொடை எனப்படும்.
3. முரண் தொடை
1.``நன்மையும் தீமையும் நாடி வருமே''
நன்மை - தீமை
இவை ஒன்றுக்கொன்று முரண் (மாறுபட்டவை)
2.``இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்
நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறை''
இருள் - நிலவு. இவை ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இங்ஙனம் ஒரே அடியில் மாறுபட்டுவரினும், அடி தோறும் மாறுபட்டு வரினும், (அஃதாவது முரண்பட்ட சொற்கள் தொடுக்கப்பட்டு வருதல்) அது முரண் தொடை எனப்படும்.
3. வெண்பா
1.
``எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.''
இது குறட்பா. இதில் முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் இருக்கின்றன. இவ்வாறு வரும் பாடல் குறள் வெண்பா எனப்படும். குறள்-குட்டை; வெண்பா-தூய்மையான, (செய்யுளுக்குரிய சிறப்பு இலக்கணம் பொருந்தப்பெற்ற) செய்யுள். திருக்குறளில் உள்ள எல்லாப் பாக்களும் குறள் வெண்பாக்களே.
2.
``நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்குத் தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்''
இச்செய்யுளில் நான்கு அடிகள் இருக்கின்றன. அவற்றுள் முதல் மூன்று அடிகள் தனித்தனியே நான்கு சீர்களைக் கொண்டவை. கடைசி அடிமட்டும் மூன்று சீர்களைக் கொண்டது. இவ்வாறு வருவது நாலடி வெண்பா எனப்படும். மூதுரை, நீதி வெண்பா, நன்னெறி, நாலடியார், நளவெண்பா முதலிய நூல்கள் வெண்பாக்களால் இயன்றவை. வெண்பாவிற்குச் செப்பலோசை உரியது. வெண்பாவின் ஈற்றடி முச்சீரடியாக வரும்; ஏனைய அடிகள் நாற்சீரடிகள்; இயற்சீரும் காய்ச்சீரும் வரும்; ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டுச் சீர்களில் ஒன்றைப் பெற்றுவரும்; இயற்சீர் வெண்தளை, வெண்சீர் வெண்தளைகளே வரும்; செப்பலோசை பொருத்தியிருக்கும்.
4. ஆசிரியப்பா
``பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே''
இப்பாடலில் முதல் அடியிலும் கடைசி அடியிலும் நந்நான்கு சீர்கள் வந்திருக்கின்றன. ஈற்றடிக்கு முன்னடியில் மட்டும் மூன்று சீர்கள் இருக்கின்றன. பெரும்பாலும் தமிழ் பாக்கள் (1) வெண்பா, (2) ஆசிரியப்பா, (3) கலிப்பா, (4) வஞ்சிப்பா, என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவுக்கும் (1) தாழிசை, (2) துறை, (3) விருத்தம் என்னும் மூவகைச் செய்யுளினங்கள் உண்டு. இங்குக் கூறப்பெறாத வஞ்சிப்பா. கலிப்பா என்னும் பாக்களின் இலக்கணத்தையும், நான்கு பாக்களின் இனங்களைப் பற்றிய இலக்கணத்தையும் தேவைப்படும்பொழுது யாப்பிலக்கண நூலிருந்து அறிந்து கொள்க.
5. விருத்தம்
இது வடசொல். இது தமிழ்ச் செய்யுளில் புதியதாகப் புகுந்தது. இதனில் ஒவ்வொரு பாவிற்கும் உரிய இலக்கணம் ஓரளவு நெகிழ்ந்து வரும். அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் அடிகளைக் கொண்ட விருத்தங்களே பலவாகும். தாயுமானவர் பாடல்கள் பல சீர்களைக் கெண்ட அடிகளால் இயன்றவை. அவையெல்லாம் விருத்தப் பாக்களே. விருத்தப் பாக்களைப் பாடுவதில் கம்பர் தலை சிறந்தவர். சிந்தாமணி, பெரிய புராணம் கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலிய பெரு நூல்கள் யாவும் விருத்தப் பாக்களால் இயன்றவையே யாகும்.
1.
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
இது கலி விருத்தம் எனப்படும்.
2.
``ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தார் - ஒரு சாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒரு சாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒரு சாரார்
ஏகீர் நாயகீ ரென்செய்து மென்றார் - ஒரு சாரார்.''
இது வெளி விருத்தம் எனப்படும்.
3.
ஆண்டவன் அருட்ப டைப்பில் அனைவரும் ஒன்றே ஆனால்
காண்டகு பெண்பி றப்பும் கவினுறப் படித்தல் நன்று
மாண்புடை அறிஞன் ரஸ்கின் மலர்ந்தனன் ஆத லாலே
ஆண்பிறப் புயர்ந்த தென்னும் அறிவில்வா சகம றப்பாய்.''
இஃது அறுசீர் ஆசிரிய விருத்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக