25/06/2010

அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன்

எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே!



நான் பார்த்த ஊரும் - 'இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது' என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், 'இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்' என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.

நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது - கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? - காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.

அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்து கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலே நான் சற்று உட்கார்ந்து கொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும் - கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே - எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்?

வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லாரும் பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று, ஒவ்வொருவராக 'தொபுக்' 'தொபுக்' என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு 'ரிப்பன்' கோவணத்தை இழுத்துச் செருகிக் கொண்டு மறூபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.

நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.

நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள் என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் 'தேமே'னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம்.... 'சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே... நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்... காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?...' என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். 'போ! போ!' என்று ஓடுவேன்.

எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள். தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவு கூட இல்லை.

என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே 'ஏ! கடன்காரா' தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் 'தேமே'னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது 'தேமே'னென்று உட்கார்ந்திருக்கும் நான் 'தேமே'னென்று குறுக்கே காலை நீட்டுவேன்... கீழே விழுந்து 'ஓ' வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் 'தேமே'னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுது கொண்டே, கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான் தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்து விடும்கள்!

"கடன்காரா! செய்யறதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?" என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் "கையெல்லாம் எரியறது... எருமை மாடே!" என்று நொந்து கொண்டு விரட்டுவாள்.

"ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் 'தேமே'ன்னு தானே இருக்கான்" என்று யாராவது அடுத்த வீட்டு - எதிர் வீட்டு மாமி வந்து - அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு நான் சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் 'தேமே'னென்று இருந்து கொண்டே ஏதாவது செய்து விடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக் கொள்வேன்... காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கிறது... திடீர்னு "மாமி... இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா"ன்னு கத்துவேன்.

"வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்" என்று அவர்கள் வீட்டுக் 'கடன்கார'னைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்; ஒரு நிம்மதி.

என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக் கொண்டே இருப்பாள்: "அவனை நம்பாதீங்கோ... பார்த்தா 'மொசு மொசு'ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம்... என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்... அடிச்சா பாவம்னு - அந்த மாதிரி..."

அதைக் கேட்டு "ஏண்டா, அப்படியா?" என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் 'தேமே'னென்று அவளைப் பார்ப்பேன்...

"சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையெ இப்படிக் கரிச்சுக் கொட்டறே! நீ வாடா..." என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்! ஆனால் அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக் கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்!

சரி! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து - அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன்! - இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதிலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பார்க்கப் போனா, நான் சொல்லிக் கொண்டு, பேசிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது, இப்ப எப்பிடி இருப்பான்னு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சில பேர் எக்கச் சக்கமா பட்டணத்தின் 'மெர்க்குரி லைட்' வௌிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக் கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சு போனது, உடைஞ்சு போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப்போனது, அடிபட்டும் 'ஒண்ணுமில்லை'யென்னு உடம்பெத் தொடச்சு விட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக் கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப்பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்குச் சலிப்பே கிடையாது; அலுப்பே கிடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி!

ஆனால், அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப் போச்சுப் போலே இருக்கு... ம்ஹ்ம்! பயமா இருக்குப் போலே இருக்கு... என்னமோ சங்கடப் பட்டுக்கறா, 'என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு'ன்னு.

நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத் தானே எழுதுவேன். சரி. இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் 'ஆஷாடபூதி' மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.

எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம் கூடப் பிடிக்கிறது இல்லை. ஒரு அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது! - அப்போவெல்லாம் எனக்கு பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.

'தேமே'ன்னு உக்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது... ஒரு குச்சியாலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுன்னு ஆராயறது; பல்லியெ அடிச்சு, வால் துடிக்கிறதெப் பாக்கறது. தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி, சங்கீதம் பாட வைக்கிறது. மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்திலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்!

ஜெயா மாமி வீட்டுத் திண்ணையில் நான் பாட்டுக்குத் 'தேமே'ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்துலே ஒரு குவியல் கருங்கல். நானே செலக்ட் பண்ணிப் பொறுக்கு சேர்த்து வச்சது. அதோ! தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! 'டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேண்டா' என்பது போல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிண்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலே வாலை இடுக்கிண்டு என் மேலே வச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சுண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது... சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து! நான் 'தேமே'ன்னு உக்காந்திருக்கேன்.

சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. 'சடக்'னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.

"ஏண்டா, நாயை யாரு அடிச்சது?"

"ஐயையோ, நான் இல்லே மாமி."

"சரி, யாரையாவது கூப்பிடு. வெந்நீர் உள்ளே ஒரு பெருச்சாளி வௌியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி."

அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்டு நான் போறேன். மாமி கத்தறா. "வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு. அது உன் மேலே பாஞ்சுடும்."

வெந்நீர் உள் மூலையிலே அதைக் 'கார்னர்' பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து, 'நச்'னு ஒரு அடி. சனியன்! தன்னையே பிரதட்சிணம் பண்ணிக்கிற மாதிரி சுத்திச் சுத்தி வெந்நீருள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி "மாமி மாமி"ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிண்டா. "நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனோன்னா... கருமத்தைப் பார்க்காதே... வா. ராக்காயி வந்தால், கழுவிவிடச் சொல்லலாம்."

பயந்து நின்னுண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கிறாள். பெரியவா அணைச்சுண்டா என்ன சுகமா இருக்கு!

அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால் நான் அழுதிருப்பேன்.

கொலை செய்யறதைத் தவிர இன்னொரு பொழுது போக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே 'டபிள்ஸ்' தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்ச கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்பலே இருக்கும். சைக்கிள் ஹாண்ட் பார்லே ஒரு காக்கி பை இருக்கும். அதுலெ ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும்; அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வச்சுண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சுக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன். பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலெ வெட்டுவேன். - நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்.

எங்க அக்ரஹாரத்திலே ஒரு பூனையும் உண்டு. ரொம்ப 'நொட்டோரியஸ்!' பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ? பூனை மாமிச பட்சிணிதானே! அது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் 'தேமே'ன்னு இருப்பேன். அதுவும் 'தேமே'ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லாராத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.

ஒருநாள் ஜெயா மாமி 'ஓ'ன்னு அலறிண்டு சபிச்சா: "இந்தக் கட்டேல போற பூனை ஒரு படி பாலையும் சாச்சுக் கொட்டிடுத்தே...! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக் கூடத் தேவலை."

ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: "வாயெ அலம்புடி... பாவம்! பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகாபாவம்!" - நான் 'தேமே'ன்னு நின்னுண்டு கேட்டுண்டிருந்தேன்.

பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். பெருச்சாளி சீறித்தே - ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி... பூனை மொதல்லே பயப்படும், கத்தும்; ஓடப் பார்க்கும்; ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான்!... எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே... சின்னக் குழந்தையா தவழ்ந்துண்டு இருந்த பருவம்... பூனையைப் பிடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன். எக்குத் தப்பா கழுத்தெப் புடிச்சுட்டேனாம்.... சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டறதாம். நான் 'ஓ'ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறேனாம்.... அம்மா இப்பவும் சொல்லுவா... அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.

அன்னிக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போற போக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சுப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னா திரும்பிண்டு என்னையே மொறைச்சுப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே. கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். 'இது என்ன பயப்பட மாட்டேங்கறதே'ன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது... அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே... 'மியாவ்!'..ன்னு அது கத்தினப்போ - அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.

'அதெல்லாம் பெருச்சாளிக்கிட்டே வெச்சிக்கோ... நம்ம கையிலே நடக்காது.'

'இரு... இரு. ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்...'

'மியாவ் - சும்மா பூச்சி காட்டாதே; முதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே' - சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலே நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.

'எங்கே போயிடப் போறே? உன்னைப் பிடிக்கலேன்னா பேரை மாத்தி வெச்சிக்கோ'ன்னேன் நான்.

அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் - 'பார்ப்போமா?'ன்னு அதுக்கு அர்த்தம்.

'ம்... பார்க்கலாம்...'ன்னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேல ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்த்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு 'காச்சு மூச்சு'ன்னு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு... எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேல ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு 'பொத்'துனு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்துண்டிருந்த தாத்தா, தடியை எடுத்துத் தரையிலே தட்டி 'சூசூ'ன்னு வெரட்டறார். ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வௌிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.

அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து வெந்நீருள்ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்துண்டிருந்தேன்... கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் 'பூனைப் பெரியவாள்' வந்தா.... நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்... மெதுவா அடிமேலே அடி வச்சுப் பூனை மாதிரி போனேன். 'அவா' பின்னம் பக்கம் மட்டுந்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. 'டப்'னு கதவை மூடிட்டேன்... உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே!

"மாமி... மாமி, ஓடி வாங்கோ, 'பெரியவா' இங்கே சிக்கிண்டா"ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா... பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.

"என்னடா, வெந்நீர் உள்ளே பூனையெ வெச்சு மூடிட்டா நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வௌியே போயிடாதோ!"

"இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சிருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்கோ... கடைசி கட்டத்திலே கூப்பிடறேன்."

மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.

"அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்துக்கும் மகா பாவம், வேண்டாம்."

"நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டு போய் வெரட்டி விட்டுடறேன்..."

"ஆமா... வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக்குள்ளே அது இங்கே வந்து நிக்கும்" - ஜெயா மாமி பரிகாசம் செய்து விட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன்; அதைத் 'திரும்பி வராத ஊரு'க்கு அனுப்பிச்சுட்டுத் தானே வரப் போறேன்.

அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும் போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். 'ஹோ'ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.

"ஏ, கடன்காரா, கட்டேலே போறவனே.... அழிஞ்சி போகாதே; பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்... சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி..."

அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக் கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.

"கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா, வேடிக்கை காட்டலாம்டா"ன்னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது?

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன் கிட்டே குடுத்தாப் போறும். அப்படியே கோணியோட வச்சு ஒரு 'சதக்'... ஆட்டம் குளோஸ்!"

"அவன் கிட்டே நீதான் கேக்கணும்" என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை; பயந்துடுவான்கள்.

"டேய்! நீங்கள்ளாம் ஆத்துக்குப் போங்கோ. அவன் வெட்டறதைப் பாத்து பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!" பையன்களையெல்லாம் வெரட்டறேன்.

"அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினானே... நீ காட்டினியே... நான் பயந்தேனா?... நான் இருக்கேண்டா."

"ஆனா, ஒண்ணு... இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!"ன்னு கேட்டேன்.

"சத்தியமா சொல்ல மாட்டோம்." - எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.

கடா மீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கோம்.

கடைசியிலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக் கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டான்க. "நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம். நீ போய் கேளுடா"ன்னு என்னைத் தள்ளி விட்டான்கள். எனக்கென்ன பயம்?

கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே!

அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்:

"ஒரு சின்ன உதவி..."

"அதென்ன கோணியிலே?" - அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.

"பூனை... ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்."

"நீயேவா புடிச்சே?" - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.

"வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?"ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான்.

"ஊஹீம்.... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்."

"ஓ!"ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்:

"பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?"

"உவ்வே!... வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்."

"அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?"

"ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே."

"மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?"

"இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்."

அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.)

"வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு... த்சு...! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?..."

எனக்கு உடல் வெடவெடக்கிறது.

"ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே?"

"நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு"ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்.

அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்...

நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா?

(எழுதப்பட்ட காலம்: 1968)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக