25/06/2010

சுயதரிசனம் - ஜெயகாந்தன்

அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு - ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை 'வருந்துகிறோம்' ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் - விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த நீளக் கவரின் மீது 'சிவராமன், உதவி ஆசிரியர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதம்தான்!

அந்த நீளக் கவரின் வாய்ப்புறத்தை இரண்டு விரல்களால் பிடித்து லாகவமாக வளைவு வளைவாய்க் கிழித்துப் பிரிக்கிறான் சிவராமன். அதனுள் ஒரு கத்தைக் காகிதமிருந்தும் அதன் நடுவே இருந்து 'இது கடிதம்' என்று சொல்வதுபோல் தனியாக விழுந்த ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்கிறான் அவன்.



"சிரஞ்சீவி சிவராமனுக்கு அநேக ஆசிர்வாதம். பகவான் கிருபையால் உனக்கு சகல
சௌபாக்கியங்களும் உண்டாகணும்.

உங்கள் எல்லாரையும் பார்த்து நேரிடையாகச் சொல்லிண்டு வராமப் போனதை நெனைச்சா கஷ்டமாத்தான் இருக்கு... இருந்தாலும் பரவாயில்லை. யோசிச்சுப் பார்க்கச்சே, ஆசையும் உறவும் மனசிலே ஆழமா இருந்தா, உதட்டோட சொல்ற வார்த்தையெல்லாம் அநாவசியம்னு தோண்றது. ஆனாலும் அப்படி யெல்லாம் நெனைச்சுண்டு ஒரு தீர்மானத்தோட நான் சொல்லிக்காம வந்துடல்லே. சொல்லிக்கறதுக்கு எனக்குத் தைரியம் வரலே... சொல்லிக்க முடியல்லே... அவ்வளவுதான்; வந்துட்டேன். ஆமாம்; எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறதுகூட சுலபம்; சொல்றதுதான் கஷ்டமாயிருக்கு.... அதான் சிரமம். நன்னா யோசிச்சுப் பாரு. நீ யோசிக்கிறவன்; கதை எழுதறவன்... நல்லதும் கெட்டதுமா எத்தனையோ விஷயங்களைச் செஞ்சுடறோம்... அதையெல்லாம் அலசிப் பிச்சுச் சொல்றதுன்னா முடியற காரியமா? நான் இப்படி ஓடி வந்துடறதுன்னு முடிவு பண்ணிண்டு உங்ககிட்டேயெல்லாம் சொல்லிண்டு போக வந்திருந்தேன்னா... சொல்லி இருப்பேன் - கடைசியிலே மனசு கேக்காம அங்கேயே உக்காந்துண்டிருந்திருப்பேன். எனக்குத் தெரியும்; நான் போறேன்னா நீங்க யாரும் அழமாட்டேள்னு... ஆனா நான் அழுவேனே!... உன் ஆத்துக்காரி என் காதிலே விழட்டும்னே, நான் இருக்கிறது தெரியாத மாதிரி சொல்லுவாளே 'அசட்டு பிராம்ணன்'னு... அது நெஜந்தான்! சரி. இப்ப நான் வந்துட்டேன். எங்கே இருக்கேன், என்ன பண்றேன்னு எல்லாம் தெரிஞ்சுக்க உன் மனசிலே ஒரு துடிப்பு இருக்கும்னு எனக்குப் புரியறது. இந்தக் கடுதாசியோடு ஒரு கத்தைக் காகிதம் கிறுக்கி அனுப்பி இருக்கேனே... அதை எப்பவாவது போது இருக்கச்சே - போது போகலேன்னா படிச்சுப்பாரு. என்னை, என் மனச்சாட்சியை நீ புரிஞ்சுக்கலாம். நீ புரிஞ்சுப்பேன்னு நெனைக்கறேன்... நீ புரிஞ்சுண்டாலும் புரிஞ்சுக்கல்லேன்னாலும் எனக்குக் கவலை இல்லே... இந்த ஒரு மாசமா உனக்கு ஒரு கடுதாசி எழுதணும் எழுதணும்னு ஏனோ தோணிண்டே, எழுதலியேன்னு உறுத்திண்டே இருந்தது. சத்தியமாச் சொன்னா இந்தக் கடுதாசியைத் தவிர மீதி இருக்கற ஒரு கத்தைக் காகிதத்தை உனக்காக நான் எழுதல்லே... நானா, எனக்குத் தோணினதெ யெல்லாம் எதுக்குன்னு தெரியாமலே எழுதிண்டே இருந்தேன்; இன்னும் எழுதிண்டிருக்கேன்... இது என்னை நானே பார்த்துக்கற பார்வை, சுயவிமரிசனம்.... இல்லே, சுயதரிசனம்! திடீர்னு என்னமோ தோணித்து; எழுதின வரைக்கும் அந்த நோட்டு புக்கிலிருந்து பிச்சு எடுத்து உனக்கு அனுப்பறேன். இதுவும் ஒரு அசட்டுத்தனமோ என்னமோ? ஆனா ஒண்ணு, உன் ஆத்துக்காரியிடம் சொல்லு: 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'... அந்தக் குலத்திலே பொறந்து, 'கணபதி'ன்னு பெத்தவா சூட்டினபேரை இழந்து 'அசட்டு சாஸ்திரி, தத்தி சாஸ்திரி'ன்னே அறுபது வருஷமா பட்டம் வாங்கிண்டு இருந்திருக்கேன். சரி, போனது போச்சு. இப்ப நான் சந்தோஷமா கௌரவமா - அறுபது வயசுக்கப்புறம் - இப்பத்தான் சந்தோஷமா இருக்கேன். ப்ராப்தம் இருந்தால் எங்கேயோ எப்பவோ நாம சந்திக்கலாம். என்னை நீங்கல்லாம் மறந்துட்டாலும் பாதகமில்லை. என்னால் எதையுமே மறக்க முடியல்லே...

இப்படிக்கு உன் தகப்பனார்
கணபதி..."

- கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது.

கவருக்குள்ளிருந்து அந்த ஒரு கத்தைக் காகிதத்தைப் பத்திரிகை ஆசிரியர் தோரணையில் கையில் எடுத்து எத்தனை பக்கங்கள் என்று அறிய அவன் கடைசித் தாளை நீக்கிப் பார்க்கிறான். அதில் பக்க எண் எதுவுமில்லை. அந்தக் காகிதங்கள் அனைத்தும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுக்கப்ட்டிருந்ததால் ஓரத்தில் ஒழுங்கற்ற பிசிறுகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில பக்கங்களில் பென்சிலாலும் சில பக்கங்களில் பேனாவாலும் - தீர்க்கமான சிந்தனையோடு பல காலம் மனசில் ஊறிவரும் தௌிவு மிகுந்த கருத்துக்களானதால் - அடித்தல் திருத்தல் ஏதுமின்றி எழுதப்பட்டிருக்கிறது. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற ஆர்வமிருந்தும் ஆபிசில் அதற்கு நேரமில்லாது வேலை குவிந்திருப்பதால் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக மடித்துத் தன் கைப்பையில் வைத்துக் கொள்கிறான் சிவராமன். அதைப் பைக்குள் வைக்குமுன் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்றறிய உறையையும் கடிதத்தையும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். அனுப்பியோர் விலாசம் ஏதும் அதில் இல்லை. எனினும் தபால் முத்திரையிலிருந்து அக்கடிதம் புது டில்லியிலிருந்து வந்திருப்பதைக் கண்டு ஒரு வினாடி பிரமித்து விழிக்கிறான் சிவராமன்.

'இந்த அப்பா என்ன துணிச்சலோடு இவ்வளவு தூரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார்!' என்று எண்ணியபோது, கள்ளங் கபடு அறியாத அந்த அப்பாவி உள்ளம் இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்குக் கைத்து நொந்து போயிருக்கும் என்ற - அறிவில் விளையாத, மனத்தில் சுரந்த - உணர்வில் அவனது கண்கள் கலங்குகின்றன.

- அந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராம்மணரின் - தாடி மழிக்காத, நரைத்த ரோமக்கட்டை அடர்ந்த, முன் பல் விழுந்த, அம்மைத் தழும்புகள் நிறைந்த, மாறு கண் பார்வையோடு கூடிய கரிய முக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.

2

கணபதி சாஸ்திரிகள் போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்....

முதல் இரண்டு நாட்கள் அவரது குடும்பத்தினர் - குடும்பத்தினர் என்றால் வேறு யார்? அவரது இரண்டு பிள்ளைகளான சிவராமனும் மணியும்தான் - அவர்கள் அதற்காக அதிகம் கவலை கொள்ள வில்லை.

நான்கைந்து சாஸ்திரிகளோடு அவர் காஞ்சிபுரம் போயிருப்பதாக யாரோ சொல்லக் கேட்டு, "போகிற மனுஷர் ஆத்திலே வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகப்படாதோ? நெனச்சப்போ வரதும் போறதும்... இது என்ன சத்திரமா சாவடியா?" என்று மொறுமொறுவென அவரைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அவரது மாட்டுப் பெண் ராஜம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த நான்கு சாஸ்திரிகளூம் திரும்பி வந்து கணபதி சாஸ்திரிகள் தங்களுடன் வரவில்லை என்று தெரிவித்த அந்த நிமிஷமே ராஜம் ஒரு வினாடி திகைத்து, அந்தத் திகைப்புக்குப் பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டாள்.

'எங்கே போயிருப்பார்? எங்கே போயிருப்பார்?' என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள். வேறு மகளோ, அவரை மதித்து அன்புடன் உபசரிக்கும் உறவினரோ யாருமில்லாத அவரது நிலையை எண்ணி யெண்ணித் தனக்குள் பெருமூச்செறிந்தாள். சிவராமனின் மனத்திலும் லேசான கலக்கம் குடிகொண்டது.

தினசரி மாலையில் ஆபிசிலிருந்து வரும்போது, வழியில் உள்ள தெப்பக்குளச் சுவரின்மீது வரிசையாய் உட்கார்ந்து உரத்த குரலில் வாக்கு வாதங்களில் ஈடுபட்டிருக்கும் சாஸ்திரிகளின் சபையில் தன் தகப்பனார் இருக்கிறாரா? என்று சிவராமனின் கண்கள் அலைந்து அலைந்து தேடி ஏமாந்தன.

- அவனுக்குத் தெரியுமா, ஊரில் இருக்கும்போது கூட, இந்தக் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனித்தே அவர் நிற்பார் என்பது... அது சரி, அந்த அசட்டு பிராம்மணரை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்.

நாளுக்கு நாள் தன் தந்தையின் மீது 'அவர் என்ன ஆனாரோ, எங்கே நிற்கிறாரோ, அல்லது வேறு ஏதாவது'... என்று எண்ணியெண்ணி அவர்பால் தன் மனத்துக்குள் ஒரு ரகசியமான ஏக்கம் மிகுந்து கனப்பதை அவன் உணர ஆரம்பித்தான். எனினும் அது பற்றி வௌிப்படையாய் விசாரிக்கவோ பேசவோ அவன் வெட்கப்பட்டான். தன் மனைவி ராஜம் 'லோகத்திலே இல்லாத அப்பாவைப் படைச்சுட்டேளே... ஒரேயடியா உருகிப் போகாதேங்கோ' என்று எரிந்து விழுவாளோ என்று அஞ்சினான். தன் தம்பியும் தன்னைப் போலவே உள்ளூர அப்பாவுக்காக ஏங்குகிறானோ, அல்லது, 'அந்த அசட்டுக் கிழம் எங்கே தொலைந்தால் என்ன?' என்று அசட்டையாக இருக்கிறானோ என்று அறிய முடியாமல் தவித்தான். அப்படி அசட்டையாக இருந்தால் அது மகா பாவம் என்று தோன்றியது. சின்ன வயசில் - சின்ன வயசில் என்ன - இப்போது கூடத்தான் அவரை அப்பா என்றூ சொல்லிக் கொள்ளவே தானும் தன் தம்பியும் வெட்கப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.

கணபதி சாஸ்திரிகள் போன்ற ஓர் அழகற்ற கறுப்புப் பிராம்மணர் அசட்டுச் சிரிப்புடன், மாறு கண் பார்வையோடு எதிரில் வந்து நின்றால் யாருக்குமே மதிப்பான எண்ணம் பிறக்காதுதான். அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும்; அவரும் 'ஈஈ' என்று ஓட்டை வாய்ச் சிரிப்புடன் குழந்தைபோல் எதையாவது பேசுவார். பேச்சில் பொதிந்துள்ள அர்த்தத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆகவே அது பலருக்கு ஒரு, 'போரா'கவே இருக்கும். பரிதாபத்துக்கும் பரிகசிப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் தன்னை அப்பா என்று சொல்லிக் கொள்ளவே தன் பிள்ளைகள் வெட்கப்படுவதில் ஒரு நியாயமிருப்பதாகக் கருதி வந்தார் கணபதி சாஸ்திரிகள். மொத்தத்தில் கணபதி சாஸ்திரிகளை ஊரில் யாரும் மதித்ததில்லை. சில சமயங்களில் அவமதித்ததுண்டு....

மற்ற சாஸ்திரிகளுக்கு எதையாவது பேசி அவர் வாயைக் கிளறி மகிழ அவர் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். வீட்டில் அவரது பிள்ளைகளூக்கு அவரால் அவமானம்; வெட்கம். அவரது மாட்டுப் பெண்ணுக்கு அவர்மீது வெறுப்பு!

ராஜத்துக்கு அவர் மீது தனியாக விசேஷமான வெறுப்பு ஒன்றும் கிடையாது. சதா நேரமும் சிடுசிடுத்துக் கொண்டிருப்பது அவள் சுபாவம். அந்தச் சிடுசிடுப்பில் அடிக்கடி வந்து சிக்கிக் கொள்பவர் அவர்தான் என்றால் அதற்கு அவளா பழி?

இவ்விதம் யாருக்கும் வேண்டாதவராயிருந்த கணபதி சாஸ்திரிகள் எங்கோ ஓடிப் போனதில் யாருக்கு என்ன நஷ்டம்?

"இன்னியோட பத்து நாளாச்சு. இருபது நாளாச்சு..." என்று அவர்கள் ஏன் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்?

"இப்படி நம்ம தலையிலே பழியைப் போடணும்னு காத்துண்டு இருந்திருக்கார் மனுஷர். ஊர்லே என்னைத் தானே சொல்லுவா? நான் அவரை ஒரு வார்த்தை பேசினது உண்டா?... மனுஷன் இருந்தும் என் பிராணனை வாங்கினார். இப்போ இல்லாமலும் என் பிராணனை வாங்கறார்" என்று பொழுது விடிந்து பொழுது போனால் தன் மாமனாரின் பிரிவுக்காக அவளும் தன் சுபாவப்படி ஏங்கிக்கொண்டு தானிருந்தாள்...

- அவர் இருக்கும்போது, ஒரு வார்த்தை கூட அவரைக் கடிந்து தான் பேசினதில்லை என்று நிஜமாகவே நினைக்கிறாள் ராஜம்.

இந்த ஒருமாதப் பிரிவின் காரணமாக - தங்களை விட்டு விலகிப் போன கணபதி சாஸ்திரிகள் உயிருடனாவது இருக்கிறாரா? என்று அறிந்து கொள்ள விரும்பும் துடிப்பில் அவர் குடும்பத்தினருக்கு அவர் மீது ஒருவித ஏக்கமும் அன்பும் பிறந்திருக்கிறது. அவர் இப்படி எங்கோ அனாதை போலப் போய்விட்டதை எண்ணியெண்ணி 'அவர் எங்கே அனாதைப் பிணமாகக் கிடக்கிறாரோ' என்ற பயங்கரமான கற்பனைகளில் சிக்கிக் கொண்டு, 'இந்தப் பாபத்துக்கு நான் தான் காரணமோ?' என்று உள்ளூர விளைந்த நடுக்கத்துடன் ரகசியமாகக் கண்ணீர் வடிக்கிறாள் ராஜம். இந்த விஷயம் சிவராமனுக்கோ மணிக்கோ தெரியாது.

***டிடிடிடி***டிடிடிடி ****

பத்து நாட்களுக்கு முன்பு ஆபிசில் இருந்து வருகின்றபோது, தெப்பக் குளக்கரையில் கூடி நின்ற சாஸ்திரிகள் கும்பலில் சிவராமனின் பார்வை - கட்டை குட்டையாய் கன்னங் கரேலெனத் துண்டாகத் தென்படும் - தன் தந்தையைத் தேடி வழக்கம்போல் துழாவியபோது அவனைப் பார்த்துவிட்டார் வெங்கிட்டுவையர்... அவனைப் பின் தொடர்ந்து கடைத் தெருவரை வந்தார்... பிறகு தன் பின்னால் யாரும் வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு "என்னடா சிவராமா..." என்றழைத்தார்.

சிவராமன் திரும்பினான்.

"என்ன, உங்கப்பாவைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதோ?" என்று நெருக்கமாய் வந்து கேட்டார். வெங்கிட்டுவையர், கணபதி சாஸ்திரிகளின் பால்ய சினேகிதர்; ஒத்த வயது.

சிவராமனுக்கு ஏனோ தான் பெரிய தவறு புரிந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டுக் குனிந்த தலையோடு, "ஒரு தகவலும் இல்லை... எங்கே போயிருப்பார்ன்னு தெரியல்லே... ஏன் போனார்னும் தெரியல்லே... ஆத்திலே கூட ஒண்ணும் வருத்தம் இல்லே... ம்... உங்களுக்குத் தெரியாதா நாங்க எப்படி அவரை வெச்சிருந்தோம்னு" என்று மென்று மென்று விழுங்கினான் சிவராமன். அவனுக்குக் குற்றமுள்ள மனசு குமைந்தது...

"அட அசடு.. அதுக்கு நீ என்ன செய்வே?... அப்படியே இருந்தாலும் தோப்பனுக்கும் மகனுக்கும் ஆயிரம் இருக்கும்... அதுக்காக ஒருத்தன் ஆத்தை விட்டே போயிடுவானோ? அது சரி, உனக்கு விஷயமே தெரியாதா?..." என்று சுற்று முற்றும் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்தி "இப்படி வா சொல்றேன்" என்று நடுத் தெருவிலிருந்து ஓரமாய், பஜனை மடத்தருகே அவனை அழைத்து வந்தார் வெங்கிட்டுவையர்.

கணபதி சாஸ்திரிகள் ஊரைவிட்டே ஓடிப் போவதற்கு முதல் நாள் தெப்பக் குளக்கரையில் நடந்த சம்பவத்தை அவர் நினைத்துப் பார்த்தார்.

தெரு ஓரமாய் இருவரும் வந்து நின்றபின், தனது இடுப்பில் செருகி இருந்த பொடி மட்டையை எடுத்து ஒரு சிமிட்டா பொடியை விரல்களில் இடுக்கியவாறு அவர் சொன்னார்: "அவனுக்கு மனசே வெறுத்துப் போச்சுடா. அவனை அப்பிடி அவமானப் படுத்திட்டார் வேற யாரு, சுந்தரகனபாடிகள் தான்..." என்று சொல்லி விட்டுக் கையிலிருந்த பொடியைக் காரமாய் உறிஞ்சினார் வெங்கிட்டுவையர். பொடியின் காரத்தில் கலங்கிய கண்களோடு சிவராமனை வெறித்துப் பார்த்தார்.

சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரகனபாடிகள் கணபதி சாஸ்திரிகளை அவமானப்படுத்தினாரா?... ஏன்?

சிவராமனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் சுந்தரகனபாடிகள் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் உண்டு. கணபதி சாஸ்திரிகளின் குருநாதர் அவர்தான். அந்தக் காலத்தில் மகா பண்டிதராய் விளங்கிய கணபதி சாஸ்திரிகளின் தந்தையான பரமேஸ்வர கனபாடிகளின் உயிருக்கு உயிரான சீடர் சுந்தரகனபாடிகள் என்கிற விஷயம், ஒரு குடும்பப் பெருமையாய்ப் போற்றிவந்த செய்தி. அவரிடம் தான் கணபதி சாஸ்திரிகள் வேதம் பயின்றார். 'எழுபத்தைந்து வயதுக்கு மேலாகிப் பழுத்த பழமாய்ப் பார்த்தவர் வணங்கும் தோற்றமும் தன்மையும் பொருந்திய கனபாடிகள், பாவம், தன் தந்தையை என்ன காரணத்தினால் அவமானப்படுத்தி இருக்க முடியும்? அப்படியே கொஞ்சம் முன்கோபியான கனபாடிகள் ஏதாவது சொல்லியிருந்தாலும், யார் என்ன கூறிப் பழித்தாலும் அதனைப் பொருட்படுத்தாத 'பரப்பிரம்மமான' தன் தந்தை, அதற்காகவா ஊரை விட்டு ஓடிப்போயிருப்பார்?' என்றெல்லாம் யோசித்த தயக்கத்துடன் "நீங்க என்ன சொல்றேள்?" என்று வெங்கிட்டுவையரின் முகத்தைப் பார்த்தான் சிவராமன்.

"நான் பார்த்ததைத்தாண்டா சொல்றேன்... நேக்கென்னடா பயம்? மத்தவாள்ளாம் ஒரு கட்சி மாதிரி, இந்த அநியாயத்தைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறாளே... சுந்தரகனபாடிகள் ரொம்பப் பெரியவர்தான்... நான் இல்லேங்கலே.... ஆனாலும் அவருக்கு இந்த வயசிலே இப்படி ஒரு கோபம் கூடாது... மனுஷன் என்ன, இப்படியா அசிங்க அசிங்கமாப் பேசுவார்? இவர் தகுதிக்கு ஆகுமா?... சீ!" என்று படபடவென்று பேசி அலுத்துக் கொண்ட வெங்கிட்டுவையர், அதற்குமேல் விஷயத்தை அறிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டுகிறானா என்று அறிய மௌனமாய் சிவராமனின் முகத்தைப் பார்த்தார்.

"என்னதான் நடந்தது... எனக்கு ஒண்ணுமே தெரியாதே!" பதைத்தான் சிவராமன்.

"எனக்கும்தான் தெரியாது... நான் கோயில்லேருந்து வந்துண்டிருந்தேன். குளத்தங்கரையிலே ஒரே சத்தமா, ஏக களேபரமா இருந்தது. பார்த்தா உங்கப்பன் - கணபதி தேமேன்னு நின்னுண்டிருக்கான். கனபாடிகள் அடிக்கப் போறவர் மாதிரிக் கையைக் கையை ஓங்கிண்டு ஆவேசம் வந்த மாதிரி குதிக்கறார். அவனை அவர் அடிக்கக் கூட பாத்தியதை உள்ளவர்தாண்டா, நான் இல்லேங்கல்லே... ஆனாலும் கன்னா பின்னான்னு - சீ! ஒரு பிராமணன் பேசக் கூடிய பேச்சா? அப்பிடி அசிங்க அசிங்கமா திட்டினார்... கணபதி அப்படியே கூனிக் குறுகி நின்னுண்டிருந்தான்... கடைசியிலே - அவன் மட்டும் என்ன மனுஷன் இல்லியா? நேக்கே தோணித்து... அதை அவன் கேட்டுட்டான்; அப்படி ஒண்ணும் தப்பா பேசிடலே. "ஓய்.. இப்படி அசிங்க அசிங்கமா பேசறீரே... நீர் ஒரு பிராமணனாய்யா"ன்னு கேட்டான்...! எவ்வளவு பேச்சுக்குத்தான் ஒரு மனுஷன் பேசாம இருப்பான்? நறுக்குன்னு கேட்டான்... அவ்வளவுதான்! அந்தக் கிழவரைப் பார்க்கணுமே... கணபதி கழுத்திலே போட்டிருந்த துண்டை இழுத்து முறுக்கிப் பிடிச்சுண்டார்... ஆவேசம் வந்ததுமாதிரி காயத்திரி மந்திரத்தைக் கூவினார். "சொல்லுடா, இதுக்கு அர்த்தம் சொல்லு. நீ பிராமணனுக்குப் பொறந்தவனானா சொல்லுடா.... என்னைப் பார்த்தா கேட்டே... பிராமணனான்னு?... இவன் பிராமணனான்னு எல்லாரும் கேளுங்கோ..."ன்னு அசிங்க அசிங்கமாத் திட்டினார் - ஒரே கும்பல் கூடிடுத்து... நான் போய் விலக்கப் பார்த்தேன். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன பலமோ? என்னைப் பிடிச்சு ஒரு தள்ளு தள்ளினார் பாரு... நான் போயி குளக்கரை சுவர் மேலே விழுந்தேன்.... தள்ளிட்டுக் கத்தறார்.... மனுஷனுக்கு வெறி! ஒண்ணு மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லு.... இல்லேன்னா 'நான் பிராமணன் இல்லே'ன்னு ஒத்துக்கோ... என்னெக் கேட்டியேடா, என்ன தைரியம்?" என்று உறுமினார். அவர் பிடியிலே பாவம், கணபதிக்கு உடம்பே நடுங்கறது. நாங்க அவர்கிட்டே பேச முடியல்லே... அந்தக் கெழம்தான் மூர்க்கமாச்சேன்னு கணபதிகிட்டே கெஞ்சினோம்.... 'சொல்லுமோய்யா... மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போமே... பிடிவாதம் பிடிக்காதீர்'ன்னு நானும் கிட்டே போயி சொன்னேன்... கணபதி என் மூஞ்சியை வெறிச்சிப் பார்த்தான். பார்த்துட்டு 'ஓ'ன்னு கொழந்தை மாதிரி அழுதான்...

- 'நேக்கு மந்தரம் தான் தெரியும்... அர்த்தம் தெரியாதே'ன்னு அவன் அழறப்போ, அம்பது வருஷத்துக்கு முந்தி நானும் அவனும் ஒண்ணா படிச்சதெல்லாம் நேக்கு ஞாபகம் வந்து நானும் அழுதுட்டேன்.

திடீர்னு உங்கப்பன் கனபாடிகள் கையைத் தள்ளி உதறினான். எல்லாரும் என்ன நடக்கப் போறதோன்னு திகைச்சுப் போனோம். பல்லைக் கடிச்சுண்டு உடம்பிலேருந்த பூணூலை வெடுக்குனு பிச்சு அறுத்து, கனபாடிகள் மூஞ்சிலே எறிஞ்சுட்டு 'போங்க... நான் பிராமணன் இல்லே... நான் பிராமணன் இல்லே'ன்னு கோஷம் போடற மாதிரிக் கத்திண்டு ஓட்டமும் நடையுமா நாலுவீதியும் சுத்திண்டு அப்ப போனவன்தான்; என்ன ஆனானோ, எங்கே போனானோன்னு உன்னடை வந்து விசாரிக்கணும்னுதான் நெனைச்சிண்டிருந்தேன்... நீ என்னடான்னா இந்த விஷயமே தெரியாதுங்கறே?..." என்று, தான் சம்பந்தப்படாத - இந்தக் காலத்து பிராமணர்களாகிய தாங்கள் யாருமே சம்பந்தப்படாத - கணபதி சாஸ்திரி என்ற தனிப்பட்ட ஒருவனின் விவகாரம்போல் அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கினார் வெங்கிட்டுவையர்.

வெங்கிட்டுவையர் விவரித்த சம்பவத்தில் பொதிந்துள்ள ஒரு சமூகச் சீரழவின் கொடுமையை ஆழ்ந்து உணர்ந்த வேதனையில் வாய்மூடி மௌனியனான் சிவராமன். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளாமலேயே குனிந்த தலையோடு, கலங்குகின்ற கண்களோடு அவன் வீடு நோக்கி நடந்தான்.

வீட்டிற்குப் போனதும் ஒரு மூலையில் கவிழ்ந்து படுத்துக் கதறி அழவேண்டும் என்று வழியெல்லாம் நினைத்துக் கொண்டே அவன் நடந்தான்...

ஆனால் அன்று அவன் வீடு சென்றதும் அவ்விதம் செய்யவில்லை. தந்தையின் பிரிவை எண்ணித் தான் அழுவதைக் கண்டு 'அவள்' கோபிப்பாள் என்ற அச்சத்தில் அவன் அந்த 'ஆசை'யைக் கைவிட்டு விட்டான்.

- தாழ்ந்த குலத்தில் பிறந்த கொடுமைக்கு அழுதால் அதற்கு ஓர் அர்த்தமும் இருக்கும்; அனுதாபமும் கிடைக்கும். உயர்ந்த குலத்தில் பிறந்தும் கலியின் விளைவால் விபரீதமாய்ப் போன இந்தக் கொடுமைக்கு அழத்தான் முடியுமா? அனுதாபந்தான் கிடைக்குமா?

3

சிவராமன் ஆபிசிலிருந்து வரும்போது வழியில் குறுக்கிட்ட தெப்பக்குளக்கரை சாஸ்திரிகள் கூட்டத்தில் அவன் பார்வை இன்று யாரையும் தேடவில்லை. வீடு சென்றதும் தபாலில் வந்த அந்தக் காகிதக் கத்தையில் பென்சிலாலும் பேனாவாலும் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை, காலத்தின் அடியை நெஞ்சில் ஏற்றதால் ஒரு வயோதிக இதயத்திலிருந்து தெறித்து விழுந்த ரகசியமான உதிரத் துளிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத் துடிப்பில் நடந்து கொண்டிருந்த அவன், அந்தக் கூட்டத்தையே கவனிக்கவில்லை.

சிவராமன் வீட்டை அடையும்போது ராஜம் அடுக்களையில் இருக்கிறாள். மணி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவனுக்கு மவுண்ட் ரோடிலுள்ள ஒரு பெரிய பாதரட்சைக் கடையில் சேல்ஸ்மேன் உத்தியோகமானதால், இரவு எட்டு மணிக்குமேல் கடை அடைத்த பின்பே வீட்டுக்கு வர முடியும்...

தனது அறையில் சென்று உடைகளைக் களைந்தபின் முதல் வேலையாகக் கைப் பையைத் திறந்து அந்த நீளக் கவரின் உள்ளே இருந்த காகிதக் கத்தையை எடுத்து அந்தரங்கமாய்ப் படிக்க ஆரம்பிக்கிறான் சிவராமன்.

அவன் படித்த முதல் வரியே ஒரு மகத்தான இலக்கியத்தின் ஆரம்ப வாசகம்போல் அமைந்து இருக்கிறது:

"இதோ! என் கண்முன்னே ஆயிரக்கணக்கான மனுஷா சஞ்சரிச்சுண்டிருக்கா. ஒவ்வொரு மனுஷாளூம் ஒவ்வொரு விதமா இருக்கா. ஒருவிதம் மாதிரி இன்னொரு விதம் இல்லே. ஆயிரமும் ஆயிரம் விதம்! இந்த மைதானத்திலே எனக்கு முன்னேயும் எனக்குப் பின்னேயும் ஆயிரம் ஆயிரமா மனுஷா போயிண்டும் வந்துண்டும் இருக்கா.... சின்ன வயசிலே குடை ராட்டினத்திலே முதல் தடவை சுத்தினப்ப ஏற்பட்ட மயக்கம் மாதிரி இந்த நிமிஷம் என்னைச் சுத்தி ஆயிரம் ஆயிரமா ஜனங்கள் சுத்திண்டு இருக்கச்சே ஒரு பிரமை தட்டறது. நானும் திருவிழாக் கும்பல்லே வழி தவறிச் சிக்கிண்ட கொழந்தெ மாதிரி திருதிருன்னு முழிச்சுப் பாக்கறேன். இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு.

இந்த டில்லி இருக்கே, ரொம்ப புராதன நகரம். அசோகன் என்ன, பாதுஷாக்கள் என்ன, வெள்ளைக்காரா என்ன - இந்த தேசத்தையே எத்தனையோ வருஷங்களா ஆண்டு வர்ர நகரம் இது. இன்னிய தேதியிலே நாமெல்லாம் உக்காந்துண்டு சொந்தம் கொண்டாடறோம். எத்தனை தலைமுறைகளை இந்த லோகம் பாத்துண்டே இருக்கு. இந்த நிமிஷம் உயிர் வாழற மனுஷ ஜாதியிலே ஒரு நபர் கூட இருநூறு வருஷத்துக்கு முன்னாலே இல்லை; இருநூறு வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த மனுஷ ஜாதியின் ஒரு ஜீவன் கூட இப்போ இல்லே. அது ஒரு பிரிவு; இது ஒரு பிரிவு. அந்தப் பிரிவு எப்போ எப்படிப் போயி இந்தப் பிரிவு எப்போ எப்படி வந்ததுன்னு யார் சொல்ல முடியும்? இது மட்டும் சத்தியம். அது முழுக்கப் போயிடுத்து, இது முழுக்க வந்துடுத்து. ஆழமா யோசிக்காம எடுத்த எடுப்பிலே பார்த்த உடனே இந்த உலகத்திலே உள்ள எல்லாமே ஒரு அதிசயமாத்தான் இருக்கு. அதுமாதிரிதான் இந்த விஷயமும் - இருநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தவா முழுக்கப் போனதும், இப்ப உள்ளவா முழுக்க வந்துட்டதும் ஆச்சரியமாத்தான் இருக்கு - அவா கொஞ்சம் கொஞ்சமா போனா; இவா கொஞ்சம் கொஞ்சமா வந்தா. இதுமாதிரிதான் போறதும் வர்ரதும். கடவுள் விதிப்படி இந்தக் காரியம் தடங்கல் இல்லாமல்தான் நடக்கறது. மனுஷ விதிப்படியும் இப்படித்தான் நடக்கணும்; நடக்கும்.

இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை... சிக்கல் விடுபடலேன்னா அதுக்கு நாமதான் பொறுப்பு..."

அந்தக் காகிதங்களில் இதுவரை பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு ஆரம்பமாகிற பக்கங்கள் பேனாவால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வித்தியாசத்தை ஒரு அத்தியாயப் பிரிவு போல் உருவகித்துக் கொண்டு, தான் படித்த கனமான விஷயங்களைக் கருத்தூன்றிச் சிந்திக்கிறான் சிவராமன்... அவனது சிந்தனைகளை மறித்துக் கொண்டு 'இந்த அசட்டு அப்பாவா இப்படி யெல்லாம் சிந்திக்கிறார்' என்ற வியப்புணர்ச்சியே மேலிடுகிறது.

இந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராமணரின், தாடி மழிக்காத ரோமக்கட்டை அடர்ந்த, முன்பல் விழுந்த, அம்மைத் தழும்பு நிறைந்த, மாறுகண் பார்வையோடு கூடிய கரியமுக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.

எழுத்தைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு ஒரு பத்திரிகையில் பணியாற்றும் தனது சிந்தனையில் ஏற்பட முடியாத எண்ணங்களூம், தன்னால் எழுத்தில் வடிப்பதற்குக் கைவரப் பெறாத கலையும் - காலமெல்லாம் எல்லோருடைய கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளான அந்த அப்பாவி பிராமணனுக்கு எப்படி சித்தியாயிற்று! என்ற பிரமிப்பில் விளைந்த நடுக்கத்தோடு அவன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான்.

"என் தகப்பனாரின் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லே. அவர் சாகறப்ப எனக்கு வயசு ஒன்பது; நியாயமா அது எனக்கு ஞாபகம் இருக்கணும். நான்தான் அசடாச்சே, மறந்துட்டேன். ஆனா வயசு ஆக ஆக அவரைப் பத்தி எல்லாரும் பேசிக்கறதிலே இருந்து நானும் அவரைப்பத்தி ரொம்பத் தெரிஞ்சுண்டேன். அவர் மகா பண்டிதர். எந்த அளவு அவருக்கு சம்ஸ்கிருதத்தில் பாண்டியத்தம் உண்டோ அந்த அளவுக்குத் தமிழிலும் உண்டாம். சுந்தர கனபாடிகள் மாதிரி பெரியவாள்ளாம் அவர்கிட்டே படிக்கக் கொடுத்து வச்சவா. எனக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. அம்மா சொல்லுவா; அப்பா மாதிரி நானும் மகா பண்டிதனாகணும்னு. அதுதான் அப்பாவுக்கும் ஆசையாம்; ம்.... அதெல்லாம் அந்தக் காலத்துப் பிராமணத் தம்பதிகளின் லட்சியம்; தன் பிள்ளை பிராமண தர்மத்தின் பிரதிநிதியா ஆகணும்கறது. இந்தக் காலத்திலே எவன் இருக்கான்? நான் ஏன் எவனையோ தேடணும்? அப்படிப் பட்டவாளுக்குப் பொறந்த நானிருந்தேனா அவா மாதிரி?...

நான் எவ்வளவோ சொன்னேன்: அந்தச் செருப்புக் கடை வேலை வாண்டாம்னு, இந்த மணி கேட்டானா?... 'உனக்கு ஒண்ணும் தெரியாது. இதுக்கே நான் என்ன சிரமப்பட்டிருக்கேன்... மாசம் இருநூத்தைம்பது ரூபா சம்பளம். வருஷத்திலே மூணுமாச போனஸ் இந்த வேலைக்கு என்ன குறைச்சல்! அங்கே ஒண்ணும் மாட்டை அறுத்துத் தோல் எடுத்துச் செருப்புத் தைக்கிற வேலை இல்லே. டப்பாவிலே வர்ர செருப்பை எடுத்து விக்கறதுதான். உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு பஞ்சாங்கம்... சும்மா இரு'ன்னு என் வாயை அடைச்சுட்டுப் போயிட்டான் அந்த வேலைக்கு.

அது அவன் தப்பா? இல்லை, அது ஒரு தப்பான்னு யோசிச்சுப் பார்த்தா இந்தக் கலியிலே எல்லாம் சரிதான்னு தோண்றது. ஏன்னா, என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம - இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; 'ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ'ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!... ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது. என் பிள்ளைகள் பேருக்கு உயர்ந்த ஜாதின்னு சொல்லிண்டாலும், ஊருக்குப் பூணூல் போட்டுண்டாலும் நல்ல வேளை! - என்னைப்போல ஒதுங்கிப் போன ஜாதி ஆயிடலே. ஆனா அவாகூட என்னை ஒதுக்கி வச்சுட்டாளே. என்னை அப்பான்னு சொல்லிக்க, அவ சமமா பழகறவா மத்தியிலே என்னை அப்பான்னு காட்டிக்க எவ்வளவு வெக்கப்பட்டாங்கறதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.

ம்... முகம் தெரியாத அப்பாவை நெனச்சு நான் பெருமைப் பட்டுண்டிருக்கேன்... கண்ணெதிரே இருக்கிற அப்பனைப் பார்த்து என் பிள்ளைகள் வெக்கப்பட்டுண்டிருக்கு! அது சரி, நானே என்னை நெனச்சு வெக்கப்படறச்சே, அவா படறது தப்பா?"

- மீண்டும் இந்த இடத்திலிருந்து பென்சில் எழுத்துக்கள் ஆரம்பமாகின்றன. சிவராமனின் கண்களில் சுரந்த கண்ணீரால் அந்த எழுத்துக்களும் மறைகின்றன. அவன் சில விநாடிகள் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொள்கிறான். அழுகிறானா? பிறகு ஒரு முறை பெருமூச்செறிந்து சிவந்த கண்களூம் துடிக்கின்ற உதடுகளுமாய்த் தொடர்ந்து படிக்கிறான்:

"பாரதியார் ரொம்ப கோபத்தோடு கடுமையாய்த்தான் சொல்லியிருக்கார்: 'அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்றதைவிட செரைக்கப் போகலாம்'னு. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னே இதை எங்கேயோ படிச்சேன். நான் சொல்ற மந்திரத்துக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியுமா?ன்னு நான் யோசிச்சுப் பார்த்தேன். அன்னிக்குப் பூரா முகந் தெரியாத என் தகப்பனாரை - அந்த மகா பண்டிதரை நெனச்சு, நெனச்சு, நான் அழுதேன். அந்த மகா பண்டிதரிடம் - என் தகப்பனாரிடம் - படிச்ச சுந்தர கனபாடிகளும் மகா பண்டிதர்தான். அவரிடம் படிச்சவன் நான். ஆனா எனக்கு அவர்கிட்டே ஆசான் என்கிற பக்தியைவிட 'அடிப்பாரே' என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது. ஒரு தடவைக்கு மேலே கேட்டா அவருக்குப் பொல்லாத கோபம் வரும். அந்த பயத்திலே அவர் ஒரு தடவை சொல்றதைக் கூட நான் ஒழுங்காப் புரிஞ்சுக்கல்லே. நான் கிளிப்பிள்ளைமாதிரி வேதம் படிச்சேன். அப்போ அது எனக்கு தப்புன்னு தோணலே...

... மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான, பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலேயே அதை நான் மனனம் பண்ணிட்டேன். 'தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குழந்தை குடிக்கிறது! ஆனாலும் அது அவசியமில்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய, ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கிற ஞானம் அவசியமா என்ன? அதுபோலதான் மந்திரம்! உனக்கு அது தேவை; அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை அடையும்'னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப் படிச்சப்பறம்தான் எனக்கு ஒரு ஆறுதல் பிறந்தது. ஆனா, அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்தில் கை கொடுக்கல்லே...

ஒரு தடவை வக்கீல் ராகவைய்யர் ஆத்துக்கு தர்ப்பணம் பண்ணி வைக்கப் போயிருந்தேன். அவர் ரொம்பப் பெரியவர். என் தகப்பனார் மேலே வச்சிருந்த பக்தியை தகுதி இல்லாத என்பேர்லே அப்படியே வச்சிருந்தார். நாற்பது வருஷமா என்னை அவருக்குத் தெரியும். போன வருஷம் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருக்கச்சே, அவர் மருமான், வைத்தியநாத அய்யர்னு டில்லியிலேருந்து வந்திருந்தார். அவருக்கும் அன்னிக்கி தர்ப்பணம் பண்ணி வைக்க வேண்டியிருந்தது. அவரைப் பார்த்தா ஆள் வெள்ளைக்காரன் மாதிரி இருந்தார். அந்தப் பட்டுவஸ்திரத்தை அவர் கட்டியிருந்த முறையிலேயே மனுஷன் வேஷ்டி கட்டிப் பழகாதவர்னு தெரிஞ்சுண்டேன். நாலு அங்குலத்துக்குச் சரிகைக் கரை வேஷ்டியும் பட்டுத் துண்டுமா அவர் மாடியிலேருந்து எறங்கி வர்ரச்சே பளபளன்னு கால்லே சிலிப்பர் வேறே... என்ன பண்றது?... காலம்!

நான் முகத்தைச் சுளிச்சுண்டு 'தர்ப்பணம் பண்ணச்சே அதைக் கழட்டிடணும்'னு சொன்னேன். 'ஐ ஆம் ஸாரி'ன்னு ஞாபக மறதிக்கு அவரும் வெக்கப்பட்டுண்டார். நானும் 'இட் இஸ் ஆல்ரைட்' சொன்னேன்... நானும் அடிக்கடி ஏதாவது ரெண்டு இங்கிலீஷ் வார்த்தையைக் கலந்து பேசறதுதான்!... உலகம் என்னை ஒதுக்கி வச்சிருந்தாலும் ஓடி ஓடி வந்து ஒட்டிக்கிற குணம் அது.

எனக்கும் அன்னிக்கி பல எடத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவசர அவசரமா கடமையை முடிச்சுண்டு எழுந்திருக்கச்சே பார்த்தா தட்சணை குறைவா இருந்தது. 'இந்த மனுஷனுக்கு ஒண்ணுமே தெரியலையே'ங்கற அலட்சியத்தோட, 'என்ன ஸ்வாமி தட்சணை குறையறதே'ன்னேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே 'மந்திரமும் குறைஞ்சிருந்ததே'ன்னார்... அன்னிக்கு மாதிரி வாழ்க்கையிலே அதுக்கு முன்னே நான் இப்படி அவமானப்பட்டதில்லே. அப்புறமான்னா தெரிஞ்சது அவர் டில்லியிலே பெரிய சம்ஸ்கிருத புரொபஸர்னு...

அவர் என்னைக் கேட்டார்: 'உங்க பீடத்துக்கு நாங்க வெச்சிருக்கற மதிப்பை நீங்க காக்க வேண்டாமா? அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்லித் தரலாமா?'ன்னு... நான் சொன்னேன்: 'மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?'ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, 'மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?'ன்னார்... ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தேன்...! என்ன சொல்றதுன்னு புரியல்லே.... 'மன்னிச்சுக்கோங்கோ ஸ்வாமி'ன்னு கை எடுத்து கும்பிட்டுட்டு சைக்கிள்லே ஏறி ஓடி வந்துட்டேன்."

- மணி எட்டு அடிக்கிறது. ராஜம் அடுக்களையிலிருந்து அறைக்குள் வந்து அவன் முதுகில் உரசியவாறு நின்று அவன் தோள் வழியே அவன் படிக்கும் காகிதங்களைப் பார்க்கிறாள்; ஏதோ ஆபீஸ் விவகாரம் என்ற அலட்சியத்தோடு.

"இன்னும் முடியலையா? சாப்பிட வரேளா?" என்ற குரல் கேட்டு அவன் கவனம் கலைந்து அவளைப் பார்க்கிறான்.

"மணியும் வந்துடட்டுமே" என்று ஒரு பயந்த புன்னகையோடு அவன் வேண்டிக் கொள்கிறான். "இந்தக் குப்பைகளையெல்லாம் ஆபீசோட வச்சுக்கப்படாதோ?" என்று சிடுசிடுத்தவாறு மேஜைமீது கிடந்த ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் பிரித்துக் கொண்டு சுவரோரமாக உட்காருகிறாள் ராஜம்.

அவன் அடுத்த காகிதத்தைப் புரட்டுகிறான்.

"அறுபது வருஷமா அர்த்தமில்லாமல் பேத்திண்டே வாழ்ந்திருக்கேன்! என்னைப்போல மனுஷாளாலேதான் பிராம்மண தர்மமே அவமானப் பட்டுடுத்து. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சந்தியாவதனம் பண்றச்சேயெல்லாம் ஏதோ குத்தம் செய்யறமதிரி ஒரு உறுத்தல். பொய்யாவே வாழ்ந்துட்டமாதிரி ஒரு புகைச்சல்... சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் இந்தக் காலத்தினாலே மதிப்பிழந்து போயிடுத்துன்னு நான் சொல்லமாட்டேன். அதுக்கு உரிய மதிப்பை, மரியாதையை நாமே உணர்ந்துக்கலேங்கறதுதான் எனக்குத் தெரியற உண்மை. இந்த ஒரு மாசமாத்தான் நானே ஒரு மனுஷன்னு எனக்குத் தெரியறது. இதுக்கு முன்னே நாடகத்திலே வர்ரமாதிரி நான் வேஷம் போட்டுண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசறமாதிரி மந்திரங்களை மனசிலே ஒட்டாம உதட்டிலே ஒட்டிண்டு திரிஞ்சேன்.

... எனக்குத் தெரிஞ்சவா இப்ப யாராவது என்னெப் பார்த்தா அவாளுக்குத் தெரிஞ்ச கணபதிசாஸ்திரி நான்தான்னு சொன்னால் கூட, நம்பவேமாட்டா. எங்கேயாவது கண்ணாடியிலே என் உருவம் திடீர்னு தெரியறப்போ எனக்கே என்னை நம்ப முடியலே. ஆமாம்; என் மனசிலே இருக்கிற என் உருவம் குடுமி வச்சுண்டிருக்கு; பத்தாறு தரிச்சிண்டிருக்கு... அறுபது வருஷ நெனைப்பு அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா? ம்... நினைப்புத்தான்...

இப்ப நான் பிராமணனும் இல்லே, சாஸ்திரியும் இல்லே. எனக்கு, என் மனசாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான்! நான் பொறந்த குலத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ரொம்பப் பெரியவாள் செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் போலித்தனமா நான் செஞ்சுண்டு இருக்கறது, அவாளை நான் மதிக்கிறது ஆகாது. எல்லாரும் என்னைக் 'கிறுக்கு'ன்னுதான் சொல்லுவா இப்பவும். சொல்லட்டுமே... அன்னிக்கி, குளத்தங்கரையிலேருந்து வந்த கோலத்தைப் பார்த்தவா எனக்குப் பயித்தியம் பிடிச்சுடுத்துன்னுதான் நெனச்சுண்டு இருப்பா. சுந்தர கனபாடிகள் மாதிரி இருக்கிறவாளுக்கு புரோகிதம் கௌரவமான ஜீவிதம்தான். அவன் என்னை என்னதான் வைதிருந்தாலும், அவரை நினைச்சு நான் நமஸ்காரம் பண்றேன். என் கண்ணைத் திறந்துவிட்ட குரு அவர்தான். இந்த உலகமே அவர் ரூபத்திலே வந்து என்னைப் பிடிச்சுண்டு 'நீ பிராமணனா சொல்லு, இந்த மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாதவன்... நீ பிராமணனா சொல்லு'ன்னு உலுக்கின மாதிரி இருந்தது... அவர்தான் எனக்கு பிரம்மோபதேசம் செஞ்சு வச்சு பூணூல் போட்டவர்.... அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இத்தனை காலமா சொல்லிண்டு இருந்தேன். அது தப்புன்னு அவரே சொல்லிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவர்தான் என் குருநாதர். அவரை நான் நமஸ்காரம் பண்றேன்.

இப்போ நான் கிராப்பு வச்சுண்டுட்டேன். சட்டை போட்டுண்டென், செருப்பு போட்டுண்டேன். இதெல்லாம் நன்னாத்தான் இருக்கு. எனக்கு நெனச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வரது. சாஸ்திரிகள்னா செருப்புப் போட்டுக்கப்படாதாமே... ஆனா சைக்கிள்லே மட்டும் போலாமாம். என்னோட சைக்கிள் - நாற்பது ரூபாய்க்கு சிவராமன்தான் வாங்கித் தந்தான். வாங்கும்போதே அது கிழம்... இப்ப யாரு அதை உபயோகப் படுத்திண்டிருப்பா? சிவராமனா? மணியா?... கிழங்களும் உபயோகப்படுமே, சாகற வரைக்கும்."

படித்துக் கொண்டிருந்த சிவராமன் தலைநிமிர்ந்து கூடத்துச் சுவரோரமாக நிறுத்தி இருந்த சைக்கிளைப் பார்க்கிறான். அவன் முகத்தைப் பார்த்து அவன் பார்வை வழியே முகம் திரும்பி, கூடத்தில் நிறுத்தி இருந்த கணபதி சாஸ்திரிகளின் சைக்கிளை ராஜமும் பார்க்கிறாள். அந்த நிமிஷம் வார்த்தைகள் ஏதுமற்ற மௌனத்திலேயே, அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றிப் பேசாமலேயே மன உறுத்தலைப் பரஸ்பரம் பரிமாறி உணர்ந்து கொள்கின்றனர். திடீரென ஒரு விம்மலுடன் ராஜம் அந்த மௌனத்தைக் கலைக்கிறாள்:

"இந்தப் பாழும் பிராம்மணர் எங்கே போய்த் தொலைஞ்சாரோ? ஒரு சேதியும் தெரியல்லையே... நாள் ஆக ஆக, என் மனசைப் போட்டு என்னென்னமோ செய்யறதே!... உங்ககிட்டே இப்ப மனசை விட்டுச் சொல்றேனே. அவர் இல்லாம எனக்கு இந்த வீடே வெறிச்சுனு இருக்கு; நீங்க ஏதாவது சண்டை போட்டேளா? இப்படி ரெண்டு பிள்ளைகள் மலையாட்டமா இருந்தும், இப்படி அனாதையாய்ப் போகணும்னு அவர் தலையிலே எழுத்தா?" என்று கையிலிருந்த வாரப் பத்திரிகையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் ராஜம்.

'ஒன்றுமே தெரியாத அசடு' என்று தான் தீர்மானித்திருந்த தன் தந்தையின் உள்ளுணர்வுகளை அறிந்து பிரமித்தது போலவே, அவர் மீது வெறுப்பைத் தவிர வேறு பாசமேதும் இல்லாதவள் என்று இதுநாள் வரை தான் எண்ணியிருந்த ராஜத்தின் மன உணர்வுகளைத் திடீரென அறிய நேர்ந்ததும் எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு மகத்துவம் நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வில் மெய்சிலிர்க்கிறான் சிவராமன். மேஜை மீதிருந்த காகிதக் கத்தையில் தான் படித்திருந்த பக்கங்களை எடுத்து மௌனமாய் அவளிடம் நீட்டுகிறான்.

அப்போது அவன் விழிகளில் தைரியமான இரண்டு சொட்டுக் கண்ணீர் துளித்திருந்து பொட்டென உதிர்கிறது!

"என்ன கடுதாசியா... அவரா எழுதியிருக்கார்?" என்ற பரபரப்போடு அவர் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்ற ஒரே திருப்தியில் ஆனந்தமயமாகி அதை வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறாள் ராஜம்.

இப்போதுதான் வீட்டிற்குள் வந்த மணி, அவள் வார்த்தைகளை அரைகுறையாய்க் கேட்டவாறு, "அப்பாவா? எங்கே இருக்கார்? என்று கூவியவாறு ராஜத்தின் அருகே உட்கார்ந்து அவளோடு சேர்ந்து அந்தக் கடிதத்தைப் படிக்க முயல்கிறான்.

மணி ஒன்பது அடிக்கிறது... அவர்களில் யாரும் இன்னும் சாப்பிடப் போகவில்லை. அந்த ஒரு கத்தைக் காகிதம் இப்போது முடிவதாக இல்லை.

தன்னை விட்டு எங்கோ விலகிக் கிடக்கும் அவரை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் ஆளுக்கு ஒரு பக்கத்தை அவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தக் காகிதத்தில் ஏதோ ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்த மணி திடீரெனக் கூவுகிறான்: "வெல்டன்... பாதர்..."

அந்தக் காகிதங்களில் அவர்கள் அறிவது, அவர்கள் கண்களுக்குத் தெரிவது, அவர்கள் தரிசிப்பது - அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த, இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ நேர்ந்துவிட்ட, கணபதி சாஸ்திரிகள் என்ற தனிப்பட்ட ஒரு பிராம்மணரை மட்டும்தானா?

(எழுதப்பட்ட காலம்: 1965)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக