02/10/2024

முத்திரைப் பதிவுகள் - 1

விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். ‘பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம்.

அபிதானமணிமாலை என்னும் நூல், ‘பகைவர்’ என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.


"பகைவர், அடையவர், பகைஞர், பரர், அண்டர்,

அகிதர், தொடர்பிலர், அமித்திரர், அமரார்,

பற்றார், கருதலர், பற்றலர், எதிர்ந்தோர்,

சொற்றார், தரியலர், சேரார், முனைந்தோர்,

பொருந்தவர், வேண்டார், புல்லார், ஒல்லார்,

நள்ளார், கொள்ளார், நண்ணார், சார்பிலார்,

உள்ளார், கூடார், ஒட்டார், விட்டார்,

எண்ணிலர், இன்னார், இகவோர், இரிஞர்,

நண்ணலர், ஒன்னலர், நயனிலர், நேரலர்,

செறுநர், கேளலர், மேவலர், சினவர்,

தெறுநர், நோனார், துன்னார், தெவ்வர்,

மாணார், பேணார், மருவலர், வட்கார்,

மாற்றலர்க்கு இன்னவை ஏற்ற தொல்பெயரே''

 

இவ்வாறு ஐம்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் மூன்று சொற்கள் (பரர், அகிதர், அமித்திரர்) வடமொழிச் சொற்கள். (அகிதம்-தீங்கு - அகிதர்-பகைவன்; மித்திரன்-நண்பன் - அமித்திரன் பகைவன்).

 

திருவள்ளுவரின் சொல்லாட்சி:

வள்ளுவரும் பகைவர் என்னும் பதத்திற்கு இணையான பல்வேறு சொற்களை இடத்திற்கு ஏற்பவே பயன்படுத்தியுள்ளதை நூல் முழுவதும் காணமுடியும்.

 

"ஒட்டார், ஒன்னார், செருநர், செறுவார், செற்றார், தெவ், நண்ணார், பகைவர், பற்றார், மாணார், மாற்றலர், மாற்றார், வேண்டா(தா)ர்'' என்பதாகப் பதின்மூன்று சொற்களையும், அபிதானமணிமாலை குறிப்பிடாத "இனமல்லார், உடம்பாடு இல்லாதவர், ஏதிலார், ஒப்பிலார், நேரா நிரந்தவர், மனத்தின் அமையார், மாணாத செய்வான், செயிர்ப்பவர், வஞ்சர்'' என ஒன்பது சொற்களையும் கையாண்டுள்ளார். மொத்தம் 22 சொற்களைக் காணவியலும்.


அபிதானமணிமாலை குறிப்பிட்டவற்றில் கொள்ளார் என்னும் பதத்தினை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார் பொய்யில் புலவன். 404-ஆவது குறட்பாவிலே ‘ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்னும் பொருளிலும்; 792-ஆம் குறட்பாவிலே ‘தேர்ந்தெடுக்காதவன்’ என்ற பொருளிலும் ‘கொள்ளார்’ என்பதைப் பயன்படுத்தியிருப்பதால், பகைவர் என்ற பொருளில் அச்சொல்லைக் காணவியலாது. அதைப் போலவே, நயனிலாதவன் என்பதை விருப்பமில்லாதவன் என்ற பொருளிலும்; புல்லார் என்பதை அற்பர் என்னும் பொருளிலும்; பேணலர் என்பது விரும்பாதவர் என்ற பொருளிலும் அவர் கையாண்டுள்ளார். எனவே, ‘பகைவர்’ என்ற பொருளில் 22 சொற்களை தெய்வப்புலவர் பயன்படுத்தியுள்ளார் என அறியலாம். சங்க இலக்கியத்தில் காணவியலாத சில சொற்களையும் கையாண்டுள்ளார். "ஒட்டார், செறுவார், பற்றார், மாணார் ஒப்பிலார், நேரா நிரந்தவர்'' ஆகிய சொற்கள் சங்கப் பாடல்களில் பயிலப்பெறவில்லை.

 

(முனைவர் க.பலராமனின் ‘குறளியற் சிந்தனைகள்')

பதிவுகள் பயணிக்கும்...


நன்றி தமிழ்மணி 2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக