“பக்தனா? பரமனா? இருவரில் எவன் பெரியவன் என்று ஒருவர் கேட்டார். பாரெல்லாம் படைத்து அதைக் காத்து வரும் பரமன்தான் பெரியவன் என்ற உண்மையை யாரால்தான் மறுக்கமுடியும் என்று சொன்னார் மற்றவர். இருக்கலாம்; ஆனால் அந்தப் பரமனும் தொண்டர்தம் உள்ளத்தடக்கந்தானே என்று எனக்கு சொல்லத் தோன்றிற்று. ஆம். பாரிடந்து, பாரையுண்டு, பாருமிழந்து, பாரளந்து, பாரையாண்ட, பேரருளானாகிய நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பியாகிய அந்த ஸ்ரீமந் நாராயணன் மூவுலகத்தும் உள்ள ஜீவராசிகள் அத்தனையிலும் உயர்ந்தவன் என்பது ஒரு வகையில் உண்மையேயாயினும் அந்தக் கடல் நீலவண்ணன், கருணைக்கடல் தொண்டர்களின் உள்ளங்களில் நித்தியவாசம் செய்வதைத்தான், பாற்கடலில் வாழ்வதைக்காட்டிலும் பெரிதாகக் கருதுகிறான் என்றால் அது தொண்டர்களின் பெருமையைத்தானே சுட்டிக்காட்டி நிற்கின்றது.
பரமனை பக்தியோகம் ஒன்றினால்தான் கட்டுப்படுத்தமுடியும். அந்தக் காரியம் பரம பக்தர்களால்தான் செய்ய முடிந்த ஒன்றாகும் என்பதை நாம் நமது நாட்டு அரும்பெரும் பொக்கிஷங்களான புராண, இதிகாசங்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும், நீர்பூத்த திருமகளும், நிலமகளும் அடிவருட பாம்பனைமேல் அறிதுயிலின் இனிதமர்ந்த அந்தப் பெருமான் துஷ்ட நிக்கிரக, சிஷ்டபரிபாலனார்த்தம், பூமியில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாக வந்து தோன்றிய வரலாறு நாம் அறியாததல்ல. அந்தக் கிருஷ்ணன் போர்க்களத்தில் சோர்ந்து போய் நின்ற பார்த்திபனுக்கு பகவத்கீதையை உபதேசித்து அவனுடைய சோர்வைப் போக்கி அவனை செயலில் ஈடுபடச் செய்தார். அவர் கூறிய யோகங்களில் பக்தியோகம் என்பதும் ஒன்றாகும். இலை (துளசி) புஷ்பம், பழம், தண்ணீர் இவைகளில் எதுவாக இருந்தாலும் சரி. கிடைத்தவற்றைக் கொண்டு அதன் மூலம் என்னைத் திருப்தி செய்து என்னிடம் பக்தி செய்தால், அவனை அவனுடைய பக்திக்கு கட்டுப்பட்டு அவனுடைய யோகட் «க்ஷமங்களை நான் சிரசாவகிக்கிறேன் என்று கண்ணன் அருளிச் செய்திருக்கிறார். இதனால், அந்தப் பரமபதநாதனை அடைவதற்கு உண்மை பக்தி ஒன்றே போதும் என்பது தெளிவாகிறது.
மனம் ஒன்று நாட, கண் ஒன்று காண, கை ஒன்று செய்ய, செவியன்று கேட்க, செய்யும் எந்த பூஜையையும் பரமன் ஏற்பதில்லை. ஒருமையுடன் அவனது திருவடியை நினைந்து உருகி, உள்ளம் பறிகொடுத்து பக்தி செய்யும் பெரியோர்களைத்தான் உண்மை பக்தனாக பரமன் ஏற்றுக் கொள்கிறான் என்பதுதான் பெரியோர்களின் கருத்தாகும்.
மகாபாரதக் கதையிலேயே ஒரு உண்மை பக்தனையும், அந்தப் பக்தனின் பக்திக்கு, பரமன் கட்டுண்டு, அவனுக்கு ஏவல் செய்த விதத்தையும் அந்த நூலாசியரே நமக்கு மிக அழகாக எடுத்துக்கூறும் விவரத்தை இங்கு நாம் ஆராய்வோம்.
கண்ணபிரானுக்கு பாண்டவரும் ஒன்றுதான்; துரியோதனாதிகளும் ஒன்றுதான். ஒரு தந்தைக்கு பல புதல்வர்கள் இருக்கிறார்கள். சிலர் நல்ல புதல்வர்களாகவும், மற்றவர்கள் தீய குணங்கள் படைத்தவர்களாகவும் இருப்பது மிக சகஜம். ஆனால், அந்தத் தந்தை அவ்வப்போது அவர்களிடம் ஏற்படும் சில குணமாறுதல்களைக் கண்டு துன்பமோ, களிப்போ கொள்ளுதல் இயல்பாயினும், அவருடைய அன்பைச் சொரிவதில் யாவரிடத்தும் அவர் ஒரே நிலையில்தான் இருப்பர் என்பது திண்ணம். ஸ்ரீகிருஷ்ணனுடைய அவதாரத்தின் நோக்கம் துஷ்டர்களை சம்கரித்து, சிஷ்டர்களை பரிபாலிப்பதும், பூபாரத்தைக் களைவதுமேயாகும். அவர் நினைத்திருந்தால் துரியோதனாதிகளுக்கும் சிறிதளவேனும் உதவியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் தம் சூழ்ச்சியாலும், திறமையினாலும் அன்னாருக்கு தோல்வியே உண்டாக்கி பாண்டவர்களுக்கு வெற்றியை அளித்து அருளினார். பஞ்சபாண்டவர்கள் பொறுமைசாலிகள். கூடுமானவரையில் தர்மம் தவறாதவர்கள். ஆனால், துரியோதனன் முதலானவர்களோ அப்படிபட்டவர்களல்லர். அதனால்தான் கண்ணன் பாண்டவர்களின் பக்கம் இருந்து அன்னாருக்கு வெற்றி தேடித் தந்தான் என்று முடிவு கட்டுவதிலும் உண்மையில்லாமல் இல்லை.
பார்த்தனும், பரமனும் பரம நண்பர்கள். மேலும் உறவினரும் கூட. ஆனால் பார்த்தன் அந்தப் பரமனை முழுமுதற் கடவுள் என்று அறிந்திருந்தும், அவனுடன் எப்பொழுதும் பழகி வந்த விதத்தால் அந்தப் பரமனை தன் தோழனாகவே எண்ணி அதற்கேற்பவே நடந்து வந்தான் என்ற உண்மையை மகாபாரதக் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பார்த்திபன் உண்மையிலேயே அவனுடைய வீர பிரதாபச் செயல்களுக்கு பாத்தியமானவன்தானா என்று நாம் ஆராய்ச்சி செய்ய புகுங்கால் அதற்கு நேரிடையான பதில்தான் நமக்கு கிடைக்கும். எப்படியென்றால் எவராலும் தூக்கி நிறுத்த முடியாத காண்டீபம் என்னும் வில்லை அந்தக் குந்தி புத்திரன் அனாயாசமாகக் கையாண்டு காண்டீபன் என்ற பெயரையும் பெற்றது, கண்ணனின் அருள் இருந்த வரையில்தான் என்று நமக்கு மகாபாரதக் கதை தெளிவாக்குகிறது. கிருஷ்ண பகவான் இந்நிலவுலகினின்றும் பரமபதத்திற்கு எழுந்தருளிய அதே வினாடியில், அந்த காண்டீபத்தை, அந்த காண்டீபனால் தூக்கக்கூட இயலவில்லையாம். இதனால் அருச்சுனனின் வீரம், புகழ் யாவுமே கண்ணனின் பால் அடங்கியிருந்தது என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும்.
பார்த்தனுக்காகவா அந்தப் பரந்தாமன் பாரதப் போரை முன்னின்று நடத்தினான். இல்லவே இல்லை.. ஒரு பரம பக்தனின் உண்மை பக்திக்கு, தூய உள்ளத்திற்கு கட்டுப்பட்டு அவர்களுக்குத் துணை நின்றான் அந்தத் தூயவன். அது எப்படி என்று பார்ப்போம்.
தூது சென்ற தூயவனாகிய அந்தத் திருமகள் கேள்வன் தான் தூது செல்வதற்குமுன் பஞ்ச பாண்டவர்களையும், பாஞ்சாலியையும் ஒன்று கூட்டி அவரவர்களுடைய கருத்துக்கள் யாவையென்று தெரிந்து கொள்ள விரும்பினான். தருமர், தரும நீதியில் நாடு கேட்கும்படியும், பீமன் தன் கதாயுதத்திற்கு பதில் சொல்லிவிட்டு பின் தூது செல்லலாமென்றும், அருச்சுனன் அகங்காரத்துடன் தன்னுடைய காண்டீபம் இருக்கும்போது அந்தத் தூயவன் தூது செல்ல வேண்டிய அவசியமில்லை யென்றும், நான்காவதாகிய நகுலன் தன் உடன்பிறந்தோர்களின் உள்ளக் கருத்தே தன் கருத்தாகும் என்றும், பாஞ்சாலி அந்தப் பரமன் தூது சென்று சமாதானத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு வந்து விட்டால் தான் சபதம் செய்திருந்தபடி தன் குழலை தான் எப்போது வாரி முடிப்பது என்றும் அவரவர்கள் மனவெழுச்சிகளை மேலோங்கிக் காட்டி நின்றார்கள்.
பஞ்ச பாண்வர்களில் ஒருவனாகிய சகாதேவன் மட்டுமே ஒன்றுமே பேசாமல் இருந்தான். கடைசியாக அவனைப் பார்த்து அந்தத் துளசிதரன் அன்னாருடைய கருத்தையும் சொல்லும்படி வற்புறுத்தினான்.
மகாபாரதத்திலேயே சகாதேவன் என்னும் பாத்திரம் ஒருமிகச் சிறந்த படைப்பாகும். அந்தப் பரமஞானி சொன்னான். “கண்ணா! வரும் மகாபாரதப் போரில் நீ யாவரையும் நீறாக்கி இந்தப் பூபாரம் தீர்ப்பதாக முடிவு கட்டிவிட்டாய். கோபாலனே! கோவிந்தா! கண்ணா! உன்னுடைய கருத்திற்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும்? நான் என்ன செய்யத்தான் முடியும்? இந்த மகாபாரதப் போரை நிறுத்த வேண்டுமென்றால் ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக இந்தப் பாஞ்சாலியின் தலை மயிரை களைந்து விட வேண்டும். இரண்டாவதாக அருச்சுனனை கொன்றுவிட வேண்டும். மூன்றாவதாக கர்ணனுக்கு முடிசூட்டிவிட வேண்டும். கடைசியாக உன்னையும் நான் கட்டிப்போட்டு விடுவேனாகில் இம்மாபாரதப்போர் நிகழாமல் நிறுத்திவிட முடியும்” என்று தெள்ளத் தெளிவாகச் சிறந்த முறையில் எடுத்துக் கூறினான்.
பரந்தாமன் சிரித்துக் கொண்டான். “சகாதேவா! நீ முன் சொன்ன எல்லாவற்றையும் தங்குதடையின்றி செய்து முடித்துவிடமுடியும். ஆனால் நீ கடைசியாகச் சொன்னாயே! என்னைக் கட்டிப்போட்டு விட வேண்டுமென்று. அது உன்னால் முடியக்கூடிய காரியமா?” என்று கேட்டான். சகாதேவன் தயங்கவில்லை, உடனே பதிலளித்தான், “உத்தமனே! நீ மட்டும் என் எதிரில் நின்ற நிலையில் நில். உன்னைக் கட்டிப் போடுகிறேனா? இல்லையா என்று பார்” என்று அந்தப் பரமனுக்கு விடையிறுத்தான் அந்தப் பரமஞானி. கண்ணனும் அதற்கு இசைந்தான். சகாதேவன் எவ்வாறு அந்தப் பரம்பொருளைக் கட்டினான்? அவனிடத்தில் கயிறுகளா வைத்திருந்தான்? அவனைக் கட்டிப்போட. அப்படியேயிருப்பினும் அனைத்துலகிலும், அண்ட சராசரங்கள் யாவற்றிலும், அணுவிலும் அணுவாய் உள்ள யாவற்றினும் பரந்துகிடக்கும் அந்தப் பரமனை கயிற்றினால் கட்டிவிடுவது என்பதுதான் எளிதா? கண்களை மூடினான். அந்தப் பரம்பொருளை தவிர்த்த வேறொன்றையும் தன் உள்ளத்திலிறுத்தாது அவனது உருவத்தையே தியானத்தில் இருத்தினான். பக்தி என்னும் பாசத்தினால் அந்தப் பரம்பொருளைக் கட்டிப்போட்டு விட்டான்.
முன்பொரு சமயம் தான் திருடிய வெண்ணெய்க்காக உரலில் கட்டுண்டு கிடந்த அந்தத் திருட்டுக் கண்ணன், இப்பொழுது இந்தப் பரம பக்தனின் பாசக் கயிற்றால் கட்டுண்டு விட்டான். அசையவும் முடியவில்லை. வேண்டினான் பக்தனை, தன்னை விட்டுவிடும்படி. அவ்வளவு எளிதில் அவனை விட்டுவிடுவானா? அந்தப் பக்தன். வரம் கேட்டான் அவனிடம். வரப்போகும் மகாபாரதப் போரில் தங்கள் பக்கம் நின்று தங்களுக்கு வெற்றி தேடித்தரவேண்டும் என்று அவனைப் பணிவுடன் கேட்டுக் கொண்டான். பக்தனின் பக்திக்கு பெரிதும் மகிழ்வுற்று அவனது விருப்பப்படியே நடப்பதற்கு இசைந்தான் அந்தப் பரமபுருடன். பின்னர் மகாபாரதப் போர் நடந்ததும் அதில் பாண்டவர் சகாயனாய் பரந்தாமன் கலந்து கொண்டு பாண்டவர்களுக்கு வெற்றி தேடித்தந்த விவரமும் நாம் அறிந்தவையே.
ஒரு தேர்த்திருவிழா நடக்கிறது. நாம் அதைக் காணச் செல்கிறோம். அந்தத் தேரில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியைக் கூட நாம் சில சமயங்களில் நம் கண்களால் காண முடிவதில்லை. ஆனால் அந்த தேரையும், அதில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களையும் நன்கு பார்த்துக் களிக்கிறோம். வீட்டிற்கு திரும்பிய பிறகு கூட நம் கண்களில் மறையாமல் நின்று காட்சியளிப்பது அந்தத் தேரும் அதில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களுமே ஆகும். ஆனால், அந்தத் தேர் பழுதில்லாமல் ஓடுவதற்கு இன்றியமையாத ஒரு சிறிய பொருளைப் பற்றி நாம் சிறிதளவும் சிந்தித்து பார்ப்பது கூட இல்லை. அது என்ன? அதுதான், அந்தத் தேர்சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அச்சாணிகள். அச்சாணிகள் இல்லாத தேர் சிறிது தூரம் கூட ஊறுபாடில்லாமல் ஓடமுடியாது என்ற உண்மை நமக்குத் தெரிந்திருந்தும் அதைப்பற்றி நாம் சிறிதளவேனும் கருத்தில் கொள்வதில்லை. இந்த சகாதேவன் வரலாற்றில் கண்ணபிரானே சாரதியாகவும், அர்ஜுனனே தேராகவும், சகாதேவனே அந்தத் தேரின் அச்சாணியாகவும் உருவகப்படுத்திப் பார்த்தால் உண்மை நமக்கு தெள்ளென விளங்கும். இதனாலயே வள்ளுவப் பெருந்தகையும் தாம் இயற்றிய தெய்வத் திருநூலில்,
“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணியன்னார் உடைத்து.” என்று சொல்லிப் போந்தார்.
தனது உண்மை பக்தியினால் பரமனையே கட்டுப்படுத்தி தனது உள்ளத்தில் நிலையாக நிறுத்தி அதன்மூலம் வீடுபெற்றுயர்ந்த பல பெரியோர்களின் வரலாறுகள் நம் நாட்டில் நிறையக் கிடக்கின்றன. பரந்தாமனிடம் பக்தி செய்யும் உள்ளம் சில சமயங்களில் ஏமாற்றத்தினால் பக்தர்களை கோபமடையச் செய்து அந்தப் பரந்தாமனேயை எதிர்த்து நிற்கவும் சந்தர்ப்பத்தை அளித்து விடுகிறது.
நம் நாட்டின் தலைவர் ஜனாதிபதி. உலகங்களுக்கெல்லாம் தலைவர், அனைத்தும் வல்ல ஆதி பரம்பொருள் நாராயணன். நாட்டில் குற்றங்கள் செய்யும் மனிதர்கள் பலர் அவர்கள் செய்த குற்றங்களுக்கேற்ப தண்டனை அடைவதும் உண்டு. வருடத்திற்கு ஒரு முறை மேற்சொன்னவாறு தண்டிக்கப்பட்ட பெரும் தண்டனையடைந்த குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு செய்து தங்களிடம் இரக்கம் காட்டும்படி அவரைக் கேட்பது உண்டு. அன்னாரும் அவர்களுடைய குற்றங்களையும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையையும் சீர்தூக்கிப் பார்த்து இரக்கம் காட்ட வேண்டிய தகுதி படைத்தவர்களுக்கு இரக்கம் காட்டி விடுதலை அளிப்பதும் உண்டு. இது இன்றைய கால நம் நாட்டுப் பழக்கம். நீரக தலைவனாகிய கடவுளிடத்தும் மக்களாகிய நாம் செய்த குற்றங்களுக்காக இந்தப் பிறவியில் அனுபவித்த தண்டனை போதுமென்றும், இனி நம்மை மன்னித்து, நம்மிடம் இரக்கம் காட்டி நம்மைப் பெருந்தண்டனையினின்றும் விடுவிக்க வேண்டுமென்று கேட்டு மனுசெய்து கொள்வதுதான் முறை. இதுதான் பக்தர்கள் பரமனிடம் காட்டும் பக்குவ நிலை.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவனாய், உலகம் யாவற்றையும் தானாகவே நின்று ஆக்கி, அளித்து, அழித்து முத்தொழிற் தலைவனாய் விளங்கும் அந்த நாராயணன் தம் கீழ் பல தேவர்களையும், கிரகங்கள் முதலான கோள்களையும் உண்டாக்கி அவர்கள் மூலம், நாம் செய்த முன்வினைப் பயன்களுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை நமக்குக் கொடுத்து, நம்மை ஆட்டுவித்து, அதைக் கண்டு மகிழ்கிறான். அறிவு படைத்த மனிதனாக உள்ளவன், தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைக் கண்டு பிறர் அனுபவிக்கும் இன்ப துன்பங்களோடு தன்னுடைய அனுபவங்களை ஒப்பிட்டுப்பார்த்து, இனி எந்தவிதப் பாவமும் செய்யாதிருக்க மனதைத் திடம் செய்து கொள்வான். அறியாதவன்தான் மேலும், மேலும் பாவத்தையே செய்து கொண்டு போவான். நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்றவாறு நாம் பிறவி எடுத்தலாகிய துன்பத்தை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பது அந்தப் பரந்தாமனின் சட்டம். அந்தத் துன்பம் தாளாமல் ஜகத்ரட்சகனாகிய அந்தக் கருணைக் கடலிடம் பிரார்த்தனைகளின் மூலம் நாம் தண்டனையை குறைத்துக் கொள்ள மனு செய்து கொள்ளலாம். அதற்குப் பலன் ஏற்படும். நம்முடைய மனு கவனிக்கப்படும் என்று நாம் நம்பித்தான் அந்த பக்தித் துறையில் இறங்கவேண்டும்.
சில சமயங்களில் நம்முடைய பழவினைகள் அதிகமாயிருந்து மன்னிக்கப்பட முடியாத சூழ்நிலையில் இருக்குமானால் அந்தக் கருணையங்கடலே நம்மை சற்று உதாசீனம் செய்து நம்முடைய மன்னிப்பு மனுவை திரும்பிப் பாராமல் இருக்கலாம். இது நாம் செய்த வினையின் பயனே தவிர்த்து அவனைக் குறை கூறுவதற்கு ஒன்றும் கிடையாது.
ஒரு பரம பக்தர். முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி என்று பெருமையாகக் கூறப்படும் காஞ்சியிலே பிறந்து அங்கேயே வசித்து வந்தார். உண்ண உணவும் உடுக்க உடையும் அன்றாடம் ஈசனின் நாமத்தைச் சொல்ல, அதனால் கிடைக்கும் அரிசியைக் கொண்டு இல்லற வாழ்க்கையை செவ்வனே நடத்தி வந்தார். யாரோ என்று எண்ண வேண்டாம்; அவர்தான் கவிதார்க்கிகசிம்மம் என்றும், வேங்கடநாதன் என்றும், வேதாந்த தேசிகர் என்றும் நம்மால் இன்றும் புகழப்பட்டு வரும் ஸ்ரீமாந் நிகமாந்த மகா தேசிகர் என்பவர். அவருக்கு அத்திகிரி அருளாளன் மேல் அபாரப் பிரேமை. அவனது திருவடியிலேயே நித்யமான சேவை செய்துகொண்டு, அவன் திருவடித் தியானத்திலேயே என்றும் எப்பொழுதும் இருப்பதையே பெரிதென்றும், அந்தப் பெரும்பேறு கிடைக்குமானால், எவருக்கும் கிடைத்தற்கரிய வைகுண்ட பதவியையே தான் விரும்பவில்லை என்றும் பகிரங்கமாக சொன்னவர் அவர்.
நிரந்தரம் நிர்விஸதஸ்த்வதீயம்
அஸ்ப்ருஷ்ட சிந்தாபதமாபிரூப்யம்|
ஸத்யம் ஸபே வாரண ஸைலநாத
வைகுண்ட வாஸேசபி ந மேசபிலாஷ:||
அவருக்கு, தான் வரதராஜரிடம் செய்யும் பக்திக்கு தகுந்த பேற்றைத் தனக்கு அந்த ஈசன் அருளவில்லை என்று தோன்றியிருக்க வேண்டும். பரந்தாமனாகிய ஸ்ரீமந் நாராயணனிடம் ஐந்து ஆயுதங்கள் (சங்கம், சக்கரம், கதை, சாரங்கம், கட்கம் ஆகிய ஐம்படைகள்) இருப்பதாகவும், அவன் அவைகளைக் கொண்டு இந்தப் பரந்த உலகத்தை ஆட்சி செய்வதாகவும் சான்றோர்களால் கூறப்படும் உண்மையை நாம் யாவரும் அறிவோம். அதற்கு மேலும் ஒரு அஸ்திரம் அந்த கரிகிரி வரதனிடம் இருப்பதாக ஸ்ரீவேங்கடநாதன் உணர்ந்தார். அந்த ஆறாவது ஆயுதத்தைக் கொண்டு அந்தப் பரம புருடன் தன்னைத் துன்புறுத்துவதாகவும் அவருக்குத் தோன்றிற்று. இனி பொறுத்துப் பார்ப்பதில் பயன் இல்லை. இனி நாம் அவனை பக்தி நெறி தவறாமல் பயமுறுத்தித்தான் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதை நன்குணர்ந்தார். எடுத்தார் கணையை; தொடுத்து விட்டார் அந்தப் பரந்தாமனின் மேல்.
“அத்திகிரி அருளாளா! யான் கொடுவினைகள் பல செய்தவன் தான் என்பதை நன்கு அறிவேன். என்னுடைய பழவினைகளுக்குத் தகுந்த விதத்தில் இதுகாறும் புழு முதல் மானிடப் பிறவியாக இந்தப் பிறவி வரை எனக்கு அளித்து விட்டாய். யான் ஒவ்வொரு பிறவியிலும் பாவங்களைத்தான், மேலும் மேலும் செய்து கொண்டு வந்திருக்கிறேன் என்பது நான் இப்பொழுது அடையும் பயனிலிருந்தே நன்கு தெரிகிறது. நீயோ என்னிடம் சற்றும் இரக்கம் காட்ட மாட்டேன் என்கிறாய். கொடும்பாவிகளின் மேல் மட்டும் பிரயோகிக்கப்பட வேண்டிய நிக்ரகம் (பாராமுகம்) என்னும் அஸ்திரத்தை என் மீதும் பிரயோகிக்க ஆரம்பித்து விட்டாய். அதன் கொடுமையை என்னால் தாங்க முடியாததுதான். யானோ உன் அடிமை. உன்னை எதிர்த்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லைதான். ஆனால், உன் ஆயுதத்தினால் அடையும் துன்பத்தைத் தாங்க முடியாமல், உன் மீது யானும் என்னிடம் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு அஸ்திரத்தை பிரயோகித்து விடுவேன். அது உன்னுடைய நிக்கிரகாஸ்திரத்தை எதிர்த்து நின்று என்னிடம் உன்னை இரக்கம் காட்டும்படியாகச் செய்துவிடும்.” இவ்வாறு பயமுறுத்தினார் அந்தப் பரமபக்தர்.
மகன் செய்த ஒரு பெருந்தவறுக்காக அவனிடம் கோபம் கொண்ட ஒரு தந்தை தன் மகனிடம் வெறுப்புக் காட்டி பாராமுகமாயிருத்தல் உலக இயற்கை. மகன் புத்திசாலியாயிருந்தால் தன் தவறை கண்டிப்பாய் உணருவான். தன்னைப் பெற்றத் தந்தையின் காலில் விழுந்து அவர் முன் அஞ்சலி அஸ்தனாய் நிற்பான். எத்தனைக் கொடிய மனம் படைத்த தந்தையாயிருப்பினும், அவ்வாறு வினயத்துடன் நிற்கும் மகனிடம் பரிவு காட்டாமல் இருக்கமுடியாது. அந்த அறிவு மகன் அஞ்சலி (கைகுவித்து விநயத்துடன் நிற்கும் பாவனை) என்னும் ஆயுதத்தினால் தன் தந்தையின் நிக்ரகம் என்கிற ஆயுதத்தைப் பழுதடையச் செய்துவிட்டான். இதே அஸ்திரத்தைத்தான் அருளாளனிடம் காண்பித்து அவனைப் பயமுறுத்துகிறார் அந்தப் பரம வைணவப் பக்தர். இந்தக் கருத்தடங்கிய ஸ்லோகம் “வேதாந்த தேசிகர்” இயற்றிய “வரதராஜ பஞ்சாசத்” என்று புலமை பெற்ற பலராலும் போற்றப்பட்டு வரும் நூலில் இன்றும் பரக்கக் காணப்படுகிறது.
ஹஸ்தீஸ து:க விஷ திக்த்த பலாநுபந்தி நி
ஆப்ரஹ்ம கீட மபராஹத ஸம்ப்ரயோகே|
துஷ்கர்ம ஸஞ்சயவஸாத் துரதிக்ரமே ந:
ப்ரத்யஸ்த்ரமஞ்ஜலிரஸெள தவ நிக்ரஹாஸ்த்ரே||
பக்தனின் ஆயுதத்தின் முன்னால் தன் ஆயுதம் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் நிற்கும் அந்தப் பரந்தாமன் பெரியவனா? அல்லது பக்தன் பெரியவனா? என்பதை வாசகர்களாகிய உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக