தந்தை தாய் வாக்கிய பரிபாலனம் செய்யும் பொருட்டு தனக்கென தன் தந்தையால் அளிக்கப்பட்ட தரணியைத் தன் தம்பிக்காக விட்டு விட்டுத் தம்பி இலக்குவனுடனும் தன்னுயிர் போன்ற தகைசால் பத்தினி சானகியுடனும் சித்திரக்கூடத்திலிருந்து புறப்பட்ட தயரத குமாரனாகிய இராமன் தாபம் மிகுந்த கானகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் முதன்முதலாக எதிர்ப்பட்டவன் விராதன்.
விராதன் ஓர் இயக்கன். அவனது காம உணர்ச்சியினால் ஏற்பட்ட அறிவீனத்தால் அரக்கனாக பிறக்கும்படி சாபம் பெற்றவன். பின்னர் நிகழவிருக்கும் இராவண வதத்திற்கு சூர்ப்பனகை எவ்வாறு மூலகாரணமாக வந்தமைந்தாளோ அதேபோல் அரக்கர் குல அழிவிற்கு அடிகோலுபவனாக வந்தமைகிறான் விராதன் என்று கூறலாம்.
விராதன் இராம இலக்குவர்களைத் தன் வலிய திரண்ட தோள்களில் ஏற்றிக்கொண்டு ஆகாயமார்க்கத்தில் செல்வதைக் கண்ட சனககுமாரி சஞ்சலமுற்றுக்கதறியழ, அதுகண்ட இலக்குவனன் தன் அண்ணணாகிய இராமனிடம் சீதையின் துயரைச்சொல்லி விளையாடியது போதும், இனியும் விளையாடவேண்டாம் என்று வேண்டுகிறான். வினைவிளைகாலம் வந்ததையறிந்து கொண்ட அண்ணல் தன் திருவடியால் விராதனை அழுத்த அவனும் பேரிடியால் தாக்குண்ட பெருமலைபோல் தரையில் வீழ்கிறான்.
அவ்வாறு வீழ்ந்த விராதன் தன் பழவினைப் பயனால் இதுகாறும் எய்திருந்த அரக்கநிலை நீங்கி இயக்க நிலையடைந்து இராமனைப் பலவாறு புகழ்கிறான், துதிக்கிறான். அவனே பரம்பொருள் என்கிறான். அன்று யானைக்கு அபயமளித்துக் காத்த ஆதிமூலப் பொருளும் அவனே என்கிறான்.
எல்லாம் சரிதான். அவ்வாறு உய்த்துணர்ந்து உரையாற்றிவந்த விராதன் நடுவே ஓர் ஐயத்தையும் உருவாக்கிவிடுகிறான் இராமன் மனதில். ஆனால் அவன் அண்ணலிடம் கேட்ட சந்தேகங்களுக்கு இராமனே தகுந்த சமாதானம் கூறியிருக்கமுடியுமா? முடியாதுதான். அவைதான் என்ன? நாமும் அறியலாமே?
இராமா ! நீ பரம்போருள். ஆதிமூர்த்தி நீதான். யாவற்றினும் உறைகிறாய். உனக்கு இருவர் மடந்தையர். ஒருத்தி சீர்பூத்த செழுங்கமலத் திருத்தவசில் வீற்றிருக்கும் நீர்பூத்தத்திருமகள். மற்றாருத்தி நீ படைத்த மண்ணுயிர்கள் யாவுக்கும் மனமிரங்கியருள் சுரக்கும் மண மங்கை. அதாவது நிலமகள். ஆனால் அவர்களில் ஒருத்தியாகிய திருமகளை உனது திருத்துழாய்த் தாரார்ந்த தடமார்பிலே இடம் கொடுத்து வைத்திருக்கிறாய். அவளைவிட்டு நீ பிரியாய். உன்னை விட்டு அவள் பிரியாள். உன்மைதான். ஆயினும் நீ வஞ்சகன் உன் வஞ்சனை மாயை மட்டும் அந்தத் திருமகள் அறிய நேர்ந்தால் உன்னைக் கோபிக்கமாட்டாளா? நிச்சயமாகக் கோபிக்கத்தான் செய்வாள்.
நீ அவ்வாறு செய்யும் மாயை என்னவென்று கேட்கிறாயா? சொல்கிறேன் கேள். நிலமகள்மேல் கொண்டிருக்கும் நிறைந்த காதலால் அவளை நீ அரவாகி- ஆதிசேடனாகி- உன் தலையாலேயே சுமக்கிறாய். முன்பொருகால் இரணியாக்கன் என்ற தானவன் அந்நிலமகளைப் பாயாய்ச்சுருட்டி எடுத்துக்கோண்டு கடலுக்கடியில் மறைய, நீ ஏனமாய்- பன்றியாய் - உருவெடுத்து அவனைப் போரில் கொன்று அந்நிலமகளை- உன் ஆசைக்கினியாளை- உனது அழகான இரண்டு மருப்புகளில் ஏந்திக்கொண்டு மீண்டு வந்தாய். ஊழி முடிவில் ஒன்றுமறியாப்பாலகன் போல் ஓராலிலை மேல் தூங்காமற் தூங்கியபோது உன் உயிரனைய அந்நிலமகளை உன் வயிற்றுக்குள் வைத்துக்காப்பாற்றுகிறாய். அவ்வளவுதானா? வாமனனாய்த் தோன்றி வன்மத்தால் மாவலிமேல் மண்ணிரந்து நின் ஓரடியால் உன் உயிரனைய உலகாளை உனது ஓரடிக்குள் ஒளித்துக் கொள்கிறாய். இவ்வாறெல்லாம் நீ உன்னிருவரில் ஒருத்தியாகிய நிலமகளிடம் பல சந்தர்ப்பங்களில் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதைத் திருமகள் - உன் மணிமார்பில் என்றும் உறையும் - புண்டரிகை அறிந்தாளானால் அவளது மனம் புண்படாதா? அவள் உன்னிடம் சீறமாட்டாளா? என்று அவன் கேட்கிறான்.
அரவாகிச்சுமத்தியால் அணியெயிற்றிலேந்துதியால்
ஒருவாயில் விழுங்குதியால் ஓரடியால் ஒளித்தியால்
திருவாரும் நிலமகளை இஃதறிந்தாள் சீறாளோ
மருவாரும் துழாய் அலங்கல் மணிமார்பின் வைகுவான்
ஒரு பெண் தன் கணவன் மற்றொரு பெண்ணிடம் பற்றுக் கொண்டிருப்பதையறிய நேரிட்டால் பதற்றமுறுவாள் என்னும் கருத்தைக் கொண்டு பரம்பொருளாகிய இராமனைத் தோத்திரம் செய்யும் வகையில் விராதனின் ஐயப்பாடு அமைகிறது. விராதனா செல்கிறான் இல்லை.
கம்பமேதை சொல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக