09/06/2015

எப்படிப் பிறக்கிறது கதை? - வாஸந்தி

எழுத்தாளர்கள் எப்படிக் கதை எழுதுகிறார்கள் என்கிற கேள்வி கதை பிறந்த காலத்திலிருந்து கேட்கப்படுவது. வியாசர் உண்மையில் மகாபாரதத்தை எப்படி எழுதினாரோ என்னவோ, அதற்கும் விளக்கமாக ஒரு கதை உண்டு. வியாசர் இடைவெளியில் நிறுத்தாமல் கதை சொல்வதற்குத் தயாரென்றால் எழுத நான் தயார் என்று விநாயகர் வந்து அமர்ந்து தனது தந்தத்தை உடைத்து எழுதியதாகப் புராணம். தெய்வீக அருள் இருந்தால்தான் அத்தகைய ஒரு முயற்சி சாத்தியம் பெறும் என்று அர்த்தமாக இருக்கலாம்.

சாதத் ஹசன் மண்டோ பாகிஸ்தானின் பிரபல உருது சிறுகதை எழுத்தாளர் [1912-1955] அவரது எழுத்தின் வசீகரம் மங்காத ஒன்று. அவரைச் சந்திக்க வரும் நிருபர்களும் வாசகர்களும் அவரை விடாமல் கேட்பார்கள். ‘எப்படி எழுதுகிறீர்கள்?’

அவர் ஒருமுறை ஒரு சொற்பொழிவில் விளக்கினார்.

“என் அறையில் சோஃபாவில் அமர்ந்து ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லிவிட்டு எழுத ஆரம்பிப்பேன். என்னைச் சுற்றிலும் எனது மூன்று பெண்களும் ஏகமாய் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார்கள். எழுதும்போது இடையில் அவர்களுடன் பேசுவேன். அவர்களது சண்டைகளைத் தீர்த்துவைப்பேன். ஏதேனும் கொரிக்க எடுத்துவருவேன். நடுவில் யாரேனும் என்னைச் சந்திக்க வந்தால் அவரை உபசரிப்பேன். நான் எப்படித்தான் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால், எனது எழுத்துப் பாணிக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் அதாவது சாப்பிடுவது, குளிப்பது, சிகரெட் பிடிப்பது அல்லது சும்மா இருப்பது போன்ற விஷயங்களுக்கும் ஏதும் வித்தியாசமில்லை என்றுதான் சொல்வேன்.

நான் ஏன் எழுதுகிறேன்? ஏன் என்றால் அது ஒரு போதை எனக்கு, மதுவின் போதையைப் போல. எழுதவில்லை என்றால் நான் நிர்வாணமாக இருப்பதுபோல, நீராடாமல் இருப்பதுபோல, மது அருந்தாததுபோல உணர்கிறேன்.

ஆனால் ஒரு சிறுகதையையும் என் மூளை உற்பத்தி செய்யாது. கர்ப்பமாக முடியாத பெண்ணைப் போலக் களைத்துப் படுப்பேன். எழுந்து பறவைகளுக்குத் தீனி வைக்கிறேன். பெண்களை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டுகிறேன். இறைந்து கிடக்கும் காலணிகளை ஒழுங்காக அடுக்கிவைக்கிறேன். குப்பையை அள்ளிக் கொண்டுபோய் வைக்கிறேன். அந்தப் பாழாய்போன கதை என்னவோ பையிலிருந்து வெளியேறி என் மூளைக்குச் செல்ல மாட்டேன் என்கிறது.

நிஜத்தைச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் முன்னிலையில் சொல்கிறேன், எப்படி எழுதுகிறேன் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. எதுவும் எழுத வரவில்லை என்று மனைவியிடம் சொல்லும் போதெல்லாம், அவள், ‘யோசிக்காதே, சும்மா பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதி ஆரம்பி’ என்கிறாள்.

அவள் சொல்வதைக்கேட்டு நானும் பேனாவையும் தாளையும் எடுத்து காலி மண்டையுடன், கதை நிறைந்த சட்டைப் பையுடனும் எழுத அமர்வேன். திடீரென்று கதை ஒன்று தானாக வந்து நிற்கும். நான் ஒரு பிக்பாக்கெட் மட்டுமே. என்னுடைய பாக்கெட்டில் இருப்பதைத் திருடி உங்கள் முன் வைப்பவன். நீங்கள் உலகம் முழுவதும் பயணித்தாலும் என்னைப் போன்ற ஒரு முட்டாளைப் பார்க்க முடியாது.”

மண்டோ சர்ச்சைக்குரிய எழுத்தாளராக இருந்தார். போலித்தனமான மதக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் வெளிப்படையாகத் தாக்கினார். ஆபாச எழுத்து என்று பல வழக்குகளில் சிக்கினார். என் எழுத்து ஆபாசமில்லை, ஆபாசம் இருப்பது சமூகத்தில் என்பார். ஒரு முறை நீதிபதியிடம், ‘தனது உணர்வுகள் புண்படுத்தப்படும் போதுதான் எழுத்தாளன் தனது பேனாவை எடுக்கிறான்.’ என்றார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய மண்டோ பிரிவினை காலத்துக்கு முந்தைய பிந்தைய காலகட்டத்துத் துயரங்களைத் தனது கதைகளில் மிக நுணுக்கமாகப் பதிவுசெய்தவர். மிக மோசமான காலம் அது. அந்நாட்களில் காண நேர்ந்த தார்மீகச் சரிவு அவரை விரக்தி கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடு அவரது எழுத்தில் தெரிந்தது. பிரிவினையால் நேர்ந்த அபத்தங்களை அவை ஏற்படுத்திய மனப் பிறழ்வுகளை தோபா தேக் சிங் என்ற அவரது கதை அற்புதமாகப் படம் பிடிக்கிறது.

அவர் தனது கல்லறையில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதப்படவேண்டும் என்று அறிவித்திருந்தார்:

‘கருணை நிறைந்த இறைவன் நாமத்தில், சாதத் ஹசன் மண்டோ இங்கு படுத்திருக்கிறான். அவனுடன் புதைந்திருக்கின்றன சிறுகதை எழுத்துக் கலையின் எல்லா ரகசியங்களும் மர்மங்களும். பல டன் கணக்கு மண்ணுக்கு அடியில் படுத்திருக்கிறான், யார் சிறந்த கதாசிரியன், அவனா அல்லது இறைவனா என்கிற திகைப்பில்…’


அந்தப் போட்டியில் தான் தோற்றுபோனதாக அவர் உண்ர்ந்திருக்க வேண்டும்.

நன்றி - தி இந்து 30 08 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக