04/06/2015

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 31

இன்றைக்குச் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், வாஷிங்டன் நகரில் நடந்த ஸ்பெல்லிங் பீ (spelling bee) போட்டியைக் காண்பதற்காக வந்தார். அப்பொழுது சாத்தான் (satan) என்றச் சொல்லுக்கே பல போட்டியாளர்கள் தவறான ஸ்பெல்லிங்கைக் கொடுத்தார்கள். 1941-இல் Scripps Howard News Service என்ற நிறுவனம் இப்போட்டியை நடத்தும் பொறுப்பையும் செலவையும் ஏற்றுக் கொண்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து Scripps Howard National Spelling Bee (போட்டி) மிகப் பிரபலமான போட்டியாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஆசியாவிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த மக்களின் குழந்தைகள் இப்போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடுகிறார்கள்.

அதைப்போல் தமிழில் ஒரு போட்டி நடத்தினால் இன்றைய சூழலில் எத்தனை குழந்தைகள் அதில் பங்கேற்பார்கள், அவர்களுக்குள் எத்தனை குழந்தைகள் தமிழ்ச் சொற்களில் உள்ள எழுத்துகளைச் சரியாகப் பிரித்துரைப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

இதைப்பற்றி பேசும்போது ஒரு வழக்குரைஞர் "தமிழில் இதற்கான சாத்தியக்கூறு இல்லை' என்றும், "அதற்கான காரணம் ஒலிவடிவமும் (phonetics), வரிவடிவமும் தமிழில் ஒன்றாக இருக்கிறது' என்றும் கூறினார். அவர் கூற்றில் ஓரளவு உண்மை இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரே ஒலிவடிவத்தைக் கொண்ட வெவ்வேறு வரிவடிவ எழுத்துகள் தமிழில் இருப்பதை நாம் காணமுடியும். சான்றாக, "ர' மற்றும் "ற' ஆகிய இவ்விரு எழுத்துகளுக்குமான ஒலிவடிவம் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஆனால் வரிவடிவம் வேறு. ஆங்கிலம், செஞ்சி முதலிய சாதாரணச் சொற்களை எடுத்துக் கொண்டால், இச்சொற்களின் இடையில் தோன்றும் "க', "ச' ஆகிய எழுத்துகளுக்கு முன்னால் தோன்றும், ஒரே ஒலி வடிவத்தைக் கொண்ட "ங', "ஞ' ஆகிய எழுத்துகள் அவ்வெழுத்துகளைத் தொடர்ந்து வரும் எழுத்துகளின் மேலேறி அவற்றின் ஒலிவடிவத்தைக் கொஞ்சம் மாற்றுகின்றன. அதனால் "ங', "ஞ' போன்ற எழுத்துகள் "க', "ச' போன்ற எழுத்துகளின் இணைபிரியா இணை எழுத்துகளாகக் கருதப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஸ்பெல்லிங்கின் தேவை தமிழைவிட ஆங்கிலத்துக்குத்தான் அதிகம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

"ஸ்பெல்' என்ற சொல்லிலிருந்து "ஸ்பெல்லிங்' என்ற சொல் வந்திருந்தாலும், ஸ்பெல் என்ற சொல்லுக்கு இருக்கும் அளவுக்கு ஸ்பெல்லிங் என்ற சொல்லுக்கு வெவ்வேறு வகையான பொருள்கள் இல்லை. ஆனாலும் அன்றாட வாழ்வில் ஸ்பெல்லிங் படுத்தும் பாட்டை நாமறிவோம்.

 முனைவர் பா.ஜம்புலிங்கம், எழுத்துக்கூட்டல், எழுத்தமைப்புக் கோர்வை, எழுத்துத் தொகுப்பமைவு, தொகு எழுத்து நெறி, சொல்லமைப்பு ஒழுங்கு, சொல்லமைவு நெறி முதலிய 12 சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். முனைவர் கோ.ரமேஷ் எழுத்துக்கூட்டு, எழுத்துக்கூட்டுரு, சொல்லின் எழுத்தாக்கம், எழுத்துத் தொகுதி, எழுத்துக்கோர்வை என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், எழுத்துக்கூட்டுதல், சொல்லின் எழுத்து முறை, சொல்லுக்குரிய எழுத்துத் தொகுதி, எழுத்துக் கூட்டுரு என்றும், அவற்றுள் "எழுத்துக்கூட்டுரு' மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும், டி.வி.கிருஷ்ணசாமி "கிரமமான உச்சரிப்பு' என்றும் கூறியுள்ளனர்.

ஆசிரியர் பெ.கார்த்திகேயன் ஸ்பெல்லிங் என்ற தொடர் "ஸ்பெல்' என்ற வினைச் சொல்லிலிருந்து உருவாகி, இறுதியில் பெயர்ச்சொல் ஆகிவிட்டது. எனவே, இச்சொல்லுக்கு எழுத்துகளின் கூட்டுச்சொல், எழுத்துக்கூட்டுரு, எழுத்துச் சேர்ப்புப் பொருள், எழுத்துச் சேர்ப்புச் சொல், சேர்ப்பு எழுத்து, முறை எழுத்துக்கூட்டு, பொருள் எழுத்துக்கூட்டு, சொல் எழுத்துக்கூட்டு ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார்.

இருப்பினும், பன்னாட்டு அகராதிகள் இச்சொல்லை முறையான எழுத்து வரிசை அமைப்புடன் உள்ள சொல் என்ற வகையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதால், இச்சொல்லுக்கு, முறை எழுத்து வரிசைச் சொல், முறை எழுத்துக்கூட்டு சொல், முறை எழுத்து வரிசைக்கூட்டுச் சொல், வழா நிலை எழுத்துச் சொல், வரிசை பிறழா எழுத்துச் சொல், பொருள் மாறா எழுத்துச் சொல், முறை எழுத்துப் பொருட்சொல் ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கலாம் என்கிறார்.

தெ.முருகசாமி, "எழுத்துக்கூட்டுரு' என்றும், புலவர் செ.சத்தியசீலன், எழுத்து அமைக்கும் முறை (அ) எழுத்துக் கூட்டும் முறை என்றும் கூறியுள்ளனர்.

ஆனந்த குமார் "எழுத்துரு' என்றும், ப.மூர்த்தி, சீரெழுத்து, தொடரெழுத்து, எழுத்துக்கோர்வை, சரியான எழுத்தமைப்பு, சீரான எழுத்துரு என்றும்; ஹரணி, சொல்லறி எழுத்துக்கூட்டு, சொல் விளங்கு எழுத்துகள், சொல் எழுத்தாக்கம் என்றும், வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி "வார்த்தையின் எழுத்து இணைப்பு' என்றும் - இவ்வாறு புதிய வாசகர்கள் பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தனது ஆங்கில-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் "ஸ்பெல்லிங்' என்ற சொல்லுக்கு எழுத்துக்கூட்டுரு, சொல்லின் எழுத்தாக்கம், சொல்லுக்குரிய எழுத்துத் தொகுதி, எழுத்துக் கூட்டுதல், எழுத்துக்கூட்டி உச்சரித்தல் ஆகிய பொருள்களைக் கொடுத்துள்ளார்.

வாசகர்களின் கடிதங்களைப் பார்க்கும்போது, எழுத்துக் கோர்வை (கோர்வை - கோவை) மற்றும் எழுத்துக்கூட்டுரு என்னும் சொற்களைப் பெருவாரியான வாசகர்கள் தேர்வு செய்துள்ளது தெரிகிறது. பல்கலைக்கழக சொற்களஞ்சியம் "எழுத்துக்கூட்டுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும், "எழுத்துக்கோர்வை' என்ற சொல் மிகப் பொருத்தமாகும். காரணம், ஸ்பெல்லிங்கைச் சொல்லும்போது, வரிசையாகவும் கோர்வையாகவும்தான் சொல்லவேண்டும். எனவே, ஸ்பெல்லிங் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் "எழுத்துக் கோர்வை' ஆகும்.


நன்றி - தமிழ்மணி 09 06 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக