23/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 12

ஸ்ட்ராலிஸ்' அல்லது "ஆஸ்ட்ரம் ஸ்டார்' என்ற இலத்தீன் மொழிச் சொற்களிலிருந்தும், "ஆஸ்ட்ரோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1605-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாகக் கருதப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். இந்தச் சொல்லுக்குப் பொதுவான பொருள் விண்மீன்களிலிருந்து வரும் அல்லது விண்மீன்கள் தொடர்பான என்று மெரியம்-வெப்ஸ்டர் அகர முதலி குறிக்கிறது. அதே சமயம், புறப்புலன்களால் அறியப்படும் உலகைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாமல் விளங்கும் ஒன்றையும் இச்சொல் குறிப்பதாக அதே அகர முதலி சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத்தில் மேற்கூறிய பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், பின்னாளில், இறப்பிற்குப் பின் நடப்பதென்ன என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும், இறப்பின் விளிம்பிற்குப் போய்த் திரும்பி வந்தவர்கள் தங்களது பூதவுடலை விட்டு வெளியேறி, பின் உடம்பிற்குள் புகுந்ததாகச் சொல்லப்படும் (அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்) நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதுதான், மிக அதிகமான முறையில் இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால், இந்திய தத்துவவியல் குறிப்பாகத் தமிழர்களின் சைவ சித்தாந்தத் தத்துவவியல் அல்லது மெய்யியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுவிட்ட காரணத்தால், இச்சொல் தொடர்பான பயன்பாடு ஏற்கெனவே இருந்திருப்பது போல் தெரிகிறது.

இந்திய தத்துவவியல் ஒரு மனிதனை 3 உடல்கள், 5 கோசங்கள் மற்றும் 3 நிலைகள் கொண்டதாக விரித்துரைக்கிறது. அம்மூன்று உடல்கள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண சரீரங்கள் ஆகும். வடமொழியில் சூக்ஷ்ம என்றும், தமிழில் சில நேரங்களில் சூக்கும அல்லது சூட்சும என்றும் அறியப்படும் சரீரமே ஆங்கிலத்தில் "ஆஸ்ட்ரல் பாடி' என்றழைக்கப்படுகிறது. மனம், புத்தி இந்த இரண்டும் வசிக்கும் கண்ணுக்குப் புலனாகாத உடலே "ஆஸ்ட்ரல் பாடி' என்றும், இப்பூதவுடலைச் சுற்றி சக்தி வடிவில் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒளி என்றும் இது பொதுவாக அறியப்படுகிறது. இவற்றை முன்னிறுத்தி, இந்த வார மடல்களைக் காண்போம்.

இலக்கியன் என்ற வாசகர், "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "உடுவெளி' அல்லது "விண்மீன்வெளி' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். சோலை கருப்பையா, அண்டமும், பிண்டமும் ஒன்றே என்பது சித்தர் வாக்கு என்பதாலும், நமது மெய்யியல் அண்டத்தையும், பிண்டத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்திருந்த காரணத்தால், அச்சொல்லுக்கு "அண்ட பிண்டவியல்' என்ற சொல்லையோ, அல்லது மெய்யியல் பற்றிய வெளிப்பாடாக இருக்கும் காரணத்தால், "மெய்ம்மை' என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்கிறார்.

பாபாராஜ், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "விசும்புருவான' என்ற சொல் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். தி.அன்பழகன், "ஆஸ்ட்ரல் வொர்ஷிப்' என்பது விண்மீன்களியலில் "உடு' என்னும் கூட்டத்தை வழிபடுதலைக் குறிப்பதால் "உடுவெளி' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார். மேலும், சூரிய வழிபாடு போன்றவை வானியல் வழிபாடு ஆகும் காரணத்தால், "ஆஸ்ட்ரல்' என்பதற்கு வான் + இறை = வானிறை அல்லது வானாலயம் என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாகரர் தெ.முருகசாமி, "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி "ஆவியுரு' என்ற சொல்லை இணைச்சொல்லாகக் குறிப்பிட்டிருக்கிறது என்கிறார். இருப்பினும், உடல் என்பது சரீரமாகவும், உடலைத் தாங்கியவன் சரீரியாகவும், உருவத்திற்கப்பால் ஒலியாக அறியப்படுபவன் அசரீரியாகவும் குறிப்பிடப்படுவதால், "அசரீரி' என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, ஆஸ்ட்ரல் என்ற சொல்லிலிருந்து ஆஸ்ட்ராலஜி, ஆஸ்ட்ரானமி போன்ற சொற்கள் ஏற்பட்டிருக்கும் காரணத்தால் வானத்திற்கும், மனிதனுக்கும் இருக்கும் இயற்கையின் தொடர்பைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் "வான்விதி' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வாசகர்கள் அனுப்பியிருக்கும் சொற்களில் உடு, ஆவியுரு போன்ற சொற்கள் கிட்டத்தட்ட பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் "ஸ்டெல்லர்' என்ற பொருளையும் குறிக்கின்றன. "ஸ்டெல்லர்' என்ற சொல்லுக்கு "உடு' அல்லது "உடுவெளி' என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மனிதவுடல், மனம் அல்லது ஆன்மா தொடர்பான செய்திகளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. "ஆவியுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அது கோள்களோடு தொடர்புள்ள பொருளைத் தராது. எனவே, "விசும்புருவான' அல்லது "விசும்புரு' என்ற சொல்லே பொதுவாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

நன்றி - தமிழ்மணி 27 01 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக