10/06/2014

சங்க இலக்கியத்தில் வன்புணர்ச்சியும் தண்டனையும்! - சு. சொக்கலிங்கம்

பாலியல் குற்றம் செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென உலகில் பல மூலைகளிலிருந்தும் பலத்த குரல் இன்று எழும்புகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த இவ் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக அமைந்துவிட்டமையால் வன்கொடுமை புணர்ச்சிக்கான எதிர்ப்புக் குரலில் வியப்பொன்றுமில்லை. சரியானதே.

பாலியல் குற்றம் புரிந்தோர்க்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இத் தண்டனை வழங்கும் பொறுப்பை நடுவுநிலை தவறாச் சான்றோர் மக்கள் முன்னிலையில் வழங்கியுள்ளனர் என்பதே சிறப்பு.

அகநானூறு "மணிமிடைப் பவளத்தில்' இந்நிகழ்வு பாடப் பட்டுள்ளது. அழகு விளங்க பழைமையான புகழ்மிக்கப் பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு மிக்க தோட்டங்களையும் உடைய சிறப்புடைய கள்ளூர் என்னும் ஊரினன் நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது.

அழகிய நெற்றியியையுடைய இளையாள் ஒருத்தியடன் கூடி, அவளின் அழகிய நலத்தினைத் தீவினையே தொழிலாகக் கொண்ட ஒருவன் நுகர்ந்து விடுகிறான். அதன்பின் அவளை நாடி அவன் வரவே இல்லை. அவளைக் கைவிட்டு விடுகிறான். அந்நிலையில் என்ன செய்வதென்று அறியாத நங்கை இறுதியாகச் சான்றோரிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.

அவளின் துயர்நிலை கேட்ட சான்றோர், அத்தீயவனை அழைத்து உசாவுகின்றனர். அத் தீயவனோ சற்றும் மனசாட்சியின்றி "இதற்கு முன் இவளை அறியேன்'; இவள் யார் என்பது கூட தனக்குத் தெரியாதென்றும் துணிவுடன் பொய்சூள் கூறி அவளை ஏற்க மறுக்கிறான். நீதியிலா அவனின் சூளினை நன்கு ஆய்ந்த அவையினர், அவன் கூறியது முற்றிலும் பொய் என்பதைச் தக்க சாட்சியாளர் கூற்றினால் தெளிவடைகின்றனர். அதனால் அவன்மேல் மேலும் சினம் கொள்கின்றனர். அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, தண்டனையை மக்கள் முன்னிலையில் வழங்குகின்றனர்.

தளிர்கள் பொருந்திய மூன்று கவராய கிளைகளின் நடுவே அவனை இறுகப் பிணித்துக் கட்டி, அவன் தலையில் அதிக அளவில் நீற்றினைப் (சுண்ணாம்பு தண்ணீர்) பெய்கின்றனர். சுண்ணாம்பு தண்ணீர் தன் தலையில் பட்டதினால் எரிச்சல் தாங்காமல் அவன் துடிக்கிறான். "ஐயோ' என்று அலறுகின்றான். அவன் துடிப்பதைக் கண்ட ஊர் மக்கள் அவன் மேல் இரக்கம் கொள்ளாமல், மாறாக "இது அவனுக்குச் சரியான தண்டனையே' என்று எண்ணி மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கின்றனர். இதனை, ..... ...... ...... 

காண்தகத் தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனி
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெம்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே!
(அகம் .256 )

என்று மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் என்ற புலவர் தோழியின் கூற்றாகப் பாடியுள்ளார்.

இப்பாடல் வன்புணர்ச்சி செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் அன்று தொட்டு இன்று வரை பால் வேறுபாடின்றி மக்களிடையே இருந்து வருகிறது என்பதையே புலப்படுத்துகிறது. நம் தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தில் இல்லாத செய்திகளே இல்லை என்பது உண்மையிலும் உண்மை!

நன்றி - தமிழ்மணி 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக