13/04/2014

குடவோலை முறை - துரை இளமுருகு

தமிழ்நாட்டில் குடவோலை முறை பற்றிய செய்திகள் பாண்டிய நாட்டிலேயே முதலில் கிடைக்கப் பெற்றுள்ளன. கி பி 800 நூற்றாண்டிலேயே திருநெல்வேலி மானூரில் கண்டுபிடிக்கபட்ட மாறன் சடையனின் கல்வெட்டு ஒன்று பாண்டிய நாட்டு பார்ப்பனர்கள் கிராமங்களில் குடவோலை வழக்கத்தில் இருந்ததாகக் கூறுகின்றது [காண்க தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் கே கே பிள்ளை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தரமணி வெளியீடு 2009 பக்கம்310; எபி இன்டிச எண் 24}

உத்திரமேரூரில் முதல் பராந்தகன் சோழன் காலத்தில் வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டு கி பி 919/921 இல் வரையப் பெற்று உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிர்வாகம் குடவோலை முறைப்படி நடைபெற்று வந்ததை உறுதி செய்கின்றது. ஆக குடவோலை முறை ராசராச சோழன் காலத்திற்கு முன்பே இருந்து வந்ததது தெளிவாக விளங்குகிறது.

2 இம்முறை பார்ப்பனர்கள் அதிகம் வசித்த, அவர்களுக்க்கு தானமாக வழங்கப்பட்ட அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய இடங்களில் கிராம சபை என்ற பெயரில் வழங்கப்பட்டது. வேளாண் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் ஊர் என்றும் அங்கு இருந்த சபைகள் ஊர் சபை என்றும் வழங்கப்பட்டது. மற்ற ஊர்களில் இம்முறை (குடவோலை) வழக்கத்தில் இருந்தமைக்கு தக்க ஆதாரம் இல்லை.

வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட இடங்களாக கோவில், சுடுகாடு, ஊருக்குள் ஓடும் வாய்க்கால்கள், ஏரிகள், பறைச்சேரி, கம்மளன் சேரி, ஊர் நத்தம் ஆகியவை குறிக்கப் பெற்றுள்ளன [மேற்கண்ட நூல் பக் 315], ஆகையினால் அவ்வூர்களில் சபையோ குடவோலைமுறையோ இருக்கவில்லை என்பது தெளிவாக விளங்கிறது. 

ஊர் அல்லது கிராமம் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டது. எ.கா உத்திரமேருர் 30 குடும்புகளாகவும் தஞ்சை மாவட்டம் செந்தலைக் கிராமம் 60 குடும்புகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தாதகத் தெரிகிறது. ஒரு குடும்பிலிருந்து ஒருவருடைய பெயர் மட்டும் குடும்பின் சார்பில் நியமிக்கப்படும். அவர் ஆணாகத்தான் இருக்க வேண்டும் பெண்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

உத்திரமேரூர் கல்வெட்டின்படி உள்ள செய்திகள்

குடவோலைமுறையில் கலந்து கொள்வதற்கான‌ தகுதிகள்

1. 35 முதல் 70 அகவைக்குள் உள்ள ஆண் மக்கள்.

2. குறைந்த அளவு 1/4 வேலி நிலம் இருக்க வேண்டும். குடியிருக்க சொந்த வீடு இருக்க வேண்டும். ஆனால் இதற்கும் விதி விலக்கு உண்டு வேதப் படிப்பில் சிறந்தவன், நான்கு பாஸ்யத்தில் ஒன்றினையேனும் நன்கு கற்று இருந்தால் அவனுக்கு 1/8 வேலி நிலம் இருந்தால் போதும். 

3. ஒருவர் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் அவர் அந்த வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஊர் சபையின் வேறு வாரியத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்படலாம். 

4. ஒழுக்கமற்றவராகவும் சரிவரக் கணக்கு காட்டாதவராகவும் இருந்தால் அவர் பெயர் குடத்திலிடப்படமாட்டாது. 

குடும்பினால் நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளிலெழுதி ஒரு குடத்தில் இடப்படும். பிறகு அவை நன்கு குலுக்கப்படும். பிறகு ஒரு சிறுவனை அழைத்து எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகள் எடுக்கப்படும். அவற்றில் உள்ள பெயர்கள் உரக்கப் படிக்கப்பட்டு அவர்கள் சபையின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவர். இதுவே குடவோலை முறையாகும்.

சபை ஒரே அமைப்பாக வேலை செய்வது இல்லை. அதில் பல உட்பிரிவுகள் உண்டு. இவை வாரியங்கள் என வழங்கப்படும். இந்த உறுப்பினர்களில் அனுபவம் உள்ளவர்கள், வயது மூத்தவர்கள் ஆட்டை [ஆண்டு] வாரியத்திற்கும் மற்றவர்கள் ஏரி வாரியத்திற்கும் (6 பேர்) தோட்ட வாரியத்திற்கும் (12 பேர்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பஞ்சவாரவாரியம், பொன் வாரியம், உதாசீன வாரியம் போன்ற வாரியங்களும் உண்டு இவை பெரும்பாலும் குளத்தங்கரையிலும் மரத்தடியிலும் கூடுவது வழக்கம்.

இவற்றிற்கு என்று எழுதப்பட்ட சட்ட விதிகள் கிடையாது. பாவபுண்ணியம் சமயச் சார்பு, நம்பிக்கைகள் பண்டைய பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையிலேயே இவை இயங்கின. இவற்றின் முடிவுகள் ஊர் முழுவதையும் கட்டுப்படுத்தக் கூடியது {சுருக்கமாகச் சொன்னால் இன்றைய கட்டைப் பஞ்சாயத்திற்கு இணையானவை}

கிராம சபையின் கடமைகள் வரி வசூல் செய்வது, நிலம் தொடர்பான செய்திகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது, நிலத்தின் விளைச்சலைக் கொண்டு வரியின் அளவை முடிவு செய்வது, தொடர்ந்து 2 ஆண்டுகள் வரி செலுத்தாத‌வர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டு வரியைப் பெறுவது, கோவிலுக்கு உரிய வரியினை வசூல் செய்வது ஆகியவை.

பார்ப்பனர் அதிகம் உள்ள அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய ஊர்களில் பார்ப்ப‌னர்களே சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை பெற்றவர்கள். அவர்களது பெயர்கள் மட்டுமே குடத்தில் இடப்படும். எ.கா கண்டியூருக்கு கிழகே உள்ள திருவேதிகுடி [ தஞ்சை மாவட்டம்] வேளாண் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இவர்களே சபையின் உறுப்பினர்கள். [ மற்ற சாதிகளைப் பற்றி பேச்சே இல்லை என்பதைக் காண்க]

சில ஊர்களில் வேளான் மக்களும் பார்ப்பனர்களும் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. அவ்வூர்களில் இருவரும் சபைக்கு தேர்ந்தெடுக்க‌ப்படுவர். ஆனால் பார்ப்பனர்களும் வேளாண் பெருமக்களும் சரிநிகர் சமானமாக அமர்ந்து சபையினை நடத்தி வந்தனரா என்பது கேள்விக்குறியே. எ.கா. தஞ்சை ராசகிரி சதுர்வேதி மங்கலம், செங்கை மாவட்டம் வேளாச் சேரி. இந்த ஊர்களில் கிராம ஆட்சியை நடத்துவதற்கு 2 சபைகள் தனித்தனியே இயங்கி வந்தன. சதுர்வேதிமங்கல சபை பார்ப்பனர் பகுதியையும் ஊரவை வேளான் பகுதிகளையும் நிர்வகித்து வந்தன. இவ்வாறு ஒரு பகுதிக்கு இரண்டு சபைகள் என்று இருந்து வந்ததில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.

அத்தகைய கிராமங்கள் ஒரே ஆட்சியின் கீழ் வரவேண்டும் என்ற எண்ணம் முதல் ராச ராச சோழனுக்குத் தோன்றியதாகத் தெரிகிறது. அவ்வாறு செய்ய வேண்டுமானால் பார்ப்பனரையும் வேளாண் மக்களையும் சேர்த்து ஒரே சபையாக அமரச் செய்வதற்கு ஆணையிட வேண்டும். ஆனால் உறுப்பினர் தகுதி பற்றிய [வேதம் கற்றிருத்தல் முதலியன] விதிகள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் பார்ப்பனர் வாழும் இடங்களில் பணியாளார்களுக்கு [வேலைக்காரர்களுக்கு] மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களைத் தவிர வேளான் வகையால் அனுபவித்து வரும் நிலங்களை வேளான் வகையினர் (பார்ப்பனர்க்கு) விற்று விட வேண்டும் என்ற உத்திரவு இட வேண்டிய சூழ்நிலை ராச ராச சோழனுக்கு ஏற்பட்டது என்று தெரிகிறது. இவ்வுத்தரவை நிறைவேற்றும் பொருட்டு ஒரு அதிகாரியும் நியமிக்கப் பட்டான் என்பதை கருந்திட்டைக் குடிக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

[ காண்க பிற்கால் சோழர் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார் கவுரா பதிப்பகம் சென்னை]

நன்றி - கீற்று 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக