கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின் மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிளை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள். உடற்சூட்டின் கதகதப்பில் திரவம் உறைந்து அணுக்கள் இறுகிக் கெட்டியாகி உயிர் பெற்று அசைந்து, மண் நீக்கி முளைவிடும் விதையெனத் தோடுடைத்து சூரியனின் இயற்கைச் சூட்டைப் பெறும் வேட்கையிலும், தாயின் மூச்சே காற்றென இருந்த கணம் மாறி உள்காற்றை உந்தித் தள்ளி வெளிக்காற்றில் தலை நீட்டும் முதல் ஸ்பரிசத்திற்காய் காலுதைக்கும் குஞ்சுகள் பொரிக்க இடம் தேடிப் புறப்பட்டன ஜோடிக் கிளிகள்.
தன் வம்சத்தின் பாரம்பரிய நியதியை மீற முடியாமல் கிளைகளின் மேல் கூடு கட்டி வாழும் பறவைகளையும், கிளைகளிலிருந்து தொங்கும் கூடு கட்டி வாழும் பறவைகளையும் உதாசீனப்படுத்தி விட்டு மரப்பொந்துகள் தேடி வனங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் தேடி அலைந்தன. மலைக் குகைகளின் கல் பொந்துகள் மாறித்தான் மரப்பொந்துகள் உண்டாயிற்று போலும். தான் ஜனித்த தாய் வீட்டை நினைத்து காற்றில் அடையாளமிட்டிருந்த திசையில் பறந்து இடந்தேடியடைந்தன. தன் தாய் வீட்டை அந்த இடத்தில் காணாமல் விக்கித்து நின்றன. தன் வீடு இருந்ததற்கான அடையாளத்தையே காணவில்லை. திசைமாறி விட்டோமோ என்று திகைத்து அடையாளங்கள் தேடினால் அடையாளங்களாக நின்ற மரங்களையும் காணவில்லை. “ஆகா... எவ்வளவு பெரிய இலவ மரம் தன் தாய்வீடாயிருந்தது. எவ்வளவு உயரம், எத்தனை பொந்துகள். பக்கத்திலேயே கூடாரமாய் கிளை பரப்பி வெய்யில் முகமே காணாமல் எந்நேரமும் நீருக்குள் இருக்கிற மாதிரியான குளிர்ச்சியில் அசைந்தாடி பறவைகள் எல்லாவற்றையும் ‘வா, வா’ என்று கையசைத்துக் கூப்பிடும் நிலவாகை மரத்தையும் காணவில்லை. சந்தன வாசனை எங்கே போயிற்று? அடர்ந்த மட்டியும் கோங்கும் பிள்ளை மருதும் இருந்த இடம் எது? ஆயிரம் கைகள் விரித்தாற்போல் நின்ற தேக்கு எங்கே போயிற்று. தன் தாய்வீட்டில் வாசற்படிபோல் பொந்தின் அடியில் இருந்த பெரிய கணுவில் நின்றுகொண்டு இரையூட்டிய தன் தாயின் அலகும் தங்களின் அலகும் எவ்வளவு கச்சிதமாய் பொருந்தி மூடும் இரைகளை அலகு மாற்றிய பின் விருட்டெனப் பறந்து காற்றில் கலக்க எத்தனை தோதாயிருந்தது. அம்மரத்தின் கணு முற்றிப் பழுத்து வெடித்த பலாவின் மணத்தை இந்த நாசி உணரவே வழியிலலியே. உயிர்ப்பித்த பூமியா அத்தனை மரங்களையும் உள் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டது? கடுகளவு விதையையும் பெரிய மரமாக்கி வனமாக்கும் மண் நிச்சயமாய் விழுங்கியிருக்காது. மண் விழுங்கும் சருகுகள் கூட உரமாகி உயிர் பெற்று மரமாய்த்தானே வெளிவருகிறாது. அப்படியெனில் இந்த மரங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன. பெரு நெருப்பில் கருகியிருந்தால் தடயம் எங்கே. சாம்பலையும்கூட உரமாக்கி செடிகளுக்கு அளித்து பூ பிஞ்சு காய் பழம் விதையென சகக்ரச் சுழற்சியின் விதிக்கு மண் தானே ஆதாரம். அப்படியிருக்க மண் நிச்சயமாய் விழுங்கியிருக்க முடியாது.”
கனிந்து காம்பறுந்து தரையில் விழும் விதை சுமந்த பழங்களை கையேந்தி வாங்கிக் கொள்ளும் மண்போல் தன் உடலுக்குள் சூல் கொண்ட பழங்களைப் பத்திரமாய் இறக்கி வைக்க இடம் தேடியலைந்தன கிளிகள். மழை மேகங்களைச் சுமந்துகொண்டு வனமெல்லாம் அலையும் காற்றைப் போல் அலைந்தன கிளிகள். வயசாகி கிழடு தட்டி நரை திரண்டு முடியுதிர்ந்து வழுக்கையாகி சுருக்கங்கள் கண்டு பொந்துகளாகிப் போன மரங்கள் வனமெங்கும் தேடியும் கண்ணில் படவே இல்லை. நாகங்கள் உலா வரும் தரையில் தன் விதையை விதைக்க முடியாது. மென் பழங்களை மட்டுமே கொத்தும் செவ்வலகினால் மரப்பட்டைகளைக் குடைந்து பொந்துகள் உண்டாக்க முடியாது. கிளிகளின் அலகுகளும் பழுத்துத் தொங்கும் பழங்களும் வெவ்வேறல்ல. வாய்விட்டுக் கதறாமல் ஊமையாய்ச் சுற்றி வனங்களை வட்டமிட்டே காலங்கடந்து போனது. இனிமேல் ஒரு நாள் தாமதித்தால் கூட தன் வம்சம் தரையில் விழுந்து மடிந்து போகும். விதையைப் புஷ்பிக்கும் பூகிக்கு முட்டையைப் புஷ்பிக்கும் கலை மறந்து போனது. விதைவேறு, முட்டை வேறா? விதைக்குப் பூமி, முட்டைக்குப் பறவை. அப்படியானால் பூமியும் பறவையும் ஒன்றுதானே.
கனத்த வயிற்றின் சூல் விரட்ட, வனத்தை மறந்த பெண் கிளி சிறகடித்துப் பறந்தது வெகு தூரம். சோகத்தில் முகஞ்சுளித்த ஆண் கிளியின் இயலாமை, மரப்பொந்து கண்ணில் படவேயில்லை. கிழடு தட்டி வைரம் பாய்ந்த பொந்துகள் உள்ள மூத்த மரங்களைக் காணவேயில்லை. மரங்களற்று செடிகளாகிப் போன வனங்கள். பல்வேறு மலர்களின் சௌந்தர்ய நிறங்களும் மணங்களும் அற்ற வனம். பழங்களின் வாசனைகள் இல்லாத வனம். கூட்டங் கூட்டமாய்த் திரியும் காட்டு மிருகங்களற்ற வனம்.
வெகு நேரம் பறந்து இறக்கை ஓய்ந்து வெட்ட வெளியில் ஒற்றையாய் நின்ற மொட்டைப் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து எட்டிப் பார்த்தன. செத்த பனஞ்சிராய்கள் உள் விழுந்த ஆழப் பொந்து பெண் கிளி உள்ளே போய் முடங்கிக் கொண்டது. மொட்டப் பனையின் உச்சியிலிருந்து ஆண் கிளி கழுத்துருட்டிப் பார்த்தது. கண்ணெட்டும் தூரம்வரை வெட்டவெளி.
மொட்டைப் பனையை ஒட்டிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. ஓயாமல் கேட்கும் வாகன இரைச்சலும் ஹாரன் சத்தமும். பக்கத்திலேயே சாலையோரக் கேண்டீன், இரவு பகல் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்க சத்தமாய்க் கூச்சலிடும் ஸ்டீரியோ சினிமாப் பாடல்களும் புகை கக்கும் உயர்ந்த குழாயும், காற்றில் பரவி வரும் விசித்திரமான பிரியாணி வாசனையையும் வாகனங்கள் கக்கிச் செல்லும் டீஸல் பெட்ரோல் புகை நாற்றத்தை சுவாசித்து முகஞ் சுளித்தது ஆண்கிளி. பறந்து வந்த களைப்புத் தீர தாகம் தணிக்கப் பறந்து வெளியில் சென்றது ஆண் கிளி. மலையருவிகள் கொட்ட சிற்றோடைகளில் பாம்பின் நெளிவாய், சுவை கொண்டு பாய்ந்து வரும் கண்ணாடித் தண்ணீர் தேடி அலைந்தது. தூரத்தில் தெரிந்த குளத்தில் தாழப் பறந்து உற்றுப் பார்த்தது. ஒர்க்ஷாப் கழிவுகள் சேர்ந்து எண்ணெய்ப் படலம் மிதக்கும் கருமை நிறத் தண்ணீரின் நாற்றம் பிடிக்காமல் பறந்து போனது. சாலையோரக் கேண்டீனிலிருந்து வெளியேறி கிடங்கில் பெருகிக் கிடந்த மீன் செதில்கள் மிதக்கும் தண்ணீரில் ஒரு கொக்கு தவமிருக்கக் கண்டதும் கிளி பறந்து போனது. தூரத்தில் நடுக்காட்டில் பம்புசெட் கிணற்றின் உப்புத் தண்ணீர் வாய்க்காலில் தொண்டை நனைத்துப் பறந்து வந்தது.
மொட்டைப் பனையின் உச்சியில் உட்கார்ந்து எட்டிப் பார்த்த ஆண் கிளியின் முகத்தில் இளஞ்சூட்டின் வெக்கை படிந்தது. ஆண் கிளி புரிந்து கொண்டது. சாலையோரக் கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸின் ஜன்னல் வழியே எறிந்த பொட்டலங்களில் ஒட்டியிருந்த பிரியாணித் துகள்களையும் புளியோதரைப் பருக்கைகளையும் கொண்டுபோய் இரையாகக் கொடுத்தது. சில நேரம் ஆண் கிளி முட்டைகளுக்குக் காவல் காக்க பெண்கிளி வந்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு போனது. ஒருநாள் யாரோ எச்சிலையில் சிவப்பாய் பழங்கள் கிடக்க, கிளி சந்தோஷத்துடன் ஆவலாய் கொத்தித் தின்னப் போனபோதுதான் தெரிந்தது. அந்தப் பழம் வேறெந்த உயிர்ப்பிராணிகளுமே தின்னாத, மனிதர்கள் மட்டுமே தின்கிற தக்காளிப் பழமென்று. ஏமாற்றமடைந்த கிளி ஒரு குழந்தை கோபத்தில் விட்டெறிந்த காய்ந்த ரொட்டித் துண்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. ஒருநாள் பாலிதீன் பையின் கொஞ்சம் மீதம் இருந்த தண்ணீரை யாரோ தூக்கி எறிய, தொண்டை நனையக் குடித்து தாகம் தீர்த்தது. ஒரு வேளை அண்ணாந்து குடிக்கும் போதோ அல்லது பிளாஸ்ட்டிக் பையை பல்லால் கடித்துக் கிழிக்கும் போதோ கை தவறி விழுந்திருக்கலாம் இல்லையெனில் எந்தக் குழந்தையாவது கோபத்தில் தன் அப்பா அம்மா மீது எறிந்து குறி தவறிக் கீழே விழுந்திருக்கலாம்.
இரவில் எந்நேரமும் கண்களைக் கூச வைக்கும் வாகனங்களில் வெளிச்சங்களும் இடைவிடாது கேட்கும் இரைச்சல்களும் பேயாய் அலறும் ஹாரன் சத்தங்களும் கேண்டீன்களில் அலறும் ஸ்பீக்கரின் ஓலங்களும் தூக்கத்தை மறக்கடித்தன. காய்ந்த பணஞ் சிராய்களின் உறுத்தல் வேறு. ஆனாலும் ரொம்பவும் பயமுறுத்தியது ஓயாமல் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம்தான். வனத்தில் எப்போதாவது யானையோ சிங்கமோ புலியோ அல்லது இடியோ மின்னலோ பெரிய சத்தத்தையும் பயத்தையும் உண்டுபண்ணும். அந்த பயம் சமயத்தில் இரண்டுநாள் கூட மறக்க முடியாமல் அடிவயிற்றைக் கலக்கும். ஆனால் இங்கேயோ ஒரு நிமிஷம் தவறாமல் பயங்கர சத்தம். சத்தமே வாழ்க்கையென்றாகிப் போயிற்று கிளிகளுக்கு. ஒரு நாள் சில வித்தியாசமான சத்தங்கள் கேட்கவும் இரு கிளிகளும் ஆவலாய் பனைமேல் நின்று எட்டிப் பார்த்தன. தூரத்தில் சில மயில்களும் இன்னும் சில குயில்களும் ஒரு புறாக் கூட்டமும் இருக்கக் கண்டு சந்தோஷமாய் பொந்துக்குள் போய் முடங்கிக் கொண்டன. படை படையாய்ச் சென்ற சிட்டுக் குருவிக் கூட்டம் மொட்டைப் பனையை ஒட்டிப் பறந்தது.
ஒவ்வொரு தடவையும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும்போது அதன் தாய் பாஷையான கிகீகீ சத்தத்தைக் குஞ்சுகள் கேட்கவிடாமல் வாகனங்களின் ஹாரன் சத்தம் மேலெழும்பி அமுக்கியது. தொண்டை வலிக்கக் கத்தியும் தன் தாய் பாஷையை குஞ்சுகளின் காதுகளில் கேட்கவைக்க முடியாமல் தாய்க்கிளிகள் இரண்டும் தொண்டை வறண்டு ஓய்ந்து போயின. தன் வம்சத்தின் பாரம்பரிய நிறம் மாறி குஞ்சுகள் கிளிப்பச்சை நிறமிழந்து செம்பச்சையாய் வளர்ந்தது கண்டு தாய்க்கிளிகள் இரண்டும் ஒன்றையொன்று ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டன. தன் குஞ்சுகள் எழுப்பும் சத்தம் வாகனங்களின் ஹாரன் சத்தம் மாதிரி ஒலிக்கக் கண்டு இரு கிளிகளும் பதறித் துடித்தன. பஸ்ஸின் ஜன்னல் வழி விட்டெறிந்த அரைக் கொய்யாப் பழத்தை ஆசையாய் கொண்டு வந்து ஊட்டியது தாய்க்கிளி. பழங்களின் வாசனையறியாத ருசியறியாத குஞ்சுக்கிளி தூ.. வென்று துப்பி உமிழ்ந்தபோது தாய்க்கிளிகள் இரண்டும் கண்ணீர் விட்டு அழுதன.
கொஞ்ச நாள் கழித்து வாகனங்களே வராத நிமிஷ நேர இடைவெளியில் மொட்டைப் பனையிலிருந்து ஹாரன் சத்தம் கேட்கவும் சில பேர் பேய் என்றார்கள். சில வருடங்களுக்கு முன் ஒன்றோடொன்று மோதி நொறுங்கிச் செத்த டிரைவர்களின் ஆவி பனையில் குடியேறிவிட்டது என்றார்கள். பேய்கள் வாசஞ் செய்யும் மொட்டைப் பனையை தூரோடு வெட்டிச் சாய்த்து பேய்களின் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதற்கப்புறம் ஜனங்கள் பயமற்று நடமாடினார்கள். காற்றில் சிறகசைத்துப் பறந்து குஞ்சுக் கிளிகளைக் கூட்டிக் கொண்டு வனம் சேர்ந்தன தாய்க்கிளிகள். மரங்கள் குறைந்து செடிகள் நிறைந்திருந்த வனம் இப்போது செடிகள் குறைந்து கொடிகள் நிறைந்த வனமாய்க் காட்சியளித்தது. கிளிகளின் வித்தியாசமான ஹாரன் அலறலில் வனம் நடுங்கியது. அருகருகே வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சிங்கங்களும் புலிகளும் சிலிர்த்துக் கொண்டன. ஒன்றிரெண்டாய் உயிர் வாழும் யானைகள் தும்பிக்கைகள் தூக்கி மிரண்டு நின்றன. வானத்திலிருந்து ஓயாமல் கேட்கும் ஹாரன் சத்தம் வனமெங்கும் எதிரொலித்தது. தன் வம்சத்தின் சாபம் என்றெண்ணிய தாய்க்கிளிகளும் ஓடிப் பதுங்கிக் கொண்டன.
குஞ்சுக்கிளிகள் இரண்டும் வித்தியாசமான மணம், சூழல், இரைகல் கண்டு முகஞ்சுளித்துக் கவலையோடிருந்தன. பழம் கொத்தித் தின்னவும், எதிரியின் கண் முன்னாலேயே மரத்தின் இலையா மாறி தப்பிக்கவும் தெரியாமல் ஓயாமல் ஹாரன் சத்தத்தை ஒலித்துத் திரிந்தன. ஒருநாள் இச்சி மரத்தின் உச்சியில் நின்று இரண்டு கிளிகளும் பலமாய்க் கத்தின. நடுக்காட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு போவதைப் போல் விடாமல் ஹாரன் சத்தம் கேட்டது. திடீரென்று எதிர்திசையிலிருந்து பக்கத்திலேயே ரயில் வண்டியெழுப்பும் பயங்கரமான ஹாரன் சத்தம் கேட்கவும் கிளிகள் இரண்டும் மௌனியாய் நின்று கவனித்தன. ரயில் வண்டியின் ஹாரன் சத்தம் தங்களை நோக்கி மிக அருகே நெருங்கி வந்தது. மீண்டும் கிளிகள் உற்றுப் பார்த்தன. தங்களை நோக்கி இரண்டு மயில் குஞ்சுகள் கூவிக் கொண்டே வருவதைக் கண்ணுற்றன.
வனமெங்கும் பஸ் ஹாரன் சத்தமும் ரயில் ஹாரன் சத்தமும் விடாமல் கேட்கத் தொடங்கின. சில நாள் கழித்து நடுவனத்தில் ஆலைச் சங்கின் பயங்கரச் சத்தம் கேட்டது. எல்லாப் பிராணிகளும் உற்றுப் பார்த்தன. குயிலொன்று கூவிக் கொண்டு போன சத்தமது. சில நேரம் மிஷின்கள் ஓடும் பாக்டரிச் சத்தங்கூட கேட்கத் தொடங்கியது. பல்வேறு வாகனங்களின் பாக்டரிகளின் விதவிதமான பயங்கரச் சத்தங்கள் வனமெங்கும் ஒலிக்க வனம் சுருங்கிக் கொண்டே வந்தது. வரவர வனத்தின் சௌந்தர்யம் குறைந்து விகாரம் குடி கொண்டது. கடைசியாய் படைபடையாய்ப் பறந்து வந்த சிட்டுக்குருவிகள் ஊசிப் பட்டாசுகளாய் வெடித்துச் சிதறிச் சத்தமெழுப்பி மரக்கிளைகளுக்குள் மறைந்து கொண்டன. தன் செவிப்பறைகள் கிழிந்து ஊமையாகிப் போன வனம் நாளாவட்டத்தில் சுண்ணாம்புக் காளவாசலாய் மாறி அக்னியாய் தகித்தது. வனத்தைத் தேடியலையும் எஞ்சிய பறவைகள் எழுப்பும் பலவிதமான ஹாரன் சத்தங்கள் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன வனங்களையும் கடந்து.
நன்றி - பண்புடன் குழுமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக