நாளும் இன்னிசையால் தமிழ்பாடி இறைவனைப் போற்றிய நல்லிசைப் புலவர்களுள் தமிழ்க் கடவுளாம் முருகனை ஏத்திய நக்கீரர், அருணகிரிநாதர், கவிக்குஞ்சர பாரதியார் வரிசையில் வந்து, சென்ற நூற்றாண்டில் பிறந்து சிறந்தவர் கோடீசுவர ஐயர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவிக்குஞ்சர பாரதியின் மகள் வயிற்றுப் பேரர் இவர் என்பது மேலும் சிறப்புக்குரியது. இவர்தம் முன்னோர் திருநெல்வேலியில் இருந்து "இரண்யகர்ப்ப திருமலை சேதுபதி' மன்னரால் அழைத்து வரப்பெற்று சேதுநாட்டில் குடியமர்த்தப் பெற்றவர்கள். இராமநாதபுரம் மாவட்டம், நந்தனூர் கிராமத்தில் நாகநாத ஐயரின் மகவாக, 1869-இல் பிறந்த இவரை, சிவகங்கை, இராமநாதபுர சமஸ்தானங்கள் அரசவைக் கலைஞராக இருத்தி மகிழ்ந்தன.
இறைப்பற்றும், இசையார்வமும் இளமையிலேயே வாய்க்கப்பெற்ற இவர், சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். பாட்டனாரால் தமிழும் இசையும் வடமொழியும் ஊட்டி வளர்க்கப் பெற்றவர். பின்னர் பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் மற்றும் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரிடத்தில் இசை பயின்றிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஆங்கிலம்) பட்டம் பெற்ற பின்னர் வேங்கடரமணா மருத்துவமனை நடத்திய ஆயுர்வேதக் கல்லூரி மற்றும் மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரிகளில் இவர் ஆங்கிலம் பயிற்றுவித்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் கிடைத்த பொழுதுகளை இசைத்தமிழ் வளர்த்துத் தொண்டாற்றத் தொடங்கியிருக்கிறார்.
"இசையென்றாலே கர்நாடக இசையென்று தெலுங்குக் கீர்த்தனைகளே மிகுந்து ஒலித்த அக்காலத்தில், நமது நாடு தமிழ் நாடாகையாலும், நமது சுயபாஷை தமிழாகையாலும் இத்தகைய கிருதிகளை தமிழில் இயற்றுவதே பொருத்தம் என்று கருதுகிறேன்'' எனக் கூறி, தமிழில் புகழ்மிகு பாடல்களை முருகப் பெருமான் மீது இசைத்து மகிழ்ந்தவர். பணி ஓய்வு பெற்ற பின்னர் முழுமூச்சாக இசைத்துறையில் இறங்கினார்.
"இசை இலக்கணத்தில், சம்பூர்ண மேள முறையில் 72 மேளராகங்களைக் கொண்ட ஒரு ராகமாளிகையை மகா வைத்தியநாதையர் (1844-1893) இயற்றியுள்ளார். இதன் அடிப்படையில், மேளராகங்களை வரிசைக்கிரமப்படுத்தி கனகாங்கியிலிருந்து தொடங்கி, விஸ்தாரமான ராகப் பிரயோகங்களோடு 72 மேள ராகங்களிலும் தமிழில் கிருதி அமைத்தவர்' என்று இவரைப் பற்றி, இசைத்துறைப் பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி குறிப்பிடுகிறார்.
"முப்பெரும் இசை மேதைகளாகத் திகழ்ந்த தியாகையர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் அடியொற்றி, (அதாவது, சுருங்கிய சொற்களில் மிகுந்த ராகச் சாயைகளால் ஆழ்ந்த கருத்துகளைக் காட்டும் நடையில்) தமிழில் கிருதிகள் இக்காலத்தில் மிகுதியாகக் காணப்படாமையால், அவைகள் தமிழில் மிகுதியாக ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் முதன் முதலாக ராகங்கள் அனைத்திற்கும் கர்த்தாக்களாயுள்ள 72 மேளகர்த்தா ராகங்களிலும் தானே இயற்றத் தொடங்கி, இப்பொழுது சுத்த மத்யமமேளகர்த்தா ராகங்கள் 36-லும் கிருதிகள் இயற்றி, அவைகளை "கந்தகானாமுதம்' என்ற இந்நூல் முகமாக வெளியிடலானேன்'' என்ற முன்னுரையோடு முதல் தொகுதியை வெளியிட்ட கோடீசுவர ஐயர், மற்றொரு தொகுதியில் எஞ்சிய கிருதிகளை எழுதி முடித்து வெளியிட்டுள்ளார்.
"இந்தக் கீர்த்தனங்களைப் பாடுவதால் சங்கீத லட்சண லட்சிய ஞானமும், உண்மையான பக்தியும் தமிழ் பாஷையின் அபிமானமும் மேலோங்கும்'' என்று சி.ஆர்.ஸ்ரீநிவாச ஐயங்கார் நூலுக்கு மதிப்புரை நல்கியுள்ளார்.
"இம்மியும் மாசற்ற இசைப் பயிற்சியும் சுருதிலயம் பிறழாது இனிய சாரீரத்துடன் பாடும் இவரது திறனும் என்போன்ற சிற்றறிவுடையவனால் வர்ணிக்க இயலாதனவாகும்'' என்று போற்றுவார் பாபநாசம் சிவன்.
இவ்வாறு பலரும் போற்றும் வண்ணம், மேளகர்த்தா ராகங்களை விளக்கும் பாடல்களை, "கிருதி' என்ற பெயரிலும், ஏனைய பாடல்களை, "கீர்த்தனைகள்' என்ற பெயரிலும் குறிப்பிட்டு வேறுபடுத்திக் காட்டும் கோடீசுவர ஐயர், சுரதாளக் குறிப்புத் தந்து விளக்கும் பகுதியை, "ஸ்வர ஸகித ஸாகித்யம்' என்கிறார்.
முத்துசுவாமி தீட்சிதரை ஏற்றுப் போற்றும் இவர், தன் பாட்டனாரை நினைவுகூர்ந்து தம்மை, "குஞ்சரதாஸன்' என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார். தோடி ராகம் பாடுவதில் வல்லவராக இவர் திகழ்ந்தது கருதி, "தோடி கோடி' என்றும் சிறப்பிக்கப் பெற்றதும் வரலாறு. ஹரிகதாகாலாட்சேபம் மற்றும் கந்தபுராணப் பிரசங்கங்களும் நிகழ்த்தியிருக்கிறார்.
கந்தகானாமுதம் மட்டுமன்றி, மதுரை பொற்றாமரை சித்திவிநாயகர் பதிகம், மதுரை சண்முகமாலை, சுந்தரேசுவரர் பதிகம், கயற்கண்ணி பதிற்றுப்பத்தந்தாதி, இந்திய மான்மியம் உள்ளிட்ட பல நூல்களையும் தமிழுக்கு நல்கிய இவர், தம் பாட்டனார் அருளிய, கந்தபுராணக் கீர்த்தனை, அழகர் குறவஞ்சி, பேரின்பக் கீர்த்தனை முதலிய நூல்களையும் பதிப்பித்திருக்கின்றார்.
வித்வான் எஸ்.இராஜம் (1919-2010) இவரது பாடல்களை மிகுதியும் பாடிய பெருமைக்குரியவர். 21.10.1938 அன்று இந்த கந்தகானக்குயில் இம் மண்ணைவிட்டு விடைபெற்றுக்கொண்ட போதிலும், நின்று நிலைக்கின்றன அவர் நல்கிய 200 கீர்த்தனைகளும், 72 மேளகர்த்தா ராகங்களும்.
"நான் என் செய்வேன் சாமிநாதன் அருள் செய்யாவிடில், காணக் கண்கோடி வேண்டும் கருணாகர முருகனை'' என்றெல்லாம் அவர் இசைத்த பாடல்கள் காற்றின் நாவுகளில் நிரந்தரமாய்த் தங்கியிருக்கும். என்றாலும், குன்றிருக்கும் இடமெல்லாம் கொலுவிருக்கும் குமரனை என்றுமுள தென்றமிழால் இசைத்த புகழ் கோடீசுவர ஐயரின் கொடையைத் தமிழ்நாடு முழுவதும் பரப்புதல் நம் கடமையல்லவா...?
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக