மதுரை மாவட்டம் காரைக்கேணி என்ற சிற்றூரில் 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி, நாராயண தேவருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் பிறந்தவர் பூமிநாதன். இவருடைய மூத்த சகோதரி ஜானகி. பூமிநாதனுக்கு ஐந்து வயதிருக்கும்போதே பெற்றோர் இறந்ததால், அவரை சகோதரி ஜானகிதான் அரவணைத்து வளர்த்தார்.
டி.கல்லுப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பூமிநாதன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
பள்ளிப் பருவத்திலேயே கவிஞர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பக்தனாக இருந்தார். தேவரின் நடை, உடை, பாவனையுடன் நல்ல எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் குறிப்பாக மரபுக் கவிதை எழுதும் ஆற்றலும் கைவரப்பெற்றிருந்தார்.
மதுரை மாவட்டத்திலேயே சில காலம் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணிபுரிந்தார். "தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' தேர்வு எழுதி வெற்றிபெற்றார். அங்கிருந்து விருத்தாசலம் வட்டத்தில் நல்லூர் என்ற ஊரில் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ)யின் அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக (எல்.டி.சி.) 1963-இல் பணியில் அமர்ந்தார்.
நல்லூரில் அலுவலகப்பணி புரிந்துகொண்டே பல அருமையான மரபுக் கவிதைகளை எழுதி, அன்றைக்குத் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த பல இதழ்களுக்கும் அனுப்பிவைத்தார். பல வெளிவந்தன. அக்கவிதைகள்தான் இவரை ஒரு மரபுக்கவிஞராக மக்களுக்கு அடையாளம் காட்டின.
"பாரதம்' இதழில் இவரது 18 வரிக் கவிதை "பேய்களெனும் சாதிமதம் இல்லை' என்ற கவிதைக்குப் பரிசும் பாராட்டும் கிடைத்தது. அறிஞர் அண்ணா நடத்திவந்த "காஞ்சி' இதழில் இவருடைய கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இதனால், இவர் பெயர் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது.
"காதல்' என்ற தலைப்பில் மரபுக் கவிதை ஒன்று 1967-ஆம் ஆண்டு "காஞ்சி' இதழில் வெளிவந்தது. அந்தக் கவிதையை படித்துவிட்டு அண்ணா இவரைப் புகழ்ந்து பாராட்டினாராம். 22.10.1972-இல் வெளிவந்த காஞ்சி சிறப்பு மலரில் "ஆமை' என்ற தலைப்பில் வெளிவந்த இவருடைய கவிதை பலராலும் பாராட்டப்பட்டது.
இவர் பணிபுரிந்து கொண்டிருந்த நல்லூரில் வசித்துவந்த, லலிதா என்ற பெண்ணைக் காதலித்து 1971-இல் கலப்புத் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய அலுவல் காரணமாக அடிக்கடி கடலூருக்குச் சென்று வந்தார். அங்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராகப் பணிபுரிந்துவந்த ஆனந்த மனோகரனின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் புதுச்சேரி வானொலியில் பணிபுரிந்த அறிவிப்பாளர் கவிஞர் நடாத்தூர் நம்பியார் நட்பும் கிடைத்தது.
புதுவை வானொலியில் பல கவிதைகளை வாசித்தார். நல்ல சன்மானமும் பெயரும் புகழும் கிடைத்ததால் கவிதையை இன்னும் ஆழமாக நேசித்தார்.
12.4.1964 அன்று புதுச்சேரியில் அழ.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிதைபாடி அனைவரையும் அசத்தினார். பல இதழ்களில் வெளிவந்த கவிதைகளைத் தொகுத்து "பொன் விரிப்பு' என்ற பெயரில் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை 1968-இல் வெளியிட்டார்.
பின்னாளில், திரைப்படத்தில் பாடல்கள் எழுதி புகழடைய வேண்டும் என்ற ஆவல் இவருக்கு ஏற்பட்டது. அரசுப் பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையில் சில மாதங்கள் தங்கினார். நாடறிந்த கவிஞராக வலம்வந்த பூமிநாதன், கவியரசர் கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். திரையிசைக் கவிஞராக அவர் எதிர்பார்த்தது போல் புகழ்பெற முடியாமல் மனம் வெதும்பினார்.
"கெட்டும் பட்டணம் சேர்' என்பார்கள். ஆனால், நேர்மையாக இருந்த பூமிநாதனால் சென்னையில் வசிக்க முடியவில்லை. திரையுலகில் நடந்த அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கவும் முடியவில்லை. இறுதி முயற்சியாக ஒரு திரைப்படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத நல்ல வாய்ப்பு பூமிநாதனைத் தேடி வந்தது. ஆனால், இவர் "சமரசம்' செய்துகொள்ள முடியாமல் நல்லூருக்கே திரும்பிச் சென்றுவிட்டார்.
திரைப்படத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு வழக்கம்போல மரபுக் கவிதைகளை இதழ்களுக்கு அனுப்பினார். 13.4.1976 அன்று இவருடைய கதை வசனத்திலும், இனிய பாடல்களும் கொண்ட "வீரமாமுகம்' என்ற வரலாற்று நாடகம் அரங்கேறியது. வீரசிவாஜியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது வீரமாமுகம் நாடகம்.
1988-ஆம் ஆண்டில் சட்டமேதை அம்பேத்கரைப் பற்றி சில பாடல்களை எழுதிக்கொடுத்தார். அவை அம்பேத்கர் இயக்கத்தின் சார்பாக பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் - சசிரேகா இருவரும் பாடி, வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பரவியது.
உள்ளூரிலேயே கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவைகளில் கலந்துகொண்டு இலக்கியப் பணியை செய்துவந்த இவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு 1993-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி காலமானார்.
புதுக்கவிதையின் வரவால் மரபுக் கவிதைகள் மறைந்துகொண்டே வருகிறது என்பது உண்மை. ஆனால், காரை பூமிநாதன் போன்றவர்களால்தான் மரபுக் கவிதைகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக