02/03/2013

‘பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர்’ இருகூரான் - கலைமாமணி விக்கிரமன்


ஜம்பது ஆண்டுகளுக்கு மேல் சிறுகதைகள், புதினங்கள், ஆன்மிக ஆராய்ச்சிகள், "விவாத மேடை' என்று புதிய பகுதியில் நூல்கள் எழுதி, வெளியிட்டு வந்த "இருகூரான்' தினமணி கதிர், குங்குமம், முத்தாரம், பேசும்படம், தினசரி உள்ளிட்ட இதழ்கள் பலவற்றிலும் பணியாற்றியவர்.

சென்னையில் இருந்தால்தான் முன்னேற முடியும்; வெகுஜன இதழ்களின் ஆதரவு கிடைக்கும் என்னும் எண்ணம் வளரும் எழுத்தாளர்கள் பலருக்கும் உண்டு. "அது போலில்லை' என்று சாதனை புரிந்து, புகழ்பெற்ற பல எழுத்தாளர்களைப் பட்டியலிடலாம். அவர்களுள் இருகூரானும் ஒருவர்.

எல்லோராலும் அரசுப் பணியிலோ, வங்கியிலோ பணியாற்றிக் கொண்டு எழுத்தை மற்றொரு உபரி வருமானமாகக் கொண்டிருக்க இயலுமா? இரவு பகலாகத் தொழிலிலும் கவனம் செலுத்தி, எழுத்தையும் தெய்வமாக ஆராதித்த பலருள் மறைந்த இருகூரானையும் சொல்ல வேண்டும். ஆம், அவர் ஒரு தையல் தொழிலாளி.

இயற்பெயர் மூஸா சுல்தான். கோவை மாவட்டத்தில் "இருகூர்' என்னும் சிற்றூரில் மூஸா ராவுத்தர்-பீவி தம்பதிக்கு 1937-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் காலத்தில் கவிதைகள் எழுதி வந்தார். தமிழாசிரியர் ஸ்ரீரங்கம்பிள்ளை, சுல்தானின் திறமையை அறிந்து அவருடைய கவிதை ஆற்றலை மேலும் ஊக்குவித்தார்.

இருகூரான் என்னும் பெயர் கோவை மாவட்டத்தில் பிரபலமாயிற்று. இருகூரான் என்னும் பெயருக்கு ஏற்பட்ட வரவேற்பால் இவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இருகூரில் தொழில் செய்துகொண்டே சென்னையில் உள்ள பிரபல பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார்.

இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப் பின்னணியில், அவர்கள் சமூகத்தைப் பிரதிபலித்து பல சிறுகதைகள் எழுதினார். அவை வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இருகூரில் தந்தையின் தையல் தொழிலுக்கு மிக ஆதரவாக இருந்த - தையல் கலையைக் கற்ற இருகூரானைத் தமிழ் இலக்கிய உலகிற்குள் நுழைவதற்கு இருகூரானின் தந்தை ஆரம்பத்தில் ஆதரிக்காவிட்டாலும் பிறகு ஆதரவளித்தார். சென்னைக்கு வர வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபோது தந்தை ஏற்கவில்லை. இருகூரான் சொல்லாமலேயே ரயிலேறிச் சென்னைக்கு வந்தார். சென்னை அவரை வரவேற்றது.

இளம் எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவிக்கும் பத்திரிகையாளரான சாவி, இவர் எழுத்துகளுக்கு ஆதரவு தந்ததுடன் "தினமணி கதிர்' இதழில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்க வாய்ப்பளித்தார்.

ஆசிரியர் சாவி, தினமணி கதிரிலிருந்து விலகி "குங்குமம்' பத்திரிகையின் பொறுப்பை ஏற்றபோது, இருகூரானும் அவருடன் சென்றார். குங்குமத்தைச் சிறப்பாக வளர்த்த சாவி அதிலிருந்து விலகி, "சாவி' என்னும் சொந்த இதழைத் தொடங்கினார். ஆனால், இருகூரானின் சலியாத உழைப்பைக் கண்ட முரசொலிக் குழுமம் அவரைத் தங்கள் இதழ்ப் பணியில், அந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த பல பத்திரிகைகளிலும் உதவி ஆசிரியராகத் தக்கவைத்துக் கொண்டது. ஏறத்தாழ 22 ஆண்டுகள் அந்தக் குழுமத்திலிருந்து வெளியிடப்பட்ட இதழ்களின் எல்லாத் துறைகளிலும் தன்னை முன்னிறுத்தி அனுபவ முத்திரையைப் பதித்துக்கொண்டார் இருகூரான்.

அனுபவம் முதிர, வயதும் கூட முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது. முரசொலி குழுமத்திலிருந்து ஓய்வு பெற்று, "பேசும்படம்' இதழிலும் மற்றும் சில இதழ்களிலும் பணியாற்றினார். சுமைதாங்கி, உழைக்கும் மகளிரின் வெற்றிக் கதைகள், ஜெரினா, நம்பிக்கை, நல்லொளி முதலிய நூல்களை எழுதினார். அவருடைய எழுத்துப் பிரதிகள் பல இன்னும் வெளிவராமல் உள்ளன.

கிரசண்ட் கல்லூரி முதல்வர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பற்றிய வாழ்க்கை வரலாறு, இவருக்குப் புகழும் பணமும் ஈட்டித்தந்தது. நபிகள் நாயகம் (ஸல்), அறிவியல் ஆராய்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு, சின்னஞ்சிறு வயதில் கேளாத கானங்கள் முதலிய நூல்களை எழுதினார். அவற்றில் "உண்மை உழைப்பின் திருப்புமுனைகள்' என்னும் ஐந்து பாகங்கள் கொண்ட நூலை இவருடைய சாதனையில் சிறந்ததாகக் கருதலாம்.

இவருடைய எழுத்துத் திறமை, ஆராய்ச்சி அறிவு கண்டு "இஸ்லாமிய பண்பாட்டு இலக்கிய நிலையம்' அளித்த "சதக்கதுல்லாஹ் அப்பா இலக்கியப் பரிசு' பெற்ற இவரை மலேசிய தமிழ் மாநாட்டின் அமைப்பு பாராட்டிப் பெருமைப்படுத்தியது.

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எளிய நடையில் மேன்மேலும் எழுதினார். நபி முஹம்மது(ஸல்) வாழ்க்கை வரலாற்றை முஸ்லிம் சமுதாயம் தவிர, மற்ற சமுதாய மக்களுக்கும் சென்றடைய வழி வகுத்தார். "அமானி பப்ளிகேஷன்ஸ்' என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கி, பத்தாண்டுகளில் பல நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். சாதனையாளர் அ.அப்துல் ரஹ்மானின் வரலாற்றைத் தொகுத்து ஓர் உரைநடைக் காவியத்தை அந்தப் பதிப்பகம் வாயிலாக அளித்தார்.

"விவாத இலக்கியம்' என்ற தலைப்பில் பல பிரச்னைகளை நூல் வடிவில் வெளியிடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். "மாமிச உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?' என்ற முக்கியப் பிரச்னையை விவாதக் கட்டுரைகளாக அறிஞர்களை எழுதச்சொல்லி, நூல் வடிவில் கொண்டுவரப் பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இவருடைய துணைவியார் பெயர் தாஜின்னிஸா. ஜாகிர் உசேன், ஷாஜஹான், பத்ருதீன் என்று மூன்று புதல்வர்களும், பவுசியா என்ற மகளும் இவருடைய புத்திரச் செல்வங்கள். மூத்த மகன் ஜாகிர் உசேன் தந்தையின் நூல்களை ஒன்றுதிரட்டி வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தன் எழுத்துப்பணி பரவி வருவதில் கவனம் செலுத்திய இருகூரான், தன்னுடலில் புற்றுநோய் பரவுவதை உணரவில்லை. 31.7.2012 அன்று சென்னையில் அவர் மறைந்த செய்தியைப் பல எழுத்தாளர்கள் - வாசகர்கள் இன்னும் அறியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக