15/01/2013

கலைஞன் - பொ.கருணாகரமூர்த்தி


அமைப்பில் ஒரு அரண்மனைக்குரிய கம்பீரத்தை கொண்டிருந்தும் பல காலமாகவே கைவிடப்பட்டிருக்கும் Charlottenburg - Witzleben ரயில் நிலையம் பெர்லினில் கிழக்கு மேற்காக நீளும் சிறியதொரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நிலையத்திற்குத் தெற்காக பள்ளத்தாக்கின் இரு புயங்களையும் 2-ம் உலகப்போரிலும் சிதைவுறாத ஸ்திரமான இரும்புப்பாலம் இணைத்து நிற்கிறது. பாலத்தின் கிழக்கு முகத்தில் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட Friedrich சக்கரவர்த்தியும், மேற்கு முகத்தில் Sophie - Charlottenburg ம் காவல் தேவதைகள்போல் நிற்கின்றனர்.

பாலத்தில் தொடர்வது ஐரோப்பாவிலேயே அகலங்கூடிய 10 டிராக்குகள் கொண்ட Kaiser Damm வீதி. தீராத போக்குவரத்துடன் இருக்கும் Kaiser Dammவீதியிலிருந்து பள்ளத்தாக்குக்குச் சமாந்திரமாக Dresselstrasse என்றொரு சிறுவீதி பிரிந்து செல்கிறது. ட்றெசெல்வீதி 8-ம் நம்பரிலுள்ள எனது ஒன்றரை அறை அப்பார்ட்மெண்டின் வடக்குப் பார்த்த ஜன்னலில் சாதாரண கமெரா ஒன்றின்மூலம் பத்து மேடைகளுடனான ரயில்நிலையத்தின் முக்கால்பகுதியும், பள்ளத்தாக்கும், இரும்புப்பாலமும் அடங்கும்படியாகப் படம் பிடிக்கலாம்.

மொஸ்கோ, வார்ஷோவிலிருந்து பெர்லினூடாக பாரீஸ், சூரிச், றோம் போகும் யூரோசிட்டி, இன்ரர்சிட்டிஎக்ஸ்பிரஸ், ரயில்கள் தரித்துச்செல்வதற்கு இப்போது ஜூலொஜிகல் கார்டன் ரயில்நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தவிரவும் ஏழு நிமிஷத்துக்கு ஒருதடவை பெர்லின் நகரத்தின் விரைவுவண்டிகள், அயல் மாநிலங்களுக்கு சென்றுவரும் , இன்டர்சிட்டி
றீஜனல் எக்ஸ்பிரஸ்கள்கூட Charlottenburg - Witzleben ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. 'பெர்லின் நகரம் பிரிசுவரால் பிரிக்கப்பட்டபோதே(1963) இந்த நிலையத்தை மூடிவிட்டார்கள் ' என்று பாலத்தையொட்டி 'கியோஸ்க் ' வைத்திருக்கும் ஜெர்மன் கிழவி சொன்னாள்.

பனிமூட்டமுள்ள காலங்களில் யூரோசிட்டி, இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்துகளின் விரைவும், ஏராளமான தானியங்கிச் சிக்னல் விளக்குகளின் வெளிச்சங்களும் பார்க்க வெகு ரம்யமாக இருக்கும்.
ட்றெசெல் வீதிக்குச் சமாந்திரமாகத் தொடரும் ரயில் நிலையத்தின் மேடைகள் எனது தொகுப்புக்குவீட்டுக்கு அண்மித்தாகவே முடிவடைகின்றன. அவை முடிவடையுமிடத்தில் நிலக்கரிவண்டிகளின் காலத்தில் அவற்றுக்குத் தண்ணீர் நிரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த்தாங்கி இன்னும் நின்றுகொண்டிருக்கிறது. அருகில் நிலக்கரி வைத்திருக்கப்பயன்பட்ட சிறு சிறு கிட்டங்கிகள் ஒரு புராதன அரும்பொருள்காட்சியகத்தின் பகுதிகள் போலச் சிதைவுறாது காட்சிதருகின்றன.

ரயில் நிலையத்தின் நெடிய 10 மேடைகளிலும் வார்ப்பிரும்பில் இணக்கிப்போட்டிருந்த செடிகொடிவேலைப்பாடுகளுடன்கூடிய நீண்ட வாங்குகள் அனைத்தும் பாவனையில்லாததில் துருவேறிவிட்டன. பயணச்சீட்டு வழங்கல் மாடத்தின் அருகே சுவரில் எழுதப்பட்டிருக்கும் அக்காலப் பயணச்சீட்டுக் கட்டணவிபரணையைப் பார்த்தால் சிரிப்பு வரும்.
பெர்லின் முழுவதும் 24 மணிநேரமும் ரயில்கள், பஸ்கள், டிராம்கள் என எந்தப் பொதுவாகனத்திலும் பயணம் செய்வதற்கான கட்டணம் 1.00 மார்க்! நகரத்தின் ஒருகோடியிலிருந்து இன்னொருகோடிவரையில் எந்தப் பொதுவாகனத்திலாவது ஒருமுறை போய்வர 65 பெனிக்குக்கள்!

குளிர்காலம் போய் வசந்தம் ஆரம்பிக்கையில் மேடையின் விரிசல்களிடையேயும், தண்டவாளங்களுக்கு இடையிலேயேயும்
புற்களும் சிறுசெடிகளும் முளைக்கும். கோடையில் முழுவளர்ச்சியடைந்து பசுமை காட்டிவிட்டு மீண்டும் குளிர்காலத்தில்
கொட்டும் பனிக்குவியல்களிடையே மறைந்து காணாமல் போய்விடும்.
வானம் சிவந்துள்ள அந்திக்கருக்கலில் அல்லது ஏகாங்கி நிலவின் பின்னணியில் கோளக்கூம்புருவில் கிரீடம்போல் அமைந்த அந்நிலையத்தின் கோபுரத்தைப் பார்க்க நேர்ந்த்தால் 'ஒரே நாளில் கிரீடத்தையும் - குடியுரிமையையும் பறித்து நடுவீதிக்கு விரட்டப்பட்ட ஒரு மகாராணியைப் பார்ப்பதுபோல மனது சோகம் கொள்ளும்.

அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப் புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்று அருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து (சிப்பாய்களின் Hammock) கன்வேஸ் தூளி ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடு வெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்கு வெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல் அவன் தூளி காலியாக இருந்தது.

மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் ஸ்டேசனின் Gold-regen மரங்களோடு தொடரும் வடக்குப்புற மதிலின் சிதிலமான பகுதியைத் தாண்டிக் கடந்துகொண்டு கையில் ஒரு சாப்பாட்டுப் பொதியுடன் மீண்டும் அவன் வருவதைப்பார்த்தேன். வந்ததும் அணிந்திருந்த ஜக்கெட்டைக் கழற்றித் தூளியில் போட்டுவிட்டு, சப்பாத்துகளையும் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டு வெறுங்காலுடன் நடந்துபோய் மேடையின் மறுகோடியில் இருந்த தண்ணீர்க்குழாயில் முகம் கைகால் கழுவிவிட்டுவந்து நிலத்தில் சம்மணமிட்டமர்ந்து பொதியை அவிழ்த்துச் சாவகாசமாகச் சாப்பிட்டான். பின் ஜாக்கெட்டுப்பையிலிருந்து ஒரு பியர் கானை எடுத்துக்கொஞ்சம் குடித்துவிட்டு அதையும் இரும்புவாங்கில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு தானும் அதில் சற்றே தள்ளி அமர்ந்து சிகரெட் பிடித்தான். அப்போது நாலாவதோ ஐந்தாவதோ மேடையில் நகரத்துள் மட்டும் ஓடும் S - Bahn எனப்படும் விரைவு ரயில் ஒன்று நூறு கி.மீட்டர் வேகத்தில் கடந்து போனதை வேடிக்கை பார்த்தான். பின் பியர் கானைக் கையில் எடுத்துக்கொண்டு அம் மேடையின் முழு நீளத்துக்கும் ஆறேழு தடவைகள் நடந்தான்.
அவன் நடந்து அணுக்கமாக வந்தபோது தெருவிளக்கின் வெளிச்ச்தில் இன்னும் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உயர்ந்த ஒல்லியான தேகம். சதா சிந்தனை வயப்பட்டவன்போல் தோற்றமளித்தான். சாயம்வெளிறியும் அங்கங்கு தேய்ந்துமிருந்த டென்னிம் ஜீன்ஸ் அணிந்திருந்தான். தலையை வாரிவிடுவதில் அக்கறை எதுவுமில்லை, ஒரு கிழமை வயதான தாடி, கண்வலயத்தில் லேசான ஐரோப்பியச்சுருக்கங்கள். வயதும் அவனுக்கு 35-க்கும், 50திற்கும் இடையில் எத்தனையுமிருக்கலாம்.


மறுநாள் அவன் வெளியேபோய் வரும்போது தொல்பொருள் ஆய்வாளர் கண்டால் அக மிக மகிழவல்ல தோற்பை ஒன்றைக் கொண்டுவந்தான். தினமும் இரவில் ஏதாவது சாப்பாடு வெளியிலிருந்து கொண்டுவருவதும், சாப்பிட்டுவிட்டுத்தூங்குவதும், பின் மறுநாள் பகல்வெளியேறுவதும் தினப்படி நடவடிக்கைகளாக இருந்தாலும் எங்கேயும் வேலை பார்ப்பபவன் போலவுந்தெரியவில்லை. சில நாட்களில் மதியம்வரை தூளியைவிட்டிறங்காமல் படுத்திருப்பான். வெளியில் சென்று கவனிக்கவேண்டிய காரியங்கள் ஒன்றுமில்லாமலிருக்கவேண்டும் அல்லது ஆர்வமில்லாமலிருக்கவேண்டும். ரயில் நிலையத்துக்கு குடிவந்து ஒருமாத மேலாகியும் அவன் தன் காற்சட்டையையோ ஜாக்கெட்டையோ மாற்றாததிலிருந்து அந்தத்தோற்பையில் 'மாற்றுடுப்புக்கள் ஏதாவது வைத்திருப்பான் ' என்ற என் ஊகமும் நசித்துப்போனது. தினமும் இரண்டு மணிநேரம் ஒரு பூக்கடையில் வேலைசெய்தாலோ, செய்திப்பத்திரிகை விநியோகித்தாலோகூட இப்படித் தூளிகட்டித் தூங்கவேண்டிய அவசியமின்றி ராஜகுமாரனாகவே வாழலாம்.

மனிதன் வாழ்வுபூராவும் எதையாவது செய்துகொண்டு பிஸியா இருந்துவிட்டால் சோர்வும் துன்பமும் அணுகாதாம்.
'வயசு எழுபதாகிறதா....பரவாயில்லை உடனே பரதநாட்டியம் கற்க ஆரம்பித்துவிடு. ' என்றாராம் ஒஸ்கார் வைல்ட். மனிதனின் மரபான வாழ்வுமுறை சலிக்கும்பொது ஐரோப்பிய இளைஞர்கள் சிலர் வேறொரு வாழ்க்கைமுறையை முயன்று பார்க்கின்றனர். இவ்வாறான வித்தியாசமான வாழ்வுமுறையைத் தேர்பவர்கள் தனியனாகவும் , ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பதுபேர்கொண்ட கூட்டமாகவும் வாழ்வதுண்டு. இவர்கள் தங்கள் கூட்டுவாழ்வுக் கொம்பனியில் நாய்களையும் விரும்பிச் சேர்த்துகொண்டுருப்பார்கள். சங்கிலிகளும், இரும்பாணிகளும், றிவேட்டுகளும் பொருத்திய தோலிலான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். மாணவர்கள், வேலையற்றோரைவிட கலைஞர்கள், இலக்கியர்கள், நிறையப்படித்தவர்கள்கூட இக்கூட்டத்தில் சேர்ந்துவிடுவதுண்டு.

எங்கேயாவது கைவிடப்பட்ட தொகுதிவீடுகள், கட்டிடடங்களைக் கண்டுவிட்டால் இவர்களுக்குக் கொண்டாட்டந்தான். அவற்றை ஆக்கிரமித்துத் தம் ஜாகையை அங்கேயே அமைத்துக்கொண்டுவிடுவார்கள். 'ஒடோனோம்ஸ் ' என்று அழைக்கப்படும் இவர்கள் குடியமர்ந்துவிட்ட கட்டிடங்களிலிருந்து இவர்களை வெளியேற்ற அவற்றுக்குச் சொந்தமான நிறுவனங்களும் அரசும் பின்னால் பெரும்பாடுபடவேண்டியிருக்கும். முதலில் மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகத்தை நிறுத்திப்பார்க்கும். அவர்களோ பதிலுக்கு வீதிகளில் போக்குவரத்தைத் தடைபண்ணி ரகளை பண்ணுவார்கள். தாங்கள் வெளியேறவேண்டுமானால் அரசால் இலகுவில் நிறைவேற்றிவிட முடியாத கோரிக்கைகள் எதையாவது வைப்பார்கள். மனிதவுரிமைஅமைப்புகளும் உடனே சேர்ந்துகொண்டு அவர்களுக்குச் சாதகமாகக்கூவ அரசுஒவ்வொருமுறையும் பின்வாங்குவதைத்தவிர வேறுவழியிருக்காது. தற்கொடைப் போராளிகளுக்கடுத்ததாக அரசுகள் பயப்பிடும் மற்றொரு விஷயமென்றால் அது இந்த 'ஒடோனோம்ஸ் ' விவகாரந்தான்.
சிலர் தலைமயிருக்கு பல்வேறு வர்ணங்களில் சாயமடித்திருப்பார்கள். சிலர் நடுத்தலையில் 3 செ.மீட்டர் அகலத்துக்கு நீண்ட முடிப்பட்டியை விட்டுவிட்டு மீதியை மழித்துவிட்டு அப்பட்டியிலுள்ள கேசத்துக்கு மரங்கொத்திப்பறவையை மாதிரிச்சாயமடித்து ஜெலியைப்பூசி நிறுத்திவிட்டார்களாயின் அது கோழிக்கொண்டைமாதிரி விறைத்து நிற்கும். இவர்கள் வட்டத்தில் மறிஜுவானா, கொக்கையின், ஹஷீஸ் எனப்போதைப் பொருட்களும் கொஞ்சம் அதிகமாகவே புழங்கும்.
அங்கவீனர்கள், முதியவர்கள், மாணவர்கள், வேலையற்றவர்கள், ஏதிலிகளுக்கெல்லாம் உயரிய சமூகப்பாதுகாப்பை வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் 'ஒடோனோம்ஸ் 'களின் எண்ணிக்கை அதிகரிப்பதுவும் ஒரு சமூகச்சிக்கல்தான்.
அவர்கள் தேரும் வாழ்வுமுறைக்கு என்னதான் காரணங்கள் கற்பித்தபோதும் உழைப்புக்குப் பின்வாங்கும் இவர்கள் கொள்கையும் போக்கும் பொது உற்பத்திக்குப் பின்னடைவான அம்சமே. ஒரு நல்ல குணாம்சம் என்னவென்றால் எந்த வெளிநாட்டவர்கள்மீதும் எந்தத் துவேஷமும் இவர்கள் பாராட்டுவதில்லை.

ஒருநாள் இரவு சாப்பாட்டைமுடித்துக்கொண்டு வார்ஷோவிலிருந்து பாரிஸுக்குச் செல்லும்
நைட் இண்டர்சிற்றி ரயிலை ஜன்னலிலிருந்து வழியனுப்பிவிட்டு படுக்கை, தலையணையுறைகளை மாற்றிக்கொண்டிருந்தேன்.
J.S.Bach ன் பிரசித்த மெலோடியான 'Jesus Christus meine Verlangen ' இன் அருமையான பல்லவி ஸோலோவாக சக்ஸபோனில் புறப்பட்டு மிதந்து வந்தது. யாரோ சவுண்ட் சிஸ்டத்தையோ, தொலைக்காட்சியையோ சத்தமாக வைக்கிறார்கள் என்று இருந்தேன். ஒரு கொன்றாட் பாஸின் ஒத்திசைவுகூட இல்லாமல் சக்ஸபோன் தனித்தே பல சுருதிகளிலும் பிளிறுவது மெலிதான சந்தேகத்தையுண்டுபண்ண ஜன்னலுக்கு வந்து பார்த்தேன்.

அவன் Dressel வீதியின் சோடியம் ஆவி விளக்கில் மேடையின் இரும்புவாங்கில் ஆரோகணித்தமர்ந்து ஒரு சக்ஸபோனை வாசித்துக்கொண்டிருந்தான். அதன் பின்னும் பீத்ஹோவனின் ஒரு அழகான கோர்வையை அரைமணிக்கும் மேலாக உற்சாகம் ததும்ப வாசித்தான். அவனது கற்பனைகளும் அலாதியான அக்கருவிக்கேயான கமகப்பிரயோகளும் நெளிவுசுழிவுகள் செறிந்த இசைநுட்பங்களும் மிகவும் வித்தியாசமாக சுகமாக இருந்தன. அது முடிந்தபின் ஷம்பேன் போத்தலைத்திறந்து தொண்டையை நனைத்தபின் வேறொரு கோர்வை. அந்த இரவு வெகுநேரம் ஆனந்த பரவசத்துடன் அவனது காயலான்கடை ரக சக்ஸபோனிலிருந்து பொங்கிப்பிரவகித்த இசை Charlottenburg பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்து மேவியது.

பாவம்.... இவனும் ஒரு கலைஞன்!

கலை மனிதனை ஆகஷிக்க வல்லதுதான், அதுவே போதையாகி அதற்கே அடிமையாகி அதைத்தவிர வேறெதுவுமில்லையாகி அதைக்கொண்டு வாழ்வை நகர்த்தமுடியாத நிலை வந்தபின்னாலும் அதையே கட்டிப்பிடித்துக்கொண்டும் விலக்கமுடியாமலும் தவித்துச் சோம்பேறியாகிப்போகும் பட்டினிக்கலைஞர்கள் உலகம் முழுவதும்தான் உள்ளனர். வாழ்க்கையின் மறுபரிமாணங்களைக் காணத்தவறுவது, தறவிடுபவை பற்றிய பிரக்ஞை இன்றி இருப்பதுவும் இவர்களின் பொதுக்குணங்கள்.
ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்கவித்துவான் இருந்தார். அடுப்புக்கால்களை நாய் நர்த்தி விளையாடும் அளவுக்கு இருக்கும் அடுப்பங்கரை நிலமை. மனிதன் விடிந்ததிலிருந்து மிருதங்கத்தை எடுத்துவைத்து அதைத்தடவித்தடவி 'குமுக்கு ' 'குமுக்கு ' என்று கும்மிக்கொண்டிருப்பாரே தவிர இந்தண்டையிருக்கிற துரும்பை எடுத்து அந்தண்டை போடமாட்டார். கர்ப்பிணி மனைவி விறகுடைப்பாள். இவர் திண்ணையில் ஒருகாலை மடித்து மறு தொடையின்மேல் போட்டுக்கொண்டு பான்பராக்கோடு வெற்றிலையைக் குதப்பியபடி சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார்.
'விடுங்கோ மாமி ' என்றுவிட்டு கோடலியை வாங்கி நான் உடைத்துக்கொடுத்தால்
' கடினவேலை செஞ்சா அப்புறம் விரல்கள் ஜதிக்கட்டுக்களுக்கு வசையிறதில்லையடா அம்பி. ' என்பார்.
குடல் காயத்தொடங்கின பிறகு என்ன சாம்பலுக்குத்தான் ஜதிவேண்டிக்கிடக்கோ ?

மறுநாள் இந்த சக்ஸபோன் கலைஞன் மேடையில் ஒரு புல்லை வைத்துக்கடித்துக்கொண்டு அணில்களும் புலுணியும் ஓடிப்பிடித்து விளையாடுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இவனிடம் போய் ஒரு 'ஹலோ ' சொன்னால் பேசுவானோ முறைப்பானோ தெரியவில்லை. சில கலைஞர்கள் Eccentricகளாகவும் இருப்பதுண்டு.
பாவம், குளிர்காலம் வர என்னதான் செய்யப்போகிறான் ? என் அறையில் ஒரு கட்டிலைப்போட விடலாந்தான், அதற்கு வீட்டுச்சொந்தக்காரியிடம் அனுமதி பெறவேண்டும், இந்தச்சாக்கில் அவள் வீட்டுவாடகையை வேறு உயர்த்திவிடலாம்.
அறையைக் கொடுத்தபின்னால் அவன் ஷாம்பேன் போத்தல்களையும், பியர் புட்டிகளையும் கொண்டுவந்து நிரப்பினால் ? உடுப்பையே மாற்றிக்கொள்ளாதவன் குளிப்பதில்லையென்று ஒரு 'பொலிசி 'யைக்கூட வைத்திருக்கலாம், யார் கண்டது ?
பின்னர் கிடாய் மொச்சை கமழும் பெம்மானுடன் மானுஷன் உறைவதெங்கனம் ? வானத்தால் போன பிசாசை ஏணிவைத்து இறக்கின கதையாகிவிடலாம்.

ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒடோனோம்ஸ் கூட்டம் ஒன்றிலிருந்து பிரிந்து தனியாக வந்துவிட்டவன்போலவே தெரிந்த அந்தக் கலைஞனைக் காணவில்லை. அவனுக்கு வேறெங்காவது இதைவிட நல்ல ஜாகை வாய்த்திருக்கலாம்; அல்லது வேறெங்காவது பரதேசம் புறப்பட்டிருக்கலாம்; தன் கூட்டத்தினருடன் போதை வஸ்த்தின் லாகிரியில் அமிழ்ந்து மீள்வதில் காலம் எடுத்திருக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் ஒருநாள் திரும்பவும் வந்தான். அன்றும் இளம் நெல்வயலில் இளங்காற்றடித்ததுபோல இசை நளின அலைகளைக் கொண்டு சுகமான சந்தங்களுடன் குதித்துக் குதித்துப்பரவசப்பட்டது. விமானம் ஒன்று இறங்குவதைப்போல தாழ்சுருதியில் பதிந்து சமதரையைத்தொடுவதுபோல இறங்கிப் பின் திடுப்பெனக் 'கொங்கோடெ 'னச் சிலிர்த்துப் பிளிறிச்செங்கோணத்தில் மேலே எழுந்து உயர்ந்து வித்தாரங்காட்டியது.

அவன் பசி எடுத்தால்தான் இசைப்பானோ, இல்லை வயிறு நிரம்பியுள்ள குஷியில் இசைப்பானோவென்று ஒன்றுந்தீர்மானமாகச்சொல்ல முடியாது. ஷாம்பேன்போல ஒன்று தொண்டையை நனைக்கப் போதுமாயிருந்தால் போதும். அவனது சக்ஸபோன் குதிகொள்ளும்.
குளிர் காற்று மிதமாக வீசத்தொடங்கவும் சிறிய ஒரு இடைவெளிவிட்டுவிட்டு பெரியதொரு அட்டைப்பெட்டியை மூலைவிட்டமாக வெட்டி அதன் 'ட ' ஒதுக்கில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்து அலுமினியத்தாளில்சுற்றி வைத்திருந்த 'கலமாறிஸை ' (கணவாய்மீன் பஜ்ஜி) 'ஸோஸ் ' ஒன்றில் தொட்டுச்சாப்பிட்டான். பின் ஷாம்பேன்.
அன்று வழக்கத்தைவிட முன்னதாக ஆரம்பித்திருந்தும் அடிக்கொருதடவை கடந்து செல்லும் ரயில்களின் இரைச்சலையும் பொருட்படுத்தாது பாரிஸ் ரயில் சென்ற பின்னாலும் வெகுநேரம் இசைவேள்வி நடத்தினான்.
மீண்டும் ரேவதி சாயலில் நிறைய ஏக்கமும், பெற்றோரைத் தவறவிட்டுவிட்ட ஒரு பிள்ளையின் தவிப்பும் கலந்திருந்த ஒரு கிளாசிகல் கோர்வையை அனுபவித்து அனுபவித்து வாசித்தான். அடுத்து 'Lilly was here '. மறுநாள் மதியம் வரையில் ஒருகாலை வெளியே தொங்கவிட்டபடி தூளியுள் படுத்திருந்தான். பின் எப்போ எழுந்து போனானோ தெரியாது.

அவனது இசை கேட்டு ஒருமாதமாவது ஆகியிருக்கும். ஆளை அந்தப்பக்கம் காணவே இல்லை.
ஒரு நீண்ட (மாதத்தின் முதலாவது) சனிக்கிழமை மாலையில் Ku 'Damm Karrie Passage இனுள் அவனைக் கண்டேன். அன்று வியாபாரஸ்தலங்கள் எல்லாம் மாலை 20.30 மணிவரை திறந்திருக்கும். அதனுள்ளிருந்த ஒரு றெஸ்ரோறண்ட் வாசலில் நின்று இவன் தன் சக்ஸபோனை வாசித்துக்கொண்டிருந்தான்.
அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தொப்பியுள் அவ்விடத்தைக் கடந்துபோவோரும் , அவ்வுணவுச்சாலையில் இருந்து வெளிப்படுவோரும் காசுகள் போட்டனர். பரட்டைத்தலையுடன் அநாதைபோல் தென்பட்ட ஒரு பத்துவயதுச்சிறுவன் வத்தகைப் பழக்கீறல் ஒன்றை நாடியால் தண்ணீர் சொட்டச்சொட்டச் சுவைத்துக்கொண்டு இவன் சக்ஸபோன் வாசிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனோ சேரும் சில்லறையில் கருத்தின்றிக் கண்களைமூடித் தன் சங்கதிகளில் ஒன்றி ஸ்வரப்ரதாபங்களில் உருகி வாசித்துக்கொண்டிருந்தான்.

இந்த Passage இனுள் நிறையவே றெஸ்ரோறண்ட்களும், பார்களும் அதன் சுற்றுவட்டத்திலும் அநேகம் ஷொப்பிங் கொம்பிளெக்ஸ்களும் இருப்பதால் அந்த இடம் எப்போதும் ஜனநடமாட்டத்துடன் ஜே 'ஜே ' என்றிருக்கும். எனக்கும் மெல்ல வயிற்றைக்கிள்ளவே அங்கிருந்த 'இம்பிஸ் ' ஒன்றில் சூடாக உருளைக்கிழங்கு சிப்ஸும் பியரும் வாங்கிக்கொண்டு சீமெந்து பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து அவனை நானும் ரசித்தேன். Herbert-Von-Karajan ன் சில கற்பனைகளைத் தந்துவிட்டு
திடுப்பெனச் 'Sailing ' என்ற ஜனரஞ்சகமான றொக் பிட்டுக்கு சுழன்றுவந்தபோது கும்பல் கணிசமாகவே சேர்ந்துவிட்டது. அவன் வாசிப்பில் கிறங்கிப்போவிட்ட சுவைஞர் ஒருவர் நுரை ததும்ப பெரிய கிளாஸில் பியர் வாங்கிவந்து கொடுத்தார். அதில் தொண்டையைக் கொஞ்சம் நனைத்துவிட்டு சில 'அண்டர்கிரவுண்ட் ' இசைச்சித்தர்களுடன் சஞ்சரிக்கலானான். எல்லாமே முன்பொருநாளுந்தான் கேட்டறியாத இசைக்கோலங்களால் கிறங்கடித்தான்.தெருப்பாடகர்கள், வயலின்வாசிப்போர்களென்று எத்தனையோ வீதிக்கலைஞர்களைச் சந்தித்திருக்கிறேன்தான், இருந்தும் அவனது இசைத்தேர்வுகளோ அல்லது அவன் வாத்தியத்திலிருந்து கிளம்பும் நாதத்தில் தோய்ந்துள்ள மாயலாகிரியோ என்னை அவனோடு ஏதோவொரு அலைவரிசையில் விபரிக்க முடியாத வகையில் கட்டிப்போடுகிறது, கிளர்த்துகிறது, பஞ்சாகக்கிளப்பி மேலே மேலே பறக்கவைக்கிறது.

வாசித்து நன்றாகவே களைத்தபின்னால் 'Udo Lindeberg ' ன் 'Auf wiedersehen ' என்ற மெலோடியை (மீண்டும் சந்திப்போம்) மென்சோகம் தோய்த்து மங்களமாக வாசித்தபோதுபோது சுவைஞர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து ' தயவுசெய்து மீண்டும் ஒரு முறை ' 'மீண்டும் ' என்று கேட்கவும் சம்மதித்து மீண்டும் ஒருமுறை வாசித்தான். 'இத்தனை வித்தகனுக்கு சொந்தமாய் ஒரு கூரை இல்லை ' என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

அவனை அன்று பார்த்ததுதான்.

அதன் பின் வந்த ஒவ்வொரு வசந்தத்திலும் நிலையத்தின் வளவின் நிற்கும் Gold-regen (தங்கமழையென்று அர்த்தம்) மரங்களின் மெலிந்தடர்ந்த நீண்ட கிளைகளின் பொன்மஞ்சள் பூம்பாளைகள் எல்லாம் ஏககாலத்தில் மலர்வதால் பூக்களின் பார்ந்தாங்காமல் அவை தலைகீழாக விழுதுகள் போலத்தொங்குகின்றன.
கஸ்டானியன் மரங்களும் தவறாமல் பழுத்துத் தம் விதைகளை நிலமெங்கும் இறைத்துவிடுகின்றன.
அவனது தூளியும் தோற்பையும் அவனுக்காகக் காத்துக்கொண்டு இன்னும் அங்கேயே இருக்கின்றன.
அணிலும் புலுணியும் மேடைகள் பூராவும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன.
பாரீஸ் ரயிலும் தவறாது 11.05க்குக் கடந்து விடுகிறது.
இசை மட்டும் இல்லை.

பனிமலர் (லண்டன்) ஜூன் -92

நன்றி - திண்ணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக