30/01/2013

வானொலி நாடக உலகின் வாடா மலர் சுகி.சுப்பிரமணியம் - கலைமாமணி விக்கிரமன்



சின்னத்திரையில் நாடகங்கள் "பெயரில்' ஒளிபரப்பப்படும் நாடகங்கள் வந்த பிறகு கேட்கும் நாடகங்களின் மதிப்புக் குறைந்துவிட்டது. படிக்கும் நாடகங்கள், பார்க்கும் நாடகங்கள், கேட்கும் நாடகங்கள் என்று நாடகக் கலை கோலோச்சிய காலத்தில் கேட்கும் நாடகங்களை வளர்ப்பதில் வானொலி நிலையங்கள் பெரும் பங்காற்றின.

வானொலி நாடகங்களைத் தயாரித்து நாடகத்துறையில் பல்வேறு சுவையான உரையாடல்களுடன்கூடிய பதினைந்து நிமிட, அரைமணி, ஒரு மணி நேர நாடகங்களைக் கேட்டு ரசிக்கும் சுவையை ஏற்படுத்தியவர்களுள் - படைப்பிலக்கியச் சிற்பிகளுள் சுகி.சுப்பிரமணியம் முதன்மையானவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாதவக்குறிச்சி என்ற கிராமத்தில் 1917-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி பிறந்தார். தந்தையார்-நல்லபெருமாள்; தாயார் முத்தம்மாள்.

வானொலிக்குச் சிறந்த நாடக ஆசிரியர்களை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. நாடகங்கள், நாவல்கள், நகைச்சுவைக் கட்டுரைகள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைந்தவை, இவரின் சமூகப் பிரச்னைகள் மிக்க வானொலி நாடகங்களே ஆகும். "புதிய படிக்கற்கள்' என்ற வானொலி நாடகம் இவருக்குப் புகழ் சேர்ந்த நாடகங்களுள் ஒன்று. அந்த நாள் வானொலி ரசிகர்கள் "காப்புக் கட்டிச் சத்திரம்', "சுபாஷ் வீடு' போன்ற நாடகங்களை ஆவலுடன் கேட்டு மகிழ்ந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

பெரிய மனிதர் பெரியார், நெஞ்சம் கவர் நேருஜி, காக்கை குருவி எங்கள் ஜாதி, குட்டிக் கதைகள் எனக் குழந்தைகளுக்கான நூல்களையும் படைத்துள்ளார். சமூக சீர்திருத்தக் கருத்துகளிலும் அதிக நாட்டம் செலுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் என்பதால், ரசிகமணியிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர். அவருடைய வட்டத்தொட்டியின் விரும்தோம்பல் போல் தன் வீட்டிலும் நண்பர்களை அழைத்து உணவளித்து உபசரிப்பதில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

தாகூரின் இலக்கியப் படைப்புக்களை சிறப்பாகத் தமிழில் தந்த பிரபல விமர்சகர், அமரர் காரைக்குடி வி.ஆர்.எம். செட்டியார், இவரின் "கற்பகக் கனிகள்', "சாம்பார் சாதம்' என்னும் நூல்களைப் பாராட்டியபோது, ""இவரின் அருவிக்கரைக் கட்டுரைகள் அருவிபோலச் சுழன்றோடுகின்றன. ஆசிரியரின் சொந்த நடையும் தந்த நடையாகக் காட்சியளிக்கிறது. இதயச் சிற்பம் அருவியைத் தழுவி நிற்கிறது. இதுதான் உண்மையான கட்டுரைப் போக்கு'' என எழுதியுள்ளார்.

""எந்தப் பொருளுக்கும் இசைத் தன்மை, கவிதைத் தன்மை இருக்கலாம். இல்லாமலும் போகலாம். நாடகத் தன்மை இல்லாத கவிஞன் இல்லை. நாடகத் தன்மை இல்லாத உரைநடை, பேச்சுநடை எழுத்துலகில் இல்லை. எந்தச் சிறந்த இலக்கிய வடிவத்திற்குள்ளும் நாடகத் தன்மை கதிரவனுக்கு ஒளிபோல, தாமரைக்குள் அழகுபோல, வைரத்திற்குள் பட்டைபோல ஒன்றிக்கிடக்கும். ஒலி வடிவம் உலகத்தை ஒன்றுபடுத்தும் பண்பு வடிவம், பாச வடிவம். காரிருளிலும் கனமான வெளிச்சத்திலும் செலாவணியாகும் வடிவம், ஒலி வடிவம். ஒளிவு மறைவு இல்லாத பிறவி வானொலி வடிவம்'' எனப் "பண்பை நம்பும் நாடக விழா' கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""வானொலி நாடகங்களில் எழுதும் ஓசைக்கு அப்பால் எழுகிற ஓசை என்று ஒன்று உண்டு. எழுதும் ஓசைக்குள் நாடகாசிரியன் இருப்பான். எழுதா ஓசைக்குள் முழுக்க முழுக்க நடிகர்களே இருப்பார்கள். அங்க அசைவுகள், முகபாவம், உணர்ச்சிக் குவியல்கள், கோப-தாபங்கள், இன்ப-துன்பங்கள், கனவுகள், கனிவுகள் எனும் எழுத்து ஓசைகள்தாம் ஒலி நாடகத்துக்கு உயிர். எழுதும் ஓசை உடல்; எழுதா ஓசை உயிர் என நாடக எழுத்தைவிட நடிப்புக்குப் புகழ், பணம், செல்வாக்கு மிகுதியாக ஏற்படுகிறது. நடிப்பு இங்கே நடிகரின் குரல் மூலம் வெளிப்படுகிறது'' என்று சுகி.சுப்பிரமணியம் கூறியதை, பிரபல எழுத்தாளர் எஸ்.குலசேகரன் கூறும்போது சுகி.சுப்பிரமணியத்தின் ஒலி நாடகக் கணிப்பு நன்கு புலப்படுகிறது.

 இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய, "நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்னும் நூலைப் பற்றி "எனக்குப் பிடித்த புத்தகம்' என்னும் கட்டுரையில் எழுதிய வரிகளே சான்று.

நேஷனல் புக் டிரஸ்டுக்காக "ஓரங்க நாடகங்கள்' என்னும் நூலைத் தயாரித்து அளித்துள்ள இவர், அதில் நாடகங்கள் பற்றியும், நாடக ஆசிரியர்கள் பற்றியும் மிகச் சிறப்பாக இருபத்தி இரண்டு பக்க முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ""நாடக எழுத்தை விட, நடிப்புக்குப் புகழ், பணம், செல்வாக்கு மிகுதியாக ஏற்படுகிறது'' என்கிறார்.

பல நாடக நூல்களைப் படித்து மிகச் சிறந்த திறனாய்வாளராகவும் இருந்துள்ளார். நாடகங்கள் இவர் வாழ்வோடு ஒன்றிப்போயுள்ளன. வானொலி நிலையத்துக்கு ஒலிபரப்ப வரும் நாடகங்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படித்து, பத்து நாள்களில் முடிவைத் தெரிவித்து விடுவாராம். பிற எழுத்தாளர்களின் படைப்புகளை மிகத் துல்லியமாக எடைபோடும் இவர் சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. "கல்கி' நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

"தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்' என்னும் இவருடைய கட்டுரைத் தொடர் "காதல்' இதழில் தொடர்ந்து வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. 30 நாவல்கள், 3 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாடகங்கள், 3 சிறுவர்களுக்கான நூல்கள் எழுதியுள்ளார். 1939-ஆம் ஆண்டு "ஹனுமான்' இதழிலும், 1985-ஆம் ஆண்டு "அமுதம்' இதழிலும் பணியாற்றியிருக்கிறார்.

1940 முதல் 1977-ஆம் ஆண்டு வரை முப்பத்தி ஏழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இவருக்குத் தமிழக அரசு "கலைமாமணி' விருது அளித்துச் சிறப்பித்துள்ளது.

இவருடைய லட்சிய எழுத்தாளர் "கல்கி' கிருஷ்ணமூர்த்தி. தன் பெயரின் முதல் எழுத்தையும், அவர் பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து "சுகி' என்ற பெயரைப் பயன்படுத்திக்கொண்டார்.

புதுமைப்பித்தன் எழுத்துகளில் மிகுந்த பற்றுடையவர். அவரைச் "சிறுகதை வள்ளுவர்' என்று புகழ்ந்து கட்டுரை (வீட்டிற்கு வந்த வள்ளுவர்) எழுதியுள்ளார்.

இவர் புதல்வர் சுகி.சிவத்தை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சிறந்த சொற்பொழிவாளர். தன் பெயருக்கு முன்பாக "சுகி' என்னும் தந்தையின் பெயரையும் இணைத்துக்கொண்டு தந்தைக்குப் பெருமை சேர்த்தவர்.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளராக, வானொலி நாடக ஆசிரியராக, நகைச்சுவை எழுத்தாளராக, சிறுகதை ஆசிரியராக, குழந்தை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் சுகி.சுப்பிரமணியம். இவர் படைப்பிலக்கிய உலகில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியவர்.

1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி சுகி.சுப்பிரமணியம் இயற்கை எய்தினார். நாடக உலகம் உள்ளவரை இவருடைய பெயரும் நின்று நிலவும்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக